
காத்திருக்கும் கருவிகள்... கைகொடுக்கும் கல்லூரி!
விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பண்ணைக் கருவிகள் மற்றும் மதிப்புக்கூட்டும் கருவிகள் குறித்தும் இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது சிறுதானிய ஐஸ்க்ரீம் தயாரிக்கும் கருவி குறித்துப் பார்ப்போம்.
சிறுதானியத்தில் ஐஸ்க்ரீம் தயாரிக்கும் தொழில்நுட்பத்துக்குக் காப்புரிமை பெற்றுள்ளது, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி. சிறுதானியத்தை மூலப்பொருள்களாகப் பயன்படுத்தி, ஐஸ்க்ரீம் தயாரிப்பதற்கான பயிற்சி களையும், ஆலோசனைகளையும் இக்கல்லூரி வழங்கி வருகிறது.

இதுகுறித்து அறிந்துகொள்ள சென்னையிலிருந்து 27 கி.மீ தொலைவில், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அலமாதி - கொடுவேளியில் இயங்கி வரும் இக்கல்லூரிக்கு நேரில் சென்றோம். நம்மிடம் பேசிய இக்கல்லூரியின் முதல்வர் என்.குமாரவேலு, “பால்வளத் தொழில்நுட்பம், உணவுத் தொழில்நுட்பம், இறைச்சி மற்றும் மீன் பதப்படுத்துதல் தொழில் நுட்பம் சார்ந்த இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி படிப்புகள்... இக்கல்லூரியில் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதோடு, விவசாயிகள், தொழில்முனைவோர்களுக்கு மதிப்புக் கூட்டல் சம்பந்தமாகப் பயிற்சியும் ஆலோசனைகளும் வழங்கி வருகிறோம். ‘தொழில்முனைவோர் ஊக்குவிப்பு மையம்’ (Entrepreneurship Incubation Centre) ஒன்றையும் நடத்தி வருகிறோம்.
ஐ.நா மன்றம் 2023-ம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளதால் சிறுதானிய ஐஸ்க்ரீம் தயாரிப்பு குறித்த தொழில்நுட்பத்தை விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர்களிடம் பரவலாக்கம் செய்யும் நடவடிக்கையில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம். சிறுதானியம் சாகுபடி செய்யும் விவசாயிகள் இத்தொழிலில் ஈடுபடுவதன் மூலம் கூடுதல் லாபம் பார்க்க முடியும்.

பொதுவாக, கடைகளில் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் மாம்பழ ஜூஸுக்கான உற்பத்தி செலவும் என்பது, வெறும் ஒன்றரை ரூபாய்தான். பாட்டில், விற்பனை கமிஷன் போக 7 ரூபாய் லாபம் கிடைக்கிறது. எனவே மதிப்புக்கூட்டல் என்பது இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத அம்சமாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஐஸ்க்ரீம் இன்று அனைவராலும் விரும்பி சாப்பிடக் கூடிய உணவுப் பொருளாக இருப்பதால் அதிக சந்தை வாய்ப்புக் கொண்ட பொருளா கவும் இருந்து வருகிறது. பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஐஸ்க்ரீமை, சத்துமிக்க விளைபொருளில் தயாரிப்பதென்பது மிகவும் அவசியமானது” என்றவர், மதிப்புக்கூட்டல் இயந்திரங்கள் அடங்கிய கூடத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார்.

“1 மணி நேரத்தில் 10 லிட்டர் பாலிலிருந்து பால்கோவா தயாரிக்கும் இயந்திரம், பாலிலிருந்து க்ரீமை பிரித்தெடுத்து நெய் தயாரிக்கும் இயந்திரம், சாக்லேட் தயாரிப்புக்கூடம், 3 மணி நேரத்தில் 30 கிலோ ஊறுகாய் தயாரிப்பதற்கான இயந்திர அமைப்பு, இறைச்சி பதப்படுத்தும் கூடம், பாலில் நூடுல்ஸ் தயாரிக்கும் கூடம், பயறு வகைகளில் தோல் நீக்கும் இயந்திரம் என மதிப்புக்கூட்டல் தொடர்பான பல்வேறு அம்சங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன. ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பொறுப் பாளர்கள் இருக்கிறார்கள்” என்று சொன்ன வர், உணவு மற்றும் பால் பொருள்கள் தொழில்முனைவோர் வழிகாட்டு மையத்தின் பொறுப்பாளரான முனைவர் கற்பூர சுந்தரப் பாண்டியனை நமக்கு அறிமுகப்படுத்தினார்.

