மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

எட்டயபுரம் ஆட்டுச்சந்தை... கூடுதல் லாபத்துக்கு நிச்சய உத்தரவாதம்!

ஆட்டுச்சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
ஆட்டுச்சந்தை

சந்தை தொடர்

தென் மாவட்டங்களில் உள்ள ஆட்டுச் சந்தைகளில் எட்டயபுரம் ஆட்டுச்சந்தை மிகச் சிறப்பு வாய்ந்தது. ஆடுகளை வாங்க விரும்பு பவர்களுக்கு விரும்பும் இன ஆடுகள், திரட்சி யான உடல் அமைப்புடன் கிடைக்கும். விற்பனை செய்ய நினைப்பவர்களுக்கும் நல்ல விலை கிடைக்கும் என்பதால், ஆட்டு வியாபாரி கள் அதிக அளவில் இங்கு கூடுகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மகாகவி பாரதியார் பேருந்து நிலையத்துக்குப் பின்புறம் சனிக்கிழமைதோறும் இயங்கி வருகிறது இந்த ஆட்டுச் சந்தை.

தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் எட்டயபுரம், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு ஆகிய தாலுகாக்களில் முழுமையாக மானாவாரி விவசாயம் நடைபெற்று வருகிறது. மழையை மட்டுமே நம்பிய இந்த விவசாயத்தில் போதிய மழை பெய்யாவிட்டால் விவசாயிகளுக்கு நஷ்டம்தான். அதனால், மானாவாரிப் பகுதி களைச் சேர்ந்த விவசாயிகள், விவசாயத்தை மட்டும் நம்பி யிருக்காமல், உபதொழிலாக ஆடு, மாடு, கோழி வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதில், மாடுகளை விட ஆடு, கோழி வளர்ப்புதான் அதிகம் நடைபெற்று வருகிறது.

சந்தையில்
சந்தையில்அந்தப் பகுதிகளுக்குச் சென்றாலே வீட்டுக்கு வீடு குறைந்த பட்சம் 5 முதல் அதிகபட்சமாக 100 ஆடுகள் வரை வளர்த்து வருவதைப் பார்க்க முடியும். பெரும்பாலும் மேய்ச்சல் முறை வளர்ப்புதான். இந்தச் சந்தைக்கு வெளி மாவட்டங்களிலிருந்து விற்பனைக்காக வரும் ஆடுகளைவிட, மானா வாரிப் பகுதிகளிலிருந்து விற்பனைக்காக வரும் ஆடுகளின் எண்ணிக்கைதான் அதிகம்.

எட்டயபுரம் ஆட்டுச்சந்தையின் தலைவர் பாலசுப்பிரமணியனைச் சந்தித்துப் பேசினோம். ‘‘திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை எனத் தென் மாவட்டங்கள் மட்டுமல்லாம, பிற மாவட்டங்கள்ல இருந்தும் ஆடு வளர்க்கிறவங்க, ஆட்டு வியாபாரிங்க விற்பனைக்காக இங்க வந்துட்டுப் போறாங்க. வெள்ளிக்கிழமை சாயங்காலத்துல இருந்தே ஆடுகள் வரத் தொடங்கிடும். சனிக்கிழமை காலையில 7 மணிக்கு ஆரம்பிக்கிற இந்தச் சந்தை, மதியம் 12 மணி வரையிலும் நடக்குது. சாதாரண நாள்கள்ல 40 லட்சம் முதல் 60 லட்சம் ரூபாய் வரையிலும், தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், ரம்ஜான், பக்ரீத் மாதிரியான விசேஷ நாள்கள்ல 1 கோடி முதல் 2 கோடி ரூபாய் வரையிலும் விற்பனையாகுது.

பாலசுப்பிரமணியன்,
கருப்பசாமி,
வரதராஜன்
பாலசுப்பிரமணியன், கருப்பசாமி, வரதராஜன்நம்ம உறவு முறையில அக்கா, தங்கச்சியோட மகள் பூப்பெய்திட்டா தாய்மாமனுக்குத்தான் முதல்ல சேதி சொல்லி அனுப்புவாங்க. 30 வருஷத்துக்கு முன்னாலயெல்லாம் சீர்வரிசை கொண்டு வரும்போது ஒரு கிடாவையும் சீராகக் கொடுத்தாங்க. இப்பவும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள்ல சில கிராமங்கள்ல ‘தாய்மாமன் கிடா’ சீர் கொடுக்குற பழக்கம் நடைமுறையில இருக்கு. தாய்மாமன் கிடாக்காக நல்ல திடகாத்திரமான கிடாவைத் தேர்வு செஞ்சு வாங்கிட்டுப் போவாங்க. இதுபோகக் கோயில் திருவிழாக் களுக்காக ஆடு வாங்க வர்றவங்க, எட்டயபுரம் பஸ் ஸ்டாண்டு முன்னால நின்னு கவனிச்சு கிட்டே இருப்பாங்க.

