சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரியில் கோடை சீஸன் உச்சத்தில் இருக்கிறது. கோடையைக் கொண்டாட ஊட்டியை நோக்கி படையெடுக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோடை விழாவின் முக்கிய நிகழ்வான ஊட்டி மலர்க்கண்காட்சி நடைபெற்று வருகிறது.

175 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்றுவரும் 125-வது மலர்க்கண்காட்சியில் 1.5 லட்சம் மலர்களைக் கொண்டு பல்வேறு சிறப்பு அலங்காரங்களைச் செய்துள்ளனர். மலர் அலங்காரங்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.
125-வது ஊட்டி மலர்க்கண்காட்சியின் சிறப்பு அம்சமாக உலகின் 125 நாடுகளின் தேசிய மலர்களை ஒரே இடத்தில் கண்டு ரசிக்கும் வகையில் முதன்முறையாக சிறப்பு மலர் மாடம் அமைக்கப் பட்டுள்ளது. அந்த மாடத்தில் இந்தியாவின் தாமரை, டென்மார்க்கின் மார்குரட் டெய்சி, தென்னாப்பிரிக்காவின் கிங் புரோட்டியா, பங்களாதேஷின் அல்லி, உக்ரைனின் சூரியகாந்தி, பின்லாந்து நாட்டின் லில்லி உள்ளிட்ட 125 நாடுகளின் தேசிய மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஒரே இடத்தில் 125 நாடுகளின் தேசிய மலர்களைக் காணும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படங்களை எடுத்துச் செல்கின்றனர்.
இது குறித்து சுற்றுலாப் பயணிகள் சிலர் கூறுகையில், ``பல நாடுகளின் தேசிய மலர்களை ஒரே இடத்தில் பார்த்தது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. பல நாடுகளின் தேசிய மலர்களை அறிந்துகொள்வதற்கு நல்ல வாய்ப்பாக இருந்தது. சுற்றுலா வரும் மாணவ மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தோட்டக்கலைத்துறைக்கு நன்றி" என்றனர்.