நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஆண்டுக்கு ரூ. 3,00,000 சமவெளியிலும் வளரும் ஊடுபயிர் மிளகு!

பாலுசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
பாலுசாமி

மகசூல்

லைப்பயிர்களில் முக்கியமானது மிளகு. காபி, ஏலக்காய் தோட்டங்களில் ஊடுபயிராகச் சாகுபடி செய்யப்படுகிறது மிளகு. ஆனால், அந்த மிளகை, சமவெளிப் பகுதியில் பயிரிட்டு மகசூல் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, ஆலங்குடி பகுதி விவசாயிகள்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி யிலிருந்து 17 கி.மீ தொலைவிலிருக்கிறது வடகாடு கிராமம். இந்தப் பகுதியில் பலருக்கும் மிளகுச் சாகுபடியை அறிமுகம் செய்தவர் பாலுசாமி. மிளகுச் சாகுபடியில் முன்னோடி விவசாயியான பாலுசாமி தனது 3 ஏக்கர் நிலத்தில் மிளகுச் சாகுபடி செய்து வருகிறார். ஒரு காலைவேளையில் அவரது தோட்டத்துக்குச் சென்றோம்.

மிளகுச் செடியில் முற்றிலும் பூக்காத கொடிகளை அகற்றி விட்டுக்கொண்டிருந்தவர், அதை முடித்துவிட்டுப் பேசத் தொடங்கினார்.

மிளகுத் தோட்டம்
மிளகுத் தோட்டம்

கேரளா முதல் வடகாடு வரை

“டிப்ளோமா மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடிச்சிருக்கேன். அப்போ எங்க தோட்டத்துல வாழை, தென்னைதான் போட்டிருந் தோம். விவசாயம் எல்லாத்தையும் அப்பாதான் பார்த்துக்கிட்டு இருந்தாரு. அப்ப எனக்கு விவசாயத்துல எல்லாம் பெருசா நாட்டமில்லை. நம்ம ஊர்லயே பேப்பர் மில்லுல போர்மேனாக வேலை பார்த்தேன். அதற்கப்புறம், கேரளாவுல பேப்பர் மில்லில் மெஷின் பிட்டராக வேலை கிடைச்சது. 10 வருஷத்துக்கும் மேலாகக் கேரளாவுலதான் வேலை பார்த்தேன். கேரளாவுல திரும்பிய பக்கமெல்லாம், மிளகு கொடியாகத்தான் இருக்கும். எங்க ஓனருக்கு கேராளவுல பெரிய மிளகுத் தோட்டம் இருந்துச்சு. விடுமுறை கிடைக் கும்போதெல்லாம், அங்க போயிடுவேன். ஒரு வருஷம் பயங்கரமான மழை. 3 மாசம் தொடர் மழை. அதனால, மிளகு உற்பத்தி ரொம்பவே குறைஞ்சு போச்சுன்னு சொல்லி வேலையாட்கள் பேசிக் கிட்டாங்க. மிளகு வளர்றதுக்குச் சூரிய ஒளி படணும்கிற விஷயத்தை அவங்கதான் சொன்னாங்க. அதுவரைக்கும் குளிர் பிரதேசத்தில மட்டும்தான் மிளகு வளரும்னு நெனச்சுக்கிட்டிருந்தேன். அப்பதான், மிளகு செழிச்சு வளர்றதுக்கு நிழற்பாங்கான இடம் இருக்கிறதோடு கொஞ்சம் வெயில் படணும்கிறது தெரிஞ்சது.

