நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

சொந்த பணத்தில் குட்டை வெட்டிய விவசாயிகள்! - வறண்ட கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது!

வெட்டப்பட்ட குட்டை
பிரீமியம் ஸ்டோரி
News
வெட்டப்பட்ட குட்டை

நீர்நிலை

விவசாயிகள் தங்கள் வயல்களில் விளைவித்த வெள்ளாமை நன்றாக விளையும் நேரத்தில் மழை பெய்து, வெள்ளாமையைக் கெடுக்கும். அல்லது வறட்சி வந்து, விவசாயத்தைப் பதம் பார்க்கும்.

அப்படியே வறட்சி, மழை இல்லாமல் நன்றாக விளைந்தாலும், விளைபொருள்களுக்குச் சரியான விலை இருக்காது. இப்படித் தங்களைப் பல்வேறு திசைகளிலிருந்து தாக்கும் பிரச்னைகளைத் தங்களது மனவலிமையால் புறந்தள்ளி, மீண்டும் மீண்டும் விவசாயத்தில் ஈடுபட்டு, இணையில்லாத தன்னம்பிக்கை வாழ்க்கைக்கு உதாரணமாக இருப்பதும் அதே விவசாயிகள்தாம். அப்படி, 18 வருடங்களாக தங்களுக்குப் பிரச்னை கொடுத்த ‘அதலபாதாள’ நிலத்தடி நீர் பிரச்னைக்கு, தாங்களே முயன்று முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள் 100 விவசாயிகள்.

லோகநாதண், பழனிவேல், கனகசபாபதி
லோகநாதண், பழனிவேல், கனகசபாபதி

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கொல்லிமலையின் மேற்கு அடிவாரத்தில் இருக்கும் பேளுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், தங்கள் கிராமத்தின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி யிருக்கிறார்கள். பேளுக்குறிச்சி கிராமத்தில் 1,000 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அவற்றில் விவசாயம் செய்கிறார்கள். கிணறுகள் அல்லது போர்வெல் அமைத்து, விவசாயம் செய்யப்படுகிறது.

வெட்டப்பட்ட குட்டை
வெட்டப்பட்ட குட்டை

இந்த நிலையில், 2000-ம் ஆண்டுக்குப் பிறகு, கொல்லிமலையில் சரியாக மழை பெய்யாததால், பேளுக்குறிச்சியின் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத் திற்குப் போனது. முன்பு 200 அடி வரை போர் போட்டாலே, தண்ணீர் கிடைத்திருக்கிறது. கிணறுகளிலும் 60 அடியிலேயே தண்ணீர் கிடைத்திருக்கிறது. ஆனால், கொல்லிமலையில் மழை பெய்வது குறைய, 900 அடி போர்வெல் அமைத்தாலும் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், பேளுக்குறிச்சி கிராம விவசாயிகள் முறையாக விவசாயம் செய்ய முடியாமல் அல்லாடியிருக் கிறார்கள்.

இந்த நிலையில்தான், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கிராம விவசாயிகள் அனைவரும் ஒன்றுகூடி பேசினார்கள். அதன்படி, 100 விவசாயிகள் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் 10.5 லட்சம் வரை பணம் வசூலித்தார்கள். அதில் மழைபெய்யும்போது கொல்லிமலையிலிருந்து ஓடையாகத் தண்ணீர் வரும் ரெத்தின கால் ஊத்து தண்ணீரைத் தங்கள் கிராமத்தின் பூமிக்குள் செல்லும்படி அமைத்து, அருமையான நீர் மேலாண்மை செய்தார்கள். இதனால், பேளுக்குறிச்சி கிராமத்தின் நிலத்தடி நீர்மட்டம் இப்போது கொஞ்சம் உயர, மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் விவசாயிகள்.

சொந்த பணத்தில் குட்டை வெட்டிய விவசாயிகள்! - வறண்ட கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது!

இந்த அசத்தலான முயற்சியைத் தலைமையேற்று அமைத்துக் காட்டி சாதித்த லோகநாதனிடம் பேசினோம்.

“கொல்லிமலையில மனித தவறுகளால், 2000-ம் வருஷத்துக்குப் பிறகு பெரிதாக மழை பெய்யாத சூழல் ஏற்பட்டுச்சு. அதனால், தண்ணி கிடைக்காம நாங்க கால் ஏக்கர், அரை ஏக்கர்னுதான் விவசாயம் பண்ணிக்கிட்டு இருந்தோம். கொல்லிமலையில் மழை எப்போதாவது பெய்தாலும், அந்தத் தண்ணீர் ரெத்தினகால் ஊத்து வழியாக, எங்க ஊரைக் கடந்து, எங்க ஊருக்கு 100 அடிக்கும் கீழே இருக்கிற தாண்டானூரில் உள்ள ஏரியில போய் நிரம்பும். இதனால, கொல்லிமலையிலிருந்து வரும் தண்ணி எங்க ஊர் வழியாக போகுமே யொழிய, விவசாயத்துக்கோ, நிலத்தடி நீரை உயர்த்தும் விதமாகவோ இல்லாம இருந்துச்சு. இதனால, கடந்த 18 வருஷமா தண்ணீர்ப் பிரச்னையால அல்லாடி வந்தோம். 2018-ம் வருஷம் 100 விவசாயிகளும் சேர்ந்து பேசி, 10.5 லட்சம் வரை பணம் வசூல் செய்து இந்தக் குட்டையை வெட்டினோம்” என்றார் மகிழ்ச்சியுடன்

