நாட்டு நடப்பு
மகசூல்
Published:Updated:

அமோக விளைச்சலுக்கு ரோடோ சூடோமோனஸ்... காடை வளர்ப்பில் கணிசமான லாபம்!

கண்காட்சியில் குவிந்த கூட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
கண்காட்சியில் குவிந்த கூட்டம்

கண்காட்சி

பசுமை விகடன் சார்பில் வேளாண் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 6-வது முறையாக ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ 2023’ மாபெரும் வேளாண் கண்காட்சி, திருச்சி கலையரங்கத்தில் ஏப்ரல் 28, 29, 30 ஆகிய மூன்று நாள்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விதைப்பு முதல் அறுவடை வரையிலான பலதரப்பட்ட அதிநவீன வேளாண் கருவிகள், இயற்கை இடுபொருள்கள், நீர்ப்பாசன சாதனங்கள், சோலார் பம்ப் செட்டுகள், பாரம்பர்ய விதைகள், நாற்றுப்பண்ணைகள், வங்கிக் கடன் திட்டங்கள், வீட்டுத்தோட்ட உபகரணங்கள் உட்பட இன்னும் பல்வேறு அம்சங்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றன. தமிழ் நாட்டின் பல மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக் கணக்கான விவசாயிகள் தங்கள் குடும்பத் தினருடன் வருகை புரிந்து மிகுந்த உற்சாகத் துடன் 3 நாள்களும் இக்கண்காட்சியைப் பார்வையிட்டனர். கண்காட்சியின் ஒரு பகுதியாக இயற்கை விவசாயிகள், வல்லுநர்கள் உரையாற்றிய கருத்தரங்கமும் நடைபெற்றது. முதல் நாள் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்துக் கடந்த இதழில் பதிவு செய்திருந்தோம். இரண்டாம் நாள் நிகழ்வுகள் இங்கே இடம்பெறுகின்றன.

கருவிகள்
கருவிகள்

‘லாபகரமான கால்நடை பண்ணை’ என்ற தலைப்பில் உரையாற்றிய தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் பதிவாளர் முனைவர் பா.டென்சிங் ஞானராஜ், “கால்நடை வளர்ப்பில் ஈடுபட விரும்புபவர்கள்... ஒரு வருடத்துக்குத் தேவையான அடர்தீவனம், பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் ஆகியவற்றுக்கான செலவுகளை முன்கூட்டியே கணக்கீடு செய்ய வேண்டும். தாங்கள் வளர்க்க விரும்பும் கால்நடைக்கான விலை மற்றும் சந்தை வாய்ப்புகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்த பிறகு, அதில் இறங்கினால்தான் லாபத்தைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள முடியும். ஆடு, மாடு, கோழி, வாத்து, வான்கோழி, வெண்பன்றி எனப் பல வகையான கால்நடைகளையும் வளர்க்கலாம்.

வெண்பன்றி வளர்ப்பு...
குறைந்த முதலீட்டில் அதிக வருமானம்!

இன்றைய சூழலில், தமிழகம் மட்டுமல்லாது உலக அளவிலும்கூட, வெண்பன்றி வளர்ப்பு, பெரும் வருமானம் கொடுக்கும் தொழிலாக மாறியுள்ளது. குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் ஈட்ட முடியும். 10 பெண் பன்றி களுக்கு ஒரு ஆண் பன்றி என்ற கணக்கில் வளர்க்க வேண்டும். ஒரு பன்றி 10 குட்டிகளை ஈனும். அவற்றை 6 மாதங்கள் வளர்த்தால் போதும்... ஒரு பன்றி 70 கிலோ வரை எடை கொண்டிருக்கும். அதில் வளர்ப்புக்குத் தேவையான பன்றிகளை மட்டும் வைத்துக் கொண்டு, மற்ற பன்றிகளை விற்றுவிடலாம். வெண்பன்றி வளர்ப்பில் அதிகம் சிரமப்பட வேண்டிய அவசியமில்லை.

கண்காட்சியில் மாணவர்கள்
கண்காட்சியில் மாணவர்கள்

காடைக்கு அதிக தேவை...