கிளரிசீடியாவில் வளரும் மிளகு

நம்ம ஊர்ல தென்னைமரங்கள், பாக்கு மரங்கள் அதிகம். அரை நிழலும் வெயிலும் இருக்கும். பாசன வசதியும் இருக்கும். அப்ப நம்ம ஊர்லயும் வளரும்னு தோணுச்சு. நடவு செஞ்சுப் பார்க்கலாம்னு மொதல்ல 10 மிளகுச் செடிகளை பல ரகங்கள் கலந்தமாதிரி வாங்கிட்டு வந்து 1986-ல் நடவு செஞ்சேன். நான் நடவு செய்யும்போது பலபேரு, ‘இதெல்லாம் இங்க வளராது’னு கேலி, கிண்டல் பண்ணாங்க. ஆனா, அதை நான் கண்டுக்கல. கொடி வளர ஆரம்பிச்சது. தென்னையிலதான் மொதல்ல கொடியை வளரவிட்டிருந்தேன். தென்னை பராமரிப்பு, காய் பறிக்கும்போது மிளகுக் கொடிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருச்சு. அதுக்கப்புறம்தான் கிளரிசீடியா மரங்களை நட்டு வச்சு அதுல கொடிகளைப் படரவிட்டேன். இந்த மரத்தோட இலை பசுந்தாள் உரமாகப் பயன்படுது. மரத்தை வெட்டி விட்டாலும், மறுபடியும் துளிர்த்திடும். அதனால, இப்போ முழுசும் கிளரிசீடியாவைப் போட்டு, மிளகுக்கொடியை வளர்த்துக்கிட்டு வர்றேன். எல்லோரும் கிளரிசீடியாலதான் வளர்க் கணும்னு இல்லை. முள்முருங்கை, அகத்தியைத் தவிர்த்து, தென்னை, வாத நாராயணன், கிளுவைனு எல்லாத்துலயும் மிளகுக் கொடியைப் படர விடலாம்’’ என்றவர் மிளகு சாகுபடியைப் பற்றி விளக்கினார்.

மிளகுடன் பாலுசாமி
மிளகுடன் பாலுசாமி

ஏக்கருக்கு 300 கொடிகள்

‘‘என்னோட தோப்புல 25 அடி இடைவெளியில தென்னை மரங்கள் இருக்குது. ரெண்டு தென்னைக்கு நடுவுல ஒரு கிளரிசீடியாவை நடவு செஞ்சேன். இரண்டு தென்னைக்கு இடையே ஒரு கிளரிசீடியா மற்றும் இரண்டு தென்னை வரிசைக்கு இடையில் 12.5 அடி இடைவெளியில் ஒரு கிளரிசீடியா நடவு செஞ்சிருக்கேன். அதாவது கிளரிசீடியா செடிக்குச் செடி 25 அடி, வரிசைக்கு வரிசை 12.5 அடி இடைவெளியில நடவு செஞ்சிருக்கேன். இந்தக் கணக்குல நடவு செஞ்சா 140 கிளரிசீடியா மரங்களை நடவு செய்யலாம். நான் ஓரக்கால் எல்லாத்தையும் சேர்த்து ஒரு ஏக்கருக்கு 200 மரக்கன்றுகளை நடவு செஞ்சு, அதுக்கு கீழே மிளகை நடவு பண்ணியிருக்கேன்.

நடவுக்குப் பிறகு தொழுஉரம் மட்டும்தான் வச்சேன். ஒரு வருஷத்துல மகசூல் எட்டிப்பார்க்க ஆரம்பிச்சது. ரெண்டாவது வருஷம் மகசூல் அதிகமாச்சு. 3-வது வருஷத்துக்குப் பிறகுதான் நல்ல மகசூல் கிடைக்க ஆரம்பிச்சது. அதற்கப்புறம்தான் மிளகு சாகுபடியில முழுசா இறங்கிட்டேன். அப்ப இருந்து மிளகு மட்டும்தான் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருக்கேன்.

கேரளாக்காரங்க 36 ரகங்களைப் பயிரிடுறாங்க. அதுல 10 ரகங்களைத் தேர்வு பண்ணி வாங்கிட்டு வந்து, இங்க விளைய வெச்சேன். அதுல, கரிமுண்டா, வயநாடு, காவேரி, பண்ணியூர் 7, 8, செலக்க்ஷன் என 6 ரகங்கள் மட்டும் நல்லா வளர்ந்து, நல்ல மகசூல் கொடுத்துக்கிட்டு இருக்குது. 6 ரகமும் இப்போ நம்மகிட்ட இருக்கு. 2019-ம் வருஷம் தான் ‘செலக்சன்-1’ ரகத்தை அறிமுகப்படுத்தி யிருக்காங்க. அதோட நாத்துகளையும் வாங்கி வந்து நடவு செஞ்சிருக்கேன். நல்லாவே காய்ப்பு இருக்கு.

தென்னைமரத்தைச் சுற்றி மிளகுக் கொடி
தென்னைமரத்தைச் சுற்றி மிளகுக் கொடி

கரிமுண்டா, காவேரி, வயநாடு எல்லாம் மழை பெஞ்சாலும் பெய்யலைன்னாலும் பூமியில இருக்க ஈரப்பதத்தை வச்சுக் காய்க்கக்கூடியது. சமவெளியில ரொம்ப நல்லா வளர்றது கரிமுண்டாதான். இது நாட்டு ரக மிளகு. இது வருஷம் முழுசும் காய்க்கும். நடவு செஞ்ச அடுத்த வருஷமே காய்க்கத் தொடங்கிடும். இருந்தாலும் 3 வருஷத்துக்குப் பிறகு, நல்ல மகசூலை எதிர்பார்க்கலாம். குறைந்தபட்சம் ஒரு மிளகுக் கொடியில ஒரு கிலோ காய்ஞ்ச மிளகு மகசூல் எடுக்கலாம். நான் போட்டிருக்கிறது இப்ப ரொம்ப வருஷம் ஆனதால ஒரு கொடியில இருந்து வருஷம் 2 முதல் 4 கிலோ வரைக்கும் காய்ஞ்ச மிளகு கிடைக்குது. சராசரியா 2 கிலோவுக்குக் குறையாது.

மிளகு, நீண்டகாலப் பயிர் என்பதால, ரசாயன உரங்கள் எதுவும் தேவையில்லை. ரசாயன உரங்களை அறவே தவிர்த்துவிட்டேன். வளர்ந்த செடிக்கு ஒரு கூடைத் தொழுஉரமே போதுமானது. ஒரு செடிக்கு அரையடி தள்ளி வட்டப்பாத்தி எடுத்துத் தொழுஉரத்தைப் போட்டால் போதும். ஆரம்பத்துல ஜீவாமிர்தம் கொடுத்தேன். காய்ப்புத்திறன் அதிகமானது கண்கூடாகத் தெரிஞ்சது. இப்ப எல்லாம் நான் உரத்தைப் பத்தி பெருசா யோசிக்கிறதில்ல. எனக்குத் தொடர்ந்து, நல்ல மகசூல் கிடைச்சுட்டு வருது.

பூச்சி, நோயைக் கட்டுப்படுத்திய இயற்கை வேளாண்மை!

ஆரம்பத்திலிருந்தே இயற்கை விவசாயம் பண்றதாலயோ என்னவோ, என்னோட இத்தனை வருஷ அனுபவத்தில பூச்சித் தாக்குதலே இல்லை. அதே மாதிரி வேர் அழுகல் நோய் மாதிரியான பிரச்னையும் இல்லை. இப்போ போஸ்ட் (கம்பு) முறையிலயும் மிளகுக் கொடிகளைப் படரவிட்டு வளர்க்கிறாங்க. கொடிகள் படர மரங்களுக் கிடையில, சிமென்ட் போஸ்ட்களை நட்டு அதுல கம்பி வலையைக் கட்டிவிட்டு, வேர்கள் நன்றாகப் பிடிக்கும்படி போஸ்ட்டுக்கும் கம்பிக்குமிடையில, தேங்காய் மஞ்சு, சருகுகளைப் போட்டா, நல்லா வேர் பிடிச்சி மகசூல் அதிகரிக்கும். ஆனாலும், இந்த முறையில கொஞ்சம் கூடுதலாகப் பணமும் செலவு செய்யணும். என்னோட அனுபவத்தில, ‘மரங்கள்ல படரவிடுறதுதான் சிறந்தது’னு சொல்லுவேன். மரங்கள் மூலமா சரியான நிழல் கிடைக்கும். அதே நேரத்துல மரங்களோட சருகுகள் உரமாக மாறிடும்’’ என்றவர் தற்போதைய வருமானம்பற்றிப் பேசினார்.

