
கால்நடை
விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ராஜசேகர், இளம் வயதில் வேலைதேடி சென்னைக்கு வந்திருக்கிறார். பல்வேறு சவால்களைக் கடந்து, தற்போது ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வரும் தொழிலதிபராக உயர்ந்திருக்கிறார். பத்தாவது மட்டுமே படித்தவர், இன்று 250 பேருக்கு முதலாளி! நகரமயமாதலின் பின்னணியில் இயற்கையின் தன்னியல்பு மாற்றப்படுவதை உணர்ந்தவர், இயற்கை விவசாயத்தில் களமிறங்கியிருக்கிறார். மேலும், நாட்டுக்கோழி வளர்ப்பிலும் அசத்திவருகிறார்.

சென்னையை அடுத்த வண்டலூர் - கேளம்பாக்கத்துக்கு இடையே இருக்கிறது புங்கேரி கிராமம். ஊர் மையப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் அருகில் இருக்கிறது இவரது பண்ணை. காலைப்பொழுதில் கோழிகளுக்குத் தீவனமிட்டுக்கொண்டிருந்த ராஜசேகரைச் சந்தித்தோம். நம்மை இன்முகத்துடன் வரவேற்றுப் பேசினார்.
“என் பூர்வீகம் திருச்சி மாவட்டம் முக்கொம்பு அருகேயுள்ள சிறுகமணி கிராமம். என் பெற்றோர் ஆறு ஏக்கர்ல இயற்கை முறையில் விவசாயம் செய்தாங்க. அப்போ எனக்கு விவசாயத்தில் ஆர்வமில்லை. பத்தாவது படிச்ச நிலையில, 25 வருஷத்துக்கு முன்னாடி வேலைதேடிச் சென்னை வந்தேன். நிறைய கஷ்டப்பட்டேன். ஒருகட்டத்துல ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கி படிப்படியா வளர்ந்து, ‘கிங் மேக்கர்’ங்கிற நிறுவனத்தை வெற்றிகரமா நடத்திட்டிருக்கேன். இந்த நிலையில, அதிகரிச்சுட்டு வரும் ரசாயன உணவுகளால நம் உடல்நலனை மட்டுமல்லாம, இயற்கை யையும் கெடுக்கிறோம். மேலும், இயற்கை வாழ்விய லிலிருந்து விலகி சந்தோஷ மில்லாம அவசர அவசரமான வாழ்க்கையை வாழ்ந்து கிட்டிருக்கிறோம்.

இதற்கெல்லாம் மாற்று வழியான மரபுவழி வேளாண் மையை, நம்மாழ்வார் ஐயாவின் ‘இயற்கை வாழ்வியல் முறையில் மீட்டெடுக்கலாம்’னு முடிவெத்தேன். மூணு வருஷத்துக்கு முன்ன இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். திருநாகேஸ் வரத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி திருவேங்கடம் எனக்கு வழிகாட்டினார். இதுக்கிடையில, குழந்தை களோட ஆரோக்கியத்தைக் கெடுக்குற பிராய்லர் கோழி பயன்பாடு எனக்குப் பிடிக்கல.அதுக்காக நானே ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி நாட்டுக்கோழி வளர்க்க ஆரம்பிச்சேன்” எனக் கோழிப் பண்ணைத் தொடங்கிய கதையைச் சொன்ன ராஜசேகர் தொடர்ந்தார்.
கடக்நாத் பெட்டைக்கோழிக்கு டிமாண்டு அதிகம்
“சத்து நிறைந்த கடக்நாத் கோழியை வளர்க்க முடிவெடுத்து, அந்தக் கோழி வளர்ப்பில் அனுபவமுள்ள சிலரைச் சந்திச்சேன். அவங்க ஆலோசனையைக் கேட்டு கிட்டேன். கோழி வளர்ப்பில் உள்ள சவால்கள், எளிய யுக்திகள், விற்பனை வாய்ப்பு களைத் தெரிஞ்சுகிட்டேன். முட்டையிடும் பருவத்தில் உள்ள கடக்நாத் பெட்டைக்கோழிக்குத் தேவை அதிகம். ஒரு கோழி 900 ரூபாய் வீதம், நாட்டுக்கோழி வளர்க்கிறவங்ககிட்ட இருந்து 200 தாய்க் கோழிகளையும், 20 சிறிய பெட்டைக்கோழிகளையும் வாங்கினேன். அதேபோல தலா 600 ரூபாய் வீதம், சிறுவிடை ரகத்துல முட்டையிடுற பருவத்தில 30 பெட்டைக் கோழிகள், 5 சேவல்களையும் வாங்கினேன். வளர்ந்த பெருவிடை கோழியின் விலை அதிகம் சொன்னாங்க. அதனால அந்த ரகத்துல மட்டும் ஒரு மாத வயசுல 100 குஞ்சுகளை வாங்குனேன்.

