நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மத்திய அரசின் மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தின் சார்பில் அண்மையில் நீலகிரி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. சரிவு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் விவசாயத்தால் ஏற்படும் மண் அரிப்பை தடுப்பது குறித்து இதில் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், படிமட்ட முறையில் விவசாயம் செய்வதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது.

இது குறித்து பேசிய மத்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு மையத்தின் முதன்மை ஆய்வாளர் மணிவண்ணன், "மிதமான மற்றும் செங்குத்து சரிவு பகுதிகளில் கனமழை பொழியும்போது மண் அரிப்பு ஏற்படுகிறது. நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்த வரை 68 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்களில் மண் அரிப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது. மண் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் விவசாயம் மேற்கொள்வதால் ஆண்டுக்கு ஓரு ஹெக்டேர் விளைநிலத்தில் சராசரியாக 20 முதல் 40 டன் வரை மேல் மண் இழப்பு ஏற்படுகிறது. காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக அண்மை காலமாக ஒழுங்கற்ற மழைப்பொழிவு இருக்கிறது.
இதனால், அபாயகரமான விகிதத்தில் மண் அரிப்பு அதிகரிக்கிறது. நீர்நிலைகளில் வண்டல் மண் படிவதால் அவற்றின் கொள்ளளவு குறைகிறது. மழை காலங்களில் தண்ணீரை தேக்கி வைக்க முடிவதில்லை. இதனால் கோடை காலங்களில் தண்ணீர் பற்றாகுறை ஏற்படும் நிலை உள்ளது. மண் வளம் பாதிப்பதால் அதிகளவிலான ரசாயன உரங்கள் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு நிறுவன ஆய்வுகள் படிமட்டங்கள் அமைத்து விவசாயம் செய்வதால் மலைக் காய்கறி விவசாய நிலங்களில் விளைச்சலை அதிகரிப்பதோடு, 40 முதல் 50 சதவிகிதம் நீர் ஓட்டம் குறைப்பு மற்றும் 90 முதல் 98 சதவிகிதம் மண் அரிப்பை குறைக்க முடியும்.
இருப்பினும் நீலகிரி மாவட்டத்தில் பெஞ்ச் டெர்ரஸ்ஸிங் (Bench Terracing Slope) எனப்படும் படி முறை விவசாயம் என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. இதைப்பற்றி விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது" என்றார்.