ஆண்டுக்கு ரூ. 3,00,000 சமவெளியிலும் வளரும் ஊடுபயிர் மிளகு!

‘‘இப்ப 3 ஏக்கர்ல கொடி மிளகு இருக்குது. ஒரு ஏக்கர்ல 300 கொடிங்க. ஒரு கொடியில இருந்து ஒரு வருஷத்துக்குச் சராசரியா 2 கிலோ கிடைக்குது. ஆக மொத்தம் 600 கிலோ மிளகு கிடைக்குது. ஒரு கிலோ மிளகு வெளி மார்க்கெட்ல 350-400 ரூபாய்க்குக் கொள்முதல் செய்றாங்க. நான் நேரடியா விக்குறதால சராசரியா 500 ரூபாய்க்குக் விக்கிறேன். அந்தக் கணக்குல 3,00,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. அதுல செலவு 50,000 ரூபாய் ஆகும். மீதிப் பணம் லாபம்தான். தென்னந்தோப்புல ஊடுபயிரா இருக்க மிளகுல இருந்து தென்னையைவிட அதிக வருமானம் கிடைக்குது’’ என்றவர் நிறைவாக, ‘‘மிளகு வளரக்கூடிய சூழல் இருக்கக்கூடிய விவசாயிகள் மிளகை ஊடுபயிராகச் சாகுபடி செஞ்சா போதும். நல்ல வருமானம் பார்க்கலாம்’’ என்றார் நம்பிக்கையுடன்.

தொடர்புக்கு, பாலுசாமி, செல்போன்: 97860 29011.

கஜா கற்றுத் தந்த பாடம்!

‘‘எங்களை கஜா புயல் கதிகலங்க வெச்சிடுச்சு. தென்னை மரங்களை எல்லாம் வேரோட பிடுங்கி சாய்ச்சு போட்டுருச்சு. கடுமையான பாதிப்பு. அதிக மகசூல் கொடுத்துக்கிட்டு இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மிளகுக் கொடிகள் எல்லாம் சேதமாகிருச்சு. அதையெல்லாம், சரி செஞ்சு மறுபடியும் துளிர்க்க வச்சாலும், பழையபடி அந்தக் கொடிகள்ல இருந்து மகசூல் எடுக்க முடியலை. அதுதான் மிளகுச் செடிகளைச் சோதனை முறையில நடவு செஞ்சிருந்த நேரம். ஆரம்பத்துல 10 கொடிக்கு 1 செடின்னு போட்டுப்பார்த்தேன். புயல்ல கொடி எல்லாம் சாய்ந்து போச்சு. செடி மட்டும் அப்படியே இருந்துச்சு. அது கஜா கற்றுக்கொடுத்த பாடம். அதுக்கப்புறம்தான் முழுமையா செடியை உற்பத்தி பண்ணி நடவு செய்ய ஆரம்பிச்சிட்டேன்.

