
சந்தை
வேலூர் மாவட்டம், காட்பாடி, காந்தி நகரில் அமைந்திருக்கும் மகளிர் மன்ற வளாகத்தில், ‘மக்கள் நலச்சந்தை’ தொடங்கப்பட்டிருக்கிறது. இயற்கை விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையே நேரடியாகத் தொடர்பை ஏற்படுத்துவதுதான் மக்கள் நலச்சந்தையின் நோக்கம். இங்கு கடைகள் அமைக்கும் இயற்கை விவசாயிகளிடம், வாடகை வசூலிக்கப்படுவதில்லை. மாதந்தோறும், இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை இச்சந்தை செயல்படும். இது ‘விற்கும் இடம் அல்ல... கற்கும் களம்’ என்பது இச்சந்தையின் தாரக மந்திரம்.

கடந்த ஜூன் 12-ம் தேதி, வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் மக்கள் நலச்சந்தையைத் தொடங்கி வைத்தார். இதில் 85 ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. காய்கறிகள், பழங்கள், பாரம்பர்ய அரிசி வகைகள், சிறுதானியங்கள், விதைகள், மூலிகைச் செடிகள், கீரைகள், சோற்றுக் கற்றாழையில் தயாரிக்கப்பட்ட சருமத்துக்குப் பாதிப்பில்லாத அழகு சாதனப் பொருள்கள், பாரம்பர்ய மரச்செக்கு எண்ணெய், கல் செக்கினால் தயாரிக்கப்பட்ட எண்ணெய் வகைகள், சுத்தமான மலைத்தேன், பாரம்பர்ய உணவு வகைகள் மட்டுமல்லாமல்... இயற்கை வேளாண்மைக்கான இடுபொருள்கள் உள்பட இயற்கை சார்ந்த பல்வேறு பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன.

இளைஞர்கள் குழு ஒன்று அமைத்திருந்த அரங்கில், பாரம்பர்ய கத்திரி விதைகள் இலவசமாக வழங்கப்பட்டன. எட்டு நாழி கத்திரி, இலவம்பாடி முள் கத்திரி, மானாவாரி வெள்ளைக் கத்திரி, குலசை கத்திரி, கொட்டாம்பட்டி கத்திரி, தொப்பிக் கத்திரி, நீலமுள் கத்திரி எனப் பல ரகங்கள் இடம்பெற்றிருந்ததைக் கண்டு மக்கள் வியப்படைந்தார்கள். மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரித்த சத்துமாவு விற்பனை செய்யப்பட்டது. அதில் பாசிப்பயறு, கொள்ளு, கறுப்பு உளுந்து, கொண்டைக்கடலை, வேர்க்கடலை, சோயா பீன்ஸ், பார்லி, பாதாம், பிஸ்தா, முந்திரி, சுக்கு, ஏலக்காய் உள்ளிட்ட பொருள்கள் கலந்திருப்பதாக இக்குழுவினர் தெரிவித்தனர்.

சிறுதானிய அப்பளம், வத்தல்
காலாபாத், மைசூர் மல்லி , சொர்ணமசூரி, கறுப்புக்கவுனி, பூங்கார், மாப்பிள்ளைச் சம்பா, சீரகச் சம்பா, குள்ளக்கார் உள்பட இன்னும் பலவிதமான பாரம்பர்ய அரிசி வகைகள் விற்பனை செய்யப்பட்டன. சிறுதானியங்கள் மற்றும் பாரம்பர்ய அரிசி ரகங்களில் தயாரித்த வத்தல், அப்பளம், புட்டுமாவு, சத்து மாவு, அல்வா, பிஸ்கட், உருண்டை முறுக்கு, அதிரசம், தட்டை ஆகியவைகளும் விற்பனைச் செய்யபட்டன.

சுக்கு காபி மிக்ஸ்
வசம்புப் பொடி, கறிவேப்பிலைப் பொடி, இட்லிப் பொடி, பருப்புப் பொடி, சாம்பார், புளியோதரைப் பொடி, வத்தக் குழம்பு மிக்ஸ், மஞ்சள் சுக்கு காபி மிக்ஸ் மற்றும் மூலிகைப் பொடிகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.


