ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

ரூ.4 லட்சம் மானியம்.... உங்கள் ஊரில் வேளாண் கருவிகள் பழுது நீக்கும் மையம் அமைக்கலாம்...

வேளாண் கருவிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
வேளாண் கருவிகள்

அழைக்கும் வேளாண் பொறியியல் துறை!

அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் வேளாண் பொறியியல் துறை மூலம் வேளாண் இயந்திரங்களுக்கு மானியம் அளித்து வருவது அனைவரும் அறிந்ததே. இதன் அடுத்தகட்டமாக இந்த வேளாண் கருவிகளைப் பழுது பார்த்து, சரி செய்து கொடுக்கும் மையத்தை அமைக்க மானியம் வழங்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறது வேளாண் பொறியியல் துறை.

இதுகுறித்துச் சென்னையில் உள்ள வேளாண் பொறியியல் துறையின் தலைமைப் பொறியாளர் முருகேசன் பேசியபோது, “விவசாயத்தில் நாளுக்கு நாள் கருவிகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இப்படிப் பயன்படுத்தும் கருவிகள் பழுதாகி விட்டால் அதை அருகிலுள்ள சிறு நகரங்களுக்கோ, பெரிய நகரங் களுக்கோ கொண்டு சென்று சரிசெய்து வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் விவசாயி களுக்கு நேர விரயமும், பண விரயமும் அதிமாகிறது. இதைக் கருத்தில் கொண்டு வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையங்களை மானிய விலையில் அமைத்து தரும் திட்டத்தை வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாகத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

வேளாண் கருவிகள்
வேளாண் கருவிகள்

அதாவது, விவசாயிகள் வேளாண் மைக்குப் பயன்படுத்தும் இயந்திரங்கள் மற்றும் சூரிய ஆற்றலால் இயங்கும் பம்ப்செட்டுகள் முதலியவை பழுதாகும்போது, வேளாண் பணிகள் தடைபட்டுவிடுகிறது. விவசாயிகள் எத்தகைய இடையூறுமின்றி வேளாண் பணிகளைத் தொடர்ந்து செய்திடவும், பழுதான இயந்திரங்களைத் தங்கள் விளை நிலங்களிலேயே பழுது நீக்கி பராமரிக்கவும், அதோடு கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்து நிலையான வருமானத்தை அளிக்கவும் இம்மையங்கள் உதவி புரியும். 8 லட்சம் ரூபாய் செலவில் மையம் அமைக்கப்பட வேண்டும். இதில் 50 சதவிகிதத்தை அதாவது 4 லட்சம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படும்” என்றவர் நிறைவாக, யார் யாரெல்லாம் இந்த மையங்களை அமைக்கலாம் என்பதையும் சொன்னார்.

பொறியாளர் முருகேசன்
பொறியாளர் முருகேசன்

“இம்மையங்களை அமைக்கப் போதிய இடவசதியும், மும்முனை மின்சார இணைப் பும் கொண்ட கிராமப்புற இளைஞர்கள், விவசாயக் குழுக்கள், தொழில் முனைவோர், உழவர் உற்பத்தி நிறுவனங்கள் அருகில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற் பொறியாளரை அணுகி தங்களின் விண்ணப் பத்தைச் சமர்ப்பிக்கலாம். மாவட்ட அளவிலான செயற்குழுக் கூட்டத்தின்போது மாவட்ட ஆட்சி தலைவர் ஒப்புதல் அளித்த பின்னரே இம்மையம் மானியத்தில் அமைத்து கொடுக்க ஏற்பாடுகள் செய்து தரப்படும்’’ எனத் தெரிவித்தார்.



தொடர்புக்கு,

வேளாண்மைப் பொறியியல் துறை,

எண்.487, அண்ணா சாலை, நந்தனம், சென்னை - 600 035.

இ.மெயில்: aedcewrm@gmail.com

தொலைபேசி : 044 29510822

மதிப்புக்கூட்டும் இயந்திரங்களுக்கு 40 சதவிகித மானியம்!

விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை அறுவடை செய்வதில் இருந்து சந்தை படுத்தும் வரை ஏற்படும் இழப்பைக் குறைத்து, அந்தப் பொருள்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தும் வகையில் ‘மதிப்புக்கூட்டும் இயந்திரங்களை’ வேளாண்மைப் பொறியியல் துறை மானியத்துடன் வழங்க இருக்கிறது.

வேளாண் கருவிகள்
வேளாண் கருவிகள்

அதில் தானியம் அரைக்கும் இயந்திரம், மாவரைக்கும் இயந்திரம், கால்நடை தீவனம் அரைக்கும் இயந்திரம், சிறிய வகை நெல் அரவை இயந்திரம், கேழ்வரகு சுத்தப்படுத்திக் கல் நீக்கும் இயந்திரம், தேங்காய் மட்டை உரிக்கும் இயந்திரம், நிலக்கடலை செடியிலிருந்து காய் பிரித்தெடுக்கும் இயந்திரம், நிலக்கடலை தோல் உடைத்துத் தரம் பிரிக்கும் இயந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு, வாழைநார் பிரித்தெடுக்கும் கருவி, பாக்கு உடைக்கும் இயந்திரம் போன்ற இயந்திரங்கள் 40 சதவிகித மானியம் அல்லது அரசால் நிர்ணயிக்கப்பட்ட உச்ச உரம்பு இவற்றில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படும். விவசாயிகள், விவசாயப் பயன்பாடு குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுய உதவி குழுக்கள் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோர் பயன்பெறலாம்.

வேளாண் கருவிகள்
வேளாண் கருவிகள்

மானியம் பெற விரும்புவோர் ஆதார் கார்டு, புகைப்படம், வங்கி கணக்குப் புத்தகம், சாதி சான்றிதழ், சிறு குறு விவசாயிக்கான சான்றிதழ், நிலம் சம்பந்தமான சிட்டா மற்றும் அடங்கல் ஆகியவற்றை விண்ணப்பத்தில் பதிவு செய்து அருகில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளரை அணுகி தங்களின் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். அதன் பின் வேளாண்மை பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர் முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பத்தைப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பார்.