வெண்பன்றி வளர்ப்பு போலவே, தற்போது காடை வளர்ப்பும் நல்ல வருமானம் கொடுக்கும் தொழிலாக உள்ளது. இதற்கான தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. உதாரணமாக, சென்னையில் உள்ள அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே வாரத்துக்கு ஒரு லட்சம் காடைகள் தேவைப்படுகின்றன. ஆனால், அந்த அளவுக்கு வரத்து இல்லை. 50,000 காடைகள்தான் விற்பனைக்கு வருகின்றன. நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் பெரிய உணவகங்களிலும்கூட காடைகளின் தேவை அதிகமாகவே உள்ளது. நாட்டுக்கோழி வளர்ப்பு போலவே காடைகளையும் எளிதாக வளர்க்கலாம். காடைகளை 28 நாள்களில் வளர்த்து விற்பனைக்கு அனுப்பலாம்’’ என்று சொன்னவர், ஆடு, நாட்டுக்கோழி, வாத்து, வான்கோழி வளர்ப்பு குறித்தும் பேசினார்.

பார்வையிடும் மாணவர்கள்
பார்வையிடும் மாணவர்கள்

‘‘நம்ம ஊர் நாட்டு ஆடுகளை, கொட்டில் முறையில் வளர்த்தால், ஆட்டின் எடை அதிகரிக்காது. நாட்டு ஆடுகளை மேய்ச்சல் முறையில்தான் வளர்க்க வேண்டும். அப்போதுதான் நன்றாக வளர்ந்து, எடை அதிகரிக்கும். மற்ற ரக ஆடுகளைக் கொட்டில் முறையில் வளர்க்கலாம். நாட்டுக்கோழி வளர்ப்பை பொறுத்தவரை... அதில் இறங்கும்போதே, கறிக்காக வளர்க்கிறோமா, முட்டைக்காக வளர்க்கிறோமா என முன்கூட்டியே தீர்மானித்து, அதற்கேற்ப திட்டமிடுவது மிகவும் அவசியம்.

வாத்து மற்றும் வான்கோழி வளர்ப்பு...

தமிழகத்தில் கரூர் மற்றும் நாமக்கல் பகுதிகளில் மட்டுமே வாத்து வளர்ப்பு தொழில் பெருமளவில் நடைபெற்று வருகிறது. வாத்துக்கறிக்கும், வாத்து முட்டைக்கும் தேவை அதிகமாகவே இருக்கிறது. தமிழ்நாட்டின் மற்ற பகுதி களில் உள்ளவர்களும்கூட, வாத்து வளர்ப்பில் ஈடுபட்டு, நிச்சயமாக லாபம் பார்க்க முடியும். காரணம் அசைவ உணவகங்களில் வாத்துக் கறிக்கான தேவை அதிகம் உள்ளது. முன்பெல்லாம் வான்கோழி வளர்ப்பு மிகவும் பிரபலமாக இருந்தது. நிறைய பேர் அதில் ஈடுபட் டார்கள். சமீபகாலமாக வான்கோழி வளர்ப்பில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து விட்டது. இன்றைக்கும் வான்கோழிக்கான தேவை உள்ளது. வான்கோழி வளர்ப்பில் சில வழிமுறைகளைப் பின்பற்றினால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

கண்காட்சியில் குவிந்த கூட்டம்
கண்காட்சியில் குவிந்த கூட்டம்

பொதுவாக, கால்நடை வளர்ப்பில் ஈடுபட விரும்புபவர்கள்... முதல்கட்டமாக, அது தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டு அத்தொழிலில் இறங்குவது நல்லது. தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் கால்நடை பல்கலைக்கழகத்தின் பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. ஆடு, மாடு, கோழி, காடை, வாத்து, வெண்பன்றி உள்ளிட்ட அனைத்துக்கும் ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கால்நடை வளர்ப்பில் ஈடுபட விரும்புவோர் அந்த மையங்களை அணுகலாம்” எனத் தெரிவித்தார்.

கருவிகள் குறித்து கேட்கும் மாணவர்கள்
கருவிகள் குறித்து கேட்கும் மாணவர்கள்

‘விவசாயத்தில் தொழில்நுட்பங்களின் தேவை’ என்ற தலைப்பில் பேசிய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர், முனைவர் ப.வெங்கடாசலம், “ஒரு தொழிலில், அந்தந்தக் காலகட்டத்துக்கு ஏற்ப தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, அத்தொழிலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதற்கான வளமும் திறமையும் இருந்தால்தான், அந்தத் தொழில் சிறப்பாக நடக்கும். இது விவசாயத்துக்கும் பொருந்தும். இன்றைய நவீன உலகில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினால்தான் விவசாயத்தை மேம்படுத்த முடியும். விவசாயம் மேம்பாடு அடைந்தால்தான், அப்பகுதியில் பொருளா தாரம் வளர்ச்சி அடையும்.

