Published:Updated:

தமிழக விவசாயிகள் தலைநிமிர ஸ்டாலின் செய்ய வேண்டியவை என்னென்ன? பட்டியலிடும் செயற்பாட்டாளர்!

Farmer (Representational Image)
News
Farmer (Representational Image) ( AP Photo / Rajesh Kumar Singh )

விவசாயிகளின் வளமான வாழ்வுதான் மலர்ச்சியும் மகிழ்ச்சியும் மிக்க தமிழக கிராமங்களை உருவாக்கும். நம்மாழ்வார் கனவான வாழும் கிராமங்களை உருவாக்கும். மேலும் கிராமங்கள் உணவு அரசியலில் சுய அதிகாரம் கொண்டவைகளாகவும் இருந்திடும்.

Published:Updated:

தமிழக விவசாயிகள் தலைநிமிர ஸ்டாலின் செய்ய வேண்டியவை என்னென்ன? பட்டியலிடும் செயற்பாட்டாளர்!

விவசாயிகளின் வளமான வாழ்வுதான் மலர்ச்சியும் மகிழ்ச்சியும் மிக்க தமிழக கிராமங்களை உருவாக்கும். நம்மாழ்வார் கனவான வாழும் கிராமங்களை உருவாக்கும். மேலும் கிராமங்கள் உணவு அரசியலில் சுய அதிகாரம் கொண்டவைகளாகவும் இருந்திடும்.

Farmer (Representational Image)
News
Farmer (Representational Image) ( AP Photo / Rajesh Kumar Singh )

இந்தியாவில் தமிழகம் சிறப்பான இடத்தைப் பல்வேறு துறைகளில் பெற்றுள்ளது போலவே வேளாண்துறையிலும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. பல பயிர்களின் விளைச்சலில் தமிழகம் முதல் மூன்று இடங்களுக்குள் உள்ளது. அரசு உருவாக்கித் தந்துள்ள வசதிகளைக் கொண்டும் தங்களது உழைப்பாலும் அதிகம் விளைவித்து இதைச் சாதித்துள்ளனர் விவசாயிகள். ஆனால், இந்த உயர் நிலைக்கு தமிழகமும் விவசாயிகளும் கொடுத்துள்ள விலையும் அதிகம். அதிக கடன், மண்வளம் பாதிப்பு, நிலத்தடி நீர் பாதாளத்துக்குச் சென்றது, உணவு நஞ்சானது, மக்கள் நோயாளிகள் ஆனது என அதிக விலை கொடுத்துள்ளோம். இதன் காரணமாகவே விவசாயிகள் தங்களது பிள்ளைகளை விவசாயத்தை விட்டுவிட்டு வேறு தொழில்களுக்கும் வேலைகளுக்கும் அனுப்புகின்றனர்.

மாநில அரசின் உரிமைப்பட்டியலில் விவசாயம் இருந்தாலும் அது உண்மையில் மேலோட்டமான உரிமைதான். இந்தியா முழுதும் எப்படியான விவசாயம், என்னென்ன விவசாயம் நடக்கவேண்டும், சார்ந்த ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகள், பூச்சிக் கொல்லி அனுமதி, மரபணு மாற்றுப் பயிர்களுக்கான அனுமதி இப்படி பலவும் ஒன்றிய அரசின் திட்டப்படியே நடத்தப்படுகிறது. மாநில அரசால் ஒரு பூச்சிக்கொல்லியைக்கூட தடை செய்ய முடியாது. மாநில அரசுகள் சொல்வதை நடத்திடும் அமைப்புகளாகவே இருப்பதுதான் அரசியல் யதார்த்தம்.

விவசாயம்
விவசாயம்

இந்த அரசியல் யதார்த்தத்தையும், பருவநிலை மாற்றத்தையும், புதிய சட்டங்கள், சட்டத் திருத்தங்கள் மூலம் ஒன்றிய அரசு பாதுகாப்பு வளையங்களை நீக்கி வருவதையும் மனதில் கொண்டு தமிழக விவசாயிகள் மற்றும் விவசாயத்தையும் சிறப்பான நிலைக்குக் கொண்டு வர வேண்டிய சிக்கலான நிலை தமிழக அரசுக்கு உள்ளது.

வளமான விவசாயமென்பது பருவநிலை மாற்றத்தை அதிக பாதிப்பில்லாமல் எதிர்கொள்ளவதன் மூலமே சாத்தியம் என்பதும் விவசாயிகளின் வாழ்வு மேம்படுவதையொட்டியும் உள்ளது. அதிக விளைச்சல் என்ற ஒற்றை இலக்கு மூலம் தமிழக விவசாயத்தை மேம்படுத்துவது என்பது எளிய ஒன்றல்ல. அதிக விளைச்சல் என்பது அதிக வருவாய் தரும் என்ற போலி வாதத்தைக் கூறித்தான் பசுமைப் புரட்சி வளர்க்கப்பட்டது. சந்தைப் பொருளாதாரத்தில் ஒரு பொருள் அதிகம் உற்பத்தியானால் இயல்பாகவே விலை குறையும். இது விவசாயத்துக்கும் பொருந்தும். ஆனால், விவசாயம் என்பது மக்களின் உணவாகவும், பல்வேறு தொழில்களுக்கான மூலப் பொருள்களை உருவாக்கிக் கொடுப்பதாகவும் உள்ளது. ஆகவே, அதிக விளைச்சலும் தேவை; அதே சமயம் விவசாயிகளுக்கான வாழ்வை உயர்த்துவற்கான வழிமுறைகளையும் அரசு உருவாக்க வேண்டும்.

