தினமும் 100 டன் பழங்கள், 2,000 டன் காய்கறிகள், விற்பனையில் வியப்பூட்டும் திருச்சி காந்தி மார்க்கெட்!

சந்தை
திருச்சியின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது ‘திருச்சி காந்தி மார்க்கெட். திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள சுமார் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் விளைபொருள்கள் இங்கு சந்தைப்படுத்தப்படுகின்றன.
150 ஆண்டுகள் பழைமையான இந்தப் பிரமாண்ட மார்க்கெட் குறித்து விரிவாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் அதிகமானது. நேரில் பார்வையிடச் சென்றோம். மிகுந்த பெருமிதத்தோடு நம்மிடம் பேசிய காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் எம்.கே.கமலக்கண்ணன், “1868-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் எவ்வித கட்டுமானங் களும் இல்லாமல், ஒரு சாதாரணத் திறந்த வெளி சந்தையாக ஆரம்பிக்கப்பட்டது இந்த காந்தி மார்க்கெட். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருள்களை எளிதாகச் சந்தைப்படுத்தும் வகையில், மலைக்கோட்டை மற்றும் கடைவீதிகளுக்கு அருகே, திருச்சியின் மையப் பகுதியில் இந்த மார்க்கெட் அமைக்கப்பட்டது. 1927-ம் ஆண்டு இதன் விரிவாக்கப் பணிகளுக்குக் காந்தியடிகளே நேரில் வந்து அடிக்கல் நாட்டினார். பிற்காலத்தில் காந்தியடிகளைப் பெருமைப்படுத்தும் வகையில் மார்க்கெட்டில் அவருடைய சிலையை ராஜாஜி திறந்து வைத்தார். மார்க்கெட்டுக்கும் காந்தியின பெயரே நிலைத்துவிட்டது. இப்படி 150 ஆண்டுகாலப் பழைமையோடு, பல வரலாற்றுப் பெருமைகளும் இந்தக் காந்தி மார்க்கெட்டுக்கு உண்டு.

6.5 ஏக்கர் பரப்பில் செயல்பட்டுக்கொண் டிருந்த இந்த மார்க்கெட், படிப்படியாக வளர்ச்சி அடைந்து 15 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து அளிக்கிறது. பல்வேறு மாவட்டங்களை பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் விளைபொருள்கள் தினமும் இங்கு சங்கமம் ஆகிறது. 500 மொத்த வியாபாரிகள், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரிகள், மூட்டை தூக்குபவர்கள், லாரி புக்கிங் ஆபீஸ் ஊழியர்கள் எனச் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வாழ்வாதாரம் அளிக்கிறது இந்த மார்க்கெட்.

20 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியைச் சுற்றி 50 கி.மீ சுற்றளவில் உள்ள பகுதிகளில் இருந்து நாட்டுத் தக்காளி அதிகமாக இந்தச் சந்தைக்கு வரும். ஆனால், இன்றைக்கு பழனி, உடுமலைப் பேட்டை பகுதிகளிலிருந்து மட்டும்தான் நாட்டுத் தக்காளி விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது.
அதுவும் மிகக் குறைந்த அளவே. அதே வேளையில் வீரிய விதையில் விளைவிக்கப்பட்ட தக்காளியானது ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து தினமும் 50 லோடுக்குக் குறையாமல் வருகிறது. இந்த 3 மாநிலங்களில் இருந்தும் தக்காளி வரவில்லையென்றால் நமக்கு திண்டாட்டம்தான். வெண்டை, புடலை, கத்திரி, அவரை, சுரைக்காய் என நாட்டுக் காய்கறிகள் அனைத்தும் திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வருகின்றன. ஆந்திராவிலிருந்தும் நமக்கு கத்திரிக்காய் வருகிறது. தேனி, சின்னமனூர், கம்பம் பகுதிகளிலிருந்து பீன்ஸ், மொச்சை, சோயா பீன்ஸ் போன்றவை வருகின்றன. கொடைக் கானல் மற்றும் ஊட்டியிலிருந்து செளசெள, கேரட், பீட்ருட், முள்ளங்கி போன்றவை கிடைக்கிறது. ஓசூரில் இருந்து புதினா, கொத்தமல்லி போன்றவை வருகிறது. ஆக்ராவில் இருந்து உருளைக்கிழங்கு கிடைக்கிறது.

