நாட்டு நடப்பு
Published:Updated:

பூந்திகொட்டை முதல் பிளான்டர் பாக்ஸ் வரை... மாடித்தோட்டம் அமைக்க வழிகாட்டிய நேரடி பயிற்சி!

மாடித்தோட்ட பயிற்சியில்
பிரீமியம் ஸ்டோரி
News
மாடித்தோட்ட பயிற்சியில்

பயிற்சி

பசுமை விகடன் மற்றும் இந்திரா கார்டன்ஸ் இணைந்து நடத்திய ‘வீட்டிலும் செய்ய லாம் விவசாயம்’ என்கிற தலைப்பிலான மாடித்தோட்டம் நேரடி பயிற்சி ஜனவரி 28-ம் தேதி சென்னை, கோவிலம்பாக்கத்தில் நடைபெற்றது.

மாடித்தோட்டத்தில் பூச்சி மேலாண்மை என்ற தலைப்பில் பேசிய தோட்டக்கலை வல்லுநர் அனூப்குமார், “மாடித்தோட்டம் அமைப்பது எளிது. ஆனால், பூச்சிகளை கட்டுப்படுத்துவதான் சிரமமாக இருக்கிறது எனச் சிலர் நொந்துகொள்கிறார்கள். யதார்த்த நிலையை அறிந்துகொண்டால், இதைப் பற்றி நீங்கள் கொஞ்சமும் கவலைப் படத் தேவையில்லை. தோட்டம் என்று ஒன்று இருந்தால், கண்டிப்பாக பூச்சிகள் வரும். ஏனென்றால், பூச்சிகளுக்கான உணவு செடிகளில்தான் உள்ளது. சாறு உறிஞ்சும் பூச்சி, மாவுப்பூச்சி, தத்துப்பூச்சி என்று சொல்லிக்கொண்டே போகலாம். பூச்சி, நோய்த்தாக்குதல்களை எதிர்கொள்ள, செடிகள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். அதற்கு இயற்கை முறையில் நல்ல ஊட்டம் கொடுத்து வளர்க்க வேண்டும்.

மைத்ரேயன், பிரியா ராஜ்நாராயணன், அனூப்குமார்
மைத்ரேயன், பிரியா ராஜ்நாராயணன், அனூப்குமார்

பூச்சிகள் தாக்கிவிட்டால் அவசரப்பட்டு பூச்சிக்கொல்லிகளைத் தெளித்துவிட வேண்டாம். தாவரங்களைப் பாதிக்கக்கூடிய தீமை செய்யும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த... கண்டிப்பாக நன்மை செய்யும் பூச்சிகள் வரும். இது ஒருபுறமிருக்க... இயற்கை தடுப்பு முறையிலும் பூச்சித்தாக்குதல்களை மிக எளிதாகக் கட்டுப்படுத்தலாம். 200 மி.லி தண்ணீரில் 2 பூந்திக்கொட்டைகளை ஊற வைத்து, நன்கு பிசைந்து கரைசல் தயார் செய்ய வேண்டும். அதை வடிகட்டி, கசடு களை நீக்கிவிட்டு, அதோடு 5 மி.லி வேப்ப எண்ணெய் கலக்க வேண்டும். இந்தக் கரைசலை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால் பூச்சிகள் கட்டுப்படும்.

1 லிட்டருக்கு 3 பூந்திக் கொட்டைகளை ஊற வைத்து பிசைந்து அந்தத் தண்ணீரை அப்படியே தெளித்தால் செடிகளில் உள்ள இலைப்பேன் கட்டுப்படும்” எனத் தெரிவித் தார். ஏற்கெனவே வெற்றிகரமாக பராமரிக்கப் பட்டு பலன் கொடுத்து வரும் மாடித்தோட்டங் களை பார்வையிடவும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அந்த வகையில் ஒரு வீட்டில் 1,200 சதுர அடி பரப்பளவிலும், இன்னொரு வீட்டின் மாடியில் 800 சதுர அடி பரப்பள விலும் தோட்டம் அமைத்திருந்த மாடித் தோட்ட விவசாயி மைத்ரேயனிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

