
மாடித்தோட்டம்
மாடித்தோட்டத்தைப் பொறுத்தவரை இருக்கும் இடத்தில், கிடைக்கும் பொருள்களைக் கொண்டு தோட்டம் அமைப்பதுதான் புத்திசாலித்தனம். அந்தவகையில் அடுக்குமாடி குடியிருப்பில் 11-வது மாடியில் தோட்டம் அமைத்துக் கவனம் ஈர்க்கிறார் சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் வசிக்கும் ஜெயமங்களம். தான் வசிக்கும் வீட்டில் கிடைக்கும் இடத்தையெல்லாம் மாடித்தோட்டத்துக்குப் பயன்படுத்தி இருக்கிறார். ஒரு மாலை வேளையில் ஜெயமங்களத்தைச் சந்தித்துப் பேசினோம்.

“பன்னிரண்டு வருஷமா மாடித்தோட்டம் அமைச்சு பராமரிச்சுக் கிட்டு வர்றேன். வீட்டைவிட மாடித்தோட்டத்துலதான் அதிக நேரம் இருப்பேன். எனக்கு மனசு சரியில்லைன்னா மாடித்தோட்டம்தான் மனசை லேசாக்குது. என்னோட கணவர் மாடித்தோட்டம் பராமரிப்பில உதவியா இருக்காரு. எங்க தோட்டத்துல உள்ள செம்பருத்தி பூச்செடி, என்னோட தோழி விஜி கொடுத்தாங்க. சிவாங்கற விவசாயி நெய் மிளகாய் கொடுத்தாரு. இதை அறுவடை பண்ணி தாளிக்கும்போது அந்த வாசம் மூக்கைத் துளைக்கும்.

இது இல்லாம கத்திரிக்காய், வெண்டைக்காய், முருங்கை, அவரை, புடலை போன்ற எல்லா வகைக் காய்கறிகளும் இருக்கு. ஸ்பெஷலான தக்காளியும் வெண்டையும் மஞ்சளும் போட்டுருக்கேன். நல்ல விளைச்சல் தருது. கீரையில முளைக்கீரை, மணத்தக்காளிக்கீரை போட்டுருக்கேன். நாங்க வீட்டுல எதை விரும்பி சாப்பிடுறோமோ அதையேதான் அதிகம் விளைவிக்கிறோம். ஆரம்பத்துல தொட்டியில செடிகள் வளர்றதுக்கு வெறும் மண் மட்டுமே பயன்படுத்தினேன். மண்ணுல நல்லாத்தான் விளையுது. ஆனா, அடிக்கடி தண்ணி கொடுக்க வேண்டியதாயிருந்துச்சு. வேர் ஆழமா இறங்க மாட்டேங்குது. இதைத் தவிர்க்கிறதுக்காகவும், முறைப்படி செய்யணும்னுங்கறதுக்காகவும் இப்போ தேங்காய்நார்க் கழிவு, மாட்டு எரு, மண்புழு உரம் கலந்த கலவையைப் பயன்படுத்துறேன். மாட்டுச் சாணத்த மட்டும் அப்படியே கொடுக்க மாட்டோம். காரணம் அதுல சில வண்டுகள் இருந்தா, அது செடியைப் பாதிக்குது. அதைத் தவிர்க்கிறதுக்கு மாட்டுச்சாணத்தோடு உயிர் உரங்களைக் கலந்து கொடுத்தா அந்தப் பிரச்னை தீர்ந்துடும்” என்றவரைத் தொடர்ந்து, அவருடைய கணவர் கல்யாணசுந்தரம் பேசினார்.

“நாங்க சோதனை முயற்சியாதான் மாடித்தோட்டம் போடத் தொடங்கினோம். ஆரம்பத்துல மாடித்தோட்டத்துக்கு அதிக பணம் செலவழிச்சிட்டோம். நேரமும் அதிகமா எடுத்துகிச்சு. ஆனா, அதுல விளைஞ்ச காய்கறிகள சாப்பிட்டபோது அந்த வருத்தமெல்லாம் போயிடுச்சு. தோட்டத்துல நேரத்தை செலவிடறதால மன அழுத்தம் குறையுது. என்னாலான உதவியை என் மனைவிக்கு செஞ்சுகிட்டு வர்றேன்” என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய ஜெயமங்களம்,



“செடிகள் வளர்க்கும் தொட்டிகளைப் பிளாஸ்டிக்கால் ஆன ஸ்டேண்டு மேலதான் வெச்சு இருக்கோம். இதனால தரை எப்போதும் சுத்தமா இருக்குது. பராமரிக்குறதும் சுலபம். மண் மட்டுமே பயன் படுத்தும்போது தொட்டி, பைகளோட எடை அதிகமா இருக்குது. மண்புழு உரம், தேங்காய்நார் கட்டி, எரு கலந்து செடிகளை வளர்க்கும்போது எடை ரொம்பவே குறைவா இருக்குது. ஓரிடத் திலிருந்து இன்னோர் இடத்துக்கு எளிதா மாற்றவும் முடியுது. என் வீட்டுக்காரர் வேலை தொடர்பா பல ஊர்கள்ல வசிச்சதால என்னுடைய தோட்டம் போடும் கனவை நடமுறைப்படுத்த முடியல. அவருடைய ஓய்வுக்குப் பிறகுதான் தோட்டத்த அமைக்கற கனவு நனவாச்சு.



