நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

வயல்வெளியே பல்கலைக்கழகம்! - இது ஒரு கழனிக் கல்வி!

கழனிக் கல்வி
பிரீமியம் ஸ்டோரி
News
கழனிக் கல்வி

அனுபவம் - வாசகர்கள்

விவசாயிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் பகுதி இது.

கொய்யா விவசாயிகளின் கவனத்துக்கு..!

ழ ஈ தாக்குதலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாகக் கருவாட்டுப் பொறியை ஒரு ஏக்கருக்கு 10 முதல் 20 எண்ணிக்கையில் நான்கு மரங்களுக்கு நடுவே ஒன்று என மரத்தின் பாதி உயரத்தில் கட்டி வைக்கலாம். இதனால் பழங்களில் வரும் காய்ப்புழு, சொத்தை, அழுகல் போன்ற விஷயங்களைத் தடுத்து வருமான இழப்பைக் குறைக்கலாம்.

பூ வைத்த காலத்திலிருந்து ஒவ்வொரு 12 நாளுக்கு ஒரு முறை வேப்ப எண்ணெய்க் கரைசல் அல்லது ஐந்திலைக் கரைசல் அல்லது அக்னி அஸ்திரம் தெளிக்கலாம். இதனால் காய்களில் வரும் பல்வேறு வகையான நோய் மற்றும் பூச்சித் தாக்குதல்களைக் குறைக்கலாம்.

15 நாள்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மி.லி சூடோமோனஸ் அல்லது 10 லிட்டர் தண்ணீருக்கு 25 மி.லி சூடோமோனஸ், 25 மி.லி டிரைக்கோ டெர்மா விரிடி கலந்து இலையின் முன்னும் பின்னும் படுமாறு தெளிக்கலாம். அதே நாளில் தரை வழியாக ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் தேவையான தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். அடர் நடவு, தீவிர அடர் நடவு செய்வோர் அதற்குத் தகுந்தாற்போல இடுபொருள்களையும் பாதுகாப்பு முறைகளையும் கலந்து தருவது நல்லது.

அளவான தண்ணீரைப் பாசனமாகக் காலை 9 மணிக்கு முன்போ, மாலை 5 மணிக்குப் பிறகோ கொடுக்கலாம். உதாரணமாக, 10 லிட்டர் தினசரி கொடுக்க வேண்டிய தண்ணீரைக் காலை 5 லிட்டர், மாலை 5 லிட்டர் எனப் பிரித்துக் கொடுக்க வேண்டும். அந்தப் பாசன நீருடன் பஞ்சகவ்யா, இ.எம் கரைசல், மீன் அமிலம், ஜீவாமிர்தம் போன்ற இயற்கை இடுபொருள்களில் ஏதாவது ஒன்றைக் கலந்து தரைவழி தர வேண்டும்.

தரையில் விழுந்து கிடக்கும் நோய்த்தாக்கம் அடைந்த இலைகளை, நோய்வாய்ப்பட்ட பழங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். காய்ந்த இலைகளை வட்டப்பாத்தி முழுவதும் பரப்பிவிட்டு அல்லது 4 மரங்களுக்கு நடுவே உள்ள வெயில் படும் பகுதிகளில் பரப்பிவிட்டு மூடாக்காக அமைக்கலாம்.

ஒவ்வொரு மரத்தின் வட்டப் பாத்திகளில் நான்கு திசைகளிலும் செவ்வந்திப் பூக்கன்றுகளை நட்டு வைப்பது நூற்புழுத் தாக்கத்திலிருந்து முழுமையாகப் பாதுகாக்கும்.

கொய்யாவுக்குத் தேவையான போரான் சத்தைத் தொடர்ந்து கொடுக்க, மாதம் ஒரு முறை தரை வழியாகவும் தெளிப்பாகவும் எருக்கு இலை கரைசலைப் பயன்படுத்தலாம். 200 லிட்டர் கரைசலை ஒரு மரத்துக்கு 1 லிட்டர் எனப் பிரித்துக் கொடுக்கலாம். தெளிக்கும்போது தயாரிக்கப்பட்ட எருக்குக் கரைசலை அப்படியே டேங்கில் ஊற்றி அடிக்கலாம். இதனால் சரியான வடிவிலான கொய்யா கிடைப்பதுடன் விற்பனைக்கு ஏற்றவாறு பளபளவென இருக்கும்.