மாடித்தோட்டத்தில் நேரடி விளக்கம்
மாடித்தோட்டத்தில் நேரடி விளக்கம்

அப்போது தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துகொண்ட மைத்ரேயன், “உங்களைப் போன்றே நானும் ஆர்வத்தோடு மாடித் தோட்ட விவசாயத்துக்கு வந்தேன். இதைத் தொடங்கிய புதிதில் பலவிதமான இடர்ப்பாடுகளை சந்தித்தேன். ஆனாலும் கூட கொஞ்சமும் விரக்தி அடையாமல், படிப்படியாக நேரடி அனுபவங்கள் மூலம் வெற்றிகரமாக எதிர்கொண்டேன்.

மாடித்தோட்டத்தில் நேரடி விளக்கம்
மாடித்தோட்டத்தில் நேரடி விளக்கம்

இன்று இரண்டு மாடிகளில் தோட்டம் வைத்து பராமரித்து வருகிறேன். சென்னை யில் உள்ள பெரிய மாடித்தோட்டங்களுள் எங்களுடையதும் ஒன்று. கடந்த 10 ஆண்டு களாக மாடித்தோட்ட விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். மாடித்தோட்டத்தைப் பொறுத்தவரை பராமரிப்பும் கவனிப்பும் மிகவும் முக்கியம். நான் பிளான்டர் பாக்ஸ் எனப்படும் தரையைப் பாதிக்காத தொட்டிகளிலும், குரோ பேக் என்றழைக்கப் படும் பைகளிலும் செடிகளை வளர்த்து வருகிறேன். பிளான்டர் பாக்ஸில் செடிகள் வளர்க்கும்போது தரை எந்தவிதத்திலும் பாதிக்காது. குரோ பேக்கில் வளர்க்கும்போது அடியில் பலகை வைத்து வளர்க்க வேண்டும். மாலை அல்லது காலை வேளையில் தண்ணீர் பாசனம் செய்ய வேண்டும். கொய்யா, பப்பாளி, ஏர் பொட்டடோ, பாம்பு புடலை, மலர்கள், ஸ்வீட் லைம், பாகற்காய், கத்திரி, வெண்டை, முள்ளங்கி, மூலிகைகள் எனத் தற்போது என்னுடைய மாடித்தோட்டத்தில் எல்லா விதமான செடிகளையும் வளர்க்கும் அளவுக்கு, இதில் நிறைய நுட்பங்களை அனுபவபூர்வமாகக் கற்றுக்கொண்டிருக் கிறேன். ஆர்வம் இருந்தால் போதும் மாடித் தோட்டம் எளிதுதான்” எனத் தெரிவித்தார்.

மாடித்தோட்ட பயிற்சியில் கலந்துகொண்டர்கள்
மாடித்தோட்ட பயிற்சியில் கலந்துகொண்டர்கள்

பங்கேற்பாளர்களுக்கு சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது. சீரகச் சம்பா அரிசியில் செய்த தேங்காய்ப்பால் சாதம், வாழைத்தண்டு சூப், நிலக்கடலை லட்டு, நாட்டுக்கம்பு கூழ், பலவிதமான கீரைகள் அடங்கிய கூட்டு ஆகியவை இடம்பெற்றன. இவற்றை சுவையாகவும் தரமாகவும் தயார் செய்திருந்தார்கள் அகிலா குணாளன், நவிதா ஆகியோர்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் பயிற்சி தொடங்கியது. இதில் பேசிய மாடித்தோட்ட பயிற்றுநர் பிரியா ராஜ் நாராயணன்,

“தற்சார்பு வாழ்வியலுக்கான ஆதாரமாக மாடித்தோட்டம் இருந்து வருகிறது. மாடித்தோட்டம் அமைப்பதற்கு முதலில் தரமான மண் தேவை. நாம் அந்த மண்ணை நம்முடைய சுற்றுவட்டாரங் களிலேயே தேடலாம். காய்கறிக் கழிவுகள், தேங்காய்நார்க் கழிவு, சாணம், இலைதழைகள் என்று எதைப் போட்டாலும் அது விரைவாக மட்க வேண்டும். செடிகள் வளர்க்க, இது போன்ற மண்தான் மிகவும் ஏற்றது.