மாடித் தோட்டத்திற்கான ஆலோசனை
மாடித்தோட்டம் அமைப்பதற்கான செடிகள், குரோ பேக் எனப்படும் செடி வளர்ப்புப் பைகள், இயற்கை இடு்பொருள்கள் உள்ளிட்டவை விற்பனைச் செய்யப்பட்டதோடு, அது தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.



மூலிகைச் சாறு
சோர்வைப் போக்கி புத்துணர்ச்சித் தரக்கூடிய அறுகம்புல் சாறு, வில்வம், சாறு, வெண்பூசணி சாறு, கொள்ளு சாறு, கோதுமை புல் சாறு, நெல்லி சாறு, வாழைத்தண்டு சாறுகளும் இங்கு விற்பனை செய்யப்பட்டன.
மக்கள் நலச்சந்தையைத் தொடங்கி வைத்து பேசிய ஜி.வி.செல்வம், ‘‘மக்கள் நலச்சந்தை ஒரு நல்ல முன்னெடுப்பு. கொரோனாவுக்குப் பிறகு பெரும்பாலான மக்கள், ஆரோக்கியமான வாழ்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு இயற்கை விவசாயமும் பாரம்பர்ய உணவு வகைகளும் அவசியம். இதை மக்களிடம் கொண்டு சேர்க்க வி.ஐ.டி பல்கலைக்கழகம் காத்திருக்கிறது. இந்தச் சந்தையிலும், வி.ஐ.டி-யின் ‘வயல்’ நடமாடும் விவசாயப் பரிசோதனை மையம் மூலம் இலவசமாக மண் மற்றும் தண்ணீர் பரிசோதனை செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூச்சி, நோய்த் தாக்கிய பயிர்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதைத் தீர்க்கவும் வழிகாட்டப்படும். இந்தச் சந்தையை விவசாயிகள் நன்கு பயன்படுத்திப் பலன் அடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்’’ எனத் தெரிவித்தார்.

இச்சந்தையின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படும் கு.செந்தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். ‘‘விவசாயிகள், உற்பத்தியாளர்கள் அமைக்கும் ஸ்டால்களுக்குப் பணம் வாங்குவதில்லை. இலவசமாகக் கடை அமைத்து, பொருள்களை விற்பனைச் செய்து கொள்ளலாம். மக்கள் நலச்சந்தை என்பது பொருள்களைக் கொண்டு வந்தோம், விற்பனை செய்தோம்; கிளம்பினோம் என்பதல்ல. இது ஒரு தொடர்பு மையம். உற்பத்தியாளர்களும், நுகர்வோரும் நேரிடையாகச் சந்தித்து ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து உற்பத்தியாளர்கள் வருகிறார்கள். முதல் சந்தையே நிறைவாக இருந்தது. அடுத்தடுத்த சந்தைகளில் அரங்குகள் இன்னும் அதிகப்படுத்தப்படும்.

இந்தச் சந்தையில் கொண்டு வரப்பட்டுள்ள அனைத்து வகைப் பொருள்களும் இயற்கை விவசாயத்தால், பயிரிடப்பட்ட பொருள்கள்தான். கரிசலாங்கண்ணி, பொன்னாங்கன்னி, விளக்கெண்ணெயைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கண் மை 30 ரூபாயில் கிடைக்கிறது. கணினி முன்பு இரவு நேரங்களில் அமர்ந்து வேலைப் பார்க்கும் ஆண்களும் இந்த மையைக் கண் இமைகளில் தடவிக் கொள்ளலாம். குளிர்ச்சியாக இருக்கும். வேறு எங்கும் கிடைக்காத இதுபோன்ற பொருள்கள் மக்கள் நலச்சந்தையில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, மக்கள் நம்பிக்கையுடன் வாங்கிப் பயன் பெறலாம்’’ என்றார்.
தொடர்புக்கு, கு.செந்தமிழ்ச்செல்வன்,
செல்போன்: 94430 32436