30 பெண் பன்றிகள்... ஆண்டுக்கு ரூ. 32 லட்சம்! வெகுமதி கொடுக்கும் வெண்பன்றி வளர்ப்பு!

கால்நடை வளர்ப்பு
ஆடு, கோழிகளுக்கு அடுத்தபடியாக இறைச்சித் தேவைக் காக வளர்க்கப்படுவது வெண்பன்றி தான். குறுகிய காலத்தில் இதன் உடல் எடை கணிசமாக அதிகரிப் பதும், ஒரே ஈத்தில் கணிசமான எண்ணிக்கையில் குட்டிகள் கிடைப்பதும் வெண்பன்றியின் சிறப்பு. கால்நடை வளர்ப்பில் குறைவான பராமரிப்பில் நிறைவான லாபம் தருவதால்தான் பெரும்பாலானோர் வெண்பன்றி வளர்ப்பில் ஈடுபடுவதாகச் சொல்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் தூத்துக்குடியைச் சேர்ந்த தாமோதரன்.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள கீரனூரில் உள்ளது தாமோதரனின் பன்றிப் பண்ணை. பன்றி களுக்குத் தீவனம் வைத்துக் கொண்டிருந்தவரை ஒரு காலைவேளையில் சந்தித்தோம். ‘‘அடிப்படையில நான் விவசாயக் குடும்பத் தைச் சேர்ந்தவன். தாமிரபரணி தண்ணீர்ச் செழிப்பான பகுதிங்கிறதுனால, சுற்று வட்டாரப் பகுதியில வெற்றிலை, வாழையை மட்டும்தான் சாகுபடி செய்வாங்க. திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பி.எஸ்ஸி விலங்கியல் முடிச்சுட்டு சென்னையில ஒரு பிரைவேட் கம்பெனியில கிளார்க்கா வேலைக்குச் சேர்ந்தேன். சென்னையில இருந்தாலும் மாசத்துக்கு ரெண்டு, மூணு தடவை ஊருக்கு வர்றதை வழக்கமா வெச்சிருந்தேன். சென்னையில வேலை பார்த்தாலுமே, இன்னொரு தொழில் ஏதாவது செய்யலாம்னு எனக்கு ஒரு யோசனை தோணுச்சு. வீட்டுல ஆடு, மாடுகள் ஏற்கெனவே இருந்துச்சு. பொதுவா கால்நடை வளர்ப்புன்னாலே ஆடு, மாடு, வாத்து, முயல், கோழியைத்தான் எல்லாரும் விரும்பி வளர்ப்பாங்க.
அனுபவமே ஆசான்
அதுலயும் நாம தனித்துவமா இருக்கணும்னு அதுசம்பந்தமா யோசிச்சப்போதான் பன்றி வளர்ப்பு பற்றித் தெரிஞ்சுகிட்டேன். மற்ற கால்நடைகளைவிட ‘ஒரே ஈத்தில் 12 குட்டிகள் வரைக்கும் போடும். அதிக பராமரிப்பு தேவையில்லை, கேரளாவுல வருஷம் முழுக்க நல்ல தேவை இருக்கு’ன்னு தெரிஞ்சுக்கிட்டு பன்றிப் பண்ணைகளைப் பார்க்கலாம்னு முடிவெடுத்தேன். ‘ஒருவர் எப்படி வெற்றி பெற்றார் என்பதைவிட, எதனால் தோற்றார். அதுக்கான காரணத்தைத் தெரிஞ்சுகிட்டாலே நமக்கு வெற்றிதான்’ என்பதை அதிகம் நம்புறவன் நான். அதனால, பன்றிப் பண்ணையை மூடியவர்கள், பாதியில் தொழிலைக் கைவிட்டவர்கள்னு 6 பேரைச் சந்திச்சேன். அவங்க தோற்றுப் போனதுக்கான காரணத்தைச் சொன்னாங்க. அதுல இருந்து பாடம் கத்துக்கிட்டு எனக்குச் சொந்தமான நிலத்துல, பன்றிப்பண்ணைக்கான கட்டடம் கட்டினேன்.

