Published:Updated:

பிப்ரவரி 14: `பசு தழுவுதல் தினம்' விலங்குகள் நல வாரியத்தின் அறிவிப்பு வாபஸ் ஆனது ஏன்?

பிப்ரவரி 14 - பசு - Cow Hug Day
News
பிப்ரவரி 14 - பசு - Cow Hug Day

அதானி, எல்.ஐ.சி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பிபிசி ஆவணப்படம் ஆகியவற்றில் பா.ஜ.க அரசு மீதான குற்றச்சாட்டுகளை பூசி மெழுகவே இந்த மாட்டைக் கட்டிப்பிடிக்கச் சொல்லும் நாடகம். - கார்த்திகேய சிவசேனாபதி

Published:Updated:

பிப்ரவரி 14: `பசு தழுவுதல் தினம்' விலங்குகள் நல வாரியத்தின் அறிவிப்பு வாபஸ் ஆனது ஏன்?

அதானி, எல்.ஐ.சி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பிபிசி ஆவணப்படம் ஆகியவற்றில் பா.ஜ.க அரசு மீதான குற்றச்சாட்டுகளை பூசி மெழுகவே இந்த மாட்டைக் கட்டிப்பிடிக்கச் சொல்லும் நாடகம். - கார்த்திகேய சிவசேனாபதி

பிப்ரவரி 14 - பசு - Cow Hug Day
News
பிப்ரவரி 14 - பசு - Cow Hug Day

பிப்ரவரி 14-ம் தேதியை `மாடுகள் தழுவுதல் தினம்' என இந்திய விலங்குகள் நல வாரியம் அறிவித்திருந்த நிலையில் அது வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. உலக அளவில் இதே நாளில் கொண்டாடப்படும் காதலர் தினத்துக்கு எதிராகவே இந்நாள் அறிவிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டாலும் பசு தழுவுதல் தினத்துக்கான தேவை இருக்கிறதா என பா.ஜ.க மாநில விவசாய அணி பொதுச் செயலாளர் ரவிச்சந்திரனிடம் கேட்டோம்...

ரவிச்சந்திரன்
ரவிச்சந்திரன்

``நன்றி பயிலுதல் என்பது தமிழர்களின் அடிப்படைப் பண்பு. முன்பு நம் ஒவ்வொருவரது வீட்டிலும் பசு மாடுகள் இருந்தன. இன்றைக்கு அவை அருகிவிட்டன. பசு மாடுகள் மூலம் பால் மட்டுமல்லாது பல்வேறு பலன்களை நாம் அடைகிறோம். ரசாயன உரங்களுக்கு மாற்றாக மாட்டின் கழிவுகளைக் கொண்டு இயற்கை உரம் தயாரிக்கிறோம். இப்படியாக நமக்கு நல்லதையே கொடுக்கும் மாட்டுக்கு நன்றி செலுத்துவதில் என்ன தவறு இருக்கிறது. தமிழ்நாட்டில் மாட்டுப்பொங்கல் கொண்டாடினாலும் கூட இன்னொரு நாள் மாட்டைக் கொண்டாடுவதில் தவறொன்றும் இல்லையே. காதலர் தினத்துக்கு எதிராகவே பிப்ரவரி 14-ம் தேதி பசு அணைப்பு தினம் அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். அப்படியெல்லாம் எந்த உள்நோக்கத்துடனும் இத்தினம் அறிவிக்கப்படவில்லை.

பா.ஜ.க ஆட்சியில் எந்த தினமாக இருந்தாலும் அது உள்நோக்கத்துடன் அறிவிக்கப்பட்டதில்லை. கிராமப்புற பொருளாதார வளர்ச்சியில் மாடுகள் 60 சதவிகித பங்காற்றுகின்றன. பால் என்பது இன்றைக்கு மிக முக்கியமான வணிகப் பொருள். பா.ஜ.க அரசு வெறும் தினத்தை மட்டும் அறிவிக்கவில்லை. 1 லட்சம் கிராமங்களில் இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கிறது.

பசு அணைப்பு தினம்
பசு அணைப்பு தினம்

இயற்கை வேளாண்மை சார்ந்த திட்டங்களுக்காக தனியே பட்ஜெட் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு உலக அளவில சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மோடி ஆட்சியின் சாதனை இது. பசு அணைப்பு தினம் என்பது கிராமிய வாழ்வியலின் தவிர்க்கவியலாத அங்கமாக விளங்குகிற பசு மாடுகளுக்கு நன்றி செலுத்தும் நாள்தான். காதலர் தினம் கொண்டாடும்போது பசு அணைப்பு தினம் கொண்டாடுவதில் என்ன தவறு இருக்கிறது? வாபஸ் பெறப்பட்டாலுமே கூட இத்தினம் கொண்டாட வேண்டும் என்பதே என் கருத்து" என்றார் ரவிச்சந்திரன்.

