Published:Updated:

மோடியைப் பணியவைத்த விவசாயிகள் போராட்டம்; கடந்த ஒரு வருடத்தில் நடந்தவை என்ன?

விவசாயிகள் போராட்டம்

700-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட இந்த விவசாயிகள் போராட்டம் மக்களிடையே பெரும் விவாதத்தையும் கவனத்தையும் கிளப்பியது. இந்த ஒரு வருடத்தில் விவசாயிகள் போராட்டத்தில் நடந்த முக்கியமான சம்பவங்கள் இங்கே...

Published:Updated:

மோடியைப் பணியவைத்த விவசாயிகள் போராட்டம்; கடந்த ஒரு வருடத்தில் நடந்தவை என்ன?

700-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட இந்த விவசாயிகள் போராட்டம் மக்களிடையே பெரும் விவாதத்தையும் கவனத்தையும் கிளப்பியது. இந்த ஒரு வருடத்தில் விவசாயிகள் போராட்டத்தில் நடந்த முக்கியமான சம்பவங்கள் இங்கே...

விவசாயிகள் போராட்டம்

மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து 2020 நவம்பர் 26-ம் தேதி டெல்லியில் தொடங்கிய விவசாயிகள் போராட்டம் ஒரு வருடத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. சமீப ஆண்டுகளில் இப்படியொரு போராட்டத்தை உலகம் கண்டிருக்காது. ஜனநாயக ரீதியிலான விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி திரும்பப் பெறும்போது, ``விவசாயிகளை எங்களால் சம்மதிக்க வைக்க முடியவில்லை. இந்தச் சட்டங்களைப் பற்றி விவசாயிகளுக்கு புரிய வைக்கவும் முடியவில்லை” என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். 700-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட இந்த விவசாயிகள் போராட்டம் மக்களிடையே பெரும் விவாதத்தையும் கவனத்தையும் கிளப்பியது. இந்த ஒரு வருடத்தில் விவசாயிகள் போராட்டத்தில் நடந்த முக்கியமான சம்பவங்கள் இங்கே...

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

மூன்று வேளாண் சட்டங்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே, 2020 செப்டம்பர் 14-ம் தேதி டெல்லியைச் சுற்றியுள்ள பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர். இதையடுத்து செப்டம்பர் 22-ம் தேதி இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. செப்டம்பர் 27-ம் தேதி குடியரசுத் தலைவர் இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார்.

- இதையடுத்து விவசாயிகள் நவம்பர் 25-ம் தேதி `டெல்லி சலோ' என்ற போராட்டத்தை அறிவித்தனர். அறிவித்ததோடு அனைத்து மாநில விவசாயிகளையும் போராட்டத்தில் பங்கெடுக்குமாறு அழைப்பு விடுத்தனர்.

2020 நவம்பர் 26 (முதல் நாள்) டெல்லி சலோ போராட்டம் அறிவிக்கப்பட்டது. டிராக்டர்களிலும் பேருந்துகளிலும், கார்களிலும் டெல்லியை நோக்கி விவசாயிகள் சென்றனர். குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேச மாநில விவசாயிகள் இதில் கலந்துகொண்டனர். பஞ்சாபிலிருந்து வந்த விவசாயிகளை ஹரியானா மாநில அரசு தடுத்தது. விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீசுதல், தண்ணீரைப் பீய்ச்சியடித்தல், தடுப்புகள் வைத்தல் என்று விவசாயிகளுக்கு பல தடைகளை உருவாக்கியது. ஆனால், அதையும் மீறி விவசாயிகள் டெல்லியை நோக்கிச் சென்றனர். இந்தப் போராட்டத்தில் 550 விவசாய சங்கங்களிலிருந்து 20,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

2020, நவம்பர் 27 (இரண்டாவது நாள்)

டெல்லிக்குள் நுழைந்து ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டனர். ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லி எல்லையில் உள்ள நிரன்கரி மைதானத்தில் போராட்டம் நடத்திக்கொள்ள அனுமதியளித்தது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நவம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் தலைநகர் டெல்லியின் எல்லையை அடைந்தபோது, அவர்களை சமாதானப்படுத்துவதற்காக விவசாய அமைப்புகளுடன் அரசு தொடர் பேச்சுவார்த்தை நடத்தியது.