2006-ம் வருஷம் அபிசேகப்பட்டியில முதல்கட்டமா 10 பெண் பன்றிகள், ஒரு ஆண் பன்றியை வெச்சு பண்ணையை ஆரம்பிச்சேன். என்னோட உறவினர் ஒருத்தர் பொறுப்பா பார்த்துக்கிட்டதுனால, பராமரிப்புல எனக்குப் பிரச்னையில்லாம இருந்துச்சு. கொரோனா பாதிப்புனால நான் வேலை பார்த்த கம்பெனியை மூடிட்டாங்க. அதுக்காக, நான் வருத்தப்படலை. ஏற்கெனவே பன்றி வளர்ப்புத்தொழில் இருக்குறதுனால தைரியமா ஊருக்கு வந்தேன். முழு நேரமா இறங்கிட்டேன். இப்போ 30 பெண் பன்றிகள், 3 ஆண் பன்றிகள், 72 குட்டிகளும் இருக்கு” என்றவர் பன்றி வளர்ப்புத் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஆண்டுக்கு 400 குட்டிகள்
‘‘ஒரு பன்றி, ஒரே ஈத்துல 8 குட்டிகள் முதல் அதிகபட்சமா 13 குட்டிகள்வரைக்கும் ஈனும். குறைந்தபட்சம் 8 குட்டிகள்னு வெச்சுக் கிட்டாக்கூட, 30 பெண் பன்றிகள்மூலம் வருஷத்துக்கு ரெண்டு ஈத்துல 480 குட்டிகள் கிடைக்கும். அதிலும், 80 குட்டிகள் இறக்குதுன்னே வெச்சுகிட்டாலும் 400 குட்டிகள் கிடைக்கும். 8 முதல் 10 மாசத்துல ஒரு குட்டி 80 முதல் 100 கிலோ எடை வரும். ஒரு கிலோ 90 ரூபாய்ல இருந்த உயிர் எடையின் விலை, கொரோனாவுக்குப் பிறகு, 120 முதல் 130 வரை விற்பனையாகிக்கிட்டு இருக்கு. சராசரியா, ஒரு கிலோ உயிர்எடை 100 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலும், ஒரு பன்றி 8,000 ரூபாய்க்கு விற்பனையாகும். மொத்தம் 400 பன்றிகள் மூலமா 32,00,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல, தீவனம், வேலையாள் சம்பளம், கரன்ட் பில், மருத்துவச் செலவுனு மாசம் ரூ.1.25 லட்சம் செலவாகுது.

அந்த வகையில் வருஷத்துக்கு 15 லட்சம் வரை செலவாகுது. மீதமுள்ள 17 லட்சம் எனக்கு லாபமாக் கிடைக்குது. கேரளாவுல இருந்து வியாபாரிகளே நேரடியா வந்து எடை போட்டு வாங்கிட்டுப் போயிடுறதுனால போக்குவரத்துச் செலவு ஏதுமில்ல. விற்பனைக்கும் வில்லங்கமில்ல’’ என்றவர் புதிதாகப் பன்றி வளர்ப்பில் ஈடுபடுபவர் களுக்குத் தேவையான ஆலோசனைகள் குறித்துப் பேசினார்.
புதிய பண்ணை தொடங்குபவர் கவனத்திற்கு!
‘‘ஒரு ஆர்வத்துல பன்றிப் பண்ணையை ஆரம்பிச்சுட்டு, கொஞ்ச நாள்லயே தொழில்ல நஷ்டம்னு சொல்லிப் பலபேர் விழிபிதுங்கி நிற்பதைப் பார்த்திருக்கிறேன். முதல்ல பன்றி வளர்ப்புத் தொழில் செய்ய ஆர்வமும், ஈடுபாடும் அவசியம். பண்ணை ஆரம்பிக்குறதுக்கு முன்ன, குறைஞ்சபட்சம் அஞ்சாறு பண்ணைகளை நேர்ல போய்ப் பார்க்கணும். அவங்களோட அனுபவங்களைக் கேட்டுத் தெரிஞ்சுகிட்டுதான் இறங்கணும். குறைஞ்சபட்சம் 75 சென்ட் முதல் ஒரு ஏக்கர் சொந்த நிலம் இருக்கணும். குடியிருப்புப் பகுதிக்குக் கொஞ்சம் தொலைவுல பண்ணையை அமைக்கணும். ஆரம்பத்தில 10 பெண் பன்றிகள், ஒரு ஆண் பன்றியை வெச்சு பண்ணையை ஆரம்பிக்கணும். வேலை ஆள்களை மட்டும் நம்பியிருக்காம பன்றிகளைக் குளிப்பாட்டுறது, தீவனம் வைக்கிறது மாதிரியான பராமரிப்பு வேலைகளை நாமளே செய்யத் தயாராக இருக்கணும்.