அவங்களுக்குப் பிடிச்ச ஆடு வந்துடுச்சுன்னா, சந்தைக்குள்ள நிக்குற அவங்களோட ஆளுக்குப் போன் பண்ணி விலை பேசிடுவாங்க. ‘எட்டயபுரம் சந்தைக்கு ஆட்டைப் பத்திக்கிட்டு போனா நல்ல லாபத்துக்கு வித்துடலாம்’னு விவசாயிங்க மத்தியில ஒரு பேச்சு இருக்கு. இங்க ஆடுகளை விற்பனை செய்யுறதுக்காவே ஓவ்வோர் ஊருல இருந்தும் நாலஞ்சு விவசாயிங்க ஒண்ணாச் சேர்ந்து வண்டி பிடிச்சு ஆடுகளோட வருவாங்க. சாத்தூர், அருப்புக்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், கழுகுமலை, வைகுண்டம், விளாத்திகுளம்னு அந்தந்தப் பகுதிகள்லயே சின்னச் சின்னதா சந்தைகள் ஆரம்பிச்சுட்டாங்க. இந்தச் சந்தைகள், வாரத்துல ஒவ்வொரு கிழமைகள்ல நடக்குது. ஆனாலும், எட்டயபுரம் சந்தைக்குன்னு இருக்குற மவுசு இன்னும் குறையல” என்றார்.

விலைப்பேசப்படும் ஆடுகள்
விலைப்பேசப்படும் ஆடுகள்விருதுநகரைச் சேர்ந்த விவசாயி கருப்பசாமி, “நான் வளர்க்குற ஆடுகளை 20 வருஷமாவே இந்தச் சந்தையிலதான் விற்பனை செஞ்சுகிட்டு இருக்கேன். சந்தைக்கு கன்னி, கொடி ஆடுகள்தான் அதிகம் வரும். கன்னி ஆட்டுல செங்கன்னி, பால்கன்னி, கொடி ஆட்டுல கரும்போர், சிவலைப்போர், செம்மறியில செவ்வாடு, அரிச்செவ்வாடு, கருஞ்செவ்வாடு, வெம்பூர் பொட்டுப்போர், ராமநாதபுரம் வெள்ளை, சேலம் கறுப்பு, கோயமுத்தூர் குரும்பை, கச்சக்கட்டி, மேச்சேரி ரகங்களோட வரத்து அதிகமா இருக்கும். பிற ஆட்டுச் சந்தைகள்ல கிடைக்காத இன ஆடுகளைக்கூட இந்தச் சந்தையில வாங்கிடலாம்.

பக்ரீத், ரம்ஜான் மாதிரியான பண்டிகைக் காலங்கள்ல வெள்ளாட்டைவிட செம்மறி ஆடுகதான் குர்பானிக்காக அதிகம் விற்பனையாகும். உயிர் எடை, உருப்படிக் கணக்கு ரெண்டு விதமாகவும் விற்பனை செய்யுறோம். ஓர் ஆட்டை விலை பேசிட்டோம்னா ஆட்டோட முதுகுப் பகுதியில கொஞ்சம் முடியை வெட்டி அடையாளம் போட்டுடுவோம்” என்றார்.

ஆட்டுச்சந்தை
ஆட்டுச்சந்தை‘‘ ‘மாடு மறு வருஷம்... ஆடு அந்த வருஷம்’னு சொல்வாங்க. மாடு வளர்த்த அடுத்த வருஷத்துல இருந்துதான் பலன் கிடைக்கும். ஆனா, ஆடு வளர்த்தா அந்த வருஷத்துலயே பலன் கிடைக்கும். ஆடு வளர்ப்புக்குக் குறைவான முதலீடு போதும். வறண்ட நிலத்துலகூட மேய்ச்சல் முறையில ஆடுகளை வளர்க்க முடியும்.

ஆட்டிறைச்சியின் தேவை அதிகரிச்சுகிட்டே இருக்கு. அதனால ஆடு வளர்ப்புல நல்ல லாபம் பார்க்க முடியும். அவசரத் தேவைக்கு ஒண்ணு, ரெண்டு ஆடுகளை வித்து அந்தத் தேவையைப் பூர்த்திச் செஞ்சுக்கலாம். யார்கிட்டயும் கை மாத்தாவோ, வட்டிக்குக் கடன் வாங்கியோ கஷ்டப்பட வேண்டாம். இதனாலதான் ஆடுகளை ‘ஏழைகளோட ஏ.டி.எம்’னு சொல்றோம்” என்றார் ராமநாத புரத்தைச் சேர்ந்த பெருமாள்சாமி.

