Published:Updated:

கோடைக்காலம்... மாடித்தோட்டம் வாடி, வதங்கமால் இருக்க செய்ய வேண்டிய பராமரிப்பு முறைகள்..!

மாடித்தோட்டம்!!!

கோடைக்காலத்தில் மாடித் தோட்டங்களுக்கு இரண்டு முக்கிய பாதிப்புகள் இருக்கும். ஒன்று வெயில் அதிகமாக இருக்கும். இரண்டாவது நாம் தாவரங்களுக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் அது சீக்கிரமே வற்றிப்போகும்.

Published:Updated:

கோடைக்காலம்... மாடித்தோட்டம் வாடி, வதங்கமால் இருக்க செய்ய வேண்டிய பராமரிப்பு முறைகள்..!

கோடைக்காலத்தில் மாடித் தோட்டங்களுக்கு இரண்டு முக்கிய பாதிப்புகள் இருக்கும். ஒன்று வெயில் அதிகமாக இருக்கும். இரண்டாவது நாம் தாவரங்களுக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் அது சீக்கிரமே வற்றிப்போகும்.

மாடித்தோட்டம்!!!

இன்றைய சூழலில் நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்து சாப்பிட வேண்டும் என்ற நோக்கில் நகரங்களிலும் மற்ற பிற பகுதி களிலும் உள்ள மக்கள் தங்கள் வீட்டின் மாடிகளிலேயே தோட்டங்கள் அமைத்து அதன் மூலம் இயற்கையான முறையில் காய்கறிகளையும் பழங்களையும் விளைவித்து வருகிறார்கள்.

மாடித்தோட்ட தொட்டிகள்
மாடித்தோட்ட தொட்டிகள்

இயற்கையான வாழ்வுக்கு அடித்தளமிடும் ஒரு வழிமுறையாக மாடித்தோட்டம் மற்றும் வீட்டுத்தோட்டம் உள்ளது. அவற்றை சரிவர பராமரிப்பது என்பது மிகவும் அவசியமானதாகிறது. தற்போது கோடைக்காலம் தொடங்கி வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில், கோடைக்காலத்தில் மாடித்தோட்டத்தைப் பராமரிப்பது எப்படி என்பது குறித்து மாடித்தோட்ட ஆலோசகர் அனூப்குமாரிடம் பேசினோம்.

``கோடைக்காலத்தில் மாடித்தோட்டங்களுக்கு இரண்டு முக்கிய பாதிப்புகள் இருக்கும். ஒன்று வெப்பம் அதிகமாக இருக்கும். இரண்டாவது செடிகளுக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் அது சீக்கிரமே வற்றிப்போகும். இதனால் அதீத வெப்பத்திலிருந்து செடிகளைப் பாதுகாக்க வேண்டும். மற்றொன்று தாவரங்களில் நீர் வற்றிப்போகாமல் இருக்க தேவையான அளவு நீரை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

கோடைக்காலத்தில் காய், கனி விளைச்சல்...

காய், கனிகளின் உற்பத்தியை பொறுத்தவரை வெப்பத்தைத் தாங்கி வளரும் செடிகளிலிருந்து மட்டுமே விளைபொருள்கள் கிடைக்கும். வெப்பத்தைத் தாங்கி வளராத செடிகள் பட்டுப்போக வாய்ப்புள்ளது. அல்லது காய்க்கும் திறனற்ற நிலைக்குச் சென்றுவிடும். இத்தகைய செடிகளின் வாழ்நாளைக் காப்பாற்ற அதை ஒரு பராமரிப்பு சூழலுக்குள் வைத்து நாம் பாதுகாக்க வேண்டும். பெரும்பாலும் செடிகளில் பூ பூப்பது, காய்கள் காய்ப்பது என்பது வெப்பத்தின் தாக்கத்தால் சில செடிகளில் விளைச்சல் சற்றே குறைவாக இருக்கும்.

