
சுற்றுச்சூழல்
‘ஓய்வுக்காலத்தில் வங்கியில சேமிப்புத் தொகை வைத்துக்கொண்டு சுகமாக வாழ வேண்டும்’ என்பதுதான் நம்மில் பலருடைய எண்ணமாக இருக்கும். ஆனால், திருப்பூரைச் சேர்ந்த 60 வயதான ஓய்வுபெற்ற சிவில் இன்ஜினீயர் நவநீதகுமாரோ, 50 ஏக்கர் நிலத்தை வாங்கி, அதில் குறுங்காட்டை வளர்த்து அசத்தி வருகிறார். ‘50 ஏக்கர் நிலம் கிடைச்சா, அதைப் பணம் கொட்டுற பூமியா மாத்த நினைக்கிறவங்களுக்கு மத்தியில, இப்படியொரு மனிதரா!’ என்ற ஆச்சர்யத்துடன் நவநீதகுமாரின் குறுங் காட்டுக்குச் சென்றோம்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்திலிருந்து பண்ணாரி அம்மன் கோயில் செல்லும் வழியில் ‘கஸ்தூரி நகர்’ என்னுமிடத்தில் இருக்கிறது நவநீதகுமாரின் அந்த 50 ஏக்கர் பிரமாண்டம். ‘சக்தி ரெயின் ஃபாரஸ்ட்’ என அதற்குப் பெயர் சூட்டியிருக்கிறார். திரும்பும் இடமெல்லாம் ஆஜானுபாகுவாக ஓங்கி உயர்ந்து நிற்கின்றன வகை வகையான மரங்கள். தென்னந் தோட்டம், பாக்குத் தோட்டம் போல ஒரே வகை மரங்களையே வரிசையாக நடாமல், அசலான காட்டைப் போலவே பல வகை மரங்களையும் சீட்டுக்கட்டைப் போலக் கலைத்துப் போட்டு நட்டிருக் கிறார். மரங்கள் மட்டுமல்லாது கோழி, ஆடு, மாடு, வாத்து, மீன் என நவநீதகுமாரின் 50 ஏக்கர் நிலமும் பல வகையான உயிரினங்களால் நிறைந்திருக் கிறது. திரும்பும் இடமெல்லாம் பச்சைக் கம்பளம் விரித்ததைப் போலப் பசுமை, குருதியைக் குடையும் குளிர்காற்று என இதமாக இருக்கிறது அந்த 50 ஏக்கர் சொர்க்கபுரி. இப்படியான சூழலுக்கு நடுவே ஆஸ்பெஸ்டாஸ் சீட்டு போட்ட வீட்டில் இருந்த நவநீதகுமாரைச் சந்தித்தோம்.
பார்த்துப் பார்த்து வளர்த்திருந்த அந்த 50 ஏக்கர் காட்டையும் ஒரு குழந்தையைப்போலச் சுற்றிக் காட்டிக்கொண்டே, நம்மிடம் பேச ஆரம்பித்தார். “நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே ஆந்திராதான். தாத்தா, அப்பான்னு எல்லாருக்குமே கன்ஸ்ட்ரக்ஷன் தொழில் தான். குறிப்பாக ஆந்திரா, வட இந்தியாவில் இருக்கப் பல அணைகளை நாங்க கான்ட்ராக்ட் எடுத்து கட்டியிருக்கோம். இப்படிப் பாரம்பர்யமா கன்ஸ்ட்ரக்ஷன் தொழில் செஞ்சிட்டு வந்த குடும்பத்துல பிறந்த நானும் இன்ஜினீயர் ஆனேன். ‘கோயம்புத்தூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி’யில் சிவில் இன்ஜினீயரிங் படிச்சேன். படிச்சி முடிச்சதும் 1983-ல் இருந்து அப்பாவோட போய் ஆந்திரா, கர்நாடகா எனப் பல ஊர்ல நடந்த அணை கட்டுமானத்துல 12 வருஷம் வேலை பார்த்தேன்.