உதாரணமாக, கோயம்புத்தூர் வளர்ச்சி அடைந்ததற்கு முக்கியக் காரணம், அங்குள்ள விவசாயிகள்தான். பருத்தியை அதிக அளவில் உற்பத்தி செய்தனர். அதை நூலாக மாற்ற நூற்பாலைகள் வந்தன. அதைத் தொடர்ந்து ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் வந்தன. வெளிநாடுகளுக்குத் துணி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. இன்று, கோயம்புத்தூர் மிகப்பெரிய தொழில் நகரமாக மாறியுள்ளது’’ எனத் தெரிவித்தார்.

கருவிகளைப் பார்வையிடும் மாணவர்கள்
கருவிகளைப் பார்வையிடும் மாணவர்கள்

ஆடாதொடை...
ஒவ்வொரு வீட்டிலும் அவசியம்!

‘நலம் தரும் நல்மருந்துகளும் நல்வாழ்வியலுக் கான வழிமுறைகளும்’ என்ற தலைப்பில் உரையாற்றிய, சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு, “காலையில் எழுந்திருப்பதிலிருந்து, இரவு படுக்கைக்குச் செல்லும் வரையிலும் நம்முடைய வாழ்க்கை முறையும் உணவு முறையும் முற்றிலுமாக மாறிவிட்டது. சித்த மருத்துவம் கூறும் அடிப்படை விஷயங்களில் ஒன்று, ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டுமே சாப்பிடுவது. ஆனால், இன்று பலர் 5 வேளை சாப்பிடுகின்றனர். உழைப்புக் கேற்ற உணவு முறைதான் சரியானது. இன்று நாம் உணவில் பால் மற்றும் தயிர் எடுத்துக் கொள்வது குறைந்துவிட்டது. ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய மிக முக்கியமான மூலிகை, ஆடாதொடை. பல நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக ஆடாதொடை விளங்குகிறது. சளி, இருமல் உள்ளிட்ட நுரையீரல் தொடர்பான பிரச்னைகளுக்கும், இதயம் சம்பந்தமான நோய்களுக்கும் ஆடாதொடை கஷாயம் குடிப்பது நல்லது. ஒரு கைப்பிடி ஆடாதொடையை எடுத்து, அரை லிட்டர் தண்ணீர் போட்டு அதைக் கால் லிட்டராக வரும் வரை காய்ச்சி குடிக்க வேண்டும். சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்னைகளுக்கு மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களும்கூட இந்தக் கஷாயத்தைக் குடிக்கலாம்.

இன்றைக்குப் பெரும்பாலானோர் ரத்த அழுத்தப் பாதிப்பால் சிரமப்படுகிறார்கள். ஆடாதொடை இலையை நிழலில் உலர்த்தி, நன்றாகப் பொடி செய்துகொள்ள வேண்டும். அதை, தினமும் காலையும் மாலையும் 1/2 டீஸ்பூனிலிருந்து 1 டீஸ்பூன் வரை சாப்பிட்டு வந்தால், மூன்றே மாதத்தில் நிச்சயமாக ரத்த அழுத்தம் குணமாகிவிடும்.

அரங்குகளில்
அரங்குகளில்


துக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுபவர்கள், வாரத்துக்கு ஒரு முறை சீரகம் கலந்த நல்லெண்ணெயை பூசி குளித்தால், தூக்கம் நன்றாக வரும். உடலின் சூடு தணிந்தாலே, தூக்கம் நன்றாக வரும். இயன்றவரை, உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

‘இயற்கை வேளாண்மையில் வெற்றி பெற்ற பாடம்’ என்ற தலைப்பில் பேசிய முன்னோடி விவசாயி ‘புளியங்குடி’ அந்தோணிசாமி, “நான், ரசாயன விவசாயம் செய்துகொண்டிருந்தபோது 55 லட்சம் ரூபாய் கடனாளியாக இருந்தேன். இயற்கை விவசாயம்தான் அதிலிருந்து என்னை மீட்டது. இன்றைக்குச் செல்வ செழிப்போடு இருக்கிறேன். 400 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். நெல், கரும்பு, எலுமிச்சை, மரப்பயிர்கள் உள்ளன. என் அனுபவத்தில் பயிருக்கு சரியான இடைவெளி, சரியான அளவு நீர், மண்வளம்... இவற்றை முறையாகப் பின்பற்றியதால்தான் என்னால் இன்று வரையிலும் அதிக மகசூல் தொடர்ச்சியாக எடுக்க முடிகிறது. என் தோட்டத்தின் மண்ணை வளப்படுத்த, மாட்டுச் சாணத்தை மட்டுமே உரமாகப் பயன்படுத்துகிறேன்’’ எனத் தெரிவித்தவர், வீட்டுத்தோட்டத்தின் அவசியம் குறித்தும் பேசினார். “கியூபா நாட்டில் வசிக்கும் அனைவரும் தங்கள் வீடுகளில் மாடித் தோட்டம் அமைக்க வேண்டும் எனவும் இல்லையென்றால், ரேஷன் கார்டு இல்லை எனவும் அந்நாட்டு அதிபர் பிடல் காஸ்ட்ரோ அறிவித்தார். அது போல் நம் நாட்டிலும் அறிவிக்க வேண்டும். தற்சார்பு வாழ்க்கைக்கு மாடித்தோட்டம் மிகவும் அவசியம்’’ எனத் தெரிவித்தார்.