சிறுதானிய ஐஸ்க்ரீம் தயாரிப்பு கருவிகள் குறித்து நம்மிடம் விவரித்த கற்பூர சுந்தர பாண்டியன், “சிறுதானிய ஐஸ்க்ரீம் தயாரிப்பதற்கு இங்கே 3 விதமான கருவிகள் இருக்கின்றன. சிறிய அளவில் உற்பத்தி செய்வதற்கு ஏற்ற வகையில்... அதாவது 1 மணி நேரத்தில் 7 லிட்டர் ஐஸ்க்ரீம் தயாரிக்கும் கருவி இரண்டு மாடல்களில் உள்ளன. ஒன்று ஒரே வகையான ஃபிளேவர் கொண்டது. இன்னொன்று 3 விதமான ஃபிளேவர் கொண்டது. கப் ஐஸ்க்ரீமைவிட கோன் ஐஸ் க்ரீம் தயாரிப்பதற்கு இது அதிகமாகப் பயன் படும். ஒரு கோனில் 50 மி.லி ஐஸ்க்ரீம் என்ற கணக்கில் 140 கோன்ஸ் கிடைக்கும். ஒரு கோன் ஐஸ்க்ரீம் 20 ரூபாய் என விற்பனை செய்வதன் மூலம் மொத்தம் 2,800 ரூபாய் வருமானம் கிடைக்கும். சிறுதானியம், வெண்ணெய், பால், சர்க்கரை, ஆள்கூலி உட்பட ஒரு லிட்டர் மூலப்பொருள்கள் கொண்டு ஐஸ்க்ரீம் தயாரிப்பதற்கு 300 ரூபாய் செலவாகும்.

5 லிட்டர் மூலப்பொருள்கள் என்றால், 1,500 ரூபாய் செலவாகும். செலவு போக 1,300 ரூபாய் லாபம் கிடைக்கும். இந்தக் கருவியின் விலை இரண்டரை லட்சம் ரூபாய். ஒரு மணி நேரத்துக்கு 200 லிட்டர் ஐஸ்க்ரீம் தயாரிப்பதற்கான இயந்திர அமைப்பும் இங்குள்ளது. பெரிய அளவில் செய்ய விரும்புபவர்களுக்கு இது உதவும். இதன் விலை 15 லட்சம் ரூபாய். இதற்கு சற்றுக் கூடுதலான இட வசதி தேவைப்படும்’’ என்று சொன்னவர், ஐஸ்க்ரீம் தயார் செய்யும் முறை குறித்து விளக்கினார்.