குட்டைக்கு அருகில் விவசாயிகள்
குட்டைக்கு அருகில் விவசாயிகள்

அடுத்து பேசிய விவசாயியான பழனிவேல், “இந்தக் குட்டையை வெட்டுறதுக்காக சம்பந்தப்பட்ட விவசாயிகிட்ட இரண்டரை லட்சம் கொடுத்து நிலத்த வாங்கினோம். 3 கிட்டாச்சி, 3 டிராக்டர்கள் வெச்சு, எட்டரை லட்சம் செலவு பண்ணி, இரண்டு மாசமா தோண்டி, குளம் மாதிரி ஒரு குட்டையை வெட்டி முடிச்சோம். இந்தக் குட்டையை இருபதடி ஆழம் எடுக்க நினைச்சோம். ஆனா, குழி எடுக்க நிதி பத்தலை” என்றார்.

இறுதியாகப் பேசிய விவசாயி கனகசபாபதி, “இந்த வருஷம் மூணு முறை குட்டை நிரம்பி, அந்தத் தண்ணி பூமிக்குள் போச்சு. இப்போ பலன் தெரிய ஆரம்பிச்சிருக்கு. கிணறுகள்ல 80 அடியில தண்ணீர் கிடைக்குது. போன வருஷம் வரை தண்ணீர் இறைவை இல்லாமல் இருந்த சில போர்வெல்கள், இப்போ தண்ணி இறைக்க ஆரம்பிச்சுருக்கு. அதனால, விவசாயிகள் பலரும் ஆர்வமா வெள்ளாமை பண்ணியிருக்கோம். ஆனா, முழுமையா 1,000 ஏக்கர் நிலத்திலும் விவசாயம் பண்ற அளவுக்கான தண்ணி இன்னும் கிடைக்கல. அதுக்கு, இந்தக் குட்டையை இன்னும் ஆழப்படுத்தணும். அதுக்கான நிதியில்லாம சிரமப்படுறோம். வெறுமனே இந்தக் குட்டையை ஆழப்படுத்தினா மட்டும் எங்களுக்குத் தேவையான நிலத்தடி நீர் கிடைச்சிடாது. அந்தக் குட்டைக்கு தெற்கே நிலம் இருக்கு. குட்டைக்குக் கிழக்கே மலையையொட்டி, வனச்சரகத்துக்குச் சொந்தமா இடம் இருக்கு. இந்தக் குட்டையைத் தெற்குப் பக்கமும், கிழக்குப் பக்கமும் அந்த இடங்கள்ல அகலப்படுத்தி, ஆழப்படுத்தினா, எங்கள் கிராமத்துக்குத் தேவையான நீர் ஆதாரம் எளிதா கிடைக்கும். அதைச் செய்ய எங்களுக்கு சக்தி கிடையாது. ஏற்கெனவே, இந்தக் குட்டையை வெட்டி முடிக்க நாங்க ரொம்ப சிரமப்பட்டுப்போயிட்டோம். அதனால, இந்த குட்டையை அகலப்படுத்தி, ஆழப்படுத்துற வேலையை அரசு ஏற்று செய்தால், பேளுக்குறிச்சி கிராம விவசாயிகளுக்குப் பேருதவியா இருக்கும். இதை மட்டும் செஞ்சு கொடுத்துட்டா, காலத்துக்கும் எங்க ஊர் விவசாயிங்க மறக்க மாட்டோம்” என்றார் நம்பிக்கையுடன்.

விவசாயிகளுக்கு நல்லது நடக்கும்!

பேளுக்குறிச்சி விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கைகள் குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜிடம் பேசினோம்.

சொந்த பணத்தில் குட்டை வெட்டிய விவசாயிகள்! - வறண்ட கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது!

“நானும் விவசாயிகளின் இந்த முயற்சி பற்றி கேள்விப்பட்டேன். மாவட்ட நிர்வாகத்திடம் முன்கூட்டியே சொல்லியிருந்தால், மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியில் அந்தக் குட்டையை வெட்டிக் கொடுத்திருப்போம். விவசாயிகள் அந்தப் பத்து லட்சம் பணத்தை ஊரின் மற்ற நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்தியிருக்கலாம். நான் நேரில் சென்று, அந்தக் குட்டையை ஆய்வு செய்கிறேன். 100 நாள் வேலைத்திட்டம் மூலம், அந்தக் குட்டையின் பரப்பளவை அதிகரிக்க முயற்சி செய்கிறேன். அல்லது ஸ்பான்ஸர் மூலம் நிதிதிரட்டி, தேவையான இயந்திரங்களைக் கொண்டு, விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி செய்கிறேன். கண்டிப்பாகப் பேளுக்குறிச்சி விவசாயிகளுக்கு நல்லது நடக்கும்” என்று நம்பிக்கை கொடுத்தார்.