விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஆந்திர பிரதேசத்தில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், `Rythu Sadhikara Samstha’ (RySS) திட்டத்தின் கீழ் 11,000 விவசாயிகளுக்கு ஐந்து ஆண்டுகள் இயற்கை விவசாயப் பயிற்சி அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

முதற்கட்டமாக 200 இயற்கை விவசாயி முன்னோடிகள் இவர்களுக்குப் பயிற்சி அளிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த இயற்கை விவசாய இளங்கலைப் படிப்பானது நான்கு ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்களுக்கு எட்டு செமஸ்டர்களைக் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. இடைநிலை படிப்பை முடித்தவர்கள் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் செய்முறை மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுவார்கள். படிப்பு முடிந்ததும், விவசாயிகள் தங்கள் கிராமங்களை பருவநிலை மாற்றத்துக்குத் தாங்கக்கூடியதாக மாற்றவும், சக விவசாயிகளை இயற்கை விவசாயத்தைத் தேர்வுசெய்ய ஊக்குவிக்கவும் அனுப்பப்படுவார்கள்.
``புலிவெந்துலாவில் உள்ள இந்தோ ஜெர்மன் குளோபல் அகாடமி ஃபார் அக்ரோலாஜி ரிசர்ச் அண்டு லேர்னிங் (IGGAARL) ஆதரவுடன் விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும். இந்தத் திட்டத்துக்கு புலிவெந்துலாவுக்கு ஜெர்மன் அரசு ஸ்பான்ஸர் செய்கிறது. இந்த ஆராய்ச்சி அகாடமிக்கு இதற்காக 20 மில்லியன் யூரோ மானியத்தை அளித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் முதலாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இப்பயிற்சியானது ஜூலை 7-ம் தேதி தொடங்கப்படவுள்ளது.
இதுகுறித்து RySS-ன் நிர்வாக துணைத் தலைவர் விஜய்குமார் கூறுகையில், ``இந்த ஆண்டு சோதனை முயற்சியாக 1,000 விவசாய விஞ்ஞானிகளுடன் தொடங்குவோம்; இவர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் தலா 50 விவசாயிகளுக்குப் பயிற்சி அளிப்பார்கள். இந்தக் கருத்தை வலுப்படுத்த ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்பட முயற்சி செய்கிறோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பயிற்சி குறித்து RySS மூத்த ஆலோசகர் டாக்டர் கே.எஸ். வரபிரசாத் கூறுகையில், ``இயற்கை விவசாய பாடத்திட்டம் நேரடியாக வயல்களிலும் வகுப்பறைகளிலும் கற்பிக்கப்படும். விவசாயிகள் இந்த இயற்கை விவசாயத்தின் மூலம் மாதம் 25,000 முதல் 50,000 ரூபாய் வரை சம்பாதித்து, கிராமத்தின் காலநிலையை மாற்றியமைக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்று தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேச மாநில அரசால் அமைக்கப்பட்ட ரைத்து பரோசா கேந்திராக்களில் (Rythu Bharosa Kendras - RBK) விதைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் முயற்சியின் ஒரு பகுதியாக 10,800 மையங்களில் குறைந்தபட்சம் ஒரு விவசாயி விஞ்ஞானி நியமிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.