
சிறிய நுட்பம்... பெரிய லாபம்! - வழிகாட்டும் வெளிநாட்டு விவசாயம்! -2
மிகச் சுலபமான, சிறிய வேளாண் தொழில்நுட்பங்கள் எப்படி மிகப்பெரிய மாற்றங்களையும் லாபத்தையும் கொடுக்கின்றன என்பதை உதாரணங்களுடன் சொல்லும் தொடர் இது. உலகின் பல்வேறு நாடுகளில் வெற்றிகரமான விவசாயத்துக்குப் பயன்படுத்தும் பல தொழில்நுட்பங்களைப் பற்றி இந்தத் தொடரில் பார்ப்போம்.
கடந்த அத்தியாயத்தில் தக்காளியைத் தாக்கும் பாக்டீரியா வாடல் நோய் பற்றிச் சொல்லி இருந்தேன். அந்த நோய்த் தாக்குதலைத் தடுக்க ‘ஒட்டுக்கட்டுதல்’ ஒன்றுதான் வழி என்பதையும் பார்த்தோம். அந்த வகையில் தக்காளி நாற்றில் ஒட்டுக்கட்டும் முறைபற்றிப் பார்க்கலாம் வாங்க...
பாரம்பர்ய பயிர் இனப்பெருக்க முறை களைப் பயன்படுத்தி, நமக்குத் தேவையான நற்பண்புகளை மற்ற சிற்றினங்களிலிருந்து, நாம் பயிரிடும் தக்காளிக்குக் கொண்டு வர இயலும். அப்படி உருவாக்கப்படும் புதிய ரகங்கள்தான் வேளாண் பல்கலைக்கழகங் களிலிருந்தும், மற்ற ஆய்வு நிறுவனங் களிலிருந்தும் நமது பயன்பாட்டுக்காக அவ்வப்போது வெளியிடப் படுகின்றன.
இதுபோன்ற ரகங்கள், பல்வேறு வைரஸ் நோய்களுக்கு எதிராகவும் தக்காளியில் வெளியிடப்பட்டு, மகசூலை அதிகரித்திருக்கின்றன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, எந்தவொரு தக்காளி சிற்றினத்திலும் பாக்டீரியா வாடல் நோய்க்கு எதிர்ப்புச்சக்தி அவ்வளவாக இல்லை. எனவே, பாக்டீரியா வாடல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்ட தக்காளி ரகங்களை உருவாக்குவது என்பது அரிதிலும் அரிதாகவே இருக்கிறது.

இந்த இடத்தில் ஆபத்பாந்தவனாகக் கைகொடுத்தது கத்திரிக்காய். ஆம், ஒருசில கத்திரிக்காய் ரகங்களில் பாக்டீரியா வாடல் நோய்க்கு அபரிமிதமான எதிர்ப்புச் சக்தி இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், பாரம்பர்ய பயிர் இனப்பெருக்க முறைகளைப் பயன்படுத்தி, கத்திரிக்காயிலிருந்து தக்காளிக்கு இந்த நோய் எதிர்ப்புச்சக்தியை மாற்றம் செய்ய முடியாது. இந்த இடத்தில் உதித்த யோசனைதான், ‘ஒட்டுக்கட்டுதல்’. நோய் எதிர்ப்புச்சக்தி மிகுந்த கத்திரி ரகங்களின் வேர்ப்பகுதியை, நமக்கு வேண்டிய தக்காளி ரகங்களின் தண்டுப்பகுதியுடன் இணைத்துவிடுவது. மிக எளிதாகத் தோன்றும் இந்தத் தொழில்நுட்பம், செய்வதற்கும் எளிதுதான். ஆனால், மிகுந்த கவனமும் பயிற்சியும் தேவை. ஏனென்றால், அது பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தைக்கு இதயமாற்று அறுவைசிகிச்சை செய்வதைப் போன்ற செயல். முறையான பயிற்சி இல்லையென்றால், ஒட்டுக்கட்டப்பட்ட நாற்றுகள் இறந்துவிடும்.