முதல் ஈத்து குட்டிகளை நல்ல எடையுடன் விற்பனை செய்தவுடன், பன்றிகளோட எண்ணிக்கையைப் படிப்படியாக அதிகரிக்கலாம். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தனியாகவோ, குழுவாகவோ சேர்ந்து செய்வதற்கு வெண்பன்றி வளர்ப்பு ஒரு நல்ல தொழில்தான். ஆர்வம், நல்ல பராமரிப்பு இருந்தால் மட்டுமே நான் சொன்ன வருமானம் சாத்தியம். இதைக் கவனத்துல வெச்சுக்கணும்’’ என்றவர் நிறைவாக,
‘‘ஆரம்பத்துல, பன்றி உருவத்தையும், உறுமல் சத்தத்தையும் பார்த்துக் கொஞ்சம் பயந்தேன். ஆனா, எளிதா பழகிடுது. என்னைப் பொறுத்தவரை கால்நடைகள்ல லாபகர மானது வெண்பன்றி வளர்ப்புதான். குறைந்த நாளில் அதிக எடை வருவது வெண்பன்றி மட்டும்தான். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறுவதும் வெண்பன்றி வளர்ப்புலதான்” என்றார் மகிழ்ச்சி பொங்க.
தொடர்புக்கு, தாமோதரன், செல்போன்: 98421 63744
பன்றிகள் தேர்வில் அதிக கவனம்!
பன்றிகளின் தேர்வில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பெண் பன்றிகள் 6 முதல் 7 மாதம் ஆனதாகவும், ஆண் பன்றிகள் 9 மாதம் ஆனதாகவும் இருக்க வேண்டும். பெண் பன்றியின் எடை 80 முதல் 90 கிலோ எடையுடனும், ஆண் பன்றிகள் 90 முதல் 100 கிலோ எடையுடனும் இருக்க வேண்டும். இரு வகைப் பன்றிகளின் உடல் நீளவாக்கிலும், முன்னங்கால் குட்டையாகவும் பின்னங்கால் சற்று நீண்டும், காதுகள் முன்புறமாக மடங்கிய நிலையிலும் இருக்க வேண்டும். பெண் பன்றியின் அடிவயிற்றுப் பகுதியில் 12 முதல் 14 காம்புகளுடனும் இருக்க வேண்டும்.
அடர் தீவனம்-பசுந்தீவனம்!
தினமும் காலையில் 8.30 மணி முதல் 9.30 மணிக்குள்ளும், மதியம் 4 மணி முதல் 5 மணிக்குள்ளும் தீவனம் கொடுக்க வேண்டும். காலையில் அடர்தீவனம் என்றால், மாலையில் பசுந்தீவனம் எனச் சுழற்சி முறையில் கொடுக்க வேண்டும். அடர்தீவனமாக அரிசித்தவிடு, கப்பைக்கிழங்குக் கழிவு, பீர் மால்ட் (பீர் வேஸ்ட்) ஆகியவற்றைக் கலந்து ஒருவேளைக்குப் பெரிய பன்றிகளுக்கு ஒன்றரை கிலோவும், சிறிய பன்றிகளுக்கு ஒரு கிலோவும், குட்டிகளுக்கு அரைக்கிலோவும் கொடுக்க வேண்டும். பசுந்தீவனமாக அகத்திக் கீரைக்கட்டுகள், வாழைக்காய்கள், காய்கறிக் கழிவுகளைப் போடலாம். காலை, மதியம், மாலையெனத் தண்ணீர்த் தொட்டியில் தண்ணீரை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொருமுறை தண்ணீர் வைப்பதற்கு முன்பாகவும் பன்றிக்கழிவுகளை அகற்றிவிடுவது நல்லது. இதுதவிர, வாரத்திற்கு ஒருமுறை முருங்கைக்கீரையை மதிய நேரத்தில் கொடுக்கலாம்.
