பீகாரின் பாகல்பூரைச் சேர்ந்தவர் அசோக் சௌத்ரி. அறிவியல் மற்றும் சட்டப் பட்டதாரியான இவர், அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து பல ஆண்டுகளுக்கு முன்பே தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, மாம்பழ ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். புவிசார் குறியீடு பெற்ற `ஜர்தாலு’ வகை மாம்பழங்களின் முன்னணி உற்பத்தியாளர் மற்றும் மொத்த சப்ளையராக இவர் இருப்பதால் பாகல்பூரின் `மேங்கோ மேன்’ என இவர் அழைக்கப்படுகிறார்.

10 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள தனது ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி பண்ணையில், பல்வேறு பகுதிகள் மற்றும் பல நாடுகளின் 35 - 40 வகையான வண்ணமயமான மாம்பழங்கள் உட்பட 100-க்கும் அதிகமான மாம்பழ ரகங்களை உருவாக்கியுள்ளார். `ஜர்தாலு’ வகை மாம்பழங்களுக்காகக் கடுமையாக உழைத்தபோது, மாம்பழங்கள் பூக்கும் நேரத்தில் பல்வேறு வகைகளுக்கு இடையே குறுக்கு மகரந்த சேர்க்கை முறைகளைத் தவிர `கிராஃப்டிங் டெக்னாலஜி‘ முறையிலும் இவர் புதிய மாம்பழ வகைகளை உற்பத்தி செய்துள்ளார்.
மாம்பழ மனிதர் உற்பத்தில் உருவான பழங்களில், `லலிமா, பிரதிமா, அருணிமா, நவராத்ரா, சூர்யா, பாகல்புரி பம்பையா’ ஆகிய பழங்கள் பிரபலமானவை. இவர் பிரதமர் நரேந்திர மோடியின் பெரும் ரசிகர். அதனால் பிரதமர் மோடியின் பெயரில் புதிய வகை மாம்பழங்களை உற்பத்தி செய்துள்ளார். ஏற்கெனவே மோடி -1, மோடி-2 ஆகிய வகைகளை அறிமுகப்படுத்தியிருந்த இவர் தற்போது மோடி-3 வகை மாம்பழத்தைப் புதிதாக அறிமுகம் செய்துள்ளார்.

``மோடி -3 வகை மாம்பழங்கள் புளோரிடாவில் இருந்து பெறப்பட்ட இர்வின் மற்றும் சென்சேஷன் வகை மாமப்ழங்களின் உதவியுடன் மற்ற மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட பழங்களில் கிராஃப்டிங் டெக்னாலஜி முறையில் உருவாக்கப்பட்டுள்ளன. எனது வண்ணமயமான பல்வேறு வகையான மாம்பழங்களை பிரபலப்படுத்துவதற்காக நான் யாரிடமிருந்தும் எதுவும் வசூலிக்கவில்லை. மேலும், நான் நீண்ட காலமாக மக்கள் மறந்துவிட்ட மாம்பழங்களை பாதுகாத்து மீண்டும் அதைப் பயிரிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளேன்” என சௌத்ரி தெரிவித்துள்ளார்.