ஆட்டுப் பண்ணை... இறைச்சிக் கடை... மாதம் ரூ. 1,20,000... நேரடி விற்பனையில் செம லாபம்!

கால்நடை
தஞ்சாவூரில் வசித்து வருபவர் மணிகண்டன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர், கொரோனா காலகட்டத்தில் அத்தொழிலில் கடும் சரிவை சந்தித்து இருக்கிறார். அதன்பிறகு பொருளாதார நெருக்கடியில் தவித்தவருக்கு ஆடு வளர்ப்பு பெரிதும் கைகொடுத்திருக்கிறது, தன்னுடைய வீட்டோடு இணைந்த 3 சென்ட் இடத்தில் ஆடு வளர்ப்பு தொழிலை தொடங்கி நிறைவான வருமானம் பார்த்து வருகிறார். மேலும் சொந்தமாக இறைச்சிக் கடையும் நடத்தி வருவது கவனம் ஈர்க்கிறது.
தஞ்சாவூர் நகரப்பகுதியான நாஞ்சிக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது மணிகண்டனின் வீடு. ஒரு பகல்பொழுதில் இவரைச் சந்திக்கச் சென்றோம். ஆடுகளுக்குத் தீவனம் கொடுத்துக் கொண்டிருந்த மணி கண்டன், புன்னகையோடு நம்மை வரவேற்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

‘‘திருவையாறு பக்கத்துல உள்ள அம்மன்பேட்டைதான் என்னோட சொந்த ஊர். நான் பத்தாம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்கேன். அங்கயிருந்து சில கிலோ மீட்டர் தொலைவுல உள்ள பூதலூர் பகுதியில, எனக்குச் சொந்தமா 5 ஏக்கர் நிலம் இருக்கு. ஆனா, பாசனத்துக்குப் போதுமான அளவுக்குத் தண்ணி வசதி இல்லாததுனால, மழையை நம்பி அந்த நிலத்துல நிலக்கடலை, துவரை, எள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்றது வழக்கம். விவசாயத்துல போதுமான வருமானம் கிடைக்காததுனால, தஞ்சாவூர் நகரத்துல வீடு கட்டி குடியேறி, கடந்த பல வருஷங்களா ரியல் எஸ்டேட் தொழில் செஞ்சுகிட்டு இருந்தேன்.
இந்த நிலையில்தான் கொரோனா சூழல் என்னோட தொழிலை ஒட்டுமொத்தமா முடக்கிப் போட்டுடுச்சு. எனக்கு எந்த ஒரு வருமானமும் இல்லாமல் போச்சு. வேற என்ன தொழில் செய்யலாம்ங்கற தேடல்ல இறங்கினப்பதான், வெள்ளாடு வளர்த்து விற்பனை செய்யலாம்ங்கற யோசனை வந்துச்சு. 2020-ம் வருஷம் 15 ஆடுகள் வாங்கினேன். இதுல பெரும் பாலான ஆடுகள் அடுத்தடுத்து குட்டிகள் ஈணுச்சு. அதுக்குப் பிறகு திருவையாறு, பூதலூர் சுற்று வட்டார கிராமங்கள்ல உள்ள விவசாயிகள் கிட்ட இருந்து 17 ஆடுகள் வாங்கினேன். சினையாக இருக்கும் ஆடுகள், சினை பிடிக்கக் கூடிய நிலையில இருக்குற ஆடுகளைப் பார்த்து பார்த்து வாங்கி வளர்த்துக்கிட்டு வர்றேன்றதான் என்னுடைய வழக்கம்’’ என்று சொன்னவர், பராமரிப்பு, தீவன மேலாண்மை, வருமனம் குறித்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