காற்றோட்டமானகொட்டகை அவசியம்!
பன்றிப் பண்ணைத் தொழில்நுட்பம் தொடர்பாகத் தாமோதரன் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே பாடமாக...
60 அடி நீளம், 12 அடி அகலம், 11 அடி உயரத்தில் கொட்டகை அமைக்க வேண்டும். இதில், 10 அடிக்கு நடுவில் ஒரு அறையென, 6 அறைகள் அமைக்க வேண்டும். 4 அடி உயரத்தில் தடுப்புகள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மேற்கூரையாக ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகள் அமைத்து, உள் பகுதியில் குளிர்ச்சிக்காக ஓலைக்கீற்றுகளை அமைக்கலாம் பன்றிகளின் எண்ணிக்கைக்கு ஏற்பக் கொட்டகை, அறைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு அறையிலும் 6 பன்றிகளை அடைக்கலாம். ஆண் பன்றிகள், பெண் பன்றிகள், குட்டிகள், சினைப்பன்றிகள் எனத் தனித்தனி அறைகளில் அடைக்க வேண்டும். இணை சேர்ப்பதற்காகத் தனி அறைகளும் பிரித்துக்கொள்ள வேண்டும். தரையில் பன்றிகளின் கால் வழுக்காமல் இருக்க, தரைதளத்தில் சொரசொரப்பான கற்கள் அல்லது கடப்பாக்கல் பதிக்க வேண்டும். பன்றிகளைக் குளிப்பாட்டும் தண்ணீர், அவற்றின் சிறுநீர் ஆகியவை தேங்கி நிற்காதபடி சரிவாக அமைக்க வேண்டும். தினம்தோறும் காலையில் தீவனக் கழிவுகள், பன்றிக் கழிவுகளை அப்புறப்படுத்திவிட்டு அறையைச் சுத்தம் செய்வதுடன், பன்றிகளைக் குளிப்பாட்ட வேண்டும்.
புதிய பன்றிகள், தனிமைப்படுத்துதல் அவசியம்!
வளர்ப்புக்காகப் பண்ணைக்குப் புதிதாக வாங்கும் பன்றிகளுக்கு, கால்நடை மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகள் போட்டு 15 நாள்கள்வரை தனி அறைகளில் அடைத்த பிறகு, பிற பன்றிகளுடன் சேர்க்கலாம். இதனால், புதிய பன்றிகளால் மற்ற பன்றிகளுக்கு ஏற்படும் தொற்றுகளைத் தவிர்க்கலாம். அந்தப் பன்றிகள், சரியாகத் தீவனம் எடுக்காமல், ஓரிடத்திலேயே சோர்ந்து இருந்தால் உடனே அந்தப் பன்றியைத் தனியே பிரித்து விட வேண்டும். நோய்த்தாக்குதலுக்கான ஏதாவது அறிகுறி தெரிந்தால் தாமதிக்காமல் உடனே கால்நடை மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். அத்துடன், இந்த நாள்களில் புதிய பன்றிகளும் தீவனமுறைக்கு மாறிவிடும்.
தடுப்பூசிகள் அவசியம்!
ரத்தசோகை ஏற்படாமலிருக்கக் குட்டிகள் பிறந்தவுடன் 3 நாள்களுக்குள் குட்டிகளுக்கும் தாய்ப்பன்றிகளுக்கும் கால்நடை மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட இரும்புச்சத்துக்கான ஊசி போட வேண்டும். 5 முதல் 7 நாள்களுக்குள் குட்டிகளுக்குப் பல் வெட்ட வேண்டும். 45 நாள்களுக்குள் ஆண் குட்டிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட வேண்டும். கழிச்சல் நோய் வராமல் இருக்கத் தடுப்பூசியும், 6-ம் மாதத்தில் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசியும், ஆண்டுக்கு ஒருமுறை கோமாரி நோய்த் தடுப்பூசியும் தவறாமல் போட வேண்டும். 5-ம் மாதத்துக்குப் பிறகு ஆண், பெண் பன்றிகளைத் தனித்தனியே பிரித்துவிட வேண்டும். 2 மாதத்துக்கு ஒருமுறை அனைத்து பன்றிகளுக்கும் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். இவை அனைத்தையும் கால்நடை மருத்துவரின் பரிந்துரைப்படியே செய்ய வேண்டும்.