கொய்யாவில், நெல்லிக்காய் அளவுள்ள காய்கள்வரை அதிகம் தாக்கும் தேயிலை கொசுவிலிருந்து பாதுகாக்க, கருவாட்டுப் பொறி வைப்பதுடன் வேப்ப எண்ணெய்க் கரைசல் அடிப்பது மிகவும் நல்ல பலன் தரும். பூ, காயாக மாறிய காலத்திலிருந்து எலுமிச்சை அளவுள்ள காயாக மாறும் வரை அடிக்கடி கொடுக்கலாம்.

மேற்கண்ட செயல்களைத் தொடர்ந்து மாத வாரியாக அட்டவணை தயாரித்துச் செயல்படுத்துவதன் மூலம் கொய்யா விளைச்சலில் உற்பத்தியை அதிகரித்து, குறைவில்லாத லாபத்தைப் பெறலாம்.

- ராம்குமார், திருவண்ணாமலை.

கழனிக் கல்வி
கழனிக் கல்வி

நெற்பயிரில் புகையான் தாக்குதல்!

ற்போது நிலவும் காலநிலை காரணமாகக் குறுவைச் சாகுபடியில் புகையான் தாக்குதல் பரவலாகத் தென்படுகிறது. புகையான் தாக்குதல் அறிகுறிகளைத் தெரிந்துகொண்டு அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். புகையான் பூச்சிகள், நெற்பயிரின் அடிப்பாகத்தில் நீர்ப்பரப்பின் மேல் இருந்துகொண்டு சாற்றை உறிஞ்சுவதால் இளம்பயிர்கள் பழுப்பு நிறமாக மாறிக் காய்ந்துவிடும். கதிர் வந்த நிலையில் தாக்குதல் ஏற்பட்டால் மணிகள் பால் பிடிக்காமல் பதராகிவிடும். இதனால் பெருமளவில் மகசூல் இழப்பு ஏற்படும். தாக்குதல் அதிகரிக்கும்போது ஆங்காங்கே வட்டமாகப் பயிர் புகைந்து திட்டு திட்டாகக் காணப்படும்.

கட்டுப்படுத்தும் வழிகள்

தாக்குதலைத் தவிர்க்க, 8 அடிக்கு ஒரு பட்டம் வீதம் பயிரைப் பிரித்துவிட வேண்டும். வயலில் தொடர்ந்து நீர் தேங்குவதைத் தவிர்த்துக் காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர் பாய்ச்ச வேண்டும். புகையான் பூச்சியின் தாக்குதல் தென்பட்டவுடன் வயலில் உள்ள நீரை வடித்து விட வேண்டும். பிறகு, பயிர்களின் தூர் பாகத்தில் சூரிய ஒளி படுமாறு பட்டம் பிரித்துவிட்டு, அதிகம் தழைச்சத்து இடுவதைத் தவிர்த்து, தேவைப்படும்போது மட்டும் தழைச்சத்து இட வேண்டும். விளக்குப் பொறி வைத்துத் தாய் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிப்பதன் மூலம் புகையான் பூச்சிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். புகையான் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கும் ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இந்த முறைகளைக் கடைப்பிடித்து நெற்பயிரில் புகையான் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தி மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம்.

- மகேந்திரன், தூத்துக்குடி.

பேராசிரியர்களே வருக!

ந்த வயல்வெளிப் பல்கலைக்கழகத்தில் விவசாயிகள்தான் பேராசிரியர்கள். நீங்கள் நிலத்தில் கற்ற, பெற்ற கழனிக் கல்வியைப் பகிர்ந்துகொள்ளும் பகுதி இது. உங்களின் அனுபவக் கல்வியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். கடிதம், மின்னஞ்சல், வாட்ஸ்அப் மூலம் அனுபவங்களை அனுப்பலாம்.

தொடர்புக்கு,

வயல்வெளிப் பல்கலைக்கழகம், பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல்: pasumai@vikatan.com வாட்ஸ்அப் எண்: 99400 22128.