2020, டிசம்பர், 30 (5-வது நாள்)

ஆறாம்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையில்தான் மின்சார சட்டத்திருத்த மசோதா சட்டமாக்கப்படாது என்றும், பஞ்சாப்பில் வைக்கோல் எரிக்கும் விவசாயிகளுக்கு அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கின்ற சட்டத்தைக் கைவிடுவதாகவும் மத்திய அரசு உறுதியளித்தது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

2020, டிசம்பர் 8 (பாரத் பந்த்)

பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகளோடு நாடு முழுவதுமுள்ள மற்ற மாநில விவசாயிகளும் போராட்டத்தில் பங்கெடுத்தனர். இதோடு நாடு முழுவதும் பாரத் பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சில மாநிலங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பு போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்த `பாரத் பந்த்’ போராட்டத்துக்கும் பல்வேறு விவசாயிகள் அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்தன.

2021, ஜனவரி, 13

வேளாண் சட்ட நகல்களைத் தீ வைத்து எரிக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குடியரசு தினவிழாவில் டிராக்டர் பேரணி நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

2021, ஜனவரி, 16 (53-வது நாள்)

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகளுக்கான மும்பை என்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொள்ள மற்ற மாநில விவசாயிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், ஏற்கெனவே குடியரசு தின விழா பேரணி அறிவிக்கப்பட்டதால் இதில் மகாராஷ்டிர மாநில விவசாயிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

2021, ஜனவரி, 21 (59-வது நாள்)

குடியரசு தினவிழா பேரணிக்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுக்கிறோம் என்று தெரிவித்தது. பிறகு டிராக்டர் பேரணிக்கு அனுமதி அளித்தது.

2021, ஜனவரி, 26 (64-வது நாள்)

விவசாயிகள் போராட்டம் கலவரமாக மாறி நாடே கொந்தளித்தது. விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட சிலர் டெல்லி செங்கோட்டையில் ஏறி கொடியை ஏற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பல விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குகளும் போடப்பட்டன.

2021, பிப்ரவரி, 4 (72-வது நாள்)

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் சர்வதேச கவனத்தைப் பெற்றது. பாடகர் ரிஹானா, போராளி கிரேட்டா துன்பர்க் உள்ளிட்ட பிரபலங்கள் இந்தப் போராட்டங்களைப் பற்றிப் பேச ஆரம்பிக்க உலக அளவில் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இதைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்தன. இந்த நிலையில், சர்வதேச பிரபலங்களின் கருத்துக்கு எதிராக இந்தியப் பிரபலங்களான சச்சின் டெண்டுல்கர், அக்ஷய்குமார், அஜய் தேவ்கன், கௌதம் கம்பீர் போன்ற பலர் இந்தியாவின் உள்விவகாரங்களில் பிறர் தலையிடக் கூடாது என்று தங்களின் கருத்துகளை முன்வைத்தனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

2021, பிப்ரவரி, 13

போராட்டம் குறித்து சர்வதேச சூழலியல் போராளி கிரேட்டா துன்பர்க் ட்வீட் செய்தது பல்வேறு சலசலப்புகளைக் கிளப்பியது. இதனிடையே கிரேட்டா துன்பர்க் பதிவு செய்த ஒரு ட்வீட்டில் `டூல் கிட்’ என்றொரு டாக்குமென்ட்டை ஷேர் செய்திருந்தார். அது வன்முறையையும் பிரிவினையையும் தூண்டும் வகையில் இருந்ததாகக் கூறி, டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து பிப்ரவரி 13-ம் தேதி, பெங்களூரு வந்த டெல்லி காவல்துறையினர், போராட்டங்கள் நடத்தும்போது, அதில் பங்கேற்பவர்கள் செய்ய வேண்டியவை குறித்து வெளியிடப்படும் ஆவணமான `டூல் கிட்’டை உருவாக்கி விவசாயிகளுக்குப் பகிர்ந்ததற்காக திஷா ரவியைக் கைதுசெய்தனர்.

