ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

நம்புவோம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

விவசாயம் என்பதுதான் அனைவருக்கும் உயிர்நாடி. அதற்குத்தான் உரிய முக்கியத்துவத்தை நாம் கொடுத்து வர வேண்டும். ஆனால், அதைப் பத்தோடு பதினொன்றாக ஒதுக்கி வைத்து, ஏனோதானோவென்று கையாள்வதுதான் இந்தியாவில் வாடிக்கையாகவே இருக்கிறது. இதை உணர்ந்துதான், அகில இந்திய அளவிலும் மாநிலங்களிலும் வேளாண்மைக்குத் தனி பட்ஜெட் என்கிற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

காலங்கள் பல கடந்துவிட்ட சூழலில், வேளாண்மைக்குத் தனி பட்ஜெட் என்கிற கனவை நனவாக்கும் முயற்சியை முன்னெடுத்துள்ளது தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சியைப் பிடித்திருக்கும் தி.மு.க அரசு. இது, போற்றுதலுக்குரிய ஒன்று என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இந்த முன்னெடுப்பு, நாட்டில் உள்ள பிற மாநிலங்களுக்கும்... ஏன் இந்தியாவின் ஒன்றிய அரசுக்கும் வழிகாட்டும் வகையில் அமைய வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த உழவர்களின் எதிர்பார்ப்பு.

பட்ஜெட் என்றாலே... தொழிலதிபர்கள், வணிகர்கள் உள்ளிட்டோரிடம் கருத்துக் கேட்பதை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வாடிக்கையாக வைத்துள்ளன. அதேபோல, வேளாண்மைக்கான பட்ஜெட் எனும்போது, முன்னோடிகளாக இருக்கும் விவசாயிகள், துறை சார்ந்த நிபுணர்கள், வேளாண்மைத்துறை அதிகாரிகள், வேளாண் பொருள் விற்பனையாளர்கள் என்று பலதரப்பினரிடமும் கருத்துகளைக் கேட்க வேண்டும். இதைவிடுத்து, அதிகாரிகள் மட்டுமே கொடுக்கும் பரிந்துரைகளையெல்லாம் வழக்கம்போல பட்ஜெட்டில் இடம்பெறச் செய்தால், அது தனி பட்ஜெட் எனும் நோக்கத்துக்கு நியாயம் சேர்க்கும் வகையில் அமையாது.

அதேபோல, ‘மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு’ என்கிற அமைப்பிலும் விவசாயிகளின் பிரதிநிதியை இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதையும் இங்கே வலியுறுத்துவது அவசியமாக இருக்கிறது.

‘‘தமிழகத்தைத் தரணியிலேயே தலைசிறந்த வாழ்விடமாக மீண்டும் மாற்ற வேண்டும்” எனக் கனவு காணும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இவற்றையெல்லாம் மனதில் கொண்டு செயலாற்றுவார் என்று நம்புவோம்!

- ஆசிரியர்

நம்புவோம்!