டென்சிங் ஞானராஜ், ‘புளியங்குடி’ அந்தோணிசாமி,  மைக்கேல் செயராசு, உதயகுமார்
டென்சிங் ஞானராஜ், ‘புளியங்குடி’ அந்தோணிசாமி, மைக்கேல் செயராசு, உதயகுமார்

ஒளிச்சேர்க்கையை அதிகப்படுத்தும் பாக்டீரியா...

‘லாபத்தை அள்ளித்தரும் அசத்தலான வெளிநாட்டுத் தொழில்நுட்பங்கள்’ என்ற தலைப்பில் பேசிய முனைவர் அ.உதயகுமார், “மகசூல் அதிகரிக்க வேண்டுமானால் பயிர்களில் ஒளிச்சேர்க்கை சரியாக நடக்க வேண்டும். இந்த ஒளிச்சேர்க்கையை அதிகரிக்க ரோடோ சூடோமோனாஸ் என்ற ஒரு பாக்டீரியா உள்ளது. இதைப் பாசனநீரில் கலந்துவிடலாம். இதனால் பயிர்களில் ஒளிச்சேர்க்கை நன்றாக நடைபெறும். இவற்றின் மூலமாக விளைச்சல் அதிகரித்து, அதிகப்படியான மகசூல் பெற முடியும். விவசாய நிலங்களில் ரசாயன பாஸ்பேட் உரங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ராக் பாஸ்பேட் என்ற இயற்கை உரத்தைப் பயன்படுத்தலாம். இது பயிர்களின் வேர் களுக்குச் சென்று வளர்ச்சியை அதிகப் படுத்தும். ரசாயன பாஸ்பேட்டைவிட சற்று, மெதுவாக இது வேலை செய்யத் தொடங்கும். ஆனால், போகப்போக பயிர்களின் வளர்ச்சி அதிகரித்து, விளைச்சல் அமோகமாக இருக்கும்’’ என ஆலோசனை வழங்கினார்.

மூன்றாம் நாள் நிகழ்வுகள் அடுத்த இதழில் இடம்பெறும்.

பயனுள்ள தகவல்கள் நிறைய கிடைச்சது...

இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்களில் பங்குபெற்ற சென்னையைச் சேர்ந்த சம்பத்குமார், “நான், செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கத்துல விவசாயம் செஞ்சுகிட்டு இருக்கேன். இந்தக் கண்காட்சிக்காகக் குடும்பத்தோடு வந்து திருச்சியில் ரூம் எடுத்து தங்கி இருந்து, கண்காட்சியிலயும் கருத்தரங்கத்துலயும் கலந்துகிட்டு இருக்கோம். இயற்கை விவசாயத்துல அதிக அனுபவம் கொண்ட பலரை இங்க சந்திக்க முடிஞ்சது. பயனுள்ள தகவல்கள் நிறைய கிடைச்சது. என்னோட பண்ணைக்குத் தேவையான சில கருவிகளும் இங்க கிடைச்சது’’ என்றார்.

சம்பத்குமார்,  பேபி செந்தில் அரசு
சம்பத்குமார், பேபி செந்தில் அரசு

காடை வளர்க்கப் போறேன்....

திருச்சியைச் சேர்ந்த பேபி செந்தில் அரசு, “கருத்தரங்கம் ரொம்பவே பயனுள்ளதா இருந்துச்சு. மூலிகை மருத்துவம் பத்தி நிறைய தெரிஞ்சுக்க முடிஞ்சுது. காடை வளர்ப்பு பத்தி பேசின, கால்நடை பல்கலைக்கழகப் பதிவாளர் டென்சிங் ஞானராஜா, அது சம்பந்தமா நிறைய விஷயங்கள் சொன்னார். கூடிய சீக்கிரம், காடை வளர்ப்புல இறங்கலாம்ங்கற யோசனை வந்திருக்கு’’ என்றார்.