இப்போது ஒட்டுக்கட்டும் வழிமுறைகளைப் பார்ப்போம். இதற்குத் தேவையான பொருள்கள்: கத்திரி மற்றும் தக்காளி நாற்றுகள், சிறிய பிளேடு போன்ற கத்தி, சிலிக்கான் டியூப் மற்றும் சிறிய குடில். முதலில் குடில் அமைப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒட்டுக்கட்டப்பட்ட நாற்றுகள் தப்பிப் பிழைப்பது இந்தக் குடிலின் நல்ல கட்டமைப்பைப் பொறுத்ததுதான். இது அறுவை சிகிச்சை முடிந்து, அனுமதிக்கப்பட்டிருக்கும் ஐ.சி.யூக்கு ஒப்பானது. இந்தக் குடிலை வெறும் மூங்கில் மற்றும் பாலித்தீன் விரிப்புகளைக் கொண்டு அமைக்கலாம். நீண்டகாலம் நிலைக்கும்படியான, வணிக ரீதியிலான குடில்களை இரும்பு அல்லது பி.வி.சி குழாய்களைக் கொண்டும் அமைக்கலாம். இக்குடில்களை அமைக்கும் முறையைப் பின்வரும் காணொளி லிங்க் (https://www.youtube.com/watch?v=8-ghBWKulI4) மூலம் தெரிந்துகொள்ளலாம். அடுத்தது நமது சைக்கிள் வால்வு டியூப் அளவிலான சிலிக்கான் டியூப். அதை ஒரு சென்டிமீட்டர் நீளத்தில், இருபுறமும் 30 டிகிரி சாய்வாக வெட்டிக்கொள்ள வேண்டும். பாக்டீரிய வாடல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்ட கத்திரி மற்றும் நாம் பயிரிட வேண்டிய தக்காளி ரகங்களின் நாற்றுகளை உருவாக்க வேண்டும்.

இந்த நாற்றுகள் மூன்று வாரக் காலத்தை எட்டும்போது, அவை ஒட்டுக்கட்ட தகுந்த நிலையை அடைந்துவிடும். முதலில் கத்திரி நாற்றுகளின் தண்டுப்பகுதியின் நடுவில், பிளேட் மூலம், 30 டிகிரி சாய்வாக வெட்டிவிட வேண்டும். அதேபோலத் தக்காளி நாற்று களின் தண்டுப்பகுதியின் நடுவில் 30 டிகிரி சாய்வில் வெட்டி, வெட்டப்பட்ட மேல்பகுதியை எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது, வெட்டுப்பட்ட தக்காளி நாற்றைச் சிலிக்கான் டியூபின் ஒருபுறத்தில் நுழைக்க வேண்டும். அந்த டியூபின் மறுபுறத்தை வெட்டப்பட்ட கத்திரி நாற்றின் மேற்புறத்தில் சொருகிவிட வேண்டும். ஆக டியூபின் உட்புறத்தில், கத்திரியின் வெட்டுப்பகுதியும் தக்காளியின் வெட்டுப்பகுதியும் ஒன்றை யொன்று தழுவிக் கொண்டிருக்கும்.
ஒட்டுக்கட்டிய நாற்றுகளைக் குடில்களுக்குள் வைத்து, குறைந்த ஒளியிலும் அதிக ஈரப்பதத்திலும் (குறைந்தபட்சம் 90 சதவிகிதம் இருப்பது அவசியம்) பராமரிக்க வேண்டும். சிறிய அளவு குடிலாக இருந்தால், நாற்றுகளை வைப்பதற்கு முதல்நாள் ஒரு கைத்தெளிப் பானைக் கொண்டு, நீரை அதன் உட்புறத்தில் தெளிக்க வேண்டும். நாற்றுகளை வைக்கும் நாள், ஒன்றிரண்டு பாத்திரங்களில் நீர் நிரப்பிக் குடிலின் உட்புறத்தில் தரையில் வைத்து விட வேண்டும். பெரிய குடில்களாக இருந்தால், ஒருசில தொட்டிகளில் நீர் நிரப்பி உட்புறமாக வைக்க வேண்டும். குடிலின் உட்புறச் சுவர்களில், தெளிப்பான்களின் மூலம் நீர் தெளிப்பதாலும், ஈரப்பதத்தைப் பராமரிக்கலாம்.
