நாட்டு நடப்பு
Published:Updated:

இலவம்பாடி முள் கத்திரிக்கு புவிசார் குறியீடு... விலை, விளைச்சல், விற்பனை அதிகரிக்குமா?

இலவம்பாடி முள் கத்திரிக்காய்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
இலவம்பாடி முள் கத்திரிக்காய்கள்

அங்கீகாரம்

வேலூர் மாவட்டத்தின் பாரம்பர்ய அடையாளங்களில் ஒன்றாக விளங்கிவரும் இலவம்பாடி முள் கத்திரிக் காய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச அங்கீகாரம் கிடைத் துள்ளதால் இந்த மாவட்ட விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்தில் உள்ள இலவம்பாடி கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்தக் கத்திரிக்காய் தனித்துவமான சுவையும் மணமும் கொண்டது. இதன் காம்புப் பகுதியில் அதிக அளவில் முள்கள் இருப்பதால் இது இலவம் பாடி முள்கத்திரிக்காய் என அழைக்கப்படுகிறது.

கூட்டு, பொரியல், சாம்பார், காரக்குழம்பு, மோர்க்குழம்பு, அவியல், தொக்கு, துவையல், எண்ணெய் கத்திரிக்காய் வதக்கல் உட்பட பலவிதமான சமையலுக்கும் இது சிறப்பானது. ஒருகாலத்தில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் இதைப் பரவலாகச் சாகுபடி செய்து வந்தார் கள். காலப்போக்கில், வீரிய ரகக் கத்திரிக் காய்களின் வருகை காரணமாக, இலவம்பாடி கத்திரிக்காய் சாகுபடி பரப்புப் பெருமளவு குறைந்துபோனது. ஒருகட்டத்தில் சந்தைகளில் இந்தக் கத்திரிக்காயைப் பார்ப்பதே அரிதாகிப் போனது.

இந்நிலையில்தான், இதன் மகத்துவத்தை உணர்ந்த சிலர், இதை மீட்டெடுத்து பரவ லாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை மேலும் உத்வேகப்படுத்தும் வகையிலும், இதன் எதிர்கால இருப்பை உத்தரவாதப்படுத்தி நிலை நிறுத்தும் வித மாகவும் அமைந்துள்ளது, தற்போது இதற்கு வழங்கப்பட்டுள்ள புவிசார் குறியீடு.

இலவம்பாடி முள் கத்திரிக்காய்கள்
இலவம்பாடி முள் கத்திரிக்காய்கள்

இது குறித்து இலவம்பாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரமேஷிடம் பேசினோம். ‘‘இது ஒரு சின்ன கிராமம். ஆனா, எங்க ஊர் முள்கத்திரிக்காயால, இலவம்பாடிங்கற பேரு நாடு முழுக்க பிரபலமாயிடுச்சு. புவிசார் குறியீடு கிடைச்சிருக்கிறதை ரொம்ப பெருமையா நினைக்குறோம். எங்க ஊர்ல பல தலைமுறையா விளைஞ்சுகிட்டு இருக்குற ஒரு விளைபொருள், உலக அளவுல புகழடை யப் போகுதுனு நினைச்சா மனசுக்குச் சந்தோஷமாதானே இருக்கு. ஆனா, அதே சமயம் இதோட சாகுபடி பரப்பு ரொம்பவே குறைஞ்சு போயி, இதோட எதிர்காலமே கேள்விக்குறியாகி இருக்குறதைப் பார்க்கும் போது ஆதங்கமா இருக்கு.

வேலூர் மாவட்டத்தோட பாரம்பர்ய அடையாளமா இருந்துகிட்டு இருக்கிற இந்தக் கத்திரிக்காய் பெருமளவு கைவிடப்பட்டதுங் கறது எங்களோட மண்ணுக்கும் மக்களுக் கும் மிகப்பெரிய இழப்பு. இது சுண்ணாம்புச் சத்து நிறைஞ்ச பூமி. எங்க மண்ணுக் குனு இருந்த தனித்துவமான வளத்துனாலதான், இங்க சாகுபடி செஞ்ச இலவம்பாடி முள்கத்திரிக்காய் தனி ருசியோடு இருந்திருக்கு. அப்பெல்லாம் இந்தப் பகுதி விவ சாயிங்க ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லியெல்லாம் பயன்படுத்த மாட்டாங்க. விதைப்புக்கு முன்னால வெள்ளாடுகளை நிலத்துல மேய்ச்சலுக்கு விட்டு, மாடுகளை ஏர் பூட்டி உழவு ஓட்டி இலவம்பாடி முள்கத்திரி விதையை விதைப்பு செய்வாங்க.