அந்த வகையில், திருச்சி காந்தி மார்க்கெட்டில் தினமும் 200 டன் தக்காளி, 300 டன் உருளைக்கிழங்கு, 300 டன் இங்கிலீஷ் காய்கறிகள், 400 டன் நாட்டுக் காய்கறிகள், 400 டன் தேங்காய் என 1,500 டன் அளவுக்குக் காய்கறி விற்பனை நடைபெறுகிறது. தோராயமாகத் தினசரி 2 - 3 கோடி ரூபாய் அளவுக்கு வணிகம் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமையைத் தவிர மற்ற அனைத்து நாள்களும் 24 மணிநேரமும் இந்தக் காந்தி மார்க்கெட் பரபரப்பாக இயங்கி வருகிறது. திருச்சி மாவட்டத்துக்கு மட்டுமல்லாமல் பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கும் இங்கிருந்துதான் காய்கறிகள் செல் கின்றன. தினமும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும், சிறு வியாபாரிகளும் நேரடியாக இந்த மார்க்கெட்டுக்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்” என்றார்.

திருச்சி வெங்காயத் தரகு மண்டி வர்த்தகர் சங்கச் செயலாளர் தங்கராஜ், “பெரிய வெங்காயத்தைப் பொறுத்த வரை 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்திலிருந்தே அதிக அளவு கிடைத்து வந்தது. குறிப்பாகத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதிகளிலிருந்து வருடத்தில் 3 மாதங்கள் வெங்காய வரத்து இருக்கும். தமிழ்நாட்டு மக்களின் தேவைக்குப் போக, மீதமிருப்பதை ஆந்திரா, ஒடிசா மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அனுப்புவார்கள்.

ஆனால், இன்றைக்கு நிலைமை தலைகீழாக இருக்கிறது. தமிழகத்தில் தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியில் இருந்து மட்டும்தான் பெரிய வெங்காயம் கிடைக்கிறது. அதுவும் கூடத் தமிழகத்தின் வெங்காயத் தேவையை, வருடத்தில் ஒரு மாதத்துக்குக்கூட பூர்த்திச் செய்யும் அளவில் இல்லை. மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து நமக்குத் தேவையான பெரிய வெங்காயம் வருடம் முழுவதும் வந்துகொண்டிருக்கிறது. தற்போது, இந்த மார்க்கெட்டில் ஒரு நாளைக்கு 350 டன் சின்ன வெங்காயமும், 350 டன் பெரிய வெங்காயமும் தினமும் விற்பனையாகிறது” என்றார்.

திருச்சி பழ வியாபாரிகள் நலச் சங்க தலைவர் முகம்மது ஃபாருக், “காந்தி மார்க்கெட்டைச் சுற்றிலும் மொத்த வியாபார பழக் கடைகள் 40, சில்லறை வியாபார பழக்கடைகள் 100 செயல் படுகின்றன. சிம்லா மற்றும் காஷ்மீரி லிருந்து ஆப்பிள், மகாராஷ்டிரா விலிருந்து மாதுளை, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து பச்சை திராட்சை, தேனி மற்றும் கம்பம் பகுதி களிலிருந்து பன்னீர் திராட்சை, ஆந்திராவிலிருந்து சாத்துக்குடி போன்றவை திருச்சி மார்க்கெட்டுக்கு வருகின்றன. அதேபோல குஜராத், ராஜஸ்தான் மற்றும் நாக்பூரிலிருந்து ஆரஞ்சு வருகிறது. இந்தியாவில் சீஸன் இல்லாத சமயங்களில் எகிப்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து மால்டோ ஆரஞ்சு, இங்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.