1835-36-ல் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் சார்லஸ் மெட்காஃப் (Charles Metcalfe) அவர்களோ, ``கிராம சமூகங்கள் சிறு குடியரசுகள் போல் இருக்கின்றன. ஏறத்தாழ தங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொண்டிருக்கின்றன. எந்த வெளி உதவிகளும் தேவைப்படாத சுதந்திரமானவைகளாக இருக்கின்றன. அவை எந்தவொன்றும் நிகழாதது போல் அப்படியே நிலைத்து இருக்கின்றன. சாம்ராஜ்யங்கள் மாறி சாம்ராஜ்யங்கள் சரிந்தன, ஒரு புரட்சி போய் மற்றொரு புரட்சி வந்தது. ஆனால், கிராமங்கள் ஏதும் நடக்காதது போல் அப்படியே இருந்தன” என்கிறார்.

தமிழக விவசாயமும், விவசாயிகள் வாழ்வும் அடைய வேண்டிய இலக்காக இதைக் கொள்ளலாம்.

மாற்றத்தை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் என இம்மூன்றும் ஒரே சமயத்தில் நடந்திடத் தேவையுள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்தி அடுத்த 5 ஆண்டு காலத்துக்குள் அவர்களின் வருவாயை அதிகப்படுத்துதலுக்கான வரைபடத்தை உருவாக்க வேண்டும்.

விவசாயிகளின் வளமான வாழ்வுதான் மலர்ச்சியும் மகிழ்ச்சியும் மிக்க தமிழக கிராமங்களை உருவாக்கும். நம்மாழ்வார் கனவான வாழும் கிராமங்களை உருவாக்கும். மேலும் கிராமங்கள் உணவரசியலில் சுய அதிகாரம் கொண்டவைகளாகவும் இருந்திடும்.

இந்த இலக்கை அடைவதற்காகச் செய்ய வேண்டுவன:

விவசாய தளத்தில் செய்ய வேண்டியவை

மண்ணின் ஆரோக்கியம்:

இந்திய ஒன்றியத்தின் பிரதமர் 2015 ஆகஸ்டு 15 அன்று தனது உரையில் இந்திய விளைநிலத்தின் நலத்தைக் காக்க வேண்டும் என்று பேசியது நமது விளைநிலத்தின் நலன் எப்படி இருக்கிறது என்பதற்கான ஆதாரமாக உள்ளது. ரசாயன உப்புகள், பூச்சிக் கொல்லிகள், களைக் கொல்லிகள் அதிக பாசனம், ஓரினப் பயிர்களால் ஏற்பட்ட ஊட்ட இழப்புகள், பண்ணைகளில் உயிர்ச் சூழல் மாற்றி அமைக்கப்பட்டதால் எற்பட்ட பாதிப்புகள், காற்று, மழையால் ஏற்பட்ட மண்ணரிப்பு எனப் பல் வகையான தாக்கங்களால் தமிழக விளைநிலங்கள் பாதிப்பில் உள்ளன.

இந்த நிலை விளைச்சலின் அளவையும் பாதிக்கிறது. தொடர்ந்து இறங்குமுகமாக இருக்கிறது, செலவு ஏறுமுகமாக இருக்கிறது. விவசாயத்திலும் விளைச்சலிலும் அதிகம் பாதிப்பில்லாமல் மண்ணின் நலனை மீட்டெடுக்கும் பல வழிகளைத் தமிழக விவசாயிகள் கடைப்பிடிப்பதால் எளிதாகவே தமிழக மண்ணின் நலத்தை மீட்டெடுத்திட முடியும்.

மண்ணின் ஆரோக்கியமே மக்களின் ஆரோக்கியம். ஆரோக்கியம் மிக்க மக்களே பொருளாதார வளர்ச்சயை அதிகப்படுத்தும்.

மேலும் அதிக கரிமச் சத்து மிக்க மண்ணே அதிகத் தண்ணீரை நிலத்தடி நீராக்கும். பாசனத்துக்கான தண்ணீர் அளவைக் குறைக்கும். பருவ நிலை மாற்றத்தின் பாதிப்புகளில் இருந்து குறைந்தளவேனும் பாதுகாப்பை உருவாக்கும்.

எனவே தமிழக விளைநிலங்களின் உயிர்ப்பை மீட்டெடுக்கும் திட்டங்களை அதிகப்படுத்த வேண்டும். சிறப்பு உதவித் திட்டங்களை உருவாக்க வேண்டும்.

நாட்டு ரக விதைகள்
நாட்டு ரக விதைகள்

விதைகள்:

விவசாயத்தின் மூல ஆதாரங்களில் ஒன்றான விதைகள் விவசாயிகளிடமில்லை. நிலத்தின் தன்மைகளுக்கும், கால சூழ்நிலைகளுக்கும், வட்டாரங்களுக்கும், ஏற்ற காலத்தால் சோதிக்கப்பட்ட ரகங்கள் வீரிய விதைகளால் புறந்தள்ளப்பட்டுள்ளன. த.நா.வே பல்கலைக்கழகம் ஒரு ரகத்தை வெளியிடும் முன் தமிழகத்தின் பல்வேறு வேளாண் சூழல்களில் சோதனைகள் (Multi Location Trial) செய்து, பின்னர் எந்தெந்தப் பகுதிக்கு ஏற்றது என்ற பரிந்துரைகளுடனே வெளியிடப்படுகிறது. ஆனால், வணிக நிறுவனங்களின் விதைகள் இத்தகு பல் சூழல் சோதனைகளுக்கு உட்படுத்தபடுவதில்லை. இந்தியா முழுமைக்கும், தமிழகம் முழுமைக்கும் ஒரே ரகமாகவே உள்ளது. மேலும், இவற்றை ஒவ்வொரு பருவத்துக்கும் மீண்டும் மீண்டும் வாங்கிட வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையை மாற்றிட வேண்டும்.