விற்பனை முடிந்தது
விற்பனை முடிந்ததுதூத்துக்குடி மாவட்டம் அயன்வட மலாபுரத்தைச் சேர்ந்த கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வரதராஜன், ‘‘தாய் ஆடுகளை வாங்கிட்டு வந்து இனப்பெருக்கம் செஞ்சு குட்டிகளை விற்பனை செய்யுறது, கிடாக்களை மட்டும் வாங்கிட்டு வந்து வளர்த்து விற்கிறதுனு ரெண்டு முறைகள்ல ஆடு வளர்க்கலாம். தென் மாவட்டங்கள்ல ஆடுகளைப் பலி கொடுக்குற கோயில்கள் அதிகமா இருக்குறதுனால, பெட்டை ஆடு களைவிடக் கிடாக்களுக்குத்தான் அதிக கிராக்கி இருக்குது. பலி போடுறதுக்குக் கறுப்பு, சுத்த செவலை நிற ஆடுகளைத்தான் அதிகமா வாங்குவாங்க. அதனால அந்த மாதிரி ஆடுகளாகப் பார்த்து வாங்குறாங்க. கிடாக் களை வளர்க்க பரண்முறை தேவையில்லை. வேளையாளுகளும் அதிகமா தேவையில்ல. சாதாரணக் கொட்டகையில அடைச்சு, நேரத்துக்குத் தீவனம் கொடுத்து 3 மாசம் பராமரிச்சாலே போதும். கொட்டகைக்கும் அதிக செலவில்லாம, தென்னை மட்டை, தகரம் மூலமா அமைச்சாலே போதும்.

நுழைவாயில்
நுழைவாயில்

ஆடுகளைச் சந்தையில வாங்கப் போனாலும், ஆடு வளர்க்கிறவங்ககிட்ட வாங்கப் போனாலும்... ஆட்டோட தோலை பிடிச்சு இழுத்துப் பார்த்தா, ரப்பர் மாதிரி இருக்கணும். இப்படி இல்லாம கடினமா இருந்தா, அந்த ஆட்டைத் தேர்வு செய்ய வேண்டாம். ரப்பர்போல தோல் இருந்தாதான் உடல் பருமனாகும். எடையும் அதிகரிக்கும். ஆட்டோட கால்கள் திரட்சியாக (கனமாக) இருக்கணும். திரட்சியா இருந்தாதான் எடை அதிகரிக்கும்போது தாங்கி நிற்க ஏதுவா இருக்கும். சில ஆடுக, ஒரே ஈத்துல ரெண்டுக்கும் மேல குட்டிகளை ஈனும். அந்த மாதிரி குட்டிகளைத் தேர்வு செய்ய வேண்டாம்.

கிடா குட்டிகளைத் தேர்வு செய்யும்போது கொம்பு, மடி கொம்பா இல்லாம இருந்தா, சில சமயம் விற்பனை வாய்ப்புக் குறையலாம். ஒரே வயசுள்ள ஆடுகளை வாங்காம சின்னது, பெருசுனு வாங்கணும். மொத்தத்துல ஆடுவளர்ப்புங்கறது, எப்பவுமே லாபகரமான தொழில்கள்ல மிகமுக்கியமான தொழில்” என்றார் உற்சாகத்துடன்.

- பெருகும்

எந்த மாதம்… எந்த ஊர்… எந்த நிறம்!

வித, விதமான ஆடுகள்
வித, விதமான ஆடுகள்

சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் கறுப்பு நிற ஆடுகளும், ஆனி, ஆடி மாதங்களில் கரும்போர், சிவலைப்போர் ஆடுகளும், ஆவணி, புரட்டாசி மாதங்களில் கன்னி ரக ஆடுகளும், மாசி, பங்குனியில் கன்னி, கொடி மற்றும் இதர ரகங்களும் அதிகம் விற்பனையாகும். ஐப்பசி முதல் மார்கழி வரையிலான மாதங்கள் விரதக் காலங்களாக இருப்பதால், இந்த மாதங்களில் ஆடுகள் விற்பனை சற்றுக் குறைவாக இருக்கும். ஆனால், பெட்டை ஆடுகள், குட்டி ஆடுகளுக்கு விற்பனைத் தேவை வருடம் முழுவதும் இருக்கும். ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், கோயிலில் பலி கொடுக்க வெள்ளை நிறத்தைத் தவிர்த்து, மற்ற நிறக் கிடாக்களை வாங்குகிறார்கள். திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சுத்த கறுப்புக் கிடாக்களை விரும்புகிறார்கள். இதற்கு அதிக விலை கொடுத்து வாங்கவும் தயங்குவதில்லை. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் உடம்பு கறுப்பாகவும், அடிப்பகுதி வெள்ளையாகவும், முகத்தில் நாமம் இருக்கும் கன்னி ரக ஆடுகளை அதிகம் விரும்புகிறார்கள்.