இந்தக் குடில்களுக்குள் ஒட்டுக் கட்டப்பட்ட நாற்றுகளை, உயரமான மரப்பலகைகளின் மீதோ, மூங்கில் அல்லது குழாய் களைக் கொண்டு அமைக்கப் பட்ட படுக்கைகளின் மீதோ வைத்துப் பராமரிக்க வேண்டும்.
‘‘ஒட்டுக்கட்டப்பட்ட தக்காளி நோய் எதிர்ப்பு, விளைச்சல் என அனைத்து வகையிலும் விவசாயிகளுக்கு நன்மை அளிக்கக்கூடிய ஓர் உயரிய தொழில்நுட்பம்.’’
இப்படி ஒருவாரம் பராமரித்தால், கத்திரியும் தக்காளியும் இணைந்து, ஒருங்கிணைந்த ஒட்டுத்தக்காளி நாற்று உருவாகிவிடும். இந்த நாற்றை வயலில் நடவு செய்தால், பக்கத்தில்கூட வராது பாக்டீரிய வாடல் நோய். இந்த ஒட்டுக்கட்டும் வழிமுறையைப் பின்வரும் காணொளி லிங்க்கில் (https://avrdc.org/how-to-graft-tomato-and-eggplant-tube-splice-method/) செயல்விளக்கமாகக் காணலாம். இந்தச் சிலிக்கான் டியூப் முறை மட்டுமல்லாமல், கிளிப் பயன் படுத்தும் ஆப்புமுறை ஒட்டுக் கட்டுதலும் இப்போது பயன் பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது.
இந்த இடத்தில் முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எல்லாக் கத்திரி ரகங்களிலும் பாக்டீரிய வாடல் நோய்க்கான எதிர்ப்புத்திறன் இருக்காது. ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட கத்திரி ரகங்களையே ஒட்டுக்கட்ட எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது சர்வதேச காய்கறி ஆராய்ச்சி மையத்தின் விதை வங்கியில் இருக்கும் VI041809, VI041943, VI041945, VI041976, VI041979, VI041984, மற்றும் VI041996 ஆகிய கத்திரி ரகங்கள் தக்காளியில் ஒட்டுக்கட்ட ஏற்றவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. இதில் VI041809 மேகாலயாவிலிருந்தும், VI041976 மேற்கு வங்கத்திலிருந்தும், VI041979, VI041984 கேரளத்திலிருந்தும் சேகரிக்கப்பட்டவை. எனவே தக்காளியில் ஒட்டுக்கட்ட ஏதுவான, பாக்டீரிய வாடல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் மிகுந்த கத்திரி ரகங்கள் இந்தியாவில் நிறைய இருப்பது தெரிய வருகிறது.

உதாரணத்திற்கு, கேரள வேளாண் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள சூர்யா என்ற கத்திரி ரகம் தக்காளியில் ஒட்டுக்கட்ட ஏற்றது என கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இது போன்ற ரகங்கள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்திலும், பெங்களூரில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்திலும் இருக்கலாம். விவசாயிகள் பல்கலைக் கழகத்தை அல்லது இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தைத் தொடர்புகொண்டு மேலதிக விவரங்களைப் பெறலாம்.
இப்போது ஒருசில சுண்டைக்காய் ரகங்களிலும் பாக்டீரிய வாடல் நோய்க்கான எதிர்ப் புத்திறன் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அவற்றையும் ஒட்டுக்கட்ட பயன்படுத்தலாம்.
இப்படிக் கத்திரிச்செடியின் வேர்ப் பகுதியுடன் ஒட்டுக்கட்டப்பட்ட தக்காளிச் செடியில் தக்காளி காய்க்குமா, இல்லை கத்திரி காய்க்குமா என்று ஒரு சந்தேகம் எழலாம். நிச்சயமாக, தக்காளிதான் காய்க்கும். தண்டுப்பகுதியில் இருக்கும் செடிதான் மேலும் இலைகளையும், கிளைகளையும் உருவாக்கிப் பெரிதாகும். எனவே இது தக்காளிச்செடியாகவே வளர்ந்து, தக்காளிப் பழங்களையே கொடுக்கும். அப்படிக் காய்க்கும் தக்காளிப் பழங்கள், ஒட்டுக்கட்டாத செடியில் காய்க்கும் தக்காளிப் பழங்களைப்போல, அளவு, நிறம் மற்றும் சுவையில் ஒத்திருக்குமா என்ற ஐயம் ஏற்படுவதும் இயற்கையே. ஒட்டுக்கட்டிய தக்காளிச் செடியில் காய்க்கும் பழங்கள் எவ்வித மாறுபட்ட குணாதிசயங்களையும் கொண்டிருக்காது.

