ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

நல்ல விளைச்சல் கொடுக்கும் தென்னை ரகம் எது?

புறாபாண்டி
பிரீமியம் ஸ்டோரி
News
புறாபாண்டி

நீங்கள் கேட்டவை

‘‘தென்னைச் சாகுபடி செய்ய விரும்புகிறேன். நல்ல விளைச்சல் கொடுக்கும் ரகம் எது? சில பண்ணை களில் 10 ஆண்டுகள் வயது கொண்ட மரத்திலிருந்து கன்று உற்பத்தி செய்கிறார்கள். இதனால், நல்ல விளைச்சல் கிடைக்காது. 25 ஆண்டுகளுக்கு மேல் உள்ள தாய் மரங்களில் நாற்று உற்பத்தி செய்யும் பண்ணையைப் பற்றிச் சொல்லுங்கள்?’’

@பழனிச்சாமி, ஜல்லிப்பட்டி.

ராணிப்பேட்டை மாவட்டம், நவ்லாக் அரசுப் பண்ணையின் மேலாளர் பதில் சொல்கிறார்.

‘‘ஆற்காடு நவாபுக்குச் சொந்தமான இப்பகுதி முழுக்க 9 லட்சம் தென்னை மரங்கள் இருந்ததால், அதைக் குறிக்கும் வகையில் இந்தப் பகுதிக்கு ‘நவ்லாக்’ என்று பெயர் வந்துள்ளது. 1974-ம் ஆண்டு, 207 ஏக்கரில் தமிழக அரசால் இந்தப் பண்ணை தொடங்கப்பட்டது. தென்னை நாற்று உற்பத்திக்காக நெட்டை, குட்டை, குட்டை*நெட்டை ரகங்களில் 9,000 தென்னை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 25 ஆண்டுகளுக்கு மேலான தாய் மரங்களி லிருந்து தரமான நெற்றுகளைத் தேர்வு செய்து முளைக்க வைக்கிறோம். நெட்டை*குட்டை, குட்டை*நெட்டை வீரிய ஒட்டுரக நாற்றுகள், ‘வெஸ்ட் கோஸ்ட் டால்’ என்று சொல்லப்படும் நெட்டை ரகம், ‘சௌகாட் ஆரