மகசூல்
நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

காய்கறிகள், பூக்கள் மாடித்தோட்டம் கொடுக்கும் விளைச்சல்!

மாடித்தோட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
மாடித்தோட்டம்

மாடித்தோட்டம்

"சின்ன வயசிலிருந்தே செடிகள் மேல ஆர்வம் அதிகம். அந்த ஆர்வத் தோட பலன்தான், இப்போ நான் அமைச்சிருக்குற மாடித்தோட்டம்” சிலாகித்துப் பேசுகிறார், சென்னை, ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த அனிதா பாஸ்கர். ஒரு காலைப் பொழுதில் மாடித்தோட்டச் செடிகளைப் பராமரித்துக் கொண்டிருந்த அவரிடம் பேசினோம்.

“நான் ஒரு பேஷன் டிசைனர். அது என் வேலையா இருந்தாலும், மாடித்தோட்டத்து மேல ரொம்ப ஆர்வம் ஆயிடுச்சு. அதனால ஆரம்பத்துல சின்னச் சின்ன செடிகள் வைக்க ஆரம்பிச்சேன். அந்தச் செடிகள்ல கிடைச்ச காய்கறிகள், மலர்கள் கொடுத்த ஊக்கம் இப்ப பழ மரங்கள் வைக்குற வரைக்கும் கொண்டுபோய் விட்டிருச்சு. சின்னதா ஆரம்பிச்ச தோட்டம் இவ்ளோ பெரிய மாடித்தோட்டமா ஆகும்னு நினைக்கல. மூணு வருஷத்துக்கு முன்னாலதான் மாடித்தோட்டம் அமைக்க ஆரம்பிச்சேன். நான் மாடித்தோட்டம் அமைக்குறப்போ, ‘ஆர்கானிக் கார்டன் பவுண்டேஷன்’ குழு அறிமுகமாச்சு. அதுல இருக்குற எல்லோரும் மாடித்தோட்ட ஆர்வலர்கள். அதனால நான் எப்ப ஆலோசனை கேட்டாலும் மறுக்காம சொல்வாங்க. சில நேரங்கள்ல நானும் ஆலோசனை சொல்வேன்.

அனிதா பாஸ்கர்
அனிதா பாஸ்கர்


என் மாடித்தோட்டத்துல கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, பச்சை மிளகாய், முருங்கை, கீரைகள், ரோஜா, செம்பருத்தி, கற்பூரவள்ளி, துளசினு பல செடிகள் இருக்கு. கொய்யா, ஸ்டார் ஃப்ரூட், டிராகன் புரூட், சப்போட்டா மாதிரியான பழ வகைகளும் இருக்கு. தினமும் காலையில என் மாடித் தோட்டத்தைக் கவனிச்சுக்குவேன். நான் வார விடுமுறை நாள்கள்ல காலை, மாலைனு ரெண்டு வேளையும் கவனிச்சுக்குவேன். ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் மட்டும்தான் பராமரிப்பு வேலைகள் இருக்கும். விடுமுறை நாள்கள்ல குடும்பத்தோடு சேர்ந்து வேலை களைச் செய்வோம். செடிகள்ல நோய் தாக்கியிருந்தா, அந்தப் பகுதியை மட்டும் கிள்ளி எடுத்திடுவோம். நிறைய பூச்சிகள் வந்து பாதிப்பு ஏற்படுத்துனா வேப்ப எண்ணெய்க் கரைசல் தெளிப்பேன். 15 நாளைக்கு ஒருமுறை காய்கறிக்கழிவுகளை மட்க வெச்சு உரமாகக் கொடுக்குறேன்” என்ற, அனிதா பாஸ்கர் தனது தோட்டத்தைச் சுற்றிக்காட்டிக்கொண்டே பேச்சைத் தொடர்ந்தார்.