பா.ஜ.க அரசு மீதான குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே இந்தப் பசு தழுவுதல் தினம் என்கிற நாடகத்தை அரங்கேற்றியதாகக் கூறுகிறார் கார்த்திகேய சிவ சேனாதிபதி.

``பா.ஜ.க-வுக்கு மாட்டைப் பற்றியும் அக்கறை கிடையாது, மனிதர்களைப் பற்றியும் அக்கறை கிடையாது. மாட்டின் மூலம் மதவெறியைத் தூண்டி ஆட்சிக்கு வந்தார்கள். மாடு வளர்ப்பைப் பொறுத்தவரை வட இந்தியாவைக் காட்டிலும் தென்னிந்தியா சிறந்து விளங்கியிருக்கிறது. ரிக் வேதத்திலேயே கறுத்த நிறமுடையவர்கள் நல்ல மாட்டினங்களை வைத்திருக்கிறார்கள் என தென்னிந்தியர்களைக் குறிப்பிட்டிருக்கின்றனர். நமது கலாசாரத்தில் மாடு என்பது செல்வம். அது வயதாகிவிட்டால் உணவுக்காகத்தான் பயன்படுத்தப்படும். இதுதான் உணவுச் சங்கிலியின் அம்சம். மாட்டினங்களைப் பாதுகாப்பதற்கும் பொதுவாக மாட்டைப் பாதுகாக்கிறேன் என மாட்டிறைச்சி சாப்பிடுவதை எதிர்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

கார்த்திகேய சிவசேனாபதி
கார்த்திகேய சிவசேனாபதி

மாட்டுப்பொங்கல் என்பது நம் கலாசாரப் பண்டிகை. அக்காலத்தில் மாடு வைத்திருப்பவர்கள்தான் செல்வந்தர்கள். வாழ்வியலோடு பிணைந்திருந்த மாட்டை வணங்கத்தான் மாட்டுப் பொங்கல் எனும் தினம் இருக்கிறது. மாடுகளின் காவலர்கள் என்பதாகக் கூறிக்கொள்ளும் இதே பா.ஜ.க ஆட்சியில் நிர்மலா சீதாராமன் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சராக இருந்தபோது வியட்நாமிலிருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்வதைவிட இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யுங்கள் என சீனாவிடம் கூறினார். கேட்டால் அதை எருமைக்கறி என்று சொல்லி ஏமாற்றுவார்கள்.

`கோமாதா எங்கள் குலமாதா' என்று பேசும் இவர்கள் பாரம்பர்ய இனங்களைக் காக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அரசால் வழங்கப்பட்டு வந்த சினை ஊசியை தனியார் நிறுவனத்தின் வசம் ஒப்படைத்துவிட்டார்கள். இன்று ஒரு சினை ஊசியின் விலை 2,000. ஆக இவர்களுக்கு மாடு மீதெல்லாம் அக்கறை இல்லை.

பசு
பசு

119 கோடி மட்டுமே இயற்கை விவசாயத்துக்கு ஒதுக்கியிருக்கிறார்கள், நூறு நாள் வேலைத்திட்டத்துக்கான பட்ஜெட்டையும் குறைத்திருக்கிறார்கள். விவசாயத்துக்கென எதுவுமே செய்யவில்லை. அதானி, எல்.ஐ.சி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பிபிசி ஆவணப்படம் ஆகியவற்றில் பா.ஜ.க அரசு மீதான குற்றச்சாட்டுகளை பூசி மெழுகவே இந்த மாட்டைக் கட்டிப்பிடிக்கச் சொல்லும் நாடகத்தை அரங்கேற்ற நினைத்தனர். இதற்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பலைகள் எழுந்ததால்தான் அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றிருக்கின்றனர். போக, மேற்சொன்ன பா.ஜ.க ஆட்சி மீதான விமர்சனங்களை மடை மாற்ற முடிந்தது என்பதால், `பசு அணைப்பு தினம்' குறித்த அறிவிப்பு அவர்களுக்கு இலாபகரமாகவே அமைந்தது" என்றார் கார்த்திகேய சிவசேனாதிபதி.