அம்மாவோட ஊர் திருப்பூர்கிறதால 1995-ம் வருஷம் இங்க வந்து செட்டில் ஆனோம். திருப்பூர்லயே ‘சக்தி இன்ஜினீயரிங் கன்ஸ்ட் ரக்ஷன்ஸ்’னு ஒரு கம்பெனி ஆரம்பிச்சேன். அந்தச் சமயத்துல திருப்பூர் சாய கம்பெனிகளில் சாயக் கழிவுகளைச் சுத்திகரிப்புச் செய்ய அதற்கான நிலையங்கள் இல்லாதது பெரும் பிரச்னையாக இருந்தது. அதைக் கையிலெடுத்து பல தனிச் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பொதுச் சுத்திகரிப்பு நிலையங்களை அமைச்சேன். ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட 20 மணி நேரம் தூக்கமில்லாம வேலை செய்வேன். என்கிட்ட 800 பேர் வேலை பார்த்தாங்க. கன்ஸ்ட்ரக்ஷன் துறையில் ரொம்ப பிஸியாக இருந்தேன். சாயக்கழிவுகளால் மாசுபட்டுப்போன நொய்யல் ஆற்றைச் சரிசெய்வதற்காகப் பல தனியார் அமைப்பு களுடன் இணைந்து வேலை செஞ்சேன்.

இயற்கைக்குச் செய்யும் பிரதி உபகாரம்
பொதுவாகவே கன்ஸ்ட்ரக்ஷன், சிவில் இன்ஜினீயரிங்னா மரம், இயற்கை வளங்களை அழிச்சுதான் பண்ணணும். ‘கன்ஸ்ட்ரக்ஷன் தொழில்ல இருந்த நாம இதை அதிகமா செஞ்சிருக்கோம். இதுக்கு பிரதி உபகாரமாக ஏதாவது செய்யணும்’னு மனசு உறுத்திக்கிட்டே இருந்துச்சு. அதுமட்டுமில்லாம, உள்ளுக்குள்ள இயற்கை மீது எனக்குப் பெரும் காதல் இருந்துச்சு. ஏன்னா, நீலகிரி மாவட்டத்துல இருக்கும் குந்தா அணைக் கட்டுமானத்தின்போது அங்குதான் பிறந்தேன். மலையும் மலை சார்ந்த இடத்திலும், இயற்கைக்கும் இடையில்தான் என்னுடைய வாழ்க்கை இருந்தது. அதனால, ரிட்டையர்டு ஆனதும் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களுக்கு மத்தியில் என்னுடைய வாழ்க்கையை அமைச்சிக்கணும்னு நினைச்சேன். அப்படி உழைச்ச வரைக்கும் போதும், இனி குடும்பத்துக்கு நேரம் ஒதுக்கணும்னு 2015-ல் கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலை விட்டுட்டேன்.

இருப்பது 60,000, இலக்கு 1,00,000
2010-லயே இந்த நிலத்தை வாங்கியிருந்தேன். அதைச் சமன்படுத்தி, வேலியெல்லாம் போட்டு, தண்ணீருக்காக போர்வெல், மழைநீர் சேகரிப்புக் குட்டைகள் எல்லாத்தையும் அமைச்சிருந்தேன். அந்த இடத்துல நாம ஒரு குறுங்காட்டை உருவாக்கணும்னு முடிவு பண்ணினேன். 2017-ல் ‘வனத்துக்குள் திருப்பூர்’ அமைப்பு 17,000 மரக்கன்றுகளைக் கொடுத்தாங்க. 2018-ல் 20,000 மரக்கன்றுகள், 2019-ல் 23,000 என 3 ஆண்டுகளில் இதுவரை 60,000 மரக்கன்றுகளை நட்டிருக்கிறோம்.
அழிவின் விளிம்பில் உள்ள நறுவல்லி, பூந்திக்கொட்டை, தேத்தாங்கொட்டை, பலாசு, பிராய், சிலவாகை, ஆவி, புத்திரன்ஜீவா, ஆனைக்குண்டுமணி, வெப்பாலை, நெல்ரை, குங்கிலிங்கம், கருமருது, கல்யாணமுருங்கை, தான்றிக்காய், ஆத்தி, காயா, அத்தி, வேங்கை, எட்டிக்காய், களாக்காய், தடசு, புன்னை, இலந்தை, கொடிக்காய், வன்னிமரம், ஆச்சா போன்ற பல மரங்களை வைத்திருக்கிறோம். இதுமட்டுமல்லாமல் மலை வேம்பு, நாட்டு வேம்பு, சந்தனம், செம்மரம், ஆலமரம், அரசமரம் என 200 வகையான மரங்களை வைத்திருக்கிறேன். 2022-க்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகளை வைக்கணும்கிறதுதான் என்னோட இலக்கு.