பறவைப் பார்வையில் மாடித்தோட்டம்
பறவைப் பார்வையில் மாடித்தோட்டம்

மாடித்தோட்ட செடிகளுக்கு அதிக அளவில் தண்ணீர் தரத் தேவையில்லை. காய்ச்சலும் பாய்ச்சலுமாகக் கொடுத்து வந்தாலே போதும். நிறைய பேர் மாடியில் மட்டு மல்லாமல், வீட்டைச் சுற்றிய காலி இடங்களிலும் செடிகள் வளர்க்கிறார்கள். அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம்... நிலத்தை பாத்திகள் போன்று பிரித்துக்கொள்ள வேண்டும். மண்ணை நன்கு கொத்திவிட்டு... அதன்பிறகு ஜிக்ஜாக் முறையில் காய்கறி விதைகளை விதைத்தால் நன்றாக வளரும். அதிலும் மரபு விதைகளை விதைத்தால் நன்றாக வளரும்” என்றார்.

பைகளில் செடிகள்
பைகளில் செடிகள்

நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு மாலையில் சுவையான சுக்கு காபியும், வெண்சுண்டலும் வழங்கப்பட்டது. விடைபெற்றபோது காய்கறி விதைகள் வழங்கப்பட்டன. அனைவரும் பெற்றுக்கொண்டு ‘அடுத்த முறை பயிற்சிக்கு வரும்போது இதை விளைவித்து காய்கறி களோடு வருகிறோம்’ என்று சொல்லி மகிழ்ச்சியோடு கலைந்து சென்றனர்.

காய்கறிகளை உற்பத்தி செய்யணும்

பயிற்சியில் கலந்துகொண்டவர்கள் காலை முதல் மாலை வரை மாடித் தோட்டங்களை நேரில் காண்பதும், அதுகுறித்த சந்தேகங்களைக் கேட்பதுமாக இருந்தனர். நிகழ்வில் பங்கு பெற்ற சென்னை, வடபழனியைச் சேர்ந்த ஜெயராமன், “ரொம்ப சிறப்பா இருந்துச்சு. பயிற்சி கொடுத்தவங்க, எங்களோட எல்லா சந்தேகங்களுக்கும் நிதானமாவும் விரிவாவும் பதில் சொன்னாங்க. உடனடியா இதுல இறங்கணுங்கற உந்துதல் ஏற்பட்டிருக்கு” என்றார்.

நிகழ்வில் பங்குபெற்ற நாதிரா என்ற சிறுமி, “தோட்டம் அமைக்குறதுல எனக்கு ஆர்வம் அதிகம். இந்தப் பயிற்சி மூலம், பல விஷயங்கள் கத்துக் கிட்டேன். எங்க வீட்டிலயும் ஒரு தோட்டத்தை அமைச்சு, பூச்சி மருந்து தெளிக்காத, சத்தான காய்கறிகளை உற்பத்தி செய்யணுங்கறதுதான் என்னோட ஆசை” என்றார்.

நாதிரா, ஜெயராமன், சுந்தரமூர்த்தி
நாதிரா, ஜெயராமன், சுந்தரமூர்த்தி

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, “எங்களுக்கு ஒரு வீட்டுத் தோட்டம் இருக்கு. அதைப் பராமரிக்கிறதுல பல சந்தேகங்கள் இருந்துச்சு. இந்தப் பயிற்சி மூலம் அத்தனை சந்தேகங்களுக்கும் தீர்வு கிடைச்சது. எங்க குழந்தைகளுக்கு எங்க வீட்டுல இருக்கிற தோட்டத்தில் விளையக்கூடியதைக் கொடுக்கணும்னு ரொம்ப ஆசை. அதற்கான விஷயங்கள கத்துக்கிறதுக்கு இந்த நிகழ்ச்சி ரொம்பல பயனுடையதா இருந்துச்சு” என்றார்.