
கால்நடை கல்லூரி முன்னாள் மாணவர்கள்!
சேவை
ஒரு குறிப்பிட்ட பள்ளி, கல்லூரியில் பயின்ற பழைய மாணவர்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாகக் கூடி, பழைய நினைவுகளை அசைபோட்டு ஏக்கத்தோடு கலைந்து செல்லும் நிகழ்வுகளைச் சமீப காலமாக அடிக்கடி பார்க்கிறோம். ஆனால், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்த மாணவர்களோ, ஒன்றாக இணைந்து அறக்கட்டளையை உருவாக்கி, இந்தச் சமூகத்துக்குக் குறிப்பாக, கிராமப்புற மக்கள் பயன் அடையும் வகையில் சேவையாற்றி வருகிறார்கள். இவர்கள் நடத்தி வரும் அறக்கட்டளையின் பெயர், ‘ஹரிக்கேன் வெட்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட்’ (Hurricane Vets Charitable Trust).
இந்த அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து விரிவாக அறிந்துகொள்ள, இதன் நிறுவன தலைவரும், மத்திய தணிக்கைத் துறையின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரிவின் முதன்மைக் கணக்காய்வுத் தலைவருமான டாக்டர்.கோ.ப.ஆனந்தை சந்தித்துப் பேசினோம். ‘‘ஏழு வருஷத்துக்கு முன்னாடி இந்த அறக்கட்டளையை ஆரம்பிச்சோம். இது எட்டாவது வருஷம். சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில 1988-94 வருஷம் வரையிலான காலகட்டத்துல படிச்ச மாணவர்கள் ஒண்ணா இணைஞ்சு, இந்த அறக்கட்டளையை நடத்திக்கிட்டு இருக்கோம். பொதுவா, கல்லூரி நாள்கள்ல மாணவர்களுக்கு விதவிதமான பட்டப் பெயர்கள் வைப்பாங்க. அப்ப உருவானதுதான் ‘ஹரிக்கேன்’ங்கற இந்தப் பேர். நாங்க அங்க படிச்சுக்கிட்டு இருந்த சமயத்துல ஒரு குழுவாதான் இயங்கிக்கிட்டு இருப்போம். எங்க குழுவுல இருந்த மாணவர்கள் வித்தியாசமான எண்ணங்களைக் கொண்டவர்களாகவும் நல்லா சுறுசுறுப்பாவும் இருப்போம். எந்தவொரு வேலையை எடுத்துக்கிட்டாலும் அதைச் செய்து முடிக்கிற வரை சூறாவளியாகச் சுழல்வோம். அதனாலேயே எங்களோட நண்பர்கள் குழுவுக்கு ‘ஹரிக்கேன்’ங்கற (ஹரிக்கேன் என்றால் ஆங்கிலத்தில் ‘சூறாவளி’ என அர்த்தம்) பட்டப்பெயர் உருவாச்சு.

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு முடிச்ச பிறகு, ஆளாளுக்கு ஒரு பக்கம் போயிட்டோம். சிலர் கால்நடை மருத்துவர்களா இருக்காங்க. இது தவிர, மத்திய, மாநில அரசுப் பணிகள்ல சிலர் உயர் பதவிகள்ல இருக்காங்க. சிலர் கால்நடைகளுக்கான மருந்துகள், தீவனம் விற்பனை செய்யும் தொழில்கள் செஞ்சுகிட்டு இருக்காங்க. வங்கிகள்ல சிலர் பணிபுரிஞ்சுகிட்டு இருக்காங்க. இப்படிப் பலரும் பல துறைகள்ல ஈடுபட்டு உயர்ந்த நிலையில இருக்காங்க. நம்மை இந்த நிலைக்கு உயர்த்திவிட்ட எங்க கல்லூரிக்கு சமூகத்துல மரியாதை உண்டாகுற மாதிரி ஏதாவது சமூகப் பங்களிப்பு செய்யணும்னு ஆசைப்பட்டோம். அந்தச் சிந்தனையின் வெளிப்பாடுதான் இந்த அறக்கட்டளை. இதை ஆரம்பிக்கணும்னு முடிவெடுத்தப்ப, இதுக்கு என்ன பெயர் வைக்கலாம்னு ஆலோசிச்சோம். நாங்க மாணவர்களாக இருந்தப்ப எங்களுக்குச் சூட்டப்பட்ட பட்டப்பெயரான `ஹரிக்கேன்’ங்கற பெயரையே, இதுக்கு வைக்கலாம்னு முடிவெடுத்தோம்’’ என்று சொன்னவர், கிராமப்புற மக்களுக்காக ஆற்றி வரும் சேவைகள் குறித்து விவரித்தார்.