என்னோட தோட்டத்துல கிளரிசீடியா வுக்குக் கீழே மிளகுச் செடியைப் போட்டிருக்கேன். 8-ம் மாசத்திலயே அதுவும் 2 அடி வரும்போதே, காய்ப்பு வந்திருக்கு. ரெண்டாவது வருஷத்துக்குப் பிறகு, கண்டிப்பாக நல்ல மகசூல் கிடைக்கும். 6 அடிக்கு 6 அடி இடைவெளியில 1 ஏக்கர் நிலத்துல 1,000 செடி வரையிலும் நடவு செய்யலாம். கொடி மாதிரி இல்லை செடி மிளகு. ரெண்டாவது வருஷத்துல செடிக்கு உலர்ந்த மிளகு 1 கிலோ வச்சாலும், 1 டன் மகசூல் எடுத்திடலாம். நான் செடி மிளகை நடவு செஞ்சு இப்போ 8 மாசமாச்சு. இன்னும் ஆறு மாசத்துல கட்டாயம் வருமானம் பார்த்திடுவேன்’’ என்கிறார் பாலுசாமி.

இப்படித்தான் மிளகு சாகுபடி!

மிளகு சாகுபடி செய்யும் முறைகள் குறித்துப் பாலுசாமி சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...

ஆண்டுக்கு ரூ. 3,00,000 சமவெளியிலும் வளரும் ஊடுபயிர் மிளகு!

மிளகு நடவு செய்ய ஜூன், டிசம்பர் மாதங்கள் ஏற்றவை. செம்மண் பூமியில் நன்றாக வளரும். மணற்பாங்கான நிலங்கள், கரிசல் மண் நிலங்களில் வளராது. மைக்ரோ கிளைமேட் சூழல் அவசியம். அதற்கு நல்ல நிழல் தரும் தென்னை, பாக்குத் தோட்டங்களில் சாகுபடி செய்யலாம். தென்னைக்கு அருகில் நடவு செய்தால், 2 கன்றுகளும், பாக்கு மரத்துக்கு அருகில் நடவு செய்தால் ஒரு கன்றும் நடவு செய்யலாம். கொடி படர்ந்து மரங்களை அடைவதற்காக அருகில் குச்சிகளை நட்டு வைக்க வேண்டும். கொடி மரத்தில் படரத் தொடங்கியவுடன் குச்சிகளை எடுத்து விட வேண்டும். நடவு செய்த இடத்திலிருந்து மரத்தின் வேர்வரை தரையில் படர்ந்து இருக்கும் கொடியின் மீது மண்ணைப் போட்டு மூட வேண்டும். அப்போதுதான் கொடியில் புதிய வேர்கள் தோன்றி கொடி பலமாகும். நடவு செய்தவுடன் தண்ணீர்ப் பாய்ச்ச வேண்டும். அதன் பிறகு, மிளகுக்குத் தனியாகப் பாசனமோ, பராமரிப்போ அதிகம் தேவைப்படாது. தென்னைக்குப் பாசனம் செய்யும் தண்ணீரில் மிளகும் வளரும். கிளரிசீடியா அருகே நடவு செய்யும்போது, அருகிலேயே நடவு செய்யலாம். கொடி நன்றாக வளர்ந்த பிறகு, ஆண்டுக்கு ஒருமுறை ஒவ்வொரு கொடிக்கும் 5 கிலோ தொழுவுரம் வைக்க வேண்டும். சுமார் 50 ஆண்டுகள் வரை கொடிகள் வாழும்.

சமவெளியிலும் வளர்க்கலாம்..!