பாரம்பர்ய ரகங்கள் அதிக விளைச்சலைத் தருபவை என்பதை இன்று விவசாயிகள் நிரூபித்திருக்கிறார்கள். இவற்றை ஊக்குவிக்க வேண்டும். பாரம்பர்ய விதைகளுக்கான விதைக் கிராமங்கள் உருவாக்கிட வேண்டும். பாரம்பர்ய ரகங்களின் இனத்தூய்மையைக் காப்பதற்கான பயிற்சிகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். பாரம்பர்ய விதைகள் உற்பத்தியை அறவியல் பூர்வமானதாகவும் உயரிய தரத்துடனும் உருவாக்கும், வணிக நிறுவனங்களுடன் போட்டியிடுவதற்குரிய திறனை விவசாயிகளுக்கும், சுய உதவிக் குழுவினருக்கும் உருவாக்க வேண்டும்.

தண்ணீரை விளைவித்தல்:

தண்ணீர் மனிதர் என்றழைக்கப்படும் ராஜேந்தர் சிங் அவர்கள், தமிழக விவசாயிகளிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார், ``நீங்கள் எங்கள் விவசாயிகளுக்கு கரும்பு விளைவிப்பதைச் சொல்லிக் கொடுங்கள், நாங்கள் தண்ணீரை விளைவிப்பதைச் சொல்லிக் கொடுக்கிறோம்” என்று.

65-க்குப் பின் கடைப்பிடித்த விவசாயம் அதிக தண்ணீர் தேவைப்படும் விவசாயமாக உள்ளது. உப்பு தின்ற மண் அதிக தண்ணீரைக் குடிக்கிறது. மேலும் கட்டுபடியாகாத விவசாய முறை ஒட்டு மொத்த நிலப் பயன்பாட்டையும் மாற்றி அமைத்துவிட்டது. இருக்கும் மற்றும் கிடைக்கும் தண்ணீரைப் பயன்படுத்திய விவசாயம் தண்ணீரைத் தேடிப் பிடித்து செய்யும் விவசாயமாக மாறியதால் மூன்றில் இரு பங்கு பகுதிகளில் நிலத்தடி நீர் அபாயகரமான நிலையில் உள்ளது. எவ்வளவு எடுக்கப்பட்டதோ அந்தளவு தண்ணீர் நிலத்துக்குள் இறங்காததால் நம் கிராமங்களில் தண்ணீர் இல்லாத கிணறுகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. மேலும் நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்தும் விவசாயமாக மாறியதால் ஒட்டுமொத்த கிராமங்களின் தண்ணீர் நிலைமை மோசமானதாகவே உள்ளது. ஒரு ஆண்டு மழைப் பொழிவு தவறும் போது குடிநீருக்காகத் தடுமாறும் கிராமங்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டேயுள்ளது. தண்ணீர் விவசாயத்துக்கானதாக மட்டுமானதல்ல; ஒட்டுமொத்த கிராம சமூகத்துக்கானதாகும். அந்த வகையில் தண்ணீரை விளைவிக்க வேண்டியது விவசாய நிலங்களில் மட்டுமல்ல. ஒட்டு மொத்த கிராமங்களிலும். கிராமங்களில் உருவாக்கப்படும் தண்ணீர் எல்லோருக்குமானதாகவும் இருக்கும். 1965-க்கு முன்பு வரை கிராமங்களில் இருந்த ஓடைகளில் குறைந்தது மூன்று மாதங்களாவது தண்ணீர் ஓடிய ஓடை தற்போது மழை நாள்களில் சில நாள்கள் மட்டும் தண்ணீர் ஓடும் வடிகால்களாக மாறிவிட்டது. இவற்றை மீண்டும் உயிர்ப்பித்திட வேண்டும்.

ஓடைகளுக்கு உயிரூட்டல் கடினமான காரியமல்ல. மண்ணில் கரிமச் சத்துகள் அதிகமாகும்போது நிலம் மழை நீரைத் தன்னுள் தேக்கி வைத்து மெல்ல வெளியிடும். மண்ணில் சேரும் ஒவ்வொரு கிராம் கரிம சத்தும் 8 கிராம் தண்ணீரைத் தன்னுள் சேமித்து வைக்கும். 200 மிமீ மழை பெய்யும் ராஜஸ்தானில் வறண்ட ஆறுகளுக்கு உயிர் கொடுக்க முடியும்போது 900+ மழை பெய்யும் தமிழகத்தில் மிக எளிதாக செய்திட இயலும். ஒரு மக்கள் இயக்கமாக இது நடைபெற அரசு முன் கையெடுக்க வேண்டும்.

பாய்ந்தோடும் தண்ணீர்
பாய்ந்தோடும் தண்ணீர்

திணையியல் அடிப்படையிலான விவசாயம் (Principles of crop geography):

நமக்கு மொழி இலக்கணம் வாழ்வியல் இலக்கணமாகவும் உள்ளது. நிலத்தை 5 ஆகப் பிரித்த சமூகம் நம்முடையது. ஒவ்வொரு நிலப்பரப்புக்கும் ஏற்ற விவசாயத்துக்குப் பதிலாக பசுமைப் புரட்சியும் சந்தையும் மாறிய சமூகவியலும் அதிக வருவாய் பார்த்தாக வேண்டிய நெருக்கடியை உருவாக்கியது. இதன் காரணமாக அதிக தண்ணீரை ஆழத்தில் இருந்து எடுத்துப் பயன்படுத்தும் விவசாய முறைக்கு மாறிவிட்டது தமிழகம். தமிழகத்தில் 700 மி.மீ அளவு மழை மட்டுமே பெறும் பகுதிகளில் கூட அதிக தண்ணீர் கேட்கும் தென்னை தோப்புகள் உள்ளன.

இதை மாற்றி அமைக்க வேண்டும். எளிதான காரியமல்ல எனினும் இது தொடரவும் அனுமதிக்கக் கூடாது.