மாம்பழங்களைப் பொறுத்தவரை... தமிழ்நாடு முழுவதிலுமிருந்து இங்கு விற்பனைக்கு வருகின்றன. தினசரி ஆப்பிள் 30 டன், சாத்துக்குடி 40 டன், திராட்சை 20 டன், மாதுளை 20 டன் என 100 டன்னுக்கு குறையாமல் பழங்கள் விற்பனையாகின்றன. கோடைக் காலங்களில் தினசரி 40 டன் மாம்பழங்கள் மற்றும் தலா 20 டன் அளவுக்குக் கிர்ணி மற்றும் தர்பூசணி பழங்கள் இங்கு விற்பனைக்கு வரும். அதேபோல, மாம்பழ சீஸனில் தினமும் ஒரு டன் அளவுக்கு மாம்பழம் வெளிநாடுகளுக்கு விமானம் மூலமாக ஏற்றுமதி ஆகும்” என்றார்.
வாழைக்காய் - கனி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ப.பழனிவேல், “எங்களுடைய தாத்தா காலத்திலிருந்தே, காந்தி மார்க்கெட்டில் இந்த வாழை கமிஷன் மண்டி தொழில் செய்து வருகிறோம். இங்கு 42 வாழைக்காய் கமிஷன் மண்டிகளும், 22 சில்லறை விற்பனைக் கடைகளும் இருக்கின்றன. தமிழகத்திலேயே பிரத்யேகமாக வாழைக்காய்க்கு என கமிஷன் மண்டி முதலில் வந்தது திருச்சி காந்தி மார்க்கெட்டாகத்தான் இருக்கும். விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த வாழைத்தார்களை நேரடியாக எடுத்து வந்து விற்பனை செய்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமையைத் தவிர, மற்ற நாள்களில் தினசரி மாலை 4 மணிக்கு ஏல முறையில் விவசாயிகள் முன்னாடியே விற்பனை நடைபெறும்.

பூவன், கற்பூரவள்ளி, நேந்திரன், மொந்தன், ரஸ்தாளி, செவ்வாழை, பச்சை வாழை என அனைத்து வாழை ரகங்களும் இங்கு கிடைக்கும். தேனி, கம்பம் பகுதிகளிலிருந்து பச்சை வாழை, சத்தியமங்கலம் பகுதிகளி லிருந்து செவ்வாழை, குளித்தலையிலிருந்து கற்பூரவள்ளி, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பூவன் வாழையும் வருகின்றன. தினமும் 25 - 30 ஆயிரம் வாழைத்தார்கள் காந்தி மார்க் கெட்டுக்கு வருகின்றன. இவையனைத்தும் திருச்சியைச் சுற்றி 200 கி.மீ தூரத்தில் இருக்கக்கூடிய அனைத்துப் பகுதிகளுக்கும் செல்கின்றன. காந்தி மார்க்கெட்டைச் சுற்றிலும் எந்நேரமும் லாரி சர்வீஸ் இருப்பது பெரிய வசதி.

சென்னை தாம்பரத்தில் இருக்கும் ஒருவருக்கு 2 வாழைத்தார் வேண்டுமென்றால் கூட, 100 ரூபாய் செலவில் டெலிவரி செய்யலாம். அதுவே, தாம்பரத்தில் இருக்கும் ஒருவர் கோயம்பேடு மார்க்கெட்டுக்குச் சென்று 300 ரூபாய் விலையுள்ள வாழைத்தார் வாங்க வேண்டுமென்றால், டிரான்ஸ்போர்ட் சார்ஜ் 200 ரூபாய் ஆகும். அதேபோல, பெரிய விவசாயிகள், ஏஜென்டுகள் மட்டுமல்லாமல் ஒரு விவசாயி ஒரு வாழைத்தாரைக் கொண்டு வந்தாலும்கூட மறுக்காமல் வாங்கிக் கொள்வோம்” என்றார் மகிழ்ச்சியுடன்.
மீன், இறைச்சி வகைகள்!
காந்தி மார்க்கெட்டுக்கு வருபவர்கள் மார்க்கெட்டை சுற்றியும், என்.எஸ்.பி சாலையில் காலாற நடந்தால்... இலை, பூ, அரிசி, எண்ணெய், தானியங்கள், மளிகை சாமான்கள், மீன், இறைச்சி வகைகள், நகைகள், பாத்திரங்கள், ஜவுளிகள், வீட்டு உபயோகப் பொருள்கள், நாட்டு மருந்துகள், இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் என அத்தனையையும் வாங்கிவிடலாம்.