தாவரக்கழிவுகளில் பதப்படுத்தப்பட்ட விறகு... மீன் கழிவுகளில் உரக்குச்சிகள்... மாதம் ரூ.2,50,000

கவனம் ஈர்க்கும் ஈரோடு பட்டதாரி!
எரிபொருள்
ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள குட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். பட்டதாரியான இவர், தாவரக்கழிவுகளிலிருந்து பதப்படுத்தப் பட்ட விறகும், மீன் கழிவுகளிலிருந்து உரக்குச்சியும் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.
இதுகுறித்து விரிவாக அறிந்துகொள்ள, ஒரு பகல்பொழுதில் இவருடைய தொழிற் சாலைக்கு நேரில் சென்றோம். திறந்தவெளி களத்தில் தாவரக்கழிவுகளை உலர வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த செந்தில்குமார், மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்று, தன்னுடைய தொழில் அனுபவங்களை உற்சாகமாகப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

“நாங்க விவசாயக் குடும்பம். ஆனாலும், விவசாயத்துல ஆர்வம் இல்லாமதான் இருந்தேன். கல்லூரிப் படிப்பை முடிச்ச பிறகு, திருப்பூர்ல உள்ள பின்னலாடை நிறுவனத்துல சில வருஷம் வேலை பார்த்தேன். உழைப்புக்கேத்த சம்பளம் கிடைக்கல. அதனால, அந்த வேலையை விட்டுட்டு, 2007-ம் வருஷம் சொந்த ஊருக்கே திரும்பி வந்துட்டேன். உள்ளூர்லயே ஏதாவது வேலை கிடைக்குமானு தேடிப்பார்த்தேன். எதுவுமே சரியா அமையல. அந்தச் சூழ்நிலை யிலதான் ஏதாவது சுயத்தொழில் தொடங் கலாம்ங்கற முடிவுக்கு வந்தேன்.
முன்னாடி, நான் திருப்பூர்ல இருந்தப்ப, அங்கவுள்ள கம்பெனிகள்ல பாய்லர் எரிபொருள் தேவைக்காகப் பதப்படுத்த விறகு பயன்படுத்துறதைப் பார்த்திருக்கேன். தாவரக்கழிவுகளிலிருந்துதான் தயாரிக்கப் படுற பதப்படுத்தப்பட்ட விறகுக்கு (Biomass Briquette) நல்ல வரவேற்பு இருக்குனு ஏற்கெனவே எனக்குத் தெரிஞ்சதுனால, இதையே நாம தொழிலா செய்யலாம்ங்கற முடிவுக்கு வந்தேன். அடுத்தகட்டமா இதை எப்படித் தயார் செய்யணுங்கற தொழில்நுட்பங்களைத் தெரிஞ்சுகிட்டு, வங்கியில 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கி 2010-ம் வருஷம், இந்தத் தொழிற்சாலையை ஆரம்பிச்சேன்.

இந்த விறகு தயாரிக்க, பெரும்பாலான தாவரக் கழிவுகளும் பயன்படும். மரத்தூள், நிலக்கடலைத் தோல், ஆமணக்கு ஓடு, மக்காச்சோளக்கழிவு உட்பட பலவிதமான இயற்கைக் கழிவுகள் எங்க சுற்றுவட்டாரத்துல தாராளமா கிடைக்குது. அதையெல்லாம் வாங்கிகிட்டு எங்க ஆலையில குவிச்சு வைப்போம். அதைத் தேவைக்கேற்ப அரைச்சு, திறந்தவெளி களத்துல போட்டு, உலர வைப்போம். 6 சத விகித ஈரப்பதத்துக்கு வந்த பிறகு, அதை எடுத்து இயந்திரம் மூலம் விறகு தயாரிப்போம்.
புகையும் சாம்பலும் இருக்காது
உலர வைக்கப்பட்ட மரத்தூளை கன்வேயர் வழியா, இந்த இயந்திரத் துக்குள்ள அனுப்புவோம். அதிக அழுத்தத்துல அது விறகாக மாற்றப் படும். தலா 700 கிராம் எடையும் முக்கால் அடி நீளமுள்ள விறகு களாகத் தயாராகி, வெளியில வந்து விழும். தேயிலை எஸ்டேட், டையிங் ஃபேக்டரி, உணவகங்கள்னு பல இடங்கள்லயும் இந்த விறகுகள் பயன்படுது. இதை எரிக்கிறப்போ புகையும் சாம்பலும் அதிகமா இருக்காது. வியாபாரிகள், ஆலைக்கே வந்து விறகைக் கொள்முதல் பண்ணிக் கிறாங்க. என்னோட தொழிற்சாலை யில 4 பேர் வேலை பார்க்குறாங்க.