‘‘முதலில் கேழ்வரகு, கம்பு, சாமை, தினை உள்ளிட்ட சிறுதானியங்களை ஊறவைத்து, பால் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பால் எடுக்கும் முறை ஒவ்வொரு சிறுதானியத் துக்கும் மாறுபடும். சிறுதானிய பால், காய்ச்சிய பசும் பால், சர்க்கரை, வெண்ணெய், நிலைப்படுத்தி ஆகியவற்றைப் பால் சூடுபடுத்தி (Pasteurizer) என்றழைக்கப்படும் அமைப்பில் போட்டு சூடுபடுத்த வேண்டும். இதிலிருந்து வெளியேறும் கலவையை சில்லிங் யூனிட்டுக்கு அனுப்ப வேண்டும். வெப்ப நிலையை 4 டிகிரியாகக் குறைத்து பிறகு, ஏஜிங் யூனிட்டில் குறைந்தது 4 மணி நேரம் வைக்க வேண்டும். அதன் பிறகு, எந்த ஃபிளேவர் தேவையோ, அதைச் சேர்த்து, கடைசியாக இருக்கும் பிரிஷர் அமைப் பிலிருந்து மைனஸ் 7 டிகிரியில் ஐஸ்க்ரீமை வெளியில் எடுத்துக்கொள்ளலாம். 100 மி.லி ஐஸ்க்ரீமில் 50 மி.லி காற்று இருக்கும். ஐஸ் க்ரீமில் காற்றை எந்தளவுக்கு உட்செலுத்த முடியுமோ அந்தளவுக்கு ஐஸ் க்ரீமின் பதமும் தரமும் உயரும். லாபகரமாகவும் இருக்கும். இந்த இயந்திர அமைப்பில் அது நன்றாகவே வருகிறது. அதாவது, ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள மற்ற ஐஸ்க்ரீம் கருவிகளைவிட இதில் 50 சதவிகிதம் கூடுதலாக ஐஸ்க்ரீம் கிடைக்கும்.

100 லிட்டர் மூலப்பொருள்களிலிருந்து 200 லிட்டர் ஐஸ்க்ரீம் கிடைக்கும். ஒரு கப் 100 மி.லி என்ற கணக்கில் 2,000 கப்கள் கிடைக்கும். ஒரு கப் ஐஸ்க்ரீம் 40 ரூபாய் என விற்பனை செய்யலாம். இதன்மூலம் 80,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இந்த முறையில் ஐஸ்க்ரீம் தயாரிக்க, 1 லிட்டருக்கு 300 ரூபாய் வீதம் 200 லிட்டர் ஐஸ்க்ரீம் உற்பத்தி செய்ய 30,000 ரூபாய் செலவாகும். கப், விற்பனை கமிஷன், போக்குவரத்து உள்ளிட்டவைக்கு 10,000 ரூபாய் செலவாகும். ஆக மொத்தம், எல்லாச் செலவுகளும் போக 40,000 ரூபாய் லாபம் கிடைக்கும். அதாவது, வருமானத்தில் 50% லாபம். சிறுதானியத்தில் இருந்து பால் எடுப்பது தொடங்கி, ஐஸ்க்ரீமாக வெளியில் எடுப்பது வரையிலான அனைத்து தொழில்நுட்பங்களையும் இங்கு விரிவாகக் கற்றுத் தருகிறோம்” என்றார்.