கூடுதல் விலை

செடிகள் வளர ஆரம்பிச்ச பிறகு, பன்றி சாணத்துல நெருப்பு மூட்டி புகை போடுறதை யும் வழக்கமாக வச்சிருந்திருக்காங்க. அதனால பூச்சி, நோய்த்தாக்குதல்கள் கட்டுப்படுத்த பட்டுச்சு. முன்னாடி யெல்லாம் இந்தப் பகுதிகள்ல வீட்டு விசேஷங்கள்லயும், படையல்கள்லயும் இந்தக் கத்திரிக்காய் ஏதோ ஒரு வகையில நிச்சயம் இடம்பெறும். ஆனா, இப்பெல்லாம் அப்படியில்ல. இதைப் பயன்படுத்துறதும் அரிதாயிடுச்சு. விவசாயிங்க இதைப் பயிர் பண்றதும் அரிதாயிடுச்சு. இது நம்மூரோட பாரம்பர்யம்... இதைக் கைவிட்டுடக் கூடாதுனு சில விவசாயிங்க, ஆர்வமா இதைப் பயிர் பண்ணிகிட்டு இருக்கோம். இதுக்குக் குறைவான விலைதான் கிடைச்சுக்கிட்டு இருக்கு. லாபகரமான விலைக கிடைச்சா நிறைய விவசாயிகள் இதைப் பயிர் பண்ணுவாங்க. இதுக்குப் புவிசார் குறியீடு ஒரு வகையில கைகொடுக்கும்னு நம்புறோம்.

இலவம்பாடி முள் கத்திரிக்காய்கள்
இலவம்பாடி முள் கத்திரிக்காய்கள்

பாரம்பர்ய விதை

இலவம்பாடி முள் கத்திரிக்காய் இன்னும் பல தலைமுறைகளுக்கும் தனித்துவத்தோடு நீடிச்சு நிலைச்சு இருக்கணும்னா, விதை, நாற்று விஷயத்துல இந்தப் பகுதி விவசாயிகள் அதிகக் கவனம் செலுத்தணும். இதுக்கு அரசாங்கமும் அக்கறையோடு நடவடிக்கை எடுக்கணும். இப்ப இலவம்பாடி முள் கத்திரிக்காய் சாகுபடி செஞ்சுக்கிட்டு இருக்குற விவசாயிகள்ல சிலர் மட்டும்தான், பாரம்பர்யமா சொந்த விதைகளைப் பயன் படுத்தி நாற்று உற்பத்தி செஞ்சு, இதைச் சாகுபடி செய்றாங்க. அதுதான் இயல்பான தன்மையோடு இருக்கும்.

ஆனா, இந்த விஷயத்துல விழிப்புணர்வு இல்லாத மற்ற விவசாயிகள், நர்சரிகள்ல விற்பனை செய்யப்படுற நாற்றுகளையும், விதையையும் வாங்கிப் பயிர் பண்றாங்க. அந்த விதைகளையும் நாற்றுகளையும் பயன்படுத்தி விளைவிக்கப்படுற கத்திரிக் காய்ல சுவையும் குறைவு, முள்ளும் குறைவு.

அதிக மகசூல் எடுக்குறதுக்காக.. மற்ற கத்திரி ரகங்களுக்குப் பயன்படுத்துற மாதிரியே, இதுக்கும் நிறைய ரசாயன உரங் களையும் விதவிதமான பூச்சிக்கொல்லியையும் பயன்படுத்துறாங்க. அதுல விளையுற கத்திரிக்காய்களைச் சாப்பிட்டா உடம்புக்குக் கேடு. இலவம்பாடி கத்திரிக்காய்க்குனு உள்ள இயல்பான மருத்துவக் குணம் பாதிக்கப்படுது. இந்த விஷயத்துல விவசாயிங்க மேல மட்டுமே குறைசொல்லிட முடியாது. நுகர்வோர்கள் மேலயும் தப்பு இருக்குது. விவசாயிங்க வயித்த கட்டி, வாயைக் கட்டி கஷ்டப்பட்டு உழைச்சு, கத்திரிக்காய்கள அறுவடை பண்ணி மார்க்கெட்டுக்குக் கொண்டு போயி வித்தா, கிலோவுக்கு 10 - 20 ரூபாய்தான் கிடைக்குது.

