
கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்பு!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை பூர்வீகமாகக் கொண்டவர் சுதர்சன். இவர் தற்போது கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வருகிறார். இவருடைய தலைமையில் 4 நாடு களைச் சேர்ந்த 6 மாணவர்களைக் கொண்ட குழுவினர், விவசாயிகளுக்குப் பயன் அளிக்கக் கூடிய செல்ஃபோன் செயலி ஒன்றை உருவாக்கி, சர்வதேச அளவில் முதல் பரிசு பெற்றுள்ளார்கள். விவசாயிகள், தங்களுடைய பயிர்களுக்குச் சிக்கனமாகத் தண்ணீர் பாய்ச்ச இந்தச் செயலி துல்லியமாக வழிகாட்டுகிறது.
ஐ.நா சபையில் உறுப்பு அமைப்பான யுனெஸ்கோ, புதிய மென்பொருள் கண்டு பிடிப்புக்கான சர்வதேச போட்டியை, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், உத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டாவில் உள்ள கௌதம புத்தா பல்கலைக்கழகத்தில் நடத்தியது. இப்போட்டியில் 21 நாடுகளைச் சேர்ந்த 600 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் கோவை பொறியியல் கல்லூரி மாணவர் சுதர்சன் தலைமையிலான குழு உருவாக்கிய, விவசாய நிலங்களின் ஈரப்பதத்தை மிக எளிமையாக, அதேசமயம் துல்லியத்தன்மையுடன் கண்டு பிடிக்கும் செயலி முதலிடம் பிடித்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்திய துணை குடியரசுத் தலைவர், இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளின் கல்வி அமைச்சர்கள், உத்தரப்பிரதேச முதலைமைச் சர் மற்றும் விஞ்ஞானிகள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில்... சுதர்சன் தலைமை யிலான குழுவுக்கு முதல் பரிசாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுப் பாராட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுதர்சனை நேரில் அழைத்து வாழ்த்தினார்.
விவசாயிகளுக்குப் பயன் தரும் செயலி உருவாக்கம் குறித்து மாணவர் சுதர்சனிடம் நாம் பேசியபோது, ‘‘ரொம்ப சந்தோஷமா இருக்கு... பசுமை விகடன்ல என்னைப் பத்தி செய்தி வரப்போகுதுனு நினைக்குறப்ப ரொம்ப பெருமையா இருக்கு. காரணம், நான் பசுமை விகடனோட தீவிர வாசகர். பொள்ளாச்சியில எங்களுக்கு 20 ஏக்கர் தென்னந்தோப்பு இருக்கு. நானும் என்னோட மாமாவும் சேர்ந்துதான் கவனிச்சுக்குறோம். ஊடுபயிர்களா... நிலக்கடலை, சோளம், வேலிமசால் உட்பட இன்னும் சில பயிர்கள் சாகுபடி செய்வோம். பசுமை விகடன் கட்டுரைகள் மூலம் எங்களுக்கு அறிமுகமான பல கருவிகளை வாங்கியிருக்கோம்’’ என்று சொன்னவர், தன்னைப் பற்றிய தகவல் களையும், செயலி உருவாக்கம் குறித்தும் பேசத் தொடங்கினார்.

“என்னோட அப்பாவுக்கு பூர்வீகம், மதுரை மாவட்டத்துல உள்ள வாடிப்பட்டி. அம்மாவுக்குச் சொந்த ஊர் பொள்ளாச்சி. கோவை மண்டல அண்ணா பல்கலைக்கழகத்துல பேராசிரியரா அம்மா பணியாற்றிக்கிட்டு இருக்குறதுனால, கோயம்புத்தூர்ல வசிசக்சுக்கிட்டு இருக்கோம். கிணத்துக்கடவுல உள்ள ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில நான் பி.டெக் (செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல்) படிச்சுக்கிட்டு இருக்கேன். என்னோட அப்பா, அம்மா ரெண்டு பேருமே விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க. வாடிப்பட்டியிலயும் எங்களுக்கு விவசாய நிலம் இருக்கு. இதனால எனக்கு சின்ன வயசுல இருந்தே விவசாயத்துல ஆர்வம் அதிகம். அதனாலதான் விவசாயிகளுக்குப் பயன் அளிக்கக்கூடிய ஒரு செயலியை வெற்றி கரமா உருவாக்க முடிஞ்சது.
நான் பள்ளிக்கூட மாணவரா இருக்குறப் பவே... அறிவியல் சார்ந்த கண்காட்சிகள்லயும், போட்டிகள்லயும் கலந்துக்குறது வழக்கம். ப்ளஸ் டூ படிக்கும்போது ஒரு போட்டியில வெற்றி பெற்று பரிசு வாங்கினேன். பொறியியல் கல்லூரியில சேர்ந்த பிறகு, அந்த ஆர்வம் இன்னும் அதிகமாயிடுச்சு. இந்தச் சூழ்நிலையிலதான், யுனெஸ்கோ அமைப்பு, மென்பொருள் சார்ந்த சர்வதேச போட்டிக்காக, முதல்கட்டமா எழுத்துத் தேர்வு நடத்துச்சு. அதுல சர்வதேச அளவுல 600 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாங்க. அதுல நானும் ஒருத்தன். நேரடி செயல்முறை போட்டிக்காக, யுனெஸ்கோ அமைப்பு, குழுக்களை உருவாக்குச்சு. என் தலைமை யிலான குழுவுல... மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும், மொராக்கோ, மொசாம்பிக், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 3 மாணவர்கள் உட்பட மொத்த 6 பேர் இடம்பெற்றோம்.