மாசத்துக்கு 150 டன் விறகுகள் உற்பத்தி செய்றோம். ஒரு டன் 7,000 ரூபாய்னு விற்பனை செய்றேன். மூலப்பொருள்கள், போக்குவரத்துச் செலவு, பணியாளர்கள் ஊதியம், மின்சாரம் உட்பட எல்லாச் செலவு களும் சேர்த்து, ஒரு டன் விறகு உற்பத்திக்கு 6,000 ரூபாய் செலவாகும். ஒரு டன்னுக்கு 1,000 ரூபாய் வீதம், ஒரு மாசத்துக்கு 150 டன் விறகு விற்பனையில 1,50,000 ரூபாய் லாபம் கிடைக்குது.
எங்க குடும்பத்துக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்துல இந்தத் தொழிற்சாலையை அமைச்சிருக்கோம். தொழிற்சாலைக்கான இடம் போக, நிறைய இடம் இருக்குறதுனால, பஞ்சகவ்யா, மீன் அமிலம், மீன் கழிவுகள்ல இருந்து உரக்குச்சிகள் தயாரிப்புகள்லயும் ஈடுபட்டுக்கிட்டு இருக்கேன்.

மீன் அமிலம் தயாரிப்பு...
சுற்றுவட்டாரப் பகுதிகள்ல மீன் விற்பனை நிலையங்கள் நிறைய இருக்கு. விற்பனை யாகாமல் மிஞ்சக்கூடிய பழைய மீன்களைக் குறைஞ்ச விலைக்கு வாங்கிக்கிட்டு வருவோம். அதை இரண்டு பெரிய தொட்டிகள்லயும், 6 பிளாஸ்டிக் டேங்க்லயும் போட்டு மீன் அமிலம் தயாரிக்கிறோம்.
இந்தத் தொட்டிகள் மற்றும் டேங்க்ல அரையடி உயரத்துக்கு நாட்டுச்சர்க்கரை, அதுக்கு மேல அரையடி உயரத்துக்கு மீன், அதுக்கு மேல நாட்டுச்சர்க்கரை, மறுபடியும் மீன்னு இப்படி மாத்தி மாத்தி போட்டு நிரப்புவோம். அதை நல்லா மூடிவெச்சுட் டோம்னா, அடுத்த 21 நாள்கள்ல மீன் அமிலம் தயாராகிடும். டேங்க் மற்றும் தொட்டியின் கீழ்ப்புறத்துல இருக்கிற பைப் வழியே மீன் அமிலக் கரைசலை சேகரிச்சு, ஒரு லிட்டர் 200 ரூபாய்னு விற்பனை செய்றோம். மீன் அமிலம் தயாரிக்கிற டேங்க் மற்றும் தொட்டிகளை 45 நாள்களுக்கு ஒருமுறை சுத்தம் பண்ணிட்டு, புது உற்பத்தியை ஆரம்பிப்போம்.