அதனாலதான் அதிக மகசூல் மூலம், கூடுதல் லாபம் பார்க்க, ரசாயன இடுபொருள்களை விவசாயிகள் அதிகமா பயன்படுத்துறாங்க. குறைவான விலை கிடைக்குறதுனாலதான், இலவம்பாடி முள்கத்திரிக்காய் பயிர் செய்யுற பரப்பளவும் குறைஞ்சு போயிடுச்சு. இப்ப புவிசார் குறியீடு கிடைச்சது மூலம், ஏதோ மறுமலர்ச்சி ஏற்பட்டது மாதிரி அங்கீகாரம் கிடைச்சிருக்கு. இந்த மாவட்டத்துல இலவம்பாடி முள் கத்திரிக்காய் சாகுபடி செய்ற விவசாயிகளை ஒருங்கிணைச்சு, ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கணும். மற்ற கத்திரிக்காய் ரகங்களுக்கு நிகராகவோ, அதைவிட அதிகமாகவோ இதுக்கு விலை கிடைக்குறதுக்கும், தமிழ்நாடு முழுக்க அனைத்து மாவட்டங்கள்லயும் பரவலா இதை விற்பனை செய்யவும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கணும். இதெல்லாம் நடந்தா, இன்னும் ஏராளமான விவசாயிகள் இலவம்பாடி முள் கத்திரி சாகுபடியில ஆர்வம் காட்டுவாங்க. அதே சமயம் பாரம்பர்ய விவசாயத்துல அக்கறை யுள்ள விவசாயிகள், இயற்கை வேளான் செயற்பாட்டாளர்கள். இலவம்பாடி முள் கத்திரிக்காய் விதைகளைத் தமிழ்நாடு முழுக்கப் பரவலாக்கம் செஞ்சு, இதோட உற்பத்தி பரப்பை பெருக்குறதுக்கான முயற்சிகள்ல இறங்கணும்’’ எனச் சொல்லி முடித்தார்.

இலவம்பாடி முள் கத்திரிக்காய் தோட்டம்
இலவம்பாடி முள் கத்திரிக்காய் தோட்டம்

இது ஒரு வரப்பிரசாதம்

வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி சமீபத்தில் ஓய்வுபெற்ற நந்தகுமார், ‘‘வேலூர் மாவட்ட விவசாயிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இதன் மகத்துவத்தை உணர்ந்துவிட்டால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட மக்களும் இதை மிகவும் விரும்பி வாங்குவார்கள்.

மற்ற ரகக் கத்திரிக்காய்களைச் சிறுசிறு துண்டுகளாக வெட்டி வேக வைத்தால். பெரும்பாலும் அதிக குழகுழப்புத் தன்மை ஏற்படும். ஆனால், இலவம்பாடி முள்கத்திரிக்காய் அப்படியல்ல... கெட்டித்தன்மையோடு இருக்கும். இதில் விதைக் குறைவு. வேக வைக்கும்போது அந்தக் குறைவான விதைகளும்கூட மிருதுவாகிவிடுகிறது.

முதன்முதலில், விரிஞ்சிபுரம் வேளாண் அறிவியல் நிலையம்தான் கலப்புகளை நீக்கி சுத்தமான இலவம்பாடி முள்கத்திரிக்காயை மக்களிடம் கொண்டு சேர்த்தது. 2010-ம் ஆண்டு அதற்கு நான் முன் முயற்சிகள் எடுத்தேன். இலவம்பாடி முள் கத்திரிக்காயின் அறுவடைக் காலம் 6 - 8 மாதங்கள். இதை ஒரு தலைமுறை என்போம். இதுபோல் ஏழு தலைமுறைக்கு மறு உற்பத்தி செய்து விதைகளைச் சேகரித்துக் கலப்புகளை நீக்கி, அடிப்பகுதியில் பச்சைப் புள்ளியுடன் ஒரே மாதிரியான ஊதா நிறக் காய்களை உருவாக்கி, விவசாயப் பெருமக்களிடம் கொண்டு சேர்த்தோம்.

மேலும் அரசாங்க பண்ணைகள், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் உழவர்களின் நிலங்கள் என மொத்தம் 50 இடங்களில் இதைப் பயிர் செய்து சோதனை மேற்கொண்டோம். வேலூர் மாவட்டத்தில் மட்டும் அல்லாமல் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, திண்டிவனம் போன்ற பகுதிகளிலும் இலவம்பாடி முள்கத்திரியின் விதைகளை விதைத்துப் பார்த்தோம். மற்ற பகுதிகளிலும் நல்ல விளைச்சல் தருகிறதா, பூச்சி, நோய்த்தாக்குதல் எப்படி இருக்கிறது என்பதையும் ஆராய்ச்சி செய்தோம். மற்ற மாவட்டங்களை எல்லாம்விட, வேலூர் மாவட்டத்தில்தான் இது சிறப்பாக விளைச்சல் கொடுத்தது.