இந்தப் பண்ணை இருக்கிற 5 ஏக்கர் வாடகை நிலத்தில, 1,800 சதுர அடியில் 13 அறைகள் கொண்ட கொட்டகை அமைச்சிருக்கேன். அதுல முட்டையிடும் கோழிகள், இன்குபேட்டர், ஒரு மாச, ரெண்டு மாச குஞ்சுகள், மூணு ரகத்திலும் நல்லா வளர்த்தக் கோழிகள்னு பருவம் வாரியா கோழிகளுக்குத் தனித்தனி அறைகள் இருக்கு. இரவிலும் வெயில் நேரத்திலும்தான் கோழிகள் கொட்டகையில் அடையும். மத்த நேரங்கள்ல, மூணு ஏக்கர் நிலத்தில மேய்ச்சல் முறையிலதான் வளருது.

மேய்ச்சலால் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி
கம்பு, மக்காச்சோளம், கோதுமைத்தவிடு மாதிரியான அடர்தீவனங்கள், முருங்கைக்கீரைனு பல கீரை வகைகள தீவனமாகக் கொடுக்கிறோம். தினமும் காலையில் மஞ்சள்தூள் கலந்த வெந்நீரை எல்லாக் கோழிகளுக்கும் குடிக்கக் கொடுத்த பிறகே, மேய்ச்சலுக்குத் திறந்துவிடுவோம். இதனால நோய் எதிர்ப்பு சக்தியுடன் எல்லாக் கோழிகளும் திடகாத்திரமா வளருது. நாங்களே பிடிக்கச் சிரமப்படும்படியா உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் ஓடியாடித் திரியுது. பண்ணையில அடைச்சு வளர்க்கிற கோழிகளுடன் ஒப்பிடும்போது, இந்தக் கோழிகளைப் பார்க்கிறப்போ நமக்கே பெரிய நம்பிக்கையும் உற்சாகமும் கிடைக்குது. மீதமுள்ள ரெண்டு ஏக்கர் நிலத்துல இயற்கை விவசாயம் செய்றேன். கோழிகளோட எச்சம் பயிர்களுக்கு உரமாகிடுது. கடந்த போகத்துல உளுந்து போட்டிருந்தேன். இப்ப காய்கறிச் சாகுபடிக்கு நிலத்தைத் தயார்படுத்தியிருக்கிறேன்” என்றவர், விற்பனை வாய்ப்புகள் குறித்துப் பேசினார்.

வாடிக்கையாளர்களே தேர்வு செய்யலாம்
“பண்ணையில 1,000 கோழிகளுக்கு அதிகமா இருக்கு. முட்டையிடும் பக்குவத்துல 150-200 பெட்டைக்கோழிகளை மட்டும் எப்போதும் இருப்பு வெச்சுக்குவோம். தவிர 7-8 மாத வயசுல உள்ள எல்லாக் கோழிகளையும் வாரத்துக்கு ஒருமுறை சென்னை மதுரவாயலில் இருக்க எங்க விற்பனைக் கூடத்துக்குக் கொண்டு போயிடுவோம். போதிய இடவசதி இருக்கிறதால கோழிகள் அங்கேயிருக்கும் சில தினங்களுக்கும் மேய்ச்சல்லதான் இருக்கும். வாடிக்கையாளர்கள் அவங்களுக்கு வேண்டிய கோழிகளை நேடியாகவே தேர்வுசெஞ்சு உயிரோடவோ, கறியாகவோ அவங்க விருப்பத்துக்கு ஏத்தமாதிரி வாங்கிட்டுப் போவாங்க. சராசரியா 500 கடக்நாத் கோழிகள், சிறுவிடை, பெருவிடை ரகத்தில மொத்தம் 300 கோழிகள்னு மாசத்துக்கு 800 கோழிகளை விற்பனை செய்றேன். கடக்நாத் கோழி மொத்த விற்பனையில 500 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில கிலோ 600 ரூபாய்க்கும் கொடுக்கிறோம். 500 ரூபாய்னே கணக்கு வெச்சுக்கலாம். சிறுவிடையும் பெருவிடையும் கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்றோம்.