மீன் கழிவுகளில் உரக்குச்சிகள்!
மீன் அமிலம் தயாரிக்குற தொட்டிகள்லயும் டேங்க்லயும் கடைசியா தங்கியிருக்குற மீன்கழிவுகளை எடுத்து, திறந்தவெளி களத்துல சில தினங்களுக்குக் காய வைப் போம். பிறகு, அதை அரைச்சு தூளாக் குவோம். இதோடு... வேப்பங்கொட்டைத்தூள், புங்கன்கொட்டைத்தூள், ஹியூமிக் அமிலம், மீன் அமிலத்தைக் கலந்து, ஊட்டமேற்றிய உரக்குச்சிகளா தயார் செய்றோம். இதை அடியுரமா ஒரு ஏக்கருக்கு 50 கிலோ போட்டாலே நல்ல பலன் கிடைக்கும். இதை மேலுரமாகவும் பயன்படுத்தலாம். பயிர்களுக்குப் பாசனம் செய்யுறப்போ இந்த ஊட்டமேற்றிய உரக்குச்சிகள் கொஞ்சம் கொஞ்சமா கரைஞ்சு, பயிர்களோட வேர் வளர்ச்சியை அதிகப்படுத்தும். பயிர் களுக்குத் தேவையான ஊட்டச்சத்தை சீராகக் கொடுக்கும். இந்த உரக்குச்சிகள் முழுமையா கரைய ரெண்டு மாதங்களாகும். இதை ஒரு கிலோ 34 ரூபாய்னு விற்பனை செய்றோம்.
பஞ்சகவ்யா தயாரிப்பு
இங்கிருந்து 7 கிலோமீட்டர் தொலைவுல இருக்கிற ஒரிச்சேரிப்புதூர்ங்கிற கிராமத்துல தான் எங்க மாட்டுப்பண்ணை இருக்கு. அங்க 14 காங்கேயம் மாடுகள் வளர்த்துக்கிட்டு இருக்கோம். அங்க இருந்து சாணத்தையும் சிறுநீரையும் இங்க கொண்டு வந்து பஞ்சகவ்யா தயார் செய்றோம். 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு பிளாஸ்டிக் டேங்க்ல பஞ்சகவ்யா தயாரிக்கிறோம். சாணம், சிறுநீர், பால், தயிர், நெய், வெல்லம்... இதையெல்லம் ஒண்ணா கலந்து டேங்க்ல போட்டு வச்சு, தினமும் காலை, மாலை நல்லா கலக்கிவிட்டா போதும். அடுத்த 21 நாள்கள்ல பஞ்சகவ்யா தயாராகிடும். இந்த டேங்க்கோட வெளிப் புறத்துல இருக்கிற பைப் வழியே பஞ்ச கவ்யாவை சேகரிச்சு, ஒரு லிட்டர் 80 ரூபாய்னு விற்பனை செய்றோம். மாசத்துக்கு ஒருமுறை டேங்கை சுத்தம் பண்ணி, மறுபடியும் பஞ்சகவ்யா தயாரிப்பை ஆரம்பிப்போம்.

பத்து விதமான சொந்தத் தயாரிப்புகள்!
இங்க மண்புழு உரமும் தயாரிக்கிறோம். அதுல இருந்து வடிநீரைச் சேகரிச்சு, அதையும் விற்பனை பண்றோம். மண்புழு வடிநீரைத் தண்ணியில கலந்து தெளிச்சா பயிர்களோட வளர்ச்சி சிறப்பா இருக்கும். இதனால் நிறைய விவசாயிகள் இதை வாங்கிக்கிட்டு போறாங்க. வேம்பு விதை, புங்கன் விதை, இலுப்பை விதைகள்ல இருந்து எண்ணெய் தயாரிக் கிறோம்.
மேலும், இந்த விதைகளைத் தனித் தனியே அரைச்சு தூளாகவும் விற்பனை செய்றோம். இந்தத் தொழிற்சாலையில மொத்தம் பத்து வகையான இடுபொருள்கள் தயார் பண்ணி செய்றோம்.
உயிர் உரங்கள்
இங்கிருந்து 40 கிலோமீட்டர் தொலைவுல இருக்கிற பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலையில பலவிதமான உயிர் உரங்கள் தயாரிச்சு விற்பனை செய்றாங்க. அங்கிருந்தும், பிற நிறுவனங்கள்ல இருந்தும், சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, டிரைக்கோடெர்மா விரிடி உள்ளிட்ட உயிர் உரங்களை வாங்கி விற்பனை செய்றேன். இதுக்காக, ஒரிச்சேரிப்புதூர்ல விற்பனைக் கூடம் நடத்துறேன்.
நான் உற்பத்தி செய்யக் கூடிய இடுபொருள் களையும், வெளியில வாங்கக்கூடிய உயிர் உரங்களையும், ‘துளிர்’ங்கிற பிராண்டு பெயர்ல விற்பனை பண்ணிட்டிருக்கேன். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகளும், விவசாயத்துல ஈடுபடக்கூடிய சில நிறுவனங்களும் என்னோட இயற்கை இடுபொருள்களை விரும்பி வாங்குறாங்க” எனத் தெரிவித்தவர், வருமானம் குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