ரமேஷ், நந்தகுமார்
ரமேஷ், நந்தகுமார்

‘ஆர்கனோலெப்டிக் மற்றும் ஜீன் மேப்பிங்’ முறையில் இலவம்பாடி முள்கத்திரிக்காயின் பூர்வீக இருப்பிடத்தைக் கண்டறிந்து, உறுதிப்படுத்தினோம். ஆர்கனோலெப்டிக் சோதனை என்பது உணவுப் பொருளின் சுவை, வாசனை, தோற்றம் மற்றும் வாய் உணர்வு ஆகியவற்றை மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது. ஜீன் மேப்பிங் என்பது மரபணு பகுப்பாய்வு. இந்தச் சோதனையில், இங்கு மட்டுமே விளையக்கூடிய தனித்தன்மை கொண்ட கத்திரிக்காய் ரகம் என்பதனையும் உறுதிப்படுத்தினோம். இலவம்பாடி முள்கத்திரிக்காயையும், மற்ற ரகக் கத்திரிக்காய்களையும் தனித்தனியாக எண்ணெய் கத்திரிக்காய்களா வதக்கி மக்களிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னோம். அப்படிக் கொடுக்கும்போது, என்னென்ன ரகக் கத்திரிக்காய்கள் எந்தெந்த கிண்ணங்களில் இருக்கிறது என்பதைச் சொல்லவில்லை. மக்கள் சாப்பிட்டுவிட்டு, சுவை, மணம் எதில் அதிகம் இருக்கிறது என்ற கருத்துகளைச் சொன்னார்கள். அதிலும், இலவம்பாடி முள்கத்திரிக்காய்க்குதான் முதலிடம் கிடைத்தது. நம் வேளாண் அறிவியல் நிலையத்தில் இப்போதும் முள்கத்திரிக்காய் விதைகள் கிடைக்கின்றன. விவசாயிகள் வாங்கிப் பயனடையலாம்’’ என்றார்.

வேளாண் அறிவியல் நிலையம்,

விரிஞ்சிபுரம், வேலூர் மாவட்டம்.

தொலைபேசி: 0416 2272221, 2273331

இலவம்பாடி முள் கத்திரிக்காய்கள்
இலவம்பாடி முள் கத்திரிக்காய்கள்

தனித்துவ அடையாளம்

“முள் கத்திரிக்காய்கள்லயே நிறைய ரகங்கள் இருக்கு. ஆனா, முள் இருந்தாலே அது இலவம்பாடி கத்திரிங்கற தவறான புரிதல் இருக்கு. குறிப்பா, ஆந்திராவுல இருந்து முள் கத்திரிக்காய்கள் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிபேட்டை மாவட்டங்களுக்குக் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுது. அதுவும்கூட இலவம்பாடி முள்கத்திரிக்காய்னுதான் மக்கள் நினைக்குறாங்க. மற்ற ரக முள் கத்திரிக்காய்களுக்கும் இலவம்பாடி முள் கத்திரிக்காய்க்கும் உள்ள வேறுபாட்டையும் ரொம்ப எளிதா கண்டு பிடிச்சுடலாம். இலவம்பாடி ரகக் கத்திரிச் செடியில அனைத்து பாகங்கள்லயும் முள் இருக்கும். இலையோட மேல் பகுதி, அடிப்பகுதி, அடித்தண்டு, காயின் காம்புப் பகுதினு எல்லாத்துலயும் முள் இருக்கும். மற்ற ரக முள் கத்திரிச் செடிகள்ல பெரும்பாலும் இலையோட மேல் பகுதியில மட்டும்தான் முள் இருக்கும். இலவம்பாடி கத்திரி பிஞ்சுகளா இருக்கும்போது அடர் ஊதா நிறத்துல இருக்கும். முதிர்ச்சி அடைஞ்சு விற்பனைக்கு வரும்போது, வெளிர் ஊதா நிறத்துக்கு மாறிடும். காய்களோட தோல் பகுதி நல்ல தடிப்பா இருக்கும். இவையெல்லாம்தான் இலவம்பாடி முள்கத்திரியோட தனித்தன்மை’’ என்கிறார்கள், இப்பகுதியில் வசிக்கும் முன்னோடி விவசாயிகள்.

கையுறைகள் வழங்க வேண்டும்

“இலவம்பாடி கத்திரிக்காய்ல சத்துகள் அதிகம். வீரிய ரகக் கத்திரிக்காய்களைவிட இதுல சுவையும் வாசனையும் அதிகம். ரசாயன உரங்கள் இல்லாமலே இது நிறைவான விளைச்சல் கொடுக்கும்னு தெரிஞ்சிருந்தும் கூட, இதைச் சாகுபடி செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டுறாங்கனா... இதுல அதிகமா முள்கள் இருக்குறதும் ஒரு முக்கியக் காரணம். காய்களைப் பறிக்கும்போது, காயங்கள் ஏற்படாமல் இருக்க... விவசாயிகளுக்குப் பாதுகாப்பான கையுறைகளை இலவசமா கொடுத்தால் ரொம்ப உதவியா இருக்கும்’’ என இப்பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்கள்.