‘‘எங்க அறக்கட்டளையோட பணிகளை பாதி விவசாயம், கால்நடைகள் சார்ந்ததாகவும்... மீதி சமூகப் பணிகளாகவும் இருக்கும்படி திட்டமிட்டோம். விவசாயிகள் மத்தியில கால்நடை வளர்ப்புல கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து விவசாயி களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துறோம். கால்நடைகளுக்கான நோய்த் தடுப்பு முகாம்கள் நடத்துறோம்.
இயற்கை பேரிடர் சமயங்கள்ல கிராமப்புற மக்களுக்குத் தேவையான அவசர உதவிகள் செய்றோம். குறிப்பா, மக்களுக்கும் கால்நடை களுக்கும் மருத்துவ முகாம்கள் நடத்துறோம். மிகவும் ஏழ்மையான நிலையில மாணவர்களோட படிப்புக்கு உதவிகள் செய்றோம்’’ என்று சொன்னவர், ஒரு விவசாயியின் குடும்பத்துக்குத் தக்க நேரத்தில், இந்த அறக்கட்டளை உதவி செய்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.

‘‘அரியலூர் மாவட்டத்துல உள்ள ஒரு கிராமத்துல வசிக்கிற விவசாயக் குடும்பம் அது. வறுமை நிலையில இருந்தாங்க... இரண்டு மாடுகளை வச்சுதான் அந்தக் குடும்பம் பிழைப்பு நடத்துணுங்கற நெருக்கடி யான சூழல். ஆனா, தன் மகனோட படிப்பு செலவுக்காக, அந்த மாடுகளை விற்கவேண்டிய கட்டாயத்துக்கு அந்தத் தாய் தள்ளப்படுறார். அதனால் அந்தக் குடும்பம் பொழப்புக்கு வழி தெரியாமல் தவிச்சு நின்னுச்சு.
இந்தத் தகவல் எங்களோட கவனத்துக்கு வந்துச்சு. உடனடியா அந்தக் குடும்பத்தைத் தொடர்புகொண்டு பேசி, அந்த மாணவ னோட படிப்பு செலவை எங்க அறக்கட்டளை ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாம, அந்தக் குடும்பத்துக்கு ஒரு மாடும் கன்றும் வாங்கிக் கொடுத்தோம். இதுமாதிரி இன்னும் பலருக்கு எங்க அறக்கட்டளை தக்க நேரத்துல உதவிகள் செஞ்சிருக்கு. 2018-ம் வருஷம் கஜா புயல் தாக்கினதுனால தென்னை மரங்களை இழந்த விவசாயிகளுக்குத் தென்னங்கன்றுகள் வாங்கிக் கொடுத்தோம். அதெல்லாம் இப்ப பெரிய மரங்களா வளர்ந்து நிக்குது.
சேலம், திருநெல்வேலி, தென்காசி உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்கள்ல, கால்நடை களுக்கான கருத்தரிப்பு முகாம்கள் நடத்தி யிருக்கோம். பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவுலயும் கால்நடைகளுக்கான பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கோம். இந்த அறக்கட்டளையில அங்கம் வகிக்கிற ஒவ்வொருவருமே பல்வேறு துறைகள்ல முக்கியப் பொறுப்புகள்ல இருக் குறதுனால எப்பவுமே பரபரப்பா இயங்கக் கூடியவங்க. இருந்தாலும், இந்த அறக்கட்டளை தொடர்பான பணிகள்னு வந்துட்டா, ரொம்ப ஆர்வமா களத்துல இறங்கி மும்முர மாகிடுவோம். எங்க அறக்கட்டளைக்குனு அலுவலகமோ, பெயர்ப்பலகையோ கிடையாது. முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள்தான் எங்களோட செயல் பாடுகளுக்குப் பெரிதும் உதவியாக இருந்து கிட்டு இருக்கு.
