விவசாயிகளை ஊக்குவிக்க அரசுத் தரப்பில் இருந்து பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உணவு, உடை என தங்களுக்குத் தேவையானவற்றை மக்கள் தங்களது மொபைலில் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்வது போல, விவசாயிகளும் தங்களுக்குத் தேவையான இடுபொருள்களை இணையம் வழியாகப் பெற்றுக்கொள்ளும் வசதியை ஏற்படுத்தியிருக்கிறது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்.

ஏப்ரல் 14 அன்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் `அக்ரிகார்ட்’ (Agricart) எனப்படும் இணையவழி இடுபொருள் விற்பனையைத் தமிழக அரசு தொடங்கியது.
tnauagricart.com என்ற இணையதளம் வழியாக நெல், மக்காச்சோளம், பயறுவகை பயிர்கள், எண்ணெய்வித்து பயிர்கள், காய்கறி விதை பாக்கெட்கள், பயிர் பூஸ்டர்கள் மற்றும் உயிரியல் இடுபொருள்களை விற்பனை செய்து வருகிறது.
தற்போது, ஏஎஸ்டி-16, ஏடிடீ- 45, கோ-51, கோ-55, டிபிஎஸ்- 5, டி.ஆர்.ஒய்- 5 போன்ற நெல் ரகங்களும், கோ-8, வி.பி.என்- 4 போன்ற பயிறு வகைகளும், வி.பி.என்- 11, விபிஎன்- 8 போன்ற உளுந்து ரகங்களும், நிலக்கடலை மற்றும் காய்கறி விதைகளும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
டிஎன்ஏயு காய்கறி விதை பாக்கெட்டில், கீரை கோ-1, கோ -2, வெண்டைக்காய் கோ. ஹெச்- 4, சுரைக்காய், கோ. ஹெச்-1, கத்திரி கோ 2, மிளகாய் கோ. ஹெச்-1, கொத்தவரை எம்.டி.யு-1, அவரை கோ-14, பீர்க்கங்காய் கோ. ஹெச்-1, சின்ன வெங்காயம் கோ-5 மற்றும் கோ 6, புடலங்காய் கோ- 2 போன்றவை இருப்பில் உள்ளன.

தமிழகம் முழுவதிலும் உள்ள விவசாயிகள் தங்களுக்குத் தேவையான இடுபொருளை இருந்த இடத்தில் இருந்தே தேர்வு செய்து, குறைவான விலையில் வாங்கிக்கொள்ளலாம்.