கட்டுரைகள்
Published:Updated:

5,000 சதுர அடி, 1,000 மரங்கள்... அரசுப் பள்ளியில் ஓர் அடர்வனம்!

அடர்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
அடர்வனம்

இப்போது இந்த அடர்வனத்தில் புங்கன், பூவரசு, மலைவேம்பு, சொர்க்க மரம், போதி மரம், வெட்பாலை எனப் பல வகையான நாட்டு மரங்கள் உள்ளன

இடநெருக்கடியால் நகரங்களில் மரங்களைப் பார்ப்பதே அரிதாகிவருகிறது. இந்நிலையில் ஒரே இடத்தில் ‘மியாவாக்கி' முறையில் 1,000 வகையான மரங்களை வளர்த்து கவனத்தை ஈர்க்கிறது சென்னை, அண்ணா நகரை அடுத்த முகப்பேர் கிழக்கு, அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி. சென்னையில், அரசுப் பள்ளியில் முதன்முறையாகவும், முன்னோடியாகவும் விளங்கும் இந்த மியாவாக்கி காட்டுச் சூழல் ஆர்வலர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.

(‘அதென்ன மியாவாக்கி?' என டவுட் கேட்பவர்களுக்கு ஒரு சிறுகுறிப்பு: மிக நெருக்கமான முறையில் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு, இடைவெளி இல்லாத அடர்ந்த காடு உருவாக்கும் முறை.)

பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயகுமார், பள்ளி வளாகத்தில் இருந்த அந்த அடர்வனத்திற்குள் அழைத்துச் சென்றார். ஓங்கி வளர்ந்த மரங்கள் தென்றலை அனுப்பின. காடு உருவான கதை சொன்னார் விஜயகுமார். ‘‘பெருந்தொற்றுக் காலத்தில் நானும், சில தன்னார்வலர்களும் சேர்ந்து மக்களுக்கு எங்களால் முடிந்த சேவைகளைச் செய்துகொண்டிருந்தோம். அதன் நீட்சியாக, நம் பள்ளியில் இடம் இருக்கிறதே, மரங்கள் வளர்க்கலாமே என்று யோசித்தோம். அப்படி 2020, டிசம்பரில் ஆரம்பித்ததுதான் இந்த முயற்சி.

5,000 சதுர அடி, 1,000 மரங்கள்...
அரசுப் பள்ளியில் ஓர் அடர்வனம்!

புதர் மண்டி இருந்த இடத்தைச் சுத்தப்படுத்தி, புல்டோசர் வைத்து 3 அடி பள்ளம் தோண்டினோம். அடுத்ததாக, ஆவடி மாநகராட்சில் இருந்து உரம் வாங்கி வந்து அரையடி உயரத்துக்குக் கொட்டி நிரவினோம். தோண்டிய மண்ணை மீண்டும் அதே இடத்தில் கொட்டி, மரங்கள் வளர்க்க இடத்தைத் தயார் செய்தோம்.

இந்த இடம் மொத்தம் 5,000 சதுர அடி. இங்கு இப்போது 1,000 வகையான நாட்டு ரக மரங்கள் வளர்கின்றன. 40 அடி உயரம் வளரும் மரங்கள் 10 சதவிகிதமும், 20 அடி உயரம் வளரும் மரங்கள் 20 சதவிகிதமும், 10 அடி உயரம் வளரும் மரங்கள், சின்னச் சின்னச் செடிகள் என்றும் கலந்து வளர்த்துவருகிறோம். ஆரம்பத்தில் மரக்கன்றுகளைப் படப்பை, ஆரணி, ராஜமுந்திரி மாதிரியான இடங்களில் வாங்கினோம். பிறகு, நாங்களே மர விதைகள் வைத்து கன்றுகளை உருவாக்கக் கற்றுக்கொண்டோம். இப்போது, மாணவர்களைக் கொண்டே மரக்கன்றுகளை உற்பத்தி செய்து நடவு செய்கிறோம். வெளியில் கேட்கிறவர்களுக்கும் தருகிறோம். மரங்கள் குறித்தான அறிவும் அனுபவமும் மாணவர்களுக்கு வளர்ந்துவருகிறது’’ என்றவர், பள்ளியில் நர்சரியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது பற்றிக் கூறினார்.

‘‘இப்போது இந்த அடர்வனத்தில் புங்கன், பூவரசு, மலைவேம்பு, சொர்க்க மரம், போதி மரம், வெட்பாலை எனப் பல வகையான நாட்டு மரங்கள் உள்ளன. ஆரம்பத்தில் எக்ஸ்னோரா, கிரீன் பவுண்டேஷன் உள்ளிட்ட அமைப்புகளுடன் சேர்ந்து காட்டை உருவாக்கினோம். ஊரடங்கு முடிந்த பின்னர் மாணவர்கள் பள்ளிக்கு வந்து காட்டைப் பார்த்தபோது, அவர்களுக்கு அவ்வளவு சந்தோஷம். நம்மிடம் செடிகள் வாங்கி தங்கள் வீடுகளிலும் வளர்க்க ஆரம்பித்தார்கள். அப்போதுதான் எங்களுக்கு நர்சரி ஐடியா தோன்றியது. பள்ளியிலேயே நர்சரி ஆரம்பித்து செடிகள், விதை பந்துகள், மரக்கன்றுகளை இலவசமாக அனைவருக்கும் கொடுக்க ஆரம்பித்தோம். மாணவர்களுக்குத் தங்கள் பள்ளியில் உள்ள காடு குறித்து சந்தோஷமும் பெருமையும் நிறைய’’ என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஆறேழு மாணவர்கள் ஆர்வத்துடன் விதைப் பந்துகள் செய்துகொண்டிருந்தனர்.

5,000 சதுர அடி, 1,000 மரங்கள்...
அரசுப் பள்ளியில் ஓர் அடர்வனம்!
5,000 சதுர அடி, 1,000 மரங்கள்...
அரசுப் பள்ளியில் ஓர் அடர்வனம்!

“தண்ணீர் பாய்ச்சுவது, விதைப்பது, செடிகளை நடுவது, விதைகளைச் சேமிப்பது உள்ளிட்ட பல வேலைகளையும் மாணவர்கள் செய்கிறார்கள். இவற்றையெல்லாம் மதிய உணவு இடைவெளி, மாலை நேரங்களில் மேற்கொள்வார்கள். எல்லாமே தன்னார்வத்தில்தான் செய்கிறார்கள், கட்டாயம் இல்லை. இப்போது இங்கு ஆயிரம் மரங்கள் உள்ளன. இந்த இடத்தில் அவ்வளவுதான் வளர்க்க முடியும். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன், இந்தியாவின் நீர் மனிதர் ராஜேந்திரசிங் எனப் பலரும் வந்து பார்த்துப் பாராட்டினார்கள். எங்களைப் பார்த்து பல பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தொழிற்பேட்டைகளில் இதுபோல குறுங்காட்டை உருவாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான விதைகள், கன்றுகளைத் தந்துவருகிறோம்.

5,000 சதுர அடி, 1,000 மரங்கள்...
அரசுப் பள்ளியில் ஓர் அடர்வனம்!

காலநிலை மாற்றம் பற்றி அதிகம் பேசுகிறோம். அதைச் சரிசெய்யும் பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கிறது. இயற்கையோடு ஒன்றி வாழும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதற்கான சின்ன முயற்சிதான் இது” - விஜயகுமார் சொல்லி முடிக்க, இலைகளின் சலசலப்பு இசை ஆரம்பமானது.