எந்தப் பயிரை விளைவித்தாலும் கிடைக்கும் வருவாயில் அதிக வேறுபாடு இல்லாத வகையிலான வழிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும். உயிர்ச் சூழலுக்கு (Agro Ecological) மற்றும் வட்டாரத்துக்கேற்ற பயிர்கள் முறைக்கு (Principles of crop geography) மாறுவதற்கான வழிகளை உருவாக்க வேண்டும்.

பூச்சிக் கொல்லிகள் இல்லா விவசாயம்:

ஆந்திர அரசு விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளை நிறுத்திட பூச்சிக்கொல்லிகள் இல்லாத பூச்சிக்கட்டுப்பாட்டு முறைகளை (Non Pesticidal Pest Management) நடைமுறைப்படுத்தியது. இதன்மூலம் 75 லட்சம்பரப்பில் பூச்சிக்கொல்லிகள் இல்லாத விவசாயம் நடந்துவருகிறது. இந்தியாவில் தமிழகம்தான் பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறைகளைக் கண்டறிவதில் முன்னோடியாக இருந்த மாநிலம். இம்முறைகளை மீண்டும் கைக்கொண்டு தமிழக விவசாயத்தை இந்த நஞ்சுகளில் இருந்துகாக்க பூச்சிக்கொல்லிகள் இல்லாத விவசாயமுறையை அறிமுகப்படுத்த வேண்டும்.

உயிர்ச்சூழல் விவசாயம்:

விவசாயிகளின் பொருளாதார நலன், விளைநிலத்தின் நலன், குறைந்த தண்ணீரில் அதிக விளைச்சலைப் பெருவது, பண்ணைகளிலும் கிராமங்களிலும் தண்ணீர் வளத்தைப் பெருக்குதல், கிராமங்களின் உயிர்ச் சூழலை மீட்டெடுத்தல், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான திறனை கிராமங்களில் உருவாக்குவது, நிலங்களின் தன்மைக்கேற்ற விவசாயத்தை உருவாக்குவது, ஒருங்கிணைந்த பண்ணையம், நஞ்சில்லா உணவை விளைவித்தல் எனப் பலவும் ஒருங்கே உள்ள விவசாய முறையான உயிர்ச்சூழல் விவசாயத்தை மாநிலம் முழுமைக்கும் விரிவாக்குவதற்கான கொள்கையும் திட்டங்களையும் உருவாக்கி நடைமுறைப்படுத்திட வேண்டும். இதற்கான சாத்தியங்களை நம்மாழ்வாரும் அவரோடு இணைந்து இயங்கிய விவசாயிகள் உருவாக்கியுள்ளனர். இயற்கை வழி விவசாயத்தின் ஏதேனும் சில கூறுகளைக் கைக்கொள்ளாத விவசாய கிராமங்கள் எதுவும் இல்லை என்ற சாதகமான நிலையை வேகமாக விரிவாக்க வேண்டும். இதன் மூலம் பூச்சிக் கொல்லிகள் இல்லாத விவசாயம், உள்ளூர் இரகங்கள் காப்பு உள்ளிட்டவை தானே சாத்தியமாகும்.

வேளாண் பொருளாதாரத்தில் செய்ய வேண்டியவை:

தற்சார்பானதாக இருந்த விவசாயம் சந்தைக்கானதாக மாற்றப்பட்டதில் இருந்துதான் விவசாயிகளின் வீழ்ச்சி தொடங்குகிறது. சந்தையோடு பேரம் பேசுவதற்கான வாய்ப்புகள் விவசாயிகளுக்கு இல்லை என்பதாலேயே குறைந்தபட்ச ஆதரவு விலை, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் என்றெல்லாம் உருவாக்கியது. ஒன்றிய அரசு இந்தப் பாதுகாப்பு வளையங்களை நீக்கிட விரும்புகிறது. கொண்டு வரப்பட்ட மூன்று சட்டங்கள் இதன் அடையாளம். தமிழக விவசாயிகளின் வாழ்வை வளமாக்க அவர்களின் வருவாயை மிகக் குறைந்த பட்சம் இரட்டிப்பாக்கிட வேண்டும். ஆனால் அது ஒன்றிய அரசின் பாணியில் இருந்திடக் கூடாது. அதற்கான பொருளதார முன்னெடுப்புகள், பாதுகாப்பு முன்னெடுப்புகள் எனப் பலவும் தமிழக அரசு செய்திட வேண்டும்.

வருவாயை இரட்டிப்பாக்குதல்:

அதிக வெளி இடுபொருள்காளால் நடக்கும் விவசாயத்தில் வெளி இடுபொருள்களை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவு செலவு குறையும். விவசாயம் கட்டுபடியாவது அதிகமாகும். மேலும், கிராமத்தில் உள்ள ஒவ்வொரு விவசாயியும், விவசாயத் தொழிலாளரும் நுகர்வோரே. உள்ளூரிலேயே அதிக வருவாயைப் பெருவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் உள்ளூர் உற்பத்தி, உள்ளூர் நுகர்வு என்ற முறையை உருவாக்கினால் ஒன்றிய அரசை முந்திக்கொண்டு தமிழக விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கிடலாம். சாகுபடி முறையில் செலவு குறைத்தல், விளைச்சலைக் கூட்டுதல், சேமித்து வைத்திருந்து சந்தைப்படுத்துதல், மதிப்பு கூட்டி விற்றல், பிற தேவைகளை உள்ளூரிலேயே உருவாக்கிடல் (எ-கா சோப்பு, பற்கசை, எல்.இ.டி பல்புகள்) எனக் குடும்பத்தின் செலவுகளைக் குறைத்தல் எனப் பல்வேறு வழிகளில் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதுடன் கிராமத்தவர்களின் வாழ்க்கைச் செலவையும் குறைக்க முடியும். உள்ளூரிலேயே அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கிட முடியும்.