மத்திய அமைச்சர் ஹம்சிரத் கவுர் தன்னுடைய மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது, பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் சுக்பிர் சிங் பாதல் தன்னுடைய பத்மஶ்ரீ விருதைத் திருப்பி அளித்தது, காலிஸ்தான் குற்றச்சாட்டுகள், டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் நுழைந்து கலவரம் செய்தது, வெளிநாடு வாழ் மக்கள் டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து போராட்டம் நடத்தியது, கனடா நாட்டு பிரதமர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது, விவசாய சங்கத் தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது என்று பல்வேறு சம்பவங்கள் டெல்லி போராட்டம் தொடர்பாக நடைபெற்றன. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி விவாதிப்பது வரை சென்றது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

பிப்ரவரி 15-ம் தேதி

`விவசாயிகளின் போராட்டம் காரணமாக 1.5 ஆண்டுகளுக்கு வேளாண் சட்டங்களை அமல்படுத்தப் போவதில்லை’ என்று அறிவித்தது மத்திய அரசு. இது ஒன்றே சட்டம் சம்பந்தமாக அரசிடமிருந்து வந்த அறிவிப்பு. ஆனால், இதை விவசாயிகள் ஏற்கவில்லை. சில விவசாயிகள் போராட்டக் களத்திலிருந்து திரும்பிச் சென்றுவிட்டாலும் பல விவசாயிகள் போராட்டக் களத்தில்தான் நின்றுகொண்டிருந்தனர்.

2021 அக்டோபர் 3-ம் தேதி

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கீம்பூர் கெரியில் அக்டோபர் 3-ம் தேதி பி.ஜே.பி அமைச்சரின் மகனால், விவசாயிகள் 3 பேரும், தனியார் டி.வி நிருபர் ஒருவரும் கார் ஏற்றிக் கொல்லப்பட்டனர். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் காரை ஓட்டிவந்த டிரைவர் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டனர். எதிர்க்கட்சிகள், விவசாய சங்கங்கள், பல்வேறு அமைப்புகள், மாநில முதல்வர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்தக் கொடும் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்தனர். உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கு சம்பந்தமான என்ன செய்திருக்கிறீர்கள், ஏன் அசட்டையாகக் கையாளுகிறீர்கள் என்று உத்தரப் பிரதேச அரசைக் கேட்டது. இதுவரை இந்தச் சம்பவத்தில் விவசாயிகளுக்கான நியாயம் கிடைக்கவில்லை.

லக்கீம்பூர் சம்பவம்
லக்கீம்பூர் சம்பவம்

2021 நவம்பர் 7-ம் தேதி

கர்நாடகா, இமாசலப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற 30 சட்டப்பேரவைத் தொகுதிகள், 3 மக்களவைத் தொகுதிகளில் பி.ஜே.பி-க்கு ஏற்பட்ட தோல்வி குறித்து ஆய்வு செய்யவும், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கவும் பிரதமர் மோடி பி.ஜே.பியின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

2021 நவம்பர் 19-ம் தேதி

மூன்று வேளாண் சட்டங்களையும் பிரதமர் மோடி திரும்ப பெறுவதாக அறிவித்திருக்கிறார். நாடு முழுவதும் விவசாயிகள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். ``மோடியின் இதயத்திலிருந்து இது உதிக்கவில்லை. மோடியின் ஆணவம் தலைகுனிந்தது" என்று எதிர்க்கட்சியினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மக்களின் எதிர்ப்பை மீறி எந்தச் சட்டத்தையும் நிறைவேற்ற முடியாது என்பதை மீண்டும் விவசாயிகளின் போராட்டம் நிரூபித்துள்ளது.