பல்வேறு உயிர்களின் பாசறை
ஆரம்பத்துல மரம் வளர்க்கிறது ஒரு பெரிய விஷயமா, கஷ்டமா இருக்கும்னு நான் நினைக்கலை. ஆனா, மரம் வெச்சதும்தான் அதை நல்லபடியா வளர்த்தெடுக்கிறது எவ்வளவு சிரமம்னு தெரிஞ்சது. ஒரு அடி உயரமுள்ள மரக்கன்றை வாங்கிட்டு வந்து நட்டு, அந்தச் செடி உயிர் புடிச்சி மரமா வளர்கின்ற வரைக்கும் காப்பாத்துறது கத்தி மேல நிக்கிற மாதிரி. மண் பரிசோதனை செஞ்சு, 35 ஏக்கர்ல சொட்டுநீர்ப் பாசனம் போட்டது, 5 மழைநீர்ச் சேகரிப்புக் குட்டைகளை வெட்டுனது, போர் போட்டதுன்னு இந்தக் காடு தளைஞ்சு வரத் தேவையான ஒவ்வொன்னையும் பாத்து பாத்துச் செஞ்சிருக்கேன். ஒவ்வொரு மரத்தையும் குழந்தை மாதிரி நான் தொட்டுப் பார்த்து அதுக்கு தண்ணீர் சரியா போகுதா? சுற்றிலும் களை வளர்ந்திருக்கா? அந்த மரத்துல ஏதாவது பிரச்னை இருக்கான்னு கவனிச்சிட்டு வர்றேன். இந்த மரங்கள் வளர்வது மட்டு மல்லாமல் பூச்சி, புழு, பாம்பு, பறவைகள்னு பல உயிர்கள் தானா இங்க வந்து சேர்ந்துருக்கு.

பண்ணை கொடுத்த பாதுகாப்பு
இதுபோக 500 கோழிகள், 200 ஆடுகள், 10 பசுக்கள், வாத்துகள், கின்னிக்கோழிகள்னு வளர்க்கிறேன். எங்களுக்குத் தேவையான காய்கறிகள், கீரைகளையும் இங்கயே விளைவிச்சிக்கிறோம். கொரோனாவுக்கு முன்னாடி மாசத்துக்கு ரெண்டு தடவைதான் இங்கே வருவோம். ஆனா, கொரோனா ஊரடங்கு போட்டதும் குடும்பத்தோட இந்தப் பண்ணைக்கு வந்துட்டோம். இங்க வந்ததும் தான் நாங்க உருவாக்குன வனம் எங்களுக்கு எவ்ளோ மனத் தெம்பையும் திருப்தியையும், பாதுகாப்பான இடத்தையும் கொடுத் திருக்குன்னு தெரிய வந்துச்சு’’ என்றவர் நிறைவாக,
“இந்தக் காட்டை வருமானத்துக்காக வளர்க்கில. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இனிமேல் இயற்கையைப் பாதுகாப்பதும், இயற்கையோடு இயைந்து வாழ்வதும்தான் முக்கியம் என்பதை நாங்க முழுசா உணர்ந்திருக்கோம். இன்னும் 5 வருஷத்துல இந்த மரங்களெல்லாம் இன்னும் அடர்த்தியா வளர்ந்து, ஒரு அடர்வனமாக மாறி நிற்பதைப் பார்க்க ஆவலா இருக்கோம்” என்று விடைகொடுத்தார்.
இயற்கையின் மீது காதல் கொண்டிருக்கும் இப்படியான மனிதர்களால்தான், நாட்டில் கொஞ்சமாவது மழை பெய்கிறது.
தொடர்புக்கு, நவநீதகுமார், செல்போன்: 98947 10877