வேளாண் பட்ஜெட்:

தமிழக விவசாயத்தில் 60% அளவு மானாவாரி விவசாயமாக இருக்கிறது. ஆனால், நிதிநிலை அறிக்கையில் மானாவாரி விவசாயத்துக்கான பங்கு குறைவாகவே இருக்கிறது. விவசாயத்துக்கான நிதிஅளவில் 60% அளவு நிதியை மானாவாரி விவசாயத்துக்கும் அவ்விவசாயிகளின் நலனுக்கும் ஒதுக்கப்பட வேண்டும்.

வேளாண் ஏற்றுமதி
வேளாண் ஏற்றுமதி

வேளாண் கடன் கொள்கை:

விவசாயம் செய்வதற்கு கடன் தேவைப்படாத நிலையை உருவாக்குவதே இலக்காக இருப்பினும் தற்சமயத்தில் அதிக இடுபொருள்கள், குறையும் விளைச்சல், சுரண்டும் சந்தை உள்ளிட்டவை விவசாயிகளைக் கடனில் தள்ளியுள்ளன. அடுத்த ஐந்தாண்டு காலத்துக்குள் விவசாயிகளின் பொருளாதார நிலையை உயர்த்தி விவசாயம் செய்வதற்காகக் கடன் தேவையில்லை என்ற நிலையை உருவாக்கிட வேண்டும். அது வரை எல்லா விவசாயிகளுக்கும், எல்லா வகையான பயிர்களுக்கும் சிரமங்களின்றி கடன் கிடைக்கச் செய்திட வேண்டும்.

மேலும், விளைந்த பொருள்களை அவசரமாக விற்றாக வேண்டும் என்ற நிலையைத் (Distress Selling) தடுக்க விளைபொருள்கள் நல்ல விலை கிடைக்கும் வரை வைத்திருந்து விற்பதற்கான கட்டமைப்புகளை ஒவ்வொரு குக்கிராமத்திலும் உருவாக்க வேண்டும். மேலும், விளைபொருள்களின் மீது கடன் பெறும் வசதியை பெரும்பாலான விவசாயிகள் பயன்படுத்தாததுக்கான காரணங்களைக் கண்டறிந்து நீக்கிட வேண்டும்.

விலை வீழ்ச்சியிலிருந்து பாதுகாப்பு:

தக்காளி போன்ற விளைபொருள்களின் விலை சந்தையில் பல சமயங்களில் உற்பத்தி செலவைவிட குறைவான விலைக்கே வாங்கப்படுகிறது. இப்படிச் சந்தையில் உற்பத்தி செலவைவிட குறைவான அளவுக்கு விலை வீழ்ச்சி ஏற்படும்போது வரும் விலை வித்தியாசத்தை அரசு ஈடுகட்ட வேண்டும். (Price Compensation Scheme). மேலும் கரும்பு, மஞ்சள், மரவள்ளி எனப் பல பயிர்களின் சந்தை விலை ஒரு குறிப்பிட்ட காலச் சுழற்சியில் இறங்கி ஏறுகிறது. இத்தகு பயிர்களுக்கு தனியாக காப்பீட்டுத் திட்டத்தை வகுக்க வேண்டும். (குறைந்தபட்சஆதரவு விலையை ஒன்றிய அரசு சட்டபூர்வமானதாக அறிவிக்கப்படும் வரை இந்தத் திட்டம் தேவை).

மாநில அரசின் பயிர் பாதுகாப்பு இன்ஷூரன்ஸ் ஏஜென்சி:

விவசாயிகள் பேரிடர், பரவலான நோய்த்தாக்கம் போன்றவற்றால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று பயிர்பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதில் உள்ள நடைமுறைகளால் பணம் கட்டியிருந்தாலும் பாதிப்புற்ற விவசாயிகள் பலன்பெறவில்லை. பயிர் பாதுகாப்பு நிறுவனங்கள் மட்டுமே வளம்பெற்றன. மாறாக, விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்படாதிருக்க மாநில அரசே `பயிர் பாதுகாப்பு இன்ஷூரன்ஸ் ஏஜென்சி'யை உருவாக்கிட வேண்டும். மாநில அரசு இதன் மூலம் பாதிப்புற்ற தனியொரு விவசாயிக்கும் இழப்பை ஈடு செய்ய முடியும். இழப்பை மதிப்பீடு செய்வதற்கான கட்டமைப்பு மாநில அரசிடம் உள்ளதால் இந்தத் திட்டத்தை வெகு எளிதாக நடைமுறைப்படுத்த இயலும். மேலும், இது தனியார் நிறுவனங்களைவிட சிறப்பான சேவையையும் வழங்க முடியும் அதே சமயம் வருவாயையும் ஈட்ட முடியும். இந்த வருவாயை அரசு செயல்படுத்தும் பல புதிய முயற்சிகளுக்கு செலவு செய்யலாம்.

விவசாயிகள் வருவாய் உத்திரவாதக் கமிஷன்:

விவசாயிகளின் வருவாய் உத்திரவாதமில்லாத ஒன்றாகவும் கௌரவமான வருவாயாக இல்லாதிருப்பதாலும் இளைய தலைமுறை விவசாயத்தைவிட்டு வெளியேறுகிறது. விவசாய விலைபொருள்கள் மக்களுக்கு கட்டுபடியாகும் விலையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக விளைபொருள்களுக்கான விலை குறைவாகவே நிர்ணயம் செய்யப்படுகிறது. மக்கள் சிரமப்படக் கூடாது என்பதற்கான சுமையை விவசாயிகள் மீது சுமத்தியதால் எல்லா விவசாயிகளும் கடன்காரர்களாகவே உள்ளனர். அதனால் விவசாயிகள் மீதான மரியாதையும் விவசாயத்தின் மீதான மரியாதையும் குறைந்து வருகிறது. இந்த நிலையைப் போக்க விவசாயிகளின் குறைந்தபட்ச வருவாயை உறுதி செய்யப்பட வேண்டும்.

