நாட்டு நடப்பு
Published:Updated:

பாரம்பர்ய நெல் ரகங்களின் மருத்துவக் குணங்கள்... ஆய்வுகளைச் சமர்ப்பித்த விஞ்ஞானிகள்!

நிகழ்வில்
பிரீமியம் ஸ்டோரி
News
நிகழ்வில்

நாட்டு நடப்பு

பாரம்பர்ய நெல் மாநாட்டுக் கழகம் மற்றும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய தேசிய பாரம்பர்ய நெல் மாநாடு, மார்ச் 18, 19 ஆகிய இரண்டு நாள்கள் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்றன. இம்மாநாட்டிற்குப் பசுமை விகடன் ஊடக ஆதரவு வழங்கியது. இதில் ஏராளமான விவசாயிகள், வேளாண் கல்லூரி மாணவர்கள், தொழில்முனைவோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.

இம்மாநாட்டில் உரையாற்றிய பாரம்பர்ய நெல் மாநாட்டுக் கழகத்தின் நிறுவன தலைவர் டாக்டர் ரகுநாதன், ‘‘பாரம்பர்ய நெல் ரகங்களில் உள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவக் குணங்கள் குறித்து அறிவியல்பூர்வமான ஆய்வுகள் மேற்கொண்டு நிரூபிப்பதற்காகவே, முதல் முறையாக இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு வேளாண் நிறுவனங்களில் பணியாற்றும் 48 விஞ்ஞானிகள், பாரம்பர்ய நெல் ரகங்களில் நீண்டகாலமாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, அவற்றின் முடிவுகளை இங்கு சமர்ப்பித்துள்ளார்கள். பாரம்பர்ய நெல் ரகங்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கவும் சந்தை வாய்ப்புகள் விரிவடையவும், அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மிகவும் அவசியம். தற்போது மத்திய அரசின் ஒப்புதலோடு, பாரம்பர்ய நெல் கவுன்சில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைமையகமாக, திருவாரூர் மாவட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.

நிகழ்வில்
நிகழ்வில்

மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சி.வி. மெய்யநாதன், ``நாம் பாரம்பரிய நெல் வகைகளை பாதுகாக்க தவறியதன் விளைவாகத்தான் கொரோனா போன்ற உயிர்கொல்லி நோய்களுக்கெல்லாம் ஆளாக நேர்ந்தது. எந்தவகையான நோய்க்கும் எதிராக செயலாற்றக்கூடிய சக்தி நம்முடைய பாரம்பர்ய நெல் ரகங்களுக்கு உண்டு. வெளிநாட்டு விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மூலமாக இது நிரூபணமாகியுள்ளது. இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டிய தேவையும், அவசியமும் தற்போது ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் பாரம்பர்ய நெல் பற்றிய மகத்துவத்தை மக்களிடையே கொண்டு செல்லும் விதமாக நடத்தப்படுகின்ற இந்த பாரம்பர்ய நெல் மாநாடு ஒரு வரலாற்றின் தொடக்கமாகவும், வருங்கால தலைமுறைக்கு வரப்பிரசாதமாகவும் அமையும்” என்றார்.

கலந்துகொண்டோர்
கலந்துகொண்டோர்

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் மு.கிருஷ்ணன், “பாரம்பர்ய நெல் வகைகளை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் நமது பாரம்பர்ய பண்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும் மீட்டெடுக்க வேண்டியதும் அவசியம். காலாற நடந்து... வயிறார உண்டு.. கண்ணார உறங்கி... உளமாற உறவினர்களிடம் பேசி வாழ்ந்தால்.. நமக்கு மருத்துவர்கள் தேவையில்லை, மருந்துகள் தேவையில்லை..! தொடர்ந்து நமது நாட்டினுடைய பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் போற்றி பாதுகாப்போம்” என்றார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மொன்பொலியெப் பல்கலைக்கழகத்தின் கௌரவ விஞ்ஞானி ஜூலியன் ஜீன் மலார்டு ஆடம், புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் செல்வம், புதுக்கோட்டை ஆறுமுகம் பிள்ளை-சீதையம்மாள் கல்லூரியின் நிறுவனரும், இயற்கை விவசாயியுமான ராமேஸ்வரன், தமிழக இயற்கை உழவர் இயக்கத்தின் தலைவர் வரதராஜன் உள்ளிட்ட பலர் உரையாற்றினார்கள். மாநாட்டில் இடம்பெற்ற பாரம்பர்ய நெல் ரகங்கள் மற்றும் உணவு காட்சி, பார்வையாளர்கள் மத்தியில் கவனம் பெற்றது.