நிறைவாகப் பேசிய கல்லூரியின் முதல்வர் குமாரவேலு, “சிறுதானிய ஐஸ்க்ரீம், சாக்லேட் தயாரிப்பு, பால் நூடுல்ஸ் தயாரிப்பு, குல்பி, இனிப்புத்தயிர் (யோகர்ட்), கேரட் பால், பாதாம் பால், தக்காளி/பூண்டு ஊறுகாய் உள்ளிட்ட அனைத்துவிதமான தயாரிப்புக் கான இயந்திர அமைப்புகளும் மிகவும் விலை மதிப்பு மிக்கவை. புதிதாக இந்தத் தொழிலில் ஈடுபட விரும்புபவர்கள் கல்லூரியில் இயங்கும் தொழில்முனைவோர் மையத்தில் உறுப்பினராகாவிட்டால் இங்கே இருக்கும் இயந்திரங்களைக் குறைந்த கட்டணத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கே தயாரித்து வெளியில் எடுத்துச் சென்று விற்பனை செய்யலாம். நீங்கள் தயாரிக்கும் பொருள்களுக்கு நல்ல சந்தை வாய்ப்புகள் கிடைத்த பிறகு தனியாக இயந்திரக் கூடங்களை அமைத்துக் கொள்ளலாம்.
தொழில்நுட்ப ஆலோசனைகள், பயிற்சி கள், இயந்திரக் கூடங்களைப் பயன்படுத்திக் கொள்ளுதல் உள்ளிட்ட அனைத்துக்கும் சேர்த்து ஒரே கட்டணமாக... விவசாயிகள், சுயஉதவிக் குழுவினருக்கு ஆண்டுக்கு 10,000 ரூபாய், தொழில்முனைவோருக்கு 30,000 ரூபாய், நிறுவனங்களுக்கு 50,000 ரூபாய் எனக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று இங்கேயே உணவுப் பொருள்களைப் பரிசோதனை செய்து தரச் சான்றும் வாங்கிக் கொள்ளலாம். உணவுப் பொருள்களில் உள்ள சத்துகள் குறித்த விவரங்களை இங்கு அறிவியல்பூர்வமாக உறுதி செய்துகொள்ளலாம். கல்லூரியின் வளாகத்தில் அங்காடி ஒன்று செயல்படுகிறது. மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களை அதன் மூலமும் விற்பனை செய்யலாம். வெளியில் எடுத்துச் சென்றும் விற்பனை செய்துகொள்ளலாம். எனவே, மதிப்புக்கூட்டல் தொழிலில் ஈடுபட விரும்பு பவர்கள், இக்கல்லூரியை அணுகலாம்” என்று அழைப்பு விடுத்தார்.
சாக்லேட் தயாரிக்கும் கருவிகள், பால் நூடுல்ஸ் தயாரிக்கும் கருவிகள் குறித்து அடுத்த இதழில் பார்க்கலாம்...
தொடர்புக்கு,
முதல்வர், உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி, அலமாதி/கொடுவேளி, திருவள்ளூர் மாவட்டம்.
முனைவர் கற்பூர சுந்தரப் பாண்டியன், செல்போன்: 78459 38847
தொலைபேசி: 044 27680214/15

மதிப்புக்கூட்டலுக்குச் சிறந்த இடம்!
இங்கிருக்கும் கருவிகளைப் பயன்படுத்தி மதிப்புக் கூட்டலில் ஈடுபட்டு வரும் தேவேந்திரனிடம் பேசினோம். “பக்கத்துல உள்ள சூரப்பட்டுதான் என்னோட சொந்த ஊர். நெய், பால்கோவா, வெண்ணெய், பனீர், சிறுதானிய ஐஸ்க்ரீம் தயாரிச்சு விற்பனை செஞ்சிட்டு வர்றேன். கடந்த 2 வருஷமா பால்வள கல்லூரியில இருக்கிற மதிப்புக் கூட்டல் இயந்திரங்களைத்தான் பயன்படுத்துறேன். தொழில்முனைவோர் மையத்துல உறுப்பினரா இருக்கேன். வருஷத்துக்கு 30,000 ரூபாய் கட்டணம் செலுத்துறேன். தினமும் 2- 3 மணி நேரம் இங்குள்ள கருவிகளைப் பயன்படுத்திப் பால்ல இருந்து வெண்ணெய் எடுத்து நெய் காய்ச்சுறேன். அதேபோல பாலை காயவெச்சு பனீர் எடுக்கிறேன். ஆர்டரைப் பொறுத்து ஐஸ்க்ரீம் தயாரிச்சு விற்பனை செய்றேன். நாப்கோ (NABCO) என்ற பிராண்டு பேர்ல விற்பனை செய்றேன். மதிப்புக்கூட்டலுக்கான தொழில்நுட்பங்களை இங்கே ரொம்ப நிதானமாகவும், புரியும்படியாகவும் சொல்லிக் கொடுக்குறாங்க. மதிப்புக்கூட்டல் சம்பந்தமா அடிப்படையான விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கு இது சிறந்த இடம். வளாகத்தில இருக்கும் கடைகள்ல நம்மோட பொருள்களை விற்பனைக்கு வைக்கலாம். செங்குன்றம்-திருவள்ளூர் பிரதான சாலையில இந்தக் கல்லூரி இருக்குறதுனால, போக்குவரத்துக்கும் வசதியா இருக்கு” என்றார்.
தொடர்புக்கு, தேவேந்திரன், செல்போன்: 98400 53789