ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

தென்னை, பனை மரம் ஏற எளிமையான கருவி! விவசாயியின் புது முயற்சி

தென்னை மரம் ஏறும் கருவி
பிரீமியம் ஸ்டோரி
News
தென்னை மரம் ஏறும் கருவி

கண்டுபிடிப்பு

மிக எளிதாகவும், அதேசமயம் விபத்து ஏற்படாமலும், தென்னை, பனை உள்ளிட்ட உயரமான மரங்களில் ஏறுவதற்கான ஓர் எளிய கருவியை உருவாக்கியுள்ளார், கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன். இக்கருவியை இயக்க, மின்சாரமோ, எரிபொருளோ தேவையில்லை. இதன் அதிகபட்ச விலையே 8,600 ரூபாய்தான்.

இக்கருவியைத் தென்னை, பனை, பாக்கு உள்ளிட்ட மரத்தில் பொருத்தி கைகள் மற்றும் கால்களால் இயக்கி மிக எளிதாக, மரத்தின் உச்சிக்குச் செல்ல முடியும். ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு எளிதாக இதைக் கைகளிலேயே தூக்கி செல்லலாம். இவருடைய கண்டுபிடிப்பு விவசாயத்தில் முக்கியக் கண்டுபிடிப்பாகப் போற்றப்படுகிறது. குறிப்பாக, தென்னை, பனை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்

தென்னைச் சாகுபடியில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. தேங்காய் பறிப்பதற்காகவும், பராமரிப்பிற்காகவும் தொழிலாளர்கள் தென்னை மரம் ஏறும்போது விபத்துகள் நிகழ்கின்றன. இதனால் பல இடங்களில் மரம் ஏறுவதற்கு ஆள்கள் கிடைப்பதில்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையில் மிகவும் எளிய முறையில் தென்னை மரம் ஏறும் கருவியைக் கண்டுபிடித்துக் காப்புரிமை வாங்கியுள்ளார் ரங்கநாதன்.

தென்னை மரம் ஏறும் கருவி
தென்னை மரம் ஏறும் கருவி

இக்கருவியைப் பற்றிய விரிவாக அறிந்து கொள்ள, ரங்கநாதனை நேரில் சந்தித்தோம். தன்னுடைய கண்டுபிடிப்பைப் பற்றி விளக்கிக்கொண்டே, அருகில் உள்ள தென்னந்தோப்புக்குள் அழைத்துச் சென்றவர், அங்குள்ள தென்னை மரத்தில் கருவியை மாட்டி காண்பித்துப் பேசத் தொடங்கினார்.

‘‘தென்னையில மட்டுமல்ல... பனை, பாக்கு, தேக்கு, மலைவேம்பு உட்பட மற்ற மரங்கள்ல ஏறவும் இந்தக் கருவியைப் பயன்படுத்தலாம். அதுக்கேத்த மாதிரி இதுல வசதிகள் பண்ணியிருக்கோம். பாதுகாப்புத்துறை, வனத்துறையிலயும் இந்தக் கருவியைப் பயன்படுத்துறாங்க. மற்ற மாநிலங்கள்ல இருந்தும் இந்தக் கருவியை வாங்கிக்கிட்டு போறாங்க. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செஞ்சுகிட்டு இருக்கேன்’’ என்று சொன்னவர், இப்படியொரு கருவியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது என்பது குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

‘‘நாங்க விவசாயக் குடும்பம். நான் படிச்சு வளர்ந்தது சூலூர்லதான். 8-வது வரைக்கும் தான் படிச்சேன். குடும்பச் சூழல் காரணமா வேலைக்குப் போக வேண்டிய நிலை. தொழிற்சாலைகள்ல வேலை செஞ்சப்ப, இயந்திர தொழில்நுட்பங்கள்ல எனக்கு ஈடுபாடு ஏற்பட்டுச்சு. எங்க ஊர் தென்னந் தோட்டங்கள்ல மரம் ஏறும் தொழிலாளிங்க, கீழே விழுந்து பாதிக்கப்பட்டது சின்ன வயசுல இருந்தே, என் மனசுல பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்துச்சு.