இதற்காக விவசாயிகள் வருவாய் உத்திரவாதக் கமிஷன் (Farmers Income Commission) ஒன்றை உருவாக்கிட வேண்டும். விவசாயிகளின் வருவாய் குறைகிறபோது அதை அரசு ஈடுசெய்யும் என்ற உறுதியை அளிக்க வேண்டுகிறோம்.

விவசாயம்
விவசாயம்

கடன் நிவாரணக் கமிஷன்:

விவசாயிகள் நிரந்தர கடன்காரர்களாக உள்ளனர். பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு காரணங்களால் பெற்ற கடனை கட்ட இயலாத காரணத்தால் இந்தியாவில் தற்கொலை செய்துகொள்பவர்கள் எண்ணிக்கை ஒன்றரைமணிக்கு இருவர் என்பது ஆண்டுகளாகவே இருந்துவருகிறது. கடனில் இருந்து விவசாயிகள் மீள கேரள அரசு நான்கு ஆண்டுகளாக `கடன் நிவாரணக்கமிஷன்' (Debt Relief Commission) என்ற அமைப்பு மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு நிவாரணம் தருகிறது. இதை வங்கியாளர்களும் வரவேற்கின்றனர். இத்தகு அமைப்பை தமிழகத்தில் அமைத்து கடனில் இருந்து மீளமுடியாத விவசாயிகளைக் காக்கும் முயற்சியை எடுக்க வேண்டும்.

குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம்:

தமிழக விவசாயத்தில் 30% அளவு குத்தகை விவசாயம் நடைபெறுகிறது. குத்தகை விவசாயத்தில் உள்ள விவசாயிகளுக்கு எந்தவித சட்டப்பாதுகாப்பும் இல்லை. பயிர்க்காப்புத்திட்டங்கள், பேரிடர்காலத்தில் அளிக்கப்படும் நிவாரணங்கள், கடனுதவிகள் எதுவும் கிடைப்பதில்லை. இவர்கள் நிலை சொந்த நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளின் நிலையைவிட பரிதாபகரமானது. இவர்களது விவசாயம் பாதுகாக்கப்படும்வகையில், சலுகைகள் பெறும்வகையில் குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச்சட்டம் ஒன்றை உருவாக்கவேண்டும். இத்தகு பாதுகாப்பை தெலங்கானா அரசு செய்துள்ளது.

பேரிடர் நீக்க நிதியம்:

பருவ நிலை மாற்றத்தால் தமிழகத்தில் வறட்சி, புயல், பெருமழை போன்றவை அடிக்கடி ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் பேரிடரின் பாதிப்பிலிருந்து விவசாயிகள் மீண்டு வர ஒன்றிய அரசின் உதவியையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. ஒன்றிய அரசோ மிகக் குறைவான நிதியையே அளிக்கிறது. பேரிடர்களின் பாதிப்பிலிருந்து விவசாயிகளைக் காக்கமாநில அரசே ஒரு `பேரிடர் இடர்பாடு நீக்க நிதியம்' ஒன்றை அமைக்க வேண்டும். இதற்கான நிதியை பெருநிறுவனங்களிடமிருந்து ஒரு சிறுவரி மூலம் வசூலிக்கலாம்.

வேளாண் விரிவாக்கம்:

வேளாண்மை என்பதே உள்ளூர் தகவமைப்பு சார்ந்ததே. (Agriculture is Location Specific). துரதிர்ஷ்டவசமாக வேளாண் விரிவாக்கம் என்பது விவசாயிகளின் அறிவைப் புறந்தள்ளிய விரிவாக்கமே இந்தியாவின் வேளாண் விரிவாக்கமாக உள்ளது. இது விவசாயிகளின் அறிவை அந்நியப்படுத்தியது. இதன் காரணமாகவே வேளாண் விரிவாக்கத்துறை விவசாயிகளிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறது. மாறாக தமிழகத்தில் இயற்கை விவசாயம் விவசாயிகளின் அந்தந்த வட்டார விவசாயிகளின் அறிவு மற்றும் அனுபவப் பகிர்தல் மூலம் வளர்க்கப்பட்டுள்ளது. இந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு வேளாண் விரிவாக்கத்தில் அனுபவ விவசாயிகளைப் பயன்படுத்தும் முறையை உருவாக்க வேண்டும். இத்தகு விரிவாக்கம் மூலமே அந்தந்த வட்டாரத்தில் உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ற அறிவுப் பகிர்வும் விவசாய மேம்பாடும் நடக்கும்.

விளைபொருள்களை சந்தைப்படுத்துதல்:

விவசாயிகளின் கைக்கு எட்டாத தொலைவில் உள்ள சந்தையே இப்போது உள்ளது. இதன் காரணமாகவே வணிக நிறுவனங்களின் ஆதிக்கத்தில் விவசாயிகள் இருந்தாக வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு விவசாயியும் உற்பத்தியாளர் மட்டுமல்ல; நுகர்வோரும்கூட. விவசாயிகள் மட்டுமல்ல விவசாயத் தொழிலாளர்களும் நுகர்வோரே. இந்த சந்தை உள்ளூர் விவசாயிகள் கையிலில்லை. எனவே, உள்ளூர் சந்தையை ஊக்குவிக்கும் திட்டங்களை உருவாக்க வேண்டும். மேலும் விவசாயிகள் உள்ளூர் மற்றும் அருகே உள்ள சந்தைகளுக்கு ஏற்ற வகையில் தங்களது பொருள்களை மதிப்பு கூட்டுவதற்கான பயிற்சிகளை வழங்க வேண்டும்.