சொல்லப்போனால் அவற்றின் காய்ப்புத்திறனும் விளைச்சலும், அறுவடைக் காலமும் மேம்பட்டே இருக்கும். தக்காளியில் உள்ள சத்துகள் அதிகமாகுமே தவிரக் குறையாது. எனவே, ஒட்டுக்கட்டப்பட்ட தக்காளி நோய் எதிர்ப்பு, விளைச்சல் என அனைத்து வகையிலும் விவசாயிகளுக்கு நன்மை அளிக்கக்கூடிய ஓர் உயரிய தொழில்நுட்பம் என்பது, சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
தர்பூசணி மற்றும் தக்காளியில் ஆரம்பித்த இந்தப் பயணம், முலாம்பழம், கத்திரி, வெள்ளரி, மிளகாய் என விரிவு படுத்தப்பட்டுள்ளது. அதேபோல பாக்டீரிய வாடல் நோயில் ஆரம்பித்த இதன் பயணம், பூஞ்சை வாடல் நோய்கள், வேர்முடிச்சு நூற்புழுக்கள், வறட்சி, வெப்பம் மற்றும் வெள்ளம் எனப் பலவற்றையும் தாங்கி மீண்டு வருதல் என விரிந்துள்ளது.
இந்தத் தொழில்நுட்பம் உருவான ஜப்பானில் இன்றைக்கு 90,000 ஏக்கரிலும், கொரியாவில் 95,000 ஏக்கரிலும் ஒட்டுக்கட்டிய நாற்றுகளே பயிரிடப்படுகின்றன. இந்த இடத்தில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். இந்த நாடுகளில் பசுமைக் குடில்களிலும், வலைக் குடில்களிலும் பயிரிடப்படும் பயிர்களின் எண்ணிக்கை அதிகம். அதனால் பயிர்ச்சுழற்சி அதிகம் இருக்காது. பயிர்ச்சுழற்சிமுறை குறைவாகப் பின்பற்றப் படும்போது, பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல் இயற்கையாகவே அதிகம் இருக்கும். அந்த விவசாய முறைக்கு ஒட்டுக்கட்டுதல் ஒரு வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது. எனவே, இவ்விரண்டு நாடுகளிலும் ஒரு வருடத்தில் உற்பத்தி செய்யப்படும் ஒட்டுக்கட்டப்பட்ட நாற்றுகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 150 கோடி.
இத்தனை கோடி நாற்றுகளை எப்படி ஒட்டுக்கட்டுவது? முறையாகப் பயிற்சி பெற்ற ஆட்கள், ஒரு நாளைக்குச் சிலநூறு நாற்றுகளையே ஒட்டுக்கட்ட இயலும். வேலை ஆட்கள் அதிகம் கிடைக்கும் வளரும் நாடுகளில் இது ஒரு பிரச்னையே இல்லை. ஆனால், ஜப்பான் மற்றும் கொரியா போன்ற ஆள் பற்றாக்குறை உள்ள நாடுகளில், இதற்கு வேறு தீர்வு வேண்டுமல்லவா?
எனவே, இதையும் அந்நாடுகள் எந்திரமயமாக்கி உள்ளன. கிழக்காசியாவில் உருவான இந்தத் தொழில்நுட்பம், இன்றைக்கு ஆசியாவின் மற்ற நாடுகளுக்கும், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள மேலை நாடுகளுக்கும் பரவியுள்ளது. அதிலும் வியட்நாமில் இது தக்காளி உற்பத்தியில் ஒரு மிகப்பெரும் புரட்சியையே உருவாக்கி இருக்கிறது. அதைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன்.
- பெருகும்

ஒட்டுக்கட்டுதல் இயற்கைக்கு எதிரானதா?