நாம வாழ்க்கையில எவ்வளவு பெரிய உயரத்துக்குப் போனாலும். என்னதான் பணிச்சுமைகள் இருந்தாலும்கூட... இந்தச் சமூகத்துக்கு நம்மாள முடிஞ்ச பங்களிப்பு களைச் செய்யணும்ங்ற உந்துதலும், உண்மையான அக்கறையும் இருந்தால், அதை நிச்சயம் நிறைவேற்ற முடியும். நாலு பேருக்கு நல்லது செய்ய, எதுவும் தடையா இருக்காது’’ என முத்தாய்ப்பாகப் பேசி முடித்தார் ஆனந்த்.

கறவை மாடும் கொடுத்தாங்க...
மகனோட படிப்புச் செலவையும் ஏத்துக்கிட்டாங்க!
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே இருக்கும் இ.கண்டியங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த பானுமதி, “என்கிட்ட இருந்த ரெண்டு மாடுகளைப் பராமரிச்சு அது மூலமா கிடைச்ச பால் வருமானத்தை வச்சு பொழப்பு ஓட்டிக்கிட்டு இருந்தேன். இந்த சூழல்லதான் என் மகனோட படிப்புக்காக மாடுகளை விக்க வேண்டியதாயிடுச்சு. வருமானத்துக்கு வேற வழியில்லாததால, என் மகன் படிக்கச் சேர்ந்த காலேஜ் ஹாஸ்டல்ல சமையல் வேலைக்குப் போனேன். அந்த காலேஜ்ல வேலைப்பார்த்த ஒரு வாத்தியாரு, ‘நீங்க இங்க இப்படி வேலை செய்றது உங்க மகனோட மனசுல பாதிப்பை ஏற்படுத்தி, அவனோட படிப்பையும் அது பாதிக்கும்’னு சொன்னாரு. அவர் சொன்னது ஒரு விதத்துல சரிதான் தோணுச்சு. அதனால அந்த வேலையை விட்டுட்டேன். கூலி வேலைக்கு போயி, அதுல கிடைச்ச சொற்ப வருமானத்துல குடும்பத்தை காப்பாத்திக்கிட்டு இருந்தேன். என்னோட ரெண்டாவது மகனை காலேஜ் சேர்க்க வேண்டிய நேரம் வந்துச்சு. அதுக்கு நிறைய பணம் தேவைப்பட்டதுனால, திக்கு தெரியாம தவிச்சுப் போயி நின்னேன். எங்களோட இக்கட்டான நிலையை தெரிஞ்சு ‘ஹரிக்கேன்’ டிரஸ்ட்டுக்காரங்க. என் ரெண்டாவது மகனோட படிப்புக்கான மொத்தச் செலவையும் ஏத்துக்கிட்டதோடு, எங்க குடும்பத்தோட வாழ்வாதாரத்துக்காக, ஒரு மாடும், கன்னுக்குட்டியும் வாங்கி கொடுத்தாங்க. அதனால இப்ப கொஞ்சம் நிம்மதியா இருக்கேன்’’ என தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள அதம்பை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ், “என்னோட தோட்டத்துல இருந்த தென்னை மரங்கள் எல்லாமே கஜா புயல்ல வேரோட கீழ சாஞ்சிடுச்சு. புதுசா கன்றுகள் வாங்கி நடணும்னா நிறைய செலவாகும். பணத்துக்கு என்ன செய்றதுனு தெரியாம முழிச்சிட்டிருந்த சமயத்துலதான் ஹரிக்கேன் அறக்கட்டளைக்காரங்க, எங்க ஊருக்கு வந்து சேதத்தைப் பார்வையிட்டு எல்லாருக்கும் தென்னங்கன்றுகள் வாங்கி கொடுத்தாங்க. எனக்கு 300 கன்றுகள் கொடுத்தாங்க. நாலு ஏக்கர்ல அந்த கன்றுகளை நட்டு வச்சு, இப்போ நல்லா வளர்ந்துட்டு வருது’’ என தெரிவித்தார்.
தொடர்புக்கு, ஹரிக்கேன் அறக்கட்டளை, செல்போன்: 94455 37760