சிறு கருவிகள் கண்டுபிடிப்புகளுக்கான ஊக்கம்:

தமிழகம் இந்தியாவிலேயே அதிகம் நகர்மயமான மாநிலம். மேலும் சமூக நீதியுடன்கூடிய வளர்ச்சியில் முன்னோடியான மாநிலம். இதன் காரணமாகக் கிராமங்களில் இருந்து உழைப்போர் நகரங்களுக்கு செல்வதும் அதிகமாக உள்ளது. இது விவசாயப் பணிகளுக்கான உழைப்போர் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்துவிட்டது. ஏறத்தாழ 50 வயதுக்கும் மேலானோர்களே விவசாயத் தொழிலாளர்களாக இருக்கின்றனர். விவசாயிகளுக்கோ தங்களின் தொழிலாளர்களுக்கு நல்ல கூலியைக் கொடுக்க இயலாத வருவாய் நிலை. இந்த நிலை விவசாயிகளை அதிகம் தொழிலாளர்கள் தேவைப்படாத தென்னை, பழ மரங்கள், கரும்பு, மரங்கள் போன்ற பயிர்களுக்குத் தள்ளுகிறது.

இச்சிக்கலைத் தீர்க்க சிறு சிறு கருவிகளைக் கண்டறிதல் தேவை. பல்வேறு பயிர்களுக்கு ஏற்ற, அந்தந்த மண் வகைகளுக்கு ஏற்ற, சிறு குறு விவசாயிகளுக்கும் ஏற்ற வகையிலான சிறு கருவிகளை உருவாக்க வேண்டும். தமிழகத்து பொறியியல் கல்லூரிகளில் உள்ள மாணவர்களை இத்தகு சிறு சிறு கருவிகளை வடிவமைக்கப் பணிக்கலாம். கருவிகள் உருவாக்கும் மாணவர்களுக்கு உதவிட ஒரு உதவித் தொகையையும் அரசு வழங்கிட வேண்டும். மேலும் அந்தந்த வட்டாரங்களில் உள்ள தொழில் நிறுவனங்களின் CSR தொகையைக் கருவிகள் உருவாக்கத்திலோ உதவித் தொகை வழங்குதலிலோ செலவிடச் செய்ய வேண்டும்.

விவசாயத்துக்கு சோலார் அமைப்பு
விவசாயத்துக்கு சோலார் அமைப்பு

ஒவ்வொரு கிணற்று மேடும், ஒவ்வொரு வீட்டுக் கூரையும் சூரிய/காற்று மின் உற்பத்தி நிலையம்:

தமிழக விவசாயம் அதிக அளவு நிலத்தடி நீர்ப்பயன்படுத்தும் ஒன்றாக உள்ளது. ஏறத்தாழ 50% தமிழக விவசாயம் நிலத்தடி நீரை நம்பியே உள்ளது. மின் கட்டணம் விவசாயிகளுக்கு சுமையாக மாறிப்போனதால் விவசாயத்துக்கான மின்சாரத்தை விலையில்லாமல் அரசு வழங்கி வருகிறது. இது பெரிய நிதி சுமையாகவும் மாறி வருகிறது.

தற்போது வளர்ந்துள்ள நவீன தொழில்நுட்பங்களால் மின்சாரத்தை அவரவர் இருக்குமிடத்திலேயே அவரவர்களுக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்ளும் வாய்ப்பு பெருகி உள்ளது. சூரிய மற்றும் காற்றின் சக்தியை மின்சாரமாக மாற்றும் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. அதுவும் சிறிய அளவிலும் தயாரித்திடும் அளவு வளர்ந்துள்ளது.

இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு கிணற்று மேட்டையும், வீட்டின் மாடி/கூரையையும் மின் உற்பத்தி நிலையமாக மாற்ற முடியும். இப்படி உற்பத்தியாகும் மின்சாரத்தில் அவரவர் தேவைக்கு அதிகம் உற்பத்தியாகும் மின்சாரத்தை மின்வாரியத்துக்கு வழங்க முடியும். சில தனி நபர்கள் இப்படி தங்களின் வீடுகளில் சூரிய மின் தகடுகள் மூலம் மின் உற்பத்தி செய்தும் வருகின்றனர். குஜராத் மாநிலத்தில் விவசாயிகள் நிலத்தில் இத்தகு திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளின் கிணற்று மேடும் ஒரு வருவாய் தரும் இடமாக மாறியுள்ளது.

இதன் மூலம் விவசாயிகள் மின்வாரியத்தில் இருந்து பெறும் மின்சாரத்தின் அளவும் குறையும். இது போலவே ஒவ்வொரு வீட்டுக் கூரையும் மின் உற்பத்தி நிலையமாக மாறி வீட்டு உரிமையாளருக்கு வருவாயையும் பெற்றுத் தரும். மேலும் விவசாயிகளுக்கு அரசே மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவித் தரலாம். ஆரம்பத்தில் இது அரசுக்கு பெருஞ்செலவாக இருந்தாலும் மானியங்கள் அதிகம் தேவையில்லாததால் 4 - 5 ஆண்டுகளுக்குள் இந்த முதலீட்டைத் திரும்பப் பெற்றிடலாம்.

இதன் மூலம் தமிழக மின் வாரியத்துக்கு பெரும் சுமையாக உள்ள மின் நுகர்வுக்கு வழங்கப்படும் மானியம் நிரந்திரமாக தேவையற்றதாகிவிடும். அதே சமயம் விவசாயிகளுக்கு பகல் முழுதும் தடையில்லா மின்சாரம் கிடைத்து வரும், அதுவும் விலையில்லாமல்.

உள்ளாட்சிகளின் பங்கேற்பும் திட்டமிடலும் அதிகாரமளித்தலும்:

விவசாயத்துக்கான இயற்கை ஆதாரங்களைப் பேணும் பொறுப்பு உள்ளாட்சிகளிடம் உள்ளது. ஆனால், தங்களது உள்ளாட்சியில் எத்தகைய விவசாய வளர்ச்சி தேவை, எப்படி அதை வளர்த்தெடுப்பது போன்றவற்றில் உள்ளாட்சிகளுக்கு எந்தவிதப் பங்கும் இல்லாமல் உள்ளது.