எல்லாத்துறையிலயும் நவீன வசதிகள் வந்தாச்சு. ஆனா, இதுக்கு மட்டும் எதுவும் வரலையேனு ஆதங்கப்படுவேன். அந்தச் சூழ்நிலையிலதான் 2003-ம் வருஷத்துல இருந்து, மரம் ஏறும் கருவிகளை உருவாக்கும் பணியில நான் தீவிரமா இறங்கினேன்.

முதல்ல மரச்சட்டகத்துலதான் செஞ்சு பார்த்தேன். அதுல ஏற முடியும்ங்கற நம்பிக்கை கிடைச்சது. பிறகு உலோகத்துல செஞ்சு படிப்படியா மேம்படுத்தினேன். இதுக்குக் காப்புரிமை கிடைச்சது. இதுவரைக் கும் 12 மாடல்களை உருவாக்கியிருக்கேன். ஆரம்பத்துல நான் உருவாக்கின கருவியோட எடை 18 கிலோ. இப்ப பயன்பாட்டுல இருக்கற கருவி 9 கிலோதான். அதுக்குத் தகுந்த மாதிரி உதிரிபாகங்களைப் பயன் படுத்தியிருக்கோம். முன்பைவிட இப்ப பாதுகாப்பு அம்சத்தையும் கூட்டியிருக்கோம்.

கருவியுடன் ரங்கநாதன்
கருவியுடன் ரங்கநாதன்

ஆரம்பலத்துல நிறைய சவால்கள் இருந்துச்சு. என்னைப்போல நிறைய பேர் மரம் ஏறும் கருவியை உருவாக்கியிருக்காங்க. ஆனா, அதுல எல்லாம் பின்னடைவுகள் அதிகம். நானும் ஆரம்பத்துல மின்சாரம், மோட்டார் இன்ஜின்னு நிறைய முயற்சி பண்ணேன். ஆனா, அதெல்லாம் சரியா வரலை. செலவும் அதிகம். ஆனா, இப்ப நான் உருவாக்கியிருக்குற மேம்படுத்தப்பட்ட கருவி பல விதங்கள்லயும் சிறப்பானது. இதனால் தென்னை, பனை விவசாயிகள் ரொம்பவே விரும்பி இதை வாங்குறாங்க.

தேசிய கண்டுபிடிப்பு மையம் இது அவசியமான கருவினு அடையாளப் படுத்தினாங்க. நபார்டு வங்கியும் எனக்கு உதவிகள் பண்ணியிருக்கு. டெல்லி ராஷ்டிரபதி பவன்ல நடந்த புதிய கண்டு பிடிப்பாளர்கள் கண்காட்சியில, நான் உருவாக்கின, மரம் ஏறும் கருவியும் இடம்பெற்றுச்சு.

இப்ப 40 நாடுகளுக்கு ஏற்றுமதி பண்ணிகிட்டு இருக்கோம். குஜராத்ல ஒரு பல்கலைக்கழகத்தோட இணைஞ்சு உற்பத்தி பண்ணி கொடுத்துருக்கோம். சார்க் மாநாடுகள், உலகத்துல நடக்கற முக்கியக் கண்காட்சிகள்ல எங்கள் கருவிக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. 2018-ம் வருஷம், இந்தோனேசியாவுல, தெற்கு ஆசிய நாடுகளோட கண்டுபிடிப்பாளர்கள் போட்டி நடந்துச்சு. அதுல எனக்கும் பரிசு கிடைச்சது’’ என்று சொன்னவர், இக்கருவி எந்தெந்த வகைகளில் எல்லாம் விவசாயிகளுக்குப் பயன் அளிக்கிறது என விவரித்தார்.

‘‘தென்னை மட்டும் இல்லாம பனை, பாக்கு, தேக்கு, மலை வேம்பு மாதிரியான பல்வேறு விதமான உபயோகத்துக்கு இந்தக் கருவியைப் பயன்படுத்தலாம். மலைவேம்பு மாதிரியான மரங்கள்ல கிளைகளை மட்டும் வெட்டி பராமரிப்பாங்க. அதுக்கும் இதைப் பயன்படுத்தலாம். இந்தக் கருவியோட சுற்றளவுல அடங்கற மரங்கள் எல்லாத்துலயும் இதைப் பயன்படுத்தலாம். பாதுகாப்புக்காகப் பெல்ட் கொடுத்துருக்கோம், அது, மரம் ஏறக்கூடியவங்களையும் பாதுகாக்கும், கருவியையும் பாதுகாக்கும். மரம் ஏறக்கூடிய வங்க, தன்னோட உயரத்துக்குத் தகுந்தாற் போல, கருவியில மாற்றம் பண்ணிக்கலாம்.

பனை மரங்கள்ல ஏறி நுங்கு, பதநீர் எடுத்துக்கிட்டு வரவும் இதைப் பயன்படுத் துறாங்க. இந்தக் கருவி சுமார் 100 கிலோ எடை தாங்கும். ஆனா, ஒருத்தர் கேட்டதற்காக 120 கிலோ எடை தாங்குற வகையில பிரேத்யேகமான கருவியும் செஞ்சு கொடுத்தோம்.

இதுல பயன்படுத்தியிருக்குற உபகரணங்கள் எல்லாம், எளிதா கடைகள்ல கிடைக்கும். ஏதாவது பழுது ஏற்பட்டா, விவசாயிகளே இதைச் சரி பண்ணிக்கலாம். 3 வருஷம் வாரன்டி கொடுக்கிறோம். நெல் வயல்ல எளிமையா களை எடுக்கும் கருவியையும் கண்டுபிடிச்சிருக்கேன்’’ என்று சொன்ன ரங்கநாதன், நிறைவாக, மரம் ஏறும் கருவியின் செயல்முறை குறித்து விவரித்தார்.

தென்னை மரம் ஏறும் கருவி
தென்னை மரம் ஏறும் கருவி

‘‘மேலே இருக்குற ஃப்ரேம் ஆள் உட்காரவும், கீழே இருக்குற ஃப்ரேம், கால் வைக்கவும் அமைச்சிருக்கேன். இது துருப்பிடிக்காத ஸ்டீலில் செய்தது. மரத்துக்குத் தகுந்த மாதிரி ஃப்ரேமை வைக்கலாம். 360 டிகிரி கோணத்தில மரத்தைச் சுற்றி வர முடியும். உட்கார்ந்த உடனே பாதுகாப்புக்கான பெல்ட் போட்டுக்கணும். நமக்குத் தகுந்த மாதிரி சரி செய்துகொள்ளணும். தென்னை மரம்னா அடிமரம் பெருசா இருக்கும். மேலே போகப் போக சின்னதாக இருக்கும். அதுக்குத் தகுந்த மாதிரி கருவியை சரி செய்துக்கணும். கீழ் பகுதியில உள்ள ஃப்ரேமை கால் மூலமாவே இயக்கலாம். நாமாகக் கயிறு கட்டி ஏறும்போது பாதுகாப் புக்கு உறுதி இல்லை. அதிக சோர்வு ஏற்பட்டாலோ, கவனம் சிதறினாலோ, விபத்து ஏற்படும்.

இந்தக் கருவி மூலமா ஏறும்போது, கை கால் வலிச்சா, கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கலாம். சந்தையில் உள்ள மற்ற மரம் ஏறு கருவிகளை விட இதுல பல கூடுதல் அம்சம் இருக்கு. தென்னை மரத்தோட அடி மட்டை வரை போக முடியும். பொதுவா காய்ந்த மட்டையை வெட்டுறது மூலமா, நல்லா சூரிய வெளிச்சம் கிடைக்கும். விளைச்சல் இன்னும் அதிகமா கிடைக்கும். இந்தக் கருவியால மரத்துக்கு எந்த வகையிலும் சேதம் ஏற்படாது” என்று சொல்லி முடித்தார்.

தொடர்புக்கு, ரங்கநாதன்,

செல்போன்: 99442 84440