கோடைக்காலத்தில் செம்பருத்தி போன்ற பூக்கள் நிறைய பூக்கும். ஆனால் மல்லி, முல்லை போன்றவை குறைவாக பூப்பதைப் பார்க்க முடியும். அதேபோல் காய்கறிச் செடிகளிலும் சிலவற்றில் குறைவாகத்தான் காய்க்கும். அதாவது, வெப்பத்தைத் தாங்கி வளரும் செடிகள் இயல்பாகவே என்ன விளைச்சல் கொடுக்குமோ, அதைக் கொடுக்கும்.

மூடாக்கு (Mulching) செய்வது அவசியம்...

தொட்டிகளிலோ, மாடியின் திறந்தவெளியிலோ வைக்கப்பட்ட செடிகளிலிருந்து தண்ணீர் ஆவியாகிப் போகாமல் இருப்பதற்கு காய்ந்த இலை தழைகளைக் கொண்டு செடிகளைச் சுற்றி அடர்த்தியாகப் போட வேண்டும். அந்தக் காய்ந்த இலைகளின் மீது தண்ணீர் ஊற்ற வேண்டும். அதன் மூலம் தண்ணீர் செடிகளின் வேர்களை சென்றடையும். இதன் மூலம் தொட்டிகளில் இருந்து தண்ணீர் சீக்கிரம் ஆவியாகிப்போவது தடுக்கப்படும். இம்முறையின் மூலம் செடிகளை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும்.

மாடித்தோட்டம்
மாடித்தோட்டம்

செடிகளை அருகருகே வைப்பது அவசியம்...

நாம் மாடித்தோட்டங்களில் செடிகளை நன்றாகத் தள்ளி தள்ளி வைத்து தினசரி அவற்றைப் பராமரிப்போம். ஆனால், கோடைக்காலத்தில் எல்லா செடிகளையும் அருகருகே சேர்ந்து இருக்கும்படி வைக்க வேண்டும். இப்படி தொட்டிகளை அருகருகே சேர்த்து வைக்கும்போது வெப்பம் தொட்டியின் எல்லா பக்கமும் படாமல் தடுக்க முடியும்.

ஒன்றிரண்டு பக்கம் வெப்பம் விழுந்தாலும் தொட்டியின் மற்ற பக்கங்கள் பாதிக்கப்படாமல் இருக்கும். வெயில்படாமல் இருக்கும்போது தொட்டியில் உள்ள மண் அவ்வளவாக சூடாகாது. இதனால் செடிகள் பட்டுப்போவது தடுக்கப்படும். மேலும், தொட்டிகளின் ஒரு சில பக்கங்களே வெப்பத்தை உறிஞ்சும். மற்ற பக்கங்கள் குளிர்ச்சியாகவும், நடுவில் உள்ள தொட்டிகள் வெயிலால் எவ்வித பாதிப்புகளும் அடையாமல் இருக்கும்.

மாடித்தோட்ட ஆலோசகர் அனூப்குமார்
மாடித்தோட்ட ஆலோசகர் அனூப்குமார்

நிழல் வலைகள் (Shade Net) அவசியம்!

பண வசதி இருப்பவர்கள் நிழல்வலைகளைப் பயன்படுத்தலாம். இதனால் மாடித்தோட்டத்தில் வெப்பத்தின் அளவைக் குறைக்க முடியும். மேலும், பூச்சித் தாக்குதல் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க வேப்ப எண்ணெயைப் பயன்படுத்தலாம். இலை உண்ணும் பூச்சிகள், சாதாரண காலங்களைக் காட்டிலும் கோடைக்காலத்தில் சற்றுக் குறைவாகவே காணப்படும். கோடைக்காலத்தில் செடிகளுக்கு திட உரங்களை வழங்குவதைக் காட்டிலும் திரவ ஊட்டங்களாகவே கொடுப்பது நல்லது. ஏனென்றால், செடிகள் அவற்றை விரைவில் எடுத்துக்கொள்ளும்.

செடிகளை புதிதாக நடுதல் மற்றும் பிடுங்கி இடம் மாற்று நடுதல் போன்றவற்றைத் தவிர்க்கலாம். செடிகளைக் கிள்ளுதல், கவாத்து செய்தல் போன்ற செயல்களையும் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக, தண்ணீர் இருப்பை பொறுத்து செடிகளின் எண்ணிக்கையை குறைக்கவோ, அதிகரிக்கவோ செய்யலாம்" என்றார்.