மவெளிப் பகுதியில் மிளகு சாகுபடி குறித்து, கர்நாடகாவைச் சேர்ந்த மிளகு ஆராய்ச்சியாளரும், வேளாண் ஆய்வாளருமான பிரான்சிஸ் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். ‘‘மேற்குத் தொடர்ச்சி மலைதான் மிளகுப் பயிருக்கான தாய்மடி. மிளகு ஒன்றரை ஆண்டு முதல் 3 ஆண்டுகளில் மகசூலுக்கு வரும். தற்போது பக்கக்கிளைகளில் வரக்கூடிய பூங்கதிர்களில் மிளகு உருவாகும். அந்தப் பக்கக்கிளைகளை வெட்டி, பதியன் உருவாக்கி நடவு செய்யும் முறை, ஒட்டு கட்டுதல் முறையென இரண்டு முறைகளில் மிளகு நாற்று உருவாக்கப்படுகிறது. செடி மிளகு பல்வேறு நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நான் மிளகு சாகுபடி தொடர்பாக ஆய்வு செய்திருக்கிறேன். அந்தப் பகுதி மண், அமில மண். அதில் மிளகு நன்றாக வளரும். மலைப்பகுதியில் விளையும் தேயிலை சமவெளிப் பகுதியான அஸ்ஸாமில் விளைவது போலத்தான் இதுவும். அஸ்ஸாம் அமில மண் என்பதால்தான் அங்கு தேயிலை விளைகிறது. மூன்றாண்டுகளுக்கு மேலான மிளகுக்கொடியில் ஒரு கிலோ முதல் 3 கிலோ வரை மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. அது சாகுபடி நிலத்தின் மண், சுற்றுச்சூழலைப் பொறுத்து மாறுபட வாய்ப்புள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மிளகு சாகுபடிக்குத் தேவையான நிழலும், மற்ற பகுதிகளைவிட சீதோஷ்ண நிலை வேறுபட்டதாக மாற்றி வைத்திருந்தால் நன்றாக வளரும். தமிழகத்தில் அதற்கு வாய்ப்புள்ள அனைத்து பகுதிகளிலும் சாகுபடி செய்யலாம். ஆனால், புதிதாகச் சாகுபடியில் இறங்குபவர்கள் சோதனை முயற்சியாகக் குறைந்தளவு கொடி, செடிகளை நடவு செய்து, வளர்ச்சி, மகசூல் பார்த்த பிறகு, முழுமையான சாகுபடியில் இறங்க வேண்டும்” என்றார்.

தொடர்புக்கு, பிரான்சிஸ், செல்போன்: 94884 85892

தரமும் காரமும் இருக்கு!

பாலுசாமியிடம் மிளகு வாங்கும் கோவையைச் சேர்ந்த சுதாவிடம் பேசினோம். “சமூக வலைதளம் மூலம் பாலுசாமி ஐயாவின் முகவரி, தொலைபேசி எண் கிடைத்தது. கடந்த ஒரு வருடமாக ஐயாவிடம்தான் மிளகு வாங்குகிறேன். முன்பெல்லாம் கடைகளில் சென்றுதான் வாங்குவேன். அதில் பப்பாளி விதை கலப்படம் அதிகம். ஐயாவிடம் வாங்கும் மிளகு கலப்படமில்லாமல் சுத்தமானதாகவும் அதே நேரத்தில் காராமாகவும் இருக்கிறது. இப்போது என் நண்பர்கள், உறவினர்களுக்கும் ஐயாவிடம்தான் மிளகு வாங்கிக்கொடுக்கிறேன். ஐயாவிடம் ஒரு கிலோ மிளகை 500 ரூபாய்க்கு வாங்குகிறேன்” என்றார்.

அதிக உயரம் ஆகாது!

“கொடிகள் 10 அடிக்கு மேல போயிட்டாலே அறுவடை செய்றது சவாலாகிடும். நான் அதிகபட்சம் 15 அடி வரையிலும் படரவிட்டிருக்கிறேன். 15 அடி உயரத்துக்கு மேல போகாம கொடிகளை வெட்டிவிடணும். அதோட, பூக்காத கொடிகளை நீக்கிட்டு, இளம் செடிகளைப் படரவிடணும். 3 அடி உயரம் வரைக்கும் வளர்ந்த கிளைகளை மடிச்சு மண்ணுல ஊன்றிவிடணும். அதிலிருந்து புதுசா வளர்ந்து வர்ற கிளைகளை மெல்லிய நார் வெச்சுக் கட்டி மரத்துல ஏற்றி விடலாம். இதனால அடிப்பக்கத்திலேயே அடர்த்தியாகக் கிளைகள் வளர்ந்து அதிக காய்களைத் தரும். அறுவடை ஏணியை வெச்சு ஏறி அறுவடை செய்யலாம்” என்கிறார் பாலுசாமி.