மாடித்தோட்டத்தில்
மாடித்தோட்டத்தில்
மாடித்தோட்டத்தில்
மாடித்தோட்டத்தில்


“மாடித்தோட்டம் அமைக்கத் தனியாக ஓர் இடம் தேவையில்ல. மாடியில் காலியாக உள்ள இடங்கள், படிக்கட்டுகள், மாடிச் சுவர்கள் மற்றும் தொங்கு தொட்டிகள்னு மாடித்தோட்டம் அமைக்க ஏராளமான இடமும் வழியும் இருக்குது. இதனால மொட்டை மாடியோட தளம் வீணாகும்ங்குற கவலை வேணாம். கீழே பாலித்தீன் ஷீட், மரப்பலகைகள் விரிச்சு அதுமேல வைக்கலாம். இது தவிர, பி.வி.சி பைப்புகள், கட்டையாலான பலகைகள்னு பல தீர்வுகள் இருக்கு. நான் கட்டையாலான பலகைகளை வெச்சு அதுமேல தொட்டிகளை வெச்சிருக்கிறேன். முதலில் நான் தேர்வு செஞ்சது வெயில் படும் படியான இடம். அதைத் தேர்வு செஞ்சுட்டுத் தொட்டிகள் அமைக்குறப்போ எல்லாத் தொட்டிகளையும் ஒன்றாக வைக்காமல் காய்கறிகள், பூக்கள், பழச்செடிகள்னு தனியா பிரிச்சு அமைக்கலாம். அப்போதான் மாடித்தோட்டம் பராமரிக்க எளிமையா இருக்கும்’’ என்றவர் தோட்ட பராமரிப்பு பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘என் தோட்டத்துல மாவுப்பூச்சிகள் அதிகமா வருது. அந்த நேரத்துல மட்டும் வேப்ப எண்ணெய், புங்கன் எண்ணெய் கலந்து தெளிப்போம். நான் அதிகமா பூச்சிகளை விரட்டுறதுக்கு உபயோகப்படுத்துறது வேப்ப எண்ணெயும், இஞ்சி பூண்டு கரைசலும்தான். அதைக் கொடுத்தாலே போதும். பூச்சித்தாக்குதல் அதிகமா இருக்காது. செடிகளுக்கு ஊட்டச் சத்துக்காகப் பஞ்சகவ்யா, மோர் கரைசல் கொடுப்பேன்.

மாடித்தோட்டத்தில்
மாடித்தோட்டத்தில்
மாடித்தோட்டத்தில்
மாடித்தோட்டத்தில்



கடைகள்ல கிடைக்கிற பைகள்லேயும், பிளாஸ்டிக் டப்பாக்கள், வாளிகள், தண்ணீர் கேன்கள்னு பல பொருள்களை வெச்சு மாடித்தோட்டம் அமைச்சிருக்கேன். அதுல தேங்காய் நார், மண்புழு உரம், மாட்டு எரு, செம்மண் எல்லாத்தையும் மொத்தமா கலந்து நிரப்பினேன். தொட்டிகள்ல அதிகமான விதைகளை நடாம ஒரு தொட்டியில மூணு விதைகள் இருக்கிற மாதிரி நடவு செஞ்சிருக்கோம். ஒவ்வொரு பைக்கும் ஒரு அடி இடைவெளி விட்டு வெச்சிருக்கேன். மாடித்தோட்ட பைகளுக்குக் கம்மியான அளவு தண்ணீர் கொடுத்தாலே போதுமானது’’ என்றவர் நிறைவாக,

‘‘அவசரக் காலங்களுக்குத் தேவையான மூலிகைகளை வளர்க்குறது இன்னும் நன்மை தரும். மாடித்தோட்டத்தினால் வீடுகள் குளிர்ச்சியடையும். இன்னும் தொட்டிகள் அதிகமா வெச்சு முழுமையான காய்கறிகளை நானே தயாரிக்கணுங்குறதுதான் என்னோட ஆசை” என்றபடி விடைகொடுத்தார் அனிதா பாஸ்கர்.