வருமானம்
மீன் அமிலம், உரக்குச்சிகள், பஞ்சகவ்யா, மண்புழு உரம், உயிர் உரங்கள் உட்பட பலவிதமான இயற்கை இடுபொருள்கள் விற்பனை மூலம் மாசத்துக்கு 5,00,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. அதுல எல்லாச் செலவுகளும் போக, 1,00,000 ரூபாய் லாபமா கிடைக்குது.
தாவரக்கழிவுகள்ல இருந்து தயார் செய்ற பதப்படுத்தப்பட்ட விறகு விற்பனை மூலம் 1,50,000 ரூபாய் லாபம். ஆக மொத்தம், இந்தச் சுயதொழில் மூலம் மாசத்துக்கு 2,50,000 ரூபாய் லாபம் கிடைச்சுக்கிட்டு இருக்கு’’ எனச் சொல்லி முடித்தார்.
தொடர்புக்கு, செந்தில்குமார்,
செல்போன்: 95668 35599
ஆடு, கோழி, புறா...
கால்நடை வளர்ப்பிலும் ஆர்வமுள்ள செந்தில்குமார், அதுகுறித்த அனுபவங் களையும் பகிர்ந்தார். “என்கிட்ட 4 ஆடுகள் இருக்கு. பெருவிடை ரகத்துல ஆறு பெட்டைக்கோழிகளும், ரெண்டு சேவல்களும் இருக்கு. எங்களோட வீட்டுத்தேவைக்கு பெரும்பாலும் நாட்டுக்கோழி முட்டைகளைத் தான் பயன்படுத்துறோம். 80 புறாக்கள் வளர்க்கிறோம். சீக்கிரமே கால்நடை வளர்ப்பையும் பெரிய அளவுல விரிவு பண்ணலாம்னு திட்டமிட்டிருக்கேன்” எனத் தெரிவித்தார்.

இயற்கையில் செழிக்கும் வாழை, கரும்பு...
“இயற்கை முறையில 4 ஏக்கர்ல கரும்பும், 2 ஏக்கர்ல நேந்திரன் வாழையும் சாகுபடி செஞ்சுகிட்டு இருக்கோம். நாட்டு மாடுகளோட கழிவுகள்ல தயார் செய்ற இடுபொருள்களைக் கொடுக்குறதுனால, மண்ணு நல்லா வளமாகி, பயிர்கள் நல்லா செழிப்பா விளையுது. நாங்க உற்பத்தி செய்ற கரும்புல இருந்து தயார் செஞ்ச நாட்டுச்சர்க்கரையைத்தான், மீன் அமிலம் தயாரிக்கப் பயன்படுத்துறோம்’’ என்கிறார் செந்தில்குமார்.
மாற்று எரிபொருள்
“தாவரக்கழிவுகள்ல இருந்து தயாரிக் கப்படுற விறகு... சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத மிகச்சிறந்த மாற்று எரிபொருள். இந்தியாவுல இதோட பயன்பாடு அதிகரிச்சுதுனா, குறிப்பா மக்கள் இதை அதிகமா பயன்படுத்தினாங்கனா... எரிபொருளுக்காக மரங்கள் அழிக்கப்படுறது பெருமளவு குறையும். தாவரக்கழிவுகள் விற்பனை மூலம் விவசாயிகளுக்கு வருமானமும் கிடைக்கும்’’ என்கிறார் செந்தில்குமார்.

இடுபொருளுக்கு காங்கேயம் மாடுகள்!
“தாவரக்கழிவுகள்ல இருந்து பதப் படுத்தப்பட்ட விறகு தயாரிப்பு தொழில்ல இறங்கின புதுசுல பலவிதமான சவால்களைச் சந்திச்சேன். ஆனா, அடுத்த சில வருஷங் கள்லயே நிறைவான லாபம் கிடைக்க ஆரம்பிச்சதுனால, பெரிய நம்பிக்கையும் உத்வேகமும் கிடைச்சது. விவசாயத்துலயும் தீவிரமா இறங்கணும்னு முடிவெடுத்தேன்.
எங்க குடும்பத்துக்கு 6 ஏக்கர் நிலம் இருக்கு. அதுல என்னோட அம்மா அப்பா ரசாயன விவசாயம்தான் செஞ்சுகிட்டு இருந்தாங்க. அதுல நான் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். அந்தச் சமயத்துலதான் நானும் என் மாமாவும் இணைஞ்சு, காங்கேயம் நாட்டு மாடுகள் வாங்கி, மாட்டுப்பண்ணை ஆரம்பிச்சோம். அதுல கிடைக்கிற சாணம், மற்றும் சிறுநீரைப் பயன்படுத்திப் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மண்புழு உரம் உள்ளிட்ட இடுபொருள்கள் தயாரிக்க ஆரம்பிச்சோம். எங்க தேவைக்குப் போக மீதமுள்ளதை விற்பனை செய்யலாம்ங்கற யோசனை வந்துச்சு. அதை இப்ப வரைக்கும் தொடர்ந்து செஞ்சுகிட்டு இருக்கோம்’’ என்கிறார் செந்தில்குமார்.