தக்காளியைக் கத்திரியுடன் ஒட்டுக்கட்டுவது ஏற்புடையதா, இது இயற்கைக்கு எதிரானதா? போன்ற கேள்விகள் எழலாம். அதற்கான விடை, ‘இல்லை’ என்பதுதான். ஏனென்றால், இது ஒன்றும் புதுமையான நுட்பம் கிடையாது. தொன்றுதொட்டு வழக்கத்தில் இருந்துவரும் ஒரு நடைமுறையே. இதை உங்களுக்குத் தெரிந்த உதாரணத்தைக்கொண்டே விளக்குகிறேன். ஒட்டுக்கட்டுதல் என்ற நுட்பம் பழ மரங்களில் வழக்கமான ஒன்று. ஆனால், ஒருசில மரங்களில் தண்டுப் பகுதியையும், வேர்ப்பகுதியையும் ஒரே வகையிலிருந்து பயன்படுத்தினால், ஒட்டு இணைவதில் மிகுந்த சிரமமும், பல சமயங்களில் தோல்வியும் ஏற்படும். அதற்கு, மிகச்சிறந்த உதாரணம் சப்போட்டா. நமக்கு வேண்டிய சப்போட்டா ரகத்திலிருந்து தண்டுப் பகுதியை எடுத்து, அதை இன்னொரு சப்போட்டாவின் வேர்ப்பகுதியுடன் ஒட்டுக்கட்டினால், பல நேரங்களில் ஒட்டு இணையாமல் தோல்வியில் முடியும். எனவே, சப்போட்டா குடும்பத்தில் இருக்கும், இன்னொரு வகை மரமான உலக்கைப் பாலை அல்லது கணுப்பாலை (Manilkara hexandra) மரத்திலிருந்தே வேர்ப்பகுதி எடுத்து ஒட்டுக்கட்டப்படுகிறது. அப்படிச் செய்தால்தான், சப்போட்டாவில் தரமான பழங்களும், அதிக விளைச்சலும் கிடைக்கும்.

இப்போது வணிகரீதியில் சப்போட்டா நாற்றுகளை உற்பத்தி செய்யும் அரசு மற்றும் தனியார் பண்ணைகள், உலக்கைப் பாலையையே பயன்படுத்துகின்றன. இந்த மரங்கள் மத்திய இந்தியாவில், குறிப்பாகத் தக்காணப் பீடபூமி பகுதியில்தான் அதிகம். அங்கிருந்து இந்த நாற்றுகளைத் தருவிக்க விரும்பாதவர்களுக்கு, உள்ளூரிலேயே ஒரு தீர்வு உள்ளது. அதுதான், இலுப்பை மரம். ஆம், இலுப்பையும் சப்போட்டாவும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள். ஆக, இலுப்பையின் வேர்ப்பகுதியையும் சப்போட்டாவில் ஒட்டுக்கட்ட பயன்படுத்துகிறார்கள். அந்த அடிப்படையில்தான் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவேறு சகோதரிகளான தக்காளியையும், கத்திரியையும் ஒட்டுக்கட்டுவதும். இதில், எந்த விதமான இயற்கை முரண்பாடுகளும் கிடையாது.
இப்போதும்கூடக் காட்டுப்பகுதிகளில் ஒரு மரம் அதே இனத்தைச் சேர்ந்த இன்னொரு மரக்கிளையுடன் இயற்கையாகவே இணைந்து, பிணைந்து ஒட்டிக்கிடப்பதைப் பார்க்க முடியும். அந்த வகையில் இயற்கையாக ஒட்டுக்கட்டிக் கொண்ட மரங்களிலிருந்து பலவிதமான சுவையுடன் கூடிய காய்கள், பழங்கள் கிடைப்பதைப் பார்க்க முடியும். ஆக, இயற்கையிடம் இருந்தே மனிதன் கற்றுக்கொண்ட ஒன்றுதான், இந்த ஒட்டுக்கட்டுதல் எனும் நுட்பம். அதிலும், இது துளிகூட இயற்கைக்கு எதிரான ஒன்றாகவும் இல்லை. அதேபோல இயற்கை மனது வைத்தால் மட்டுமே இப்படி ஒட்டுக்கட்டுவதும் பிழைக்கும் என்பதையும் மறக்கவோ... மறுக்கவோ முடியாது!