வருமானத்தில் 50% செலவு
ஒரு கோழி சராசரியா ஒரு கிலோ இருக்கும். அந்த வகையில மாதம்தோறும் கடக்நாத் கோழி விற்பனை மூலமா 2,50,000 ரூபாயும், சிறுவிடை மற்றும் பெருவிடை ரகக் கோழி விற்பனைமூலம் 1,20,000 ரூபாயும் கிடைக்குது. இதில், பண்ணை மற்றும் விற்பனைக் கூடத்துக்கான வாடகை, பராமரிப்பாளர் செலவு, தீவனம், போக்குவரத்துச் செலவு, மின்சாரச் செலவுகளுக்கு ஒவ்வொரு மாசமும் விற்பனையில 50 சதவிகிதம் செலவாகும். அந்த வகையில் மொத்த வருமானம் 3,70,000 ரூபாயில, செலவினம் 1,85,000 ரூபாய் போக 1,85,000 ரூபாய் லாபமாக நிக்கும். பருவநிலை சூழல்களுக்கு ஏற்ப இந்த வருமானத்தில மாற்றமும் வரலாம்” என்ற ராஜசேகர், சுறுசுறுப்பாக மேய்ந்துகொண்டிருந்த கோழிகளுக்கு அசோலாவைத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, நிறைவாகப் பேசியவர்,