கொட்டகை
“இந்த ஆட்டுப் பண்ணையோட மொத்த பரப்பு 3 சென்ட். இதுல ஒரு சென்ட் பரப்புல ரொம்ப எளிமையான முறையில கொட்டகை அமைச்சிருக்கேன். கல் தூண்களையும், சவுக்குக் கம்புகளையும் முட்டுக்கால்களா பயன்படுத்தி, 5 அடி உயரத்துல பரண் அமைச்சிருக்கேன். பரண் மேல நிலக்கடலை கொடிகளைப் பரவலா போட்டு வச்சுருக்கேன். கிராமங்கள்ல முன்னாடியெல்லாம், வைக் கோலை மட்டுமே பயன்படுத்தி மேற்கூரை அமைப்பாங்க. அதே பாணியில, வைக் கோலுக்குப் பதிலா, நிலக்கடலை கொடி களைப் போட்டு வச்சிருக்கேன். இது மழையில நனைஞ்சு போகாமல் இருக்கவும், கொட்டகைக்குள்ளார மழைத்தண்ணி விழாமல் தடுக்குறதுக்காகவும், உதவுது. கடலைக் கொடிகளுக்கு மேல தார்ப்பாயும் அமைச்சிருக்கேன்.
இதுமாதிரி மேற்கூரை அமைச்சதுனால, எனக்குச் செலவு மிச்சம். அது மட்டுமல்லாம, ஆடுகளுக்குக் குளிர்ச்சியான சூழல் கிடைக் குது. நிலக்கடலை கொடிகள், ஆடுகளுக்கு ரொம்ப சத்தான தீவனம். இதை நல்லா விரும்பி சாப்பிடும். ஒரு வருஷத்துக்குத் தேவையான கடலைக்கொடிகளை விவசாயி கள்கிட்ட இருந்து விலைக்கு வாங்கிக்கிட்டு வந்து, பரண் மேல போட்டு வச்சிடுவேன். அப்ப தேவைக்கு ஏற்ப எடுத்து ஆடுகளுக்குக் கொடுப்போம். பரண் மேல போட்டு வச்சிருக்குற கடலைக்கொடி, குறைய குறைய, அதைப் பூர்த்திச் செஞ்சுடுவேன். ஆடுகளுக்கு நல்லா காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் கிடைக் கணுங்கறதுனால... கொட்டகையோட சுற்றுப் பகுதியில தடுப்புகள் அமைக்கல. இதனால ஆடுகள் தங்களோட விருப்பத்துக்கு ஏற்ப உலாவுறதுக்கு வசதியா 2 சென்ட் காலி இடம் இருக்கு.

மேய்ச்சல்
தினமும் 4 மணிநேரம் மேய்ச்சலுக்கு வெளியில அழைச்சுக்கிட்டு போவேன். நகரப் பகுதியில இது சாத்தியமானு பலருக்கும் ஆச்சர்யமா இருக்கு. இங்க நிறைய காலி மனைகள் இருக்கு. ஏராளமான செடி, கொடிகளும், புற்களும் மண்டிக்கிடக்குது. இதனால என்னோட ஆடுகளுக்குப் போதுமான அளவுக்குப் பசுந்தீவனம் கிடைச்சுடுது. ஆடுகளை ஒரே இடத்துல அடைச்சு வைக்காம, மேய்ச்சலுக்குக் காலாற நீண்ட தூரம் அழைச்சுக்கிட்டு போறதுனால, ஆடுகள் ஆரோக்கியமா வளருது.
கோதுமை, சோளம், கேழ்வரகு, கம்பு, பாசிப்பயறு, பருத்திக்கொட்டை, கொண் டைக்கடலை, தட்டைப்பயறு... இதுல தலா ஐந்து கிலோ வீதம் எடுத்து, மூன்று நாள்களுக்கு நல்லா வெயிலில் காய வச்சு, எல்லாத்தையும் ஒண்ணா கலந்து, மாவா அரைச்சு வச்சுக் குவேன். தினமும் ஒரு வேளை ஒரு ஆட்டுக்கு 100 - 200 கிராம் வீதம் தண்ணியில கலந்து கொடுப்பேன்.
மா, வேப்பிலை, பலா, கொய்யா, வாழை இலைகளையும் வெட்டி சாப்பிட கொடுப் பேன். தக்காளி பார்சல் அனுப்பக்கூடிய பிளாஸ்டிக் பெட்டிகள்ல நிலக்கடலை கொடியை போட்டு கொட்டகைக்குள்ள வச்சுடுவேன். பசி எடுக்கும் போதெல்லாம், ஆடுகள் அதைக் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டுக்கும். கடலைக்கொடியை தரையில போட்டு வச்சோம்னா, அங்கங்க சிதறிக்கிடக்கும். இதனால விரயம் ஏற்படுற தோடு மட்டுமல்லாம, ஆடுகள் சிறுநீர், புழுக்கை எல்லாம் ஒண்ணா கலந்து சுகா தாரச் சீர்கேடு ஏற்படும். அதை ஆடுகள் சாப்பிட்டு உடல்நலக்குறைவு ஏற்படவும் வாய்ப்பிருக்கு.
என்னோட ஆட்டுப் பண்ணையில வருடம் முழுக்க, 30 - 35 ஆடுகள் எப்பவும் இருக்கும். இதுல இரண்டு கிடா ஆடுகள். மற்றவை தாய் ஆடுகள். ஒரு தாய் ஆடு மூலம் 6 மாசத்துக்கு ஒரு முறை 1 - 3 குட்டிகள் கிடைக்கும்.