580 சதுரஅடியில தோட்டத்த அமைச்சிருக்கோம். இந்தப் பிளாட்டை வாங்கும்போதே இந்த இடத்தை யும் தோட்டம் அமைக்குகறதுக்காகச் சேர்த்து வாங்கினோம். நாங்கதான் இந்த அடுக்கு மாடியில கடைசியா வசிக்கிறோம். எங்களுக்கு மேல 12-வது மாடியில சோலார் பேனல் மட்டும்தான் இருக்கு. மாடித்தோட்டம் பராமரிக்குறதுல என் குடும்பமே ஆதரவா இருக்காங்க. எனக்குத் தேவையான விதை களை மகளும் மருமகளும் ஆர்வத்தோடு வாங்கி அனுப்புறாங்க. மாடித்தோட்டத்துல ஈடுபடுறதுனால மனசுக்கு அமைதி கிடைக்குது. 11-வது மாடியில அமைச்சு இருக்கிறதால, சுற்றுப்புறத்தையும் பார்த்துக்க முடியுது. மாடித்தோட்டத்தையும் கவனிச்சுக்க முடியுது.

காலையில ஒரு மணி நேரமும், மாலையில ஒரு மணி நேரமும் வேலை இருக்கும். காலையில செடிக்கெல்லாம் தண்ணி ஊத்துவேன். பூக்கள், காய்கள பறிச்சிடுவோம். நோய் ஏதாவது தாக்கியிருக் குதா, செடிகள் ஆரோக்கியமா இருக்குதானு பார்த்துப்பேன். மாலை நேரத்துல பூச்சி விரட்டி தெளிக்குறது, இடுபொருள் கொடுக்குற வேலைகளைச் செய்வோம். வாரம் ஒருமுறை தேமோர் கரைசல் தெளிப்பேன். இங்க விளைவிக்கிற காய்கறிகள் ருசியாவும் ஆரோக்கியமாவும் இருக்கு. எங்க வீட்டுக்கு எடுத்துக்கிட்டது போக, மகள் வீட்டுக்கும் பக்கத்து வீட்டுக்காரங்களுக்கும் கொடுக்குறோம். எல்லாரும் ரசிச்சு சாப்பிடுறாங்க. இப்போ மாடித்தோட்டம் போடுறவங்க குழுவுலயும் இருக்கிறேன். அவங்களும் நிறைய டிப்ஸ் கொடுப்பாங்க. நானும் எனக்குத் தெரிஞ்சத சொல்றேன். ஒவ்வொருவரும் தங்களோட யோசனைகளை பகிர்ந்துக்கிறதால தோட்டத்தை இன்னும் சிறப்பா பராமரிக்க முடியுது. இப்படி ஒவ்வொரு வீட்டுலயும் தோட்டத்தை அமைச்சுக்கிட்டா நோய், நொடிகள எளிதா விரட்டிடலாம்” என்று புன்னகையோடு விடைகொடுத்தார்.
தொடர்புக்கு, ஜெயமங்களம்,
செல்போன்: 90031 70152.


குரங்குகளுக்கு இரும்பு வலை!
“நாங்க தோட்டம் வெச்சிருக்கிற பகுதில குரங்குகள் தொல்லை அதிகம். குரங்குகள் வந்தா எல்லாச் செடிகளையும் சேதப்படுத்திடும். குரங்குகளைக் கட்டுப்படுத்த பாம்புப் பொம்மைகள் வைக்குறது, சத்தம் எழுப்புற மணிகள் வைக்குறதுனு பல முயற்சிகள செஞ்சோம். ஆனா, எதுக்கும் குரங்குகள் கட்டுப்படல. அதேபோல குரங்குகள் ஒருமுறை வந்து சுவைப்பாத்திடுச்சுன்னா திரும்பத் திரும்ப வரும். நீண்ட யோசனைக்குப் பிறகுதான் தோட்டத்தைச் சுத்தி இரும்புவலையை அமைச்சோம். நாங்க உள்ளே போய் வரவும் இரும்பு வலைக் கதவை அமைச்சோம். இதை அமைச்சதுக்குப் பிறகு, குரங்குகளோட வருகை நின்னுப்போச்சு. இதோட காய்கறி கொடிவகைகளைப் படரவிடவும் இரும்பு வலை உதவியா இருக்கு” என்கிறார் ஜெயமங்களம்.