“கோழி வளர்க்க ஆசைப்படுறவங்க முதல்ல முட்டையிடுற பருவத்தில் சில கோழிகளை வாங்கி வளர்த்து, சாதகப் பாதக அம்சங்களைத் தெரிஞ்சுக்கணும். அந்த அனுபவம் நம்பிக்கையைக் கொடுத்தால், பிறகு அதிக எண்ணிக்கையில கோழிகளை வளர்க்கலாம். ஒரு வருஷத்துக்குப் பிறகுதான் லாபத்தை எதிர்ப்பார்க்கணும். இப்படி முறையான அனுபவத்தோட கோழி வளர்ப்பில ஈடுபட்டா வெற்றி நிச்சயம்” என்கிறார் உறுதியான குரலில்.
தொடர்புக்கு, ராஜசேகர், செல்போன்: 77086 77277
வாரம் 400 முட்டைகள்!
“ஆயிரம் முட்டைகள் இருப்பு வைக்கிற மாதிரி பெரிய இன்குபேட்டரை வெச்சிருக்கோம். அதுல 5 நாளுக்கு ஒரு தடவை 400 முட்டைகளை வைப்போம். உள்ள வைக்குற தேதியை, ஒவ்வொரு முட்டையிலும் மார்க் பண்ணிடுவோம். முழுக்கவே ஆட்டோமேட்டிக் முறையில இயங்குற இன்குபேட்டர். குளிர், வெப்பம் இரண்டுக்கும் ஏற்பச் செயல்படும். முட்டையை வைப்பது, குஞ்சு வெளியில் வரும்போது எடுப்பது மட்டுமே நம்ம வேலை” என்கிறார் ராஜசேகர்.
செலவுகளைக் குறைக்கும் முருங்கைக்கீரை, அசோலா!
கோழிகளுக்கான தீவனச் செலவுகளைக் குறைக்கும் விதம்பற்றிப் பேசிய ராஜசேகர், ‘‘கொட்டகை அமைக்கும்போதே, கோழிகளுக்கு ஆரோக்கியமான தீவனம் கொடுக்க ரெண்டு ஏக்கர்ல 1,000 செடி முருங்கைக் கன்றுகளை வாங்கி வந்து நடவு செய்தோம். எந்தவித ரசாயன உரமும் சேர்க்காம, முருங்கையை வளர்க்கறோம். முருங்கை மரம் உயரமா வளராத வகையில் அவ்வப்போது கவாத்து செய்திடுவோம். முருங்கைக் கீரையை வெந்நீரில் சேர்த்து, அதனுடன் மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு கலந்து வேகவெச்சு தினமும் காலை வேளையில் கோழிகளுக்குக் கொடுப்போம். தவிர, கோழிகளும் அதுவாகவே முருங்கைக்கீரையைக் கொத்திச் சாப்பிடும்.
எங்க பண்ணையிலயே 20 அடி நீளம், 6 அடி அகலம், அரையடி ஆழம் கொண்ட மூணு தொட்டியில் அசோலா வளர்க்கிறோம். அதைத் தினமும் காலை, மதியம் நேரங்கள்ல தீவனமாகக் கொடுப்போம். கோழிகள் ஆர்வமா சாப்பிடும். தவிர, காய்கறிச் சந்தையில் இலவசமாகக் கிடைக்கும் முட்டைக்கோஸ், காலிஃபிளவர் இலைகளை நறுக்காம அப்படியே தீவனமாகக் கொடுப்போம்.”
இரும்புக் கொட்டகை வேண்டாம்!
“பனிக்காலத்தில் கோழிகள் அடையும் இரும்புக் கொட்டகையில் அதிகளவில் பனி இறங்கி, ஆரம்பத்துல நிறைய கோழிக் குஞ்சுகள் உயிரிழந்தன. அதனால, பனி புகாதவாறு கொட்டகையைச் சுற்றி சாக்கு பையைக் கட்டிவிட்டு கதகதப்பான சூழலை உருவாக்கினோம். அதன் பிறகுதான் கோழிகள் உயிரிழப்பது கட்டுக்குள் வந்தது. எனவே, இதுபோன்ற விஷயங்களையும் முன்கூட்டியே திட்டமிட்டு கொட்டகையை வடிவமைத்தால், தேவையற்ற செலவுகளைக் குறைக்கலாம். புதிதாகப் பண்ணை அமைப்பவர்கள், இரும்புக் கொட்டகை அமைப்பதைத் தவிர்க்கவும்” என்கிறார் ராஜசேகர்.
தனித்தனி வலைகள்!
“இன்குபேட்டரில் வைக்கப்பட்ட முட்டையிலிருந்து 18 நாள்களுக்குப் பிறகு குஞ்சு வெளிவந்ததும், அதை 10-15 நாள்கள் புரூடரில் வைக்கணும். பிறகு, குஞ்சுகளைப் பருவம் வாரியாகத் தனி அறையில் ரெண்டு மாசம் வெச்சிருந்து, மேய்ச்சலுக்கு விட்டுவிடுவோம். ஒவ்வொரு ரகக் கோழிக்கும், அதன் வளர்ச்சிக்கு ஏற்பத் தனித்தனியே வலை கட்டிவிட்டிருக்கிறோம். கோழிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மேய்ச்சலுக்கான இட வசதி இருக்குது. அதனால அதுங்க சண்டை போட்டுக்கிறதில்லை.
குஞ்சுகள்ல 20 சதவிகிதம் இழப்பு வரும். ரெண்டு மாசம் குழந்தையைப் பார்த்துக்குற மாதிரி கவனமா பார்த்துகிட்டா பிறகு, கோழிகள்ல பெருசா இழப்பு ஏற்படாது. தினமும் ரெண்டு தடவை கோழிகளுக்கான குடிநீரை மாத்திடுவோம். சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்போம். ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே கொடுப்போம். கீரைகள், கற்றாழை, பசுந்தழைகள், அறுகம்புல், மூலிகை சாதம் கொடுப்போம். அதனால கோழிகளுக்கு எந்த நோயும் வர்றதில்லை. இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தியோட, மேய்ச்சல் முறையில வளர்றதால, கோழிகளுக்குத் தடுப்பூசிகள்கூடத் தேவைப்படுறதில்லை” என்கிறார் ராஜசேகர்.
முட்டைகள் விற்பனைக்கு இல்லை!
குஞ்சுப் பருவத்தில் இருக்கும் கோழிகளை வாங்கி வளர்க்கும்போது, பருவநிலை உள்ளிட்ட காரணங்களால வளர்றதுல சில சிக்கல்கள் உருவாகலாம். அதனால சில மாதங்கள் வளர்ந்த கோழிகளை வாங்கலாம். இல்லைன்னா முட்டையிடுற பக்குவத்துல நோய் எதிர்ப்பு சக்தியுள்ள கோழிகளை வாங்கி வளர்த்து இனவிருத்தி செய்றதுதான் நல்லது. பெருவிடை ரகத்துல மட்டும் ஆரம்பத்துல 100 குஞ்சுகளை வாங்கி வளர்த்தேன். அதுல 60 கோழிகள் மட்டும்தான் நல்லா வளர்ந்து வந்துச்சு. அந்த அனுபவத்துல இருந்து, என் பண்ணையிலயே குஞ்சுப் பொரிச்சுதான் கோழிகளோட எண்ணிக்கையை அதிகப் படுத்துறேன். வெளியிலிருந்து கோழிகளை வாங்குறதில்லை. முட்டைகள், கோழிக் குஞ்சுகளையும் விற்பனை செய்வதில்லை.