விற்பனை
எட்டு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும், என்னோட ஆடுகளை வியாபாரிகள்கிட்டயும், கறிக்கடைங்களுக்கும் விற்பனை பண்ணிகிட்டு இருந்தேன். ஆறு மாசமான ஆட்டுக்குட்டி 4,000 ரூபாய், எட்டு மாசமான ஆடு 5,000 ரூபாய், ஒரு வருடம் ஆன ஆடு, அதோட எடைக்குத் தகுந்த மாதிரி 8,000 - 14,000 ரூபாய்னு விற்பனை பண்ணிக்கிட்டு இருந்தேன்.
நாமளே கறிக்கடை ஆரம்பிச்சு, இறைச்சியா விற்பனை செஞ்சா, இன்னும் கூடுதல் லாபம் கிடைக்கும்ங்கற யோசனை வந்ததுனால, கருணாவதி நகர் பிரதான சாலையில ஏற்கெனவே செயல்பட்டுக்கிட்டு இருந்த கறிக்கடையை வாங்கினேன்.
ஆடுகளை வெட்டி கறி உறிக்குறதுல எனக்கு முன் அனுபவம் இல்லாததால, அதைச் செய்றதுக்காக ஒருத்தரை வேலைக்கு வச்சுக்கிட்டு கடை நடத்த ஆரம்பிச்சேன். வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பிச்சது. ஏற்கெனவே செயல்பட்டுக்கிட்டு இருந்த கறிக்கடையை விலைக்கு வாங்கி நடத்தின துனாலயும், கறி நல்லா தரமா கொடுத்த துனாலயும், அடுத்த சில வாரங்கள்லயே வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பிச்சது. என்னோட பண்ணையில உள்ள தாய் ஆடுகள் மூலம் கிடைக்குற குட்டிகளை வளர்த்து, என்னோட கறிக் கடைக்குப் பயன்படுத்தினதோட மட்டு மல்லாம, விவசாயிகள்கிட்ட இருந்தும் ஆட்டுக்குட்டிகளை விலைக்கு வாங்கி, அடுத்த நாலஞ்சு மாசங்களுக்கு நல்லா ஊட்டமா வளர்த்து என்னோட கடைக்குப் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன்.
வாரத்துல 6 நாள்கள் கடை இருக்கும். அமாவாசை மாதிரியான விரத நாள்கள்ல கடை நடத்த மாட்டேன். புதன்கிழமை 2 ஆடுகள், ஞாயிற்றுக்கிழமை 7 ஆடுகள், மற்ற நாள்கள்ல தலா 1 ஆடு வீதம் இறைச்சி விற்பனை நடக்கும். ஒரு வாரத்துக்கு 14 ஆடுகள் மூலம் 180 - 200 கிலோ கறி விற்பனை ஆகும். எலும்புக் கறி கிலோ 700 ரூபாய், சதைக்கறி 800 ரூபாய்னு விற்பனை செய்றேன். இது தவிர தலை, குடல், கால் விற்பனை மூலமும் கணிசமான வருமானம் கிடைக்கும்.

கறிக்கடை மூலமா மாசத்துக்கு 56 ஆடுகள இறைச்சியா விற்பனை செய்றேன். இதுல 40 ஆடுகள வெளியில இருந்து விலைக்கு வாங்குறேன். ஓர் ஆட்டோட விலை 5,000-7,000 ரூபாய். 40 ஆடுகள் வாங்க அதிகபட்சமா 2,80,000 ரூபாய் செலவாகுது. ஆட்டுப்பண்ணை மற்றும் கறிக்கடைக்கு மாசம் 68,000 ரூபாய் செலவு ஆகுது. ஆக, ஒரு மாசத்துக்கு 3,48,000 செலவாகுது. கறிக்கடை மூலமா ஒரு மாசத்துக்கு 5,88,000 ரூபாய் கிடைக்குது. செலவு போக, 2,40,000 ரூபாய் வருமானம். ஆட்டுப்பண்ணையில் இருந்து கறிக்கடைக்கு பயன்படுத்தும் 16 ஆடுகளுக்கான அதிகபட்ச விலை மதிப்பு 1,12,000 ரூபாய். இதை கழிச்சா 1,28,000 ரூபாய் நிகர லாபம் கிடைக்குது’’ எனத் தெரிவித்தார்.
தொடர்புக்கு, மணிகண்டன்,
செல்போன்: 95667 27005
நோய்த்தாக்குதல் ஏற்படுறதில்லை!
‘‘பனிக்காலத்துல ஆடுகளுக்குச் சளிப்பிரச்னை ஏற்படுவதுடன் காய்ச்சல் வரும். அதுமாதிரியான பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க, தடுப்பூசி போடுவேன். குடல் புழுக்கள் நீக்கத்துக்கும் மருந்து கொடுக்குறேன். இருபது நாள்களுக்கு ஒரு முறை என்னோட ஆடுகளை நல்லா குளிப்பாட்டி, சுத்தமா பராமரிச்சுக்கிட்டு இருக்கேன்.
ஆடுகளை ஒரே இடத்துல அடைச்சு வைக்காம, பெரும்பாலான நேரங்கள்... திறந்த வெளியில இயற்கையான சூழல்ல வளர்க்குறதுனால, பெரும்பாலும் நோய்த்தாக்குதல்கள் ஏற்படுறதில்லை. ஆட்டு எருவை என்னுடைய விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்திக்கிட்டது போக மீதி இருக்குறதை, இயற்கை விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுத்துக்கிட்டு இருக்கேன்’’ என்கிறார் மணிகண்டன்.