நேரடி செயல்முறை விளக்க போட்டிக்கு, 15 நாள்களுக்கு முன்னாடியே, தலைப்பு கொடுத்துட்டாங்க. எங்களோட குழு, விவசாய நிலங்கள்ல மண்ணின் ஈரப்பதத்தைத் துல்லியமாகக் கண்டு பிடிக்கக்கூடிய ஒரு செயலியை உருவாக் கணும்னு சொல்லியிருந்தாங்க. எங்க குழுவுல உள்ள மாணவர்கள், ஜூம் ஆப் மூலம் கலந்தாலோசிச்்சோம். கோவை வேளாண் பல்கலைக்கழகத்துல வேலை பார்க்குற பேராசிரியர்கள் கிட்டயும் இது சம்பந்தமா, நான் ஆலோசனைகள் நடத்தி, நிறைய தரவுகளை வாங்கினேன். மண்ணோட நிறத்தை துல்லியமா கண்காணிச்சோம்னா, ஈரப்பத அளவை நுட்பமா தெரிஞ்சுக்க முடியும். இது அறிவியல்பூர்வமா நிரூபிக்கப்பட்ட உண்மை. செயற்கைக்்கோள் பதிவுகள் மூலம் ஏற்கெனவே இது நடந்துக்கிட்டு இருக்கு. ஆனா, அதை விவசாயிகள் தெரிஞ்சிக் கணும்னா நிறைய செலவாகும்.

எந்தவித செலவும் செய்யாமலே, விவசாயிகள் தங்கள்கிட்ட உள்ள செல்போன் மூலம் நிலத்தைப் போட்டோ எடுத்தாலே, மண்ணோட ஈரப் பதத்தை அளவை துல்லியமா சொல்லக்கூடிய ஒரு செயலியை உருவாக்குற முயற்சியில இறங்கினோம். முதல்கட்டமா... செம்மண் நிலத்துல 20 வகையான பயிர்களுக்குத் தேவை யான ஈரப்பத அளவை தீர்மானிக்கும் வகையில இந்தச் செயலியில, தரவுகளை உள்ளடக்கம் செஞ்சிருக்கோம். மண்ணோட நிறத்தை துல்லியமா வேறுபடுத்திக் காட்டக்கூடிய 560 புகைப்படங்களையும், கணக்கீடுகளையும் இதுல உள்ளடக்கம் செஞ்சிருக்கோம்.
மண் எந்த நிறத்துல இருந்தா, எத்தனை சதவிகிதம் ஈரப்பதம் இருக்கும்ங்கற விவரம் அதுல இருக்கும். விவசாயிகள் தங்களோட நிலத்துல இந்தச் செயலி மூலம் போட்டோ எடுத்தால் போதும்... ஏற்கெனவே உள்ளடக்கம் செய்யப்பட்டிருக்குற போட்டோவோடு ஒப்பீட்டு பார்த்து, ஈரப்பத அளவை சொல்லிடும்.
எந்தெந்தப் பயிர்களுக்கு, எந்தெந்த கால கட்டத்துல எவ்வளவு ஈரப்பதம் தேவைப்படுங்கற தரவுகளையும் இதுல உள்ளடக்கம் செஞ்சிருக் கோம். வானிலை ஆய்வு மையத்தோட அன்றாட அறிக்கையை ஆன்லைன் இணைப்பு மூலம் இந்தச் செயலியில இணைச்சிருக்கோம். தங்களோட நிலத்துக்கு எப்ப தண்ணி பாய்ச்சணும்ங்கற தகவலையும் இது மூலம் தெரிஞ்சுக்க முடியும். இதனால தண்ணீரும், மின்சாரமும் மிச்சமாகும்.

அதுமட்டுமல்லாம, விவசாயிகள் தங்களோட உழைப்பையும் நேரத்தையும் மிச்சப்படுத்த முடியும். நொய்டா பல்கலைக்கழகத்துல நடந்த போட்டியில எங்களோட குழுவினர் கலந்துகிட்டு இந்தச் செயலியை, 36 மணி நேரம் தொடர்ச்சியா செயல்படுத்திக் காட்டினோம். எங்களோட செயலிக்கு முதல் பரிசு கிடைச்சது. இந்தச் செயலிக்கு உலக அளவுல காப்புரிமை வாங்குற துக்கான முயற்சிகள்ல ஈடுபட்டுக்கிட்டு இருக்கோம். இதுக்கு தமிழக அரசும், மத்திய அரசும் உதவி செய்யணும்’’ என வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்புக்கு, சுதர்சன்,
செல்போன்: 84287 00362
போட்டோ எடுத்தாலே போதும்!
‘‘நாங்க உருவாக்கியிருக்குற செயலியில இப்போதைக்கு முதல்கட்டமா செம்மண் தொடர்பான 560 புகைப்படங்களை உள்ளடக்கம் செஞ்சிருக்கோம். நேரடி செயல்முறை விளக்கப் போட்டிக்கான முன் தயாரிப்புக்கு 15 நாள்கள்ல மட்டுமே கால அவகாசம் இருந்ததுனால, இதுதான் சாத்தியமாச்சு. அடுத்தகட்டமா, மற்ற வகையான மண்ணின் ஈரப்பத அளவை கண்டுபிடிக்குறதுக்கான தரவுகளை உள்ளடக்கம் செய்வோம். ஒரு விவசாயி தன்னோட நிலத்தைச் செல்போன்ல போட்டோ எடுத்தாலே, மண்ணுல என்னென்ன சத்துகள் இருக்கு... வேற என்னென்ன சத்துகள் தேவைங்கற வசதிகளையும் இந்த செயலியில உள்ளடக்கம் செய்யப்போறோம்’’ எனத் தெரிவித்தார் சுதர்சன்.