அந்தந்த உள்ளாட்சிப் பகுதியில் மக்களுக்குத் தேவையான வற்றை விளைவிக்கவும், அவற்றை மதிப்புக் கூட்டி விற்பதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளது. மேலும் உள்ளாட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள தரிசு நிலங்களில் சுய உதவிக் குழுக்கள் மூலம் அவரவர்களுக்கான காய்கறி உற்பத்தி செய்ய முடியும்.

மகளிருக்கானவை

மகளிருக்கான அங்கீகாரம் 60% வேலைகள் பெண்கள்:

வேளாண்மையில் பெண்களின் பங்களிப்பே அதிகம். ஆனால், இந்தப் பங்களிப்புக்கான அங்கீகாரம் இதுவரை கிடைத்தபாடில்லை. மனைவியாக அதிக உழைப்பைத் தந்திடினும் நில உரிமையில் அவர்களுக்குப் பங்கில்லை. கூட்டுறவு கடன் வழங்கும்போது குடும்பத் தலைவியையும் சேர்த்து கணவன்-மனைவி இருவர் பெயரிலும் தரத் தொடங்க வேண்டும். மகளிரின் உழைப்பும் பங்களிப்பும் அங்கீகரிக்கும் வகையில் என்னென்ன செய்ய இயலும் என்பதை ஆராய தனிக் குழு அமைக்க வேண்டும்.

தனித்த பெண்களுக்கு குத்தகைக்கு நிலம்:

உள்ளாட்சிகளின் கைவசம் இருக்கும் தரசு நிலங்களை சுய உதவிக் குழுக்களுக்கு குத்தகைக்கு வழங்கி தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகளை விளைவிக்க திட்டம் அறிவிக்க வேண்டும்,

வீட்டு மனைகள் பிரித்து விற்கும் போதும், தனியார் நகர்கள், பள்ளி, கல்லூரிகள் அமைக்கும் போதும் 10% நிலம் உள்ளாட்சிகளுக்கு ஒதுக்கிடப்படுகிறது.

இந்த நிலத்தை சுய உதவிக் குழுக்கள், தனித்த பெண்கள் (கணவனை இழந்தோர் போன்ற) போன்றவர்களின் உணவுத் தேவையையும் பொருளாதாரத் தேவையும் நிறைவேற குத்தகைக்கு வழங்கிட வேண்டும்.

தனித்த பெண் விவசாயிகள் நலன்:

விவசாயம் செய்யும் தனித்த பெண்களுக்கு உதவிக் கடன் உதவித் தட்டங்கள், அவர்களுக்கேயான கடன் வசதி போன்றவற்றை உருவாக்கிட வேண்டும்.

விவசாயிகள் வாழ்வு மேம்பாட்டில் உள்ளாட்சிகள்:

ஒவ்வொரு உள்ளாட்சியும் தங்களுக்கான விவசாயக் கொள்கையை உருவாக்க வேண்டும்.

உள்ளாட்சிப் பகுதியில் உள்ள இயற்கை விவசாயிகளை ஒன்று அல்லது ஒன்றுக்கும் அதிமான குழுக்களை அமைத்து அவர்களுக்கு உள்ளூரிலேயே விற்பனை வாய்ப்புகளை உருவாக்குதல்.

உள்ளூரில் உள்ள சந்தை அல்லது அக்கம்பக்கத்து நகர்புறமே இந்த விவசாயக் குழுக்களின் சந்தையாக இருக்கும் என்பதால் இந்த விவசாயிகளுக்கு இயற்கை விவசாயிகள் என்ற அடையாளத்தை/சான்றை கிராம சபைகள் மூலம் வழங்கல்.

உள்ளாட்சிப் பகுதியில் உள்ள ஓடைகளுக்கு உயிர் கொடுக்கும் திட்டத்துக்கு உள்ளாட்சிகளுக்கு அதிகாரம் வழங்கல்.

அறச்சலூர் ரா.செல்வம்
அறச்சலூர் ரா.செல்வம்

மாநிலத்தின் வேளாண்மை சார்ந்த அரசியல் உரிமை:

விவசாயம் மாநில உரிமைப் பட்டியலில் இருந்தாலும் உண்மையில் மாநில அரசுகள் வேளாண்மையும், விவசாயிகள் வாழ்வை மேம்படுத்துவதிலும் ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் உள்ளாட்சிகள் போலத்தான் உள்ளன.

விவசாயக் கொள்கை தொடங்கி, எந்த வகையான விவசாயம், எந்த வகையான சந்தைக்கான விவசாயம் தொடங்கி இடு பொருள்கள், விதைகள் எல்லாமே ஒன்றிய அரசின் திட்டப்படியே வழங்கப்படுகிறது, பரவலாக்கப்படுகிறது.

மாநில அரசின் அனுமதியின்றிதான் எல்லா வகையான திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மரபணு மாற்றுப் பயிர்களின் அனுமதியில்கூட மாநில அரசின் கருத்து கேட்கப்படுவதில்லை. ஒரு பூச்சிக்கொல்லியைக்கூட மாநில அரசு தடை செய்ய இயலாத நிலைதான் உள்ளது.

இதற்கான எல்லா அமைப்புகளும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை என்பதால் மாநில அரசின் கருத்துகளுக்கோ, அனுமதிக்கோ இடமில்லாத நிலை இருக்கிறது.

மாநிலத்தின் விவசாயிகள் வாழ்வு மற்றும் விவசாயத்தை மேம்படுத்துவதில் மாநில அரசு தனக்கான அதிகாரத்தைப் பெறுவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

- அறச்சலூர் ரா.செல்வம்,

ஒருங்கிணைப்பாளர்,

தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு.