கால்நடை
நாட்டு நடப்பு
Published:Updated:

இங்கு பால் விவசாயிகள் மகிழ்ச்சி... அமுல் நிறுவனத்துக்கு அண்ணன்!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

கோட் சூட் போட்ட கனவான்களும் கோடிகளில் வருமானம் ஈட்டும் நிறுவனங்களின் நிர்வாகிகளும் சொல்லிவைத்தாற்போல் மிகச் சரியாக மாலை 6 மணிக்கு ஆஜராகி இருந்தார்கள். அண்மையில் சென்னையில் நடந்த நாணயம் விகடன் விருது விழாவில்தான் இந்தக் காட்சியைக் கண்டேன். ஆங்கிலம், தமிழ், என்று மாறி மாறி ஒலித்துக்கொண்டிருந்தது. ‘‘பாலிடமும் பனீரிடமும் நான் பேசுவேன்’’ என்று ஒருவர் சுருக்கமாகப் பேசி எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இவர் வேறு யாருமல்ல ஈரோடு மில்கி மிஸ்ட் நிறுவனத்தைச் சேர்ந்த சதீஸ்குமார்தான். நாடி, நரம்பெல்லாம் பால் பற்றி சிந்திக்கக்கூடியவரால்தான் இப்படிப் பேச முடியும். விருது கொடுக்க வந்தவர், வெறுமனே செல்லாமல், இந்தச் செய்தியையும் சொல்லிவிட்டுப்போனார்.

இவரைப் போலவே பாலுடன் பேசும் பாட்டி ஒருவரை சில ஆண்டுகளுக்கு முன்பு பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகில் உள்ள கிராமத்துக்குச் சென்றபோது அந்தப் பால் பாட்டியைப் பார்த்தேன்.

அவர் வசித்த வீட்டுக்கே 100 வயது தாண்டியிருக்கும். ‘வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்;

நீங்காத செல்வம் நிறைந்து’ என்று ஆண்டாள் திருப்பாவையில் பாடியதை அன்று நேரில் கண்டேன். வீடு முழுக்க பால், தயிர், நெய் வாசம் கலந்து கட்டி அடித்தது. பாட்டிக்கு 95 வயது என்றார்கள். நம்பவே முடியவில்லை. சுறுசுறுப்பாக எல்லா வேலை களையும் செய்துகொண்டிருந்தார். சிலருக்கு வேலைகளை ஏவிக்கொண்டிருந்தார். மாடுகள் கட்டப்பட்டிருந்த இடத்தில் ஒலிபெருக்கி கட்டப்பட்டிருந்தது. அதில் மெல்லிசைப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

ஞானப்பிரகாசம், சதீஸ்குமார்
ஞானப்பிரகாசம், சதீஸ்குமார்

‘‘பாலும் மாடுகளும்தான் தம்பி, எங்களுக்குச் சாமி. இந்த வீடு, சொத்து பத்து, நகை நட்டெல்லாம் பால் கொடுத்த வருமானம்தான். இந்த வயசுலயும் நான் ஓடி, ஆடி வேலை செய்யவும் பாலும் தயிரும்தான் காரணம். தினமும் காலையில எழுந்திரிச்ச உடனே பழைய சோறுல மோர் ஊத்தி சாப்பிடுவேன். நோய் நொடி இல்லாம இருக் கிறதுக்கு இதுதான் காரணம்னு நினைக்கிறேன்’’ என்றவரிடம், அந்த ஒலிபெருக்கி? எதற்கு என்றேன். ‘‘ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்; பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்னு சொல்வாங்க. மாடுங்களுக்கு பாட்டு பாடினா, சந்தோஷத்துல கொஞ்சம் கூடுதலா பால் கறக்கும். முன்னாடியெல்லாம், நானே நல்ல குரல் எடுத்து பாட்டு பாடுவேன். இப்போ, ரேடியோவுல பாட்டு போடுறோம்’’ என்று சொல்லிக்கொண்டே நெய் காய்ச்சும் வேலையில் இறங்கினார். நெய்யில் ஒரு கைப்பிடி முருங்கைக் கீரையைப் போட்டார். அடுத்த நொடியே வீடு முழுக்க சுகந்தமான நெய் மணம் வீசியது.

“நன் முருங்கைத்தழை, நெய்வார்த்துண்ணில்
யாளி யென விஞ்சுவார்’னு அகத்தியர் பாட்டு இருக்கு. அதாவது, முருங்கைக் கீரையை நெய் சேர்த்து சாப்பிட்டா, யாழி பலம் கிடைக்குமாம். பத்து யானை சேர்ந்தது ஒரு யாழினு சொல்வாங்க’’ என்று மருத்துவக் குறிப்பு சொன்னவரை மறித்து,

பாட்டி உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறதா? என்று கேட்டேன்.

‘‘பண்ணுன மாதிரி பசுவும் எண்ணுன மாதிரி எருமையும் கிடைக்குமா. நமக்கு கிடைச்சதை வைச்சு சந்தோஷமா வாழ்றது தானே வாழ்க்கை’’ என்றார் புன்சிரிப்புடன் அந்தப் பால் பாட்டி. கனமான வாழ்க்கை பாடத்தை எளிமையாகச் சொல்லிவிட்டார்.

சில மாதங்களுக்கு முன்பு... இங்கிலாந்து ராணி எலிசபெத் 96 வயதில் காலமான போது, பால் பாட்டியின் முகம் நினைவுக்கு வந்தது. உலகம் முழுக்க உள்ள ஊடகங்கள், ஒரு வாரத்துக்கு மேல் அவரைப் பற்றி எழுதியும் பேசியும் தீர்த்துக்கொண்டிருந்தன. வெளிநாட்டுத் தொலைக்காட்சியில் தினமும் எலிசபெத் என்ன சாப்பிடுவார், அவரின் நிறைவு வாழ்வின் ரகசியம் குறித்து அலசி ஆராய்ந்துகொண்டிருந்தார்கள். சிறுவயது முதல் கடைக் காலம் வரை ராணியின் காலை உணவில் யோகார்ட் (Yogurt) இருக்கும் என்று குறிப்பிட்டார்கள். அந்தப் பால் பாட்டி தினமும் பழைய சாதத்தில் மோர் ஊற்றிச் சாப்பிட்டார், இங்கிலாந்து ராணி நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் நிரம்பிய பால் பொருளனா யோகார்ட் சாப்பிட்டுள்ளார். ஆக, உடல் ஆரோக்கியத்துக்கு அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப கிடைக்கும் நல்உணவுகளை உண்டுள்ளார்கள்.

மோர், தயிர், யோகார்ட், பனீர்... என்று பால் பொருள்களை விரும்பி உண்பவர்கள் நீண்ட காலம் நலமாக வாழ்வதாக ஆய்வுகள் தொடர்ந்து சொல்லி வருகின்றன. ஆசியாவிலேயே கால்நடைகளுக்கான முதல் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில்தான் உருவாக்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகம் உருவாக அடித்தளமிட்டவர்களில் முக்கியமானவர், முனைவர் வே.ஞானப்பிரகாசம். கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் முதல் பதிவாளராகவும், இரண்டாவது துணைவேந்த ராகவும் பணியாற்றியவர். ஓய்வு பெற்றுவிட்டாலும், உலக அளவில் கால்நடை தொடர்பாக நடக்கும் அத்தனை ஆராய்ச்சிகள் குறித்த தகவல்களையும் விரல்நுனியில் வைத்திருப்பார்.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

காலம் சென்ற இங்கிலாந்து ராணி எலிசபெத் தலைமையில் காமன்வெல்த் கூட்டமைப்பில் உள்ள நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு, இங்கிலாந்து அரண்மனையில் நடைபெற்றது. இதில் துணை வேந்தர் என்ற முறையில் முனைவர் வே.ஞானப்பிரகாசமும் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் ராணி கொடுத்த விருந்தைப் பற்றியும் அதில் பரிமாறப்பட்ட வித விதமான பால் பொருள்கள் பற்றியும் மணிக்கணக்கில் பேசுவார்.

‘‘மொஸரெல்லா (Mozzarella) சீஸை, ராயல் விருந்தில் பரிமாறினாங்க. அவ்வளவு சுவையான மொஸரெல்லாவை நான் சாப்பிட்டதில்ல. இந்தியாவிலும் இது போல பால் பொருள்கள் விற்பனைக்கு வரணும். பால் மாடு வளர்ப்பு லாபமாக இருக்கணும்னா பாலை மட்டும் விற்பனை செய்யாம, மதிப்புக்கூட்டி விற்பனை செய்யணும். அப்பதான் நல்ல லாபம் கிடைக்கும்’’ இந்தத் தகவலை ஓர் உரையாடலின்போது என்னிடம் பகிர்ந்தார், முனைவர் வே.ஞானப் பிரகாசம்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பே அவர் மொஸ ரெல்லா குறித்து சிலாகித்துப் பேசினார். ஆனால், அப்போது நான் அதைக் கண்ணில்கூட பார்த்த தில்லை. அந்த வஸ்து எப்படி இருக்கும் என்று அவரிடம் அப்பாவியாகக் கேள்வி கேட்டேன். ‘‘பெயரைப் பார்த்த உடனே, ஏதோ அதிசயப் பொருள்னு நினைக்காதீங்க. மொஸரெல்லான்னா தமிழ்ல பால் ஊறுகாய்னு சுருக்கமாகச் சொல்லலாம்’’ என்றார். இன்றும் இந்த விளக்கம் காதுகளில் ஒலித்துக்கொண்டுள்ளது. பால் பொருள்களின் அருமை பெருமைகளைப் பல நாள்கள் எனக்குப் பாடம் எடுத்த முன்னாள் துணைவேந்தர் முனைவர் ஞானப்பிரகாசத்துக்கு தற்போது 90 வயது.

காலம்தான் எவ்வளவு வேகமானது. இன்று வாரத்தில் ஒரு நாளாவது மொஸரெல்லாவை சென்னையில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் கண்டு விடுகிறேன். மாதத்தில் ஒரு நாளாவது இதை ரசித்து ருசிக்கும் வாய்ப்பு அமைந்துவிடுகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இத்தாலியில் உருவான இந்த சீஸ், உலகம் முழுவதும் பயணித்து இப்போது நம் ஊர் அண்ணாச்சி கடை வரை வந்து சேர்ந்துவிட்டது.

சீஸூக்கு சில குணம் உண்டு. இதை செய்த உடனே சாப்பிட்டால் ருசிக் காது. நாள்கள் செல்ல செல்லத்தான் இதன் ருசி கூடும். விலையும் கூடும். தாய்லாந்து நாட்டில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் 30 ஆண்டு களுக்கு முன்பு செய்த சீஸ் மூலம் சமைக்கப்பட்ட உணவு என்ற அறிவிப்புப் பலகை வைத்திருந்தார்கள். ஆனால், அந்த உணவுக்குக் குதிரை விலையைக் குறிப்பிட்டிருந்தார்கள்.

இந்தியாவில் கி.பி முதல் நூற்றாண்டிலிருந்தே பனீர் உணவு இருந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆயுர்வேத மருத்துவத்தின் ஆதி நூலான ‘சரகச் சம்ஹிதை’யில் கொதிக்கும் பாலில் புளிப்பு சேர்த்துக் கொழுப்பைப் பிரித்தெடுத்துத் தயாரிக்கப்படுகிற வஸ்துவைப் பற்றிக் குறிப்பிடப் பட்டிருக்கிறது. வடக்கில் ஆட்சி செய்த கனிஷ்கர் பனீர் இல்லாமல் ஒரு நாளும் சாப்பிடமாட்டார் என்று வரலாற்று ஆசிரியர் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்கள்.

பனீர் என்பது புதிதாகச் சாப்பிட வேண்டிய பொருள். சீஸ் என்பது பல நாள்கள் வைத்திருந்து ஊறுகாய் போல சாப்பிடலாம். இரண்டுக்கும் இதுதான் வித்தியாசம். சீஸ், பனீர் இன்று அத்தியாவசியமான உணவுப் பொருளாக வடிவம் எடுத்துள்ளன. இதற்கான சந்தை வாய்ப்பும் உள்ளது. ஆனால், மாடுகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு பால் உற்பத்திக்கான முழுப் பலனும் சென்று சேரவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான்.

ஆவின் சரியில்லை; அரசாங்கம் உதவி செய்யவில்லை என்று சொல்லிக் கொண்டே இருக்காமல், வித்தியாச மாக யோசிப்போம். புதிய வாய்ப்பு களை உருவாக்குவோம். பால் உற்பத்தி யில் வெற்றி பெற வேண்டுமா? குஜராத்தில் உள்ள அமுல் நிறுவனத் தைப் பாருங்கள் என்று பழைய புளித்துப்போன பல்லவியைப் பாட விரும்பவில்லை. இனிப்பான ஓர் உதாரணத்தைப் பார்ப்போம். உலகத்துக்கே பால் தொழிலில் முன்னோடியாக உள்ள ஸ்விட்சர்லாந்து நாட்டிடம் நாம் கற்றுக்கொள்ள ஏராளம் உள்ளன.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

உலக அளவில் சிறந்த 20 பால் நிறுவனங்களின் பட்டியலில் நுழைந்த முதல் இந்தியப் பால் நிறுவனம் என்ற பெருமையை சில ஆண்டுகளுக்கு முன்பு அமுல் நிறுவனம் பெற்றது. 5.5 பில்லியன் டாலர் ஆண்டு வருவாயுடன் அமுல் இந்தப் பட்டியலில் 16-வது இடத்தைப் பெற்றுள்ளது. “குஜராத்திலுள்ள 36 லட்சம் பால் உற்பத்தி யாளர்களுக்கு இந்தச் செய்தி பெருமை அளிக்கிறது” என்று அமுல் நிறுவனம் அப்போது பக்கம், பக்கமாக விளம்பரம் கொடுத்துக்கொண்டாடியது.

சரி, அமுலுக்கு 16-வது இடம் என்றால் அந்த பட்டியலில் முதல் இடத்தில் யார் இருக்கிறார்கள் என்று கேட்கிறீர்களா? 22.1 பில்லியன் டாலர் வருமானத்துடன் சுவிட்சர்லாந்தை சேர்ந்த தனியார் நிறுவனமான நெஸ்லே-Nestle (சந்தேகம் வேண்டாம் சாக்லெட் தொடங்கி சகல சத்து உணவுகளையும் தயாரிக்கும் நிறுவனம்தான்) இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இப்போதுதான் நம் நாட்டில் ‘உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’ என்ற பெயரில் விவசாயி கள் தங்கள் பொருள்களை விற்பனை செய்யும் அமைப்புகள் உருவாகி வருகின்றன. ஆனால், இதைப் பல ஆண்டுகளுக்கு முன்பே பால் பொருள்கள் தயாரிப்பில் செய்து காட்டி வெற்றி பெற்ற நாடு அது. சிறிய சிறிய குழுக்களாக (கிளஸ்டர்) விவசாயிகள் சேர்ந்து, தங்கள் பண்ணை யில் உற்பத்தியாகும் பால் மூலம் சாக்லேட் செய்து நேரடியாக விற்பனை செய்து, நல்ல லாபம் எடுத்து வருகிறார்கள். இதற்கு அந்நாட்டு அரசின் ஆதரவும் உள்ளது.

இதனால், பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் வசதி வாய்ப்புகளுடன் வாழ்கிறார்கள். உலக அளவில் சுவையான சாக்லேட் என்றால் அது ஸ்விட்சர்லாந்தில்தான் கிடைக்கும் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்கள். பால் மாடு வளர்ப்பை லாபகரமாக எப்படி செய்வது என்று உலகத்துக்கு வழிகாட்டி வருகிறார்கள். உலக அளவில் பால் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளோம் என்ற பெருமையை மட்டும் பேசிக்கொண்டிருக் காமல், ‘உலக அளவில் சிந்தித்து, உள்ளூர் அளவில் செயல்படுவோம். (Think globally, act locally)’. மாற்றியோசித்துச் சாதிக்க வேண்டிய நல்ல நேரம் இது.