சினைப் பருவத்திற்கான அறிகுறி!
பெண் பன்றிகள் 8-ம் மாதத்தில் பருவத்திற்கு வரும். உறுமல் சத்தத்துடன் சரியாகத் தீவனம் எடுக்காமல் அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டே இருக்கும். இனப்பெருக்க உறுப்புகள் தடித்தும், சிவந்தும் காணப்படும். இது சினைப் பருவத்திற்கான அறிகுறி. 6 மாதத்திற்கு ஒருமுறையென ஆண்டிற்கு இரண்டு முறை ஈத்துக்கு வரும். 5 பெண் பன்றிக்கு ஒரு ஆண் பன்றி என்ற விகிதத்தில் இணை சேர்க்கலாம். ஆண் பன்றி இருக்கும் அறைக்குள் பெண் பன்றியை அடைத்துவிட்டால், 3 முதல் 5 நாள்களுக்குள் இணை சேர்ந்துவிடும். இணை சேர்த்ததிலிருந்து 110 முதல் 115-ம் நாளுக்குள் குட்டிப் போடும். 10 நாள்களுக்கு முன்பே சினைப்பன்றியை தனிமைப்படுத்திக் கவனமுடன் கண்காணித்து வர வேண்டும். குட்டிப் போட்ட தாய் பன்றிகளுக்குப் பால் சுரப்பிற்காகத் தீவனத்துடன் அசோலா கொடுக்கலாம். 45 முதல் 50-ம் நாளுக்குள் குட்டிகளைத் தனியே பிரித்துவிட வேண்டும். குட்டிகளைப் பிரித்த 30 நாள்களுக்குப் பிறகு, தாய்ப்பன்றிகள் மீண்டும் இணை சேரத் தயாராகிவிடும்.
ஆர்வமும் ஈடுபாடும் இருந்தால் லாபம் நிச்சயம்!

வெண்பன்றி வளர்ப்புத் தொடர்பாக, திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் விலங்கின மரபியல் இனவிருத்தி துறைப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ரவிமுருகனிடம் பேசினோம், ‘‘கால்நடை வளர்ப்பில் வருமானத்தில் முதன்மையானது வெண்பன்றி வளர்ப்பு. ஆடு, மாடு, கோழியைப்போலத் தொற்றுநோய்கள் இதில் குறைவு. அத்துடன், இதன் கர்ப்பகாலம் 114 நாள்கள் மட்டுமே. அதாவது, 3 மாதம் 3 வாரம் 3 நாளெனக் கிராமங்களில் சொல்வார்கள். ஆண்டுக்கு இரண்டு முறை ஈத்துக்கு வரும். ஒரு ஈத்துக்கு ஒரு பெண் பன்றி குறைந்தபட்சம் 8 குட்டிகள் முதல் அதிகபட்சமாக 13 குட்டிகள்வரை ஈனும். இரண்டு ஈற்றில், 26 குட்டிகள்வரை கிடைக்கும். இதில், 6 குட்டிகள் இறந்துபோனால்கூட, 20 குட்டிகள்மூலம் நமக்கு வருமானம் கிடைக்கும். 7 முதல் 8 மாதத்தில் ஒரு குட்டி, 80 முதல் 100 கிலோ வரை எடை இருக்கும். ஒரு கிலோ உயிர் எடையாக ரூ.90 முதல் 100 வரை கிடைக்கிறது. ஒரு குட்டியின் எடை, 80 கிலோ என்றாலும், 20 குட்டிகள்மூலம் ஆண்டுக்கு 1,60,000 வரை ஒரு பெண் பன்றியிலிருந்து வருமானம் கிடைக்கும். தீவனம், பராமரிப்புச் செலவாக ரூ.35,000 வரை செலவாகும். நல்ல காற்றோட்டமான இட வசதியும், போதுமான தண்ணீர் வசதியும் இருக்க வேண்டும். அருவருப்பு இல்லாமல் ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் தொழிலில் இறங்கினால் பன்றி வளர்ப்பு என்பது லாபகரமான தொழில்தான்” என்றார்.
தொடர்புக்கு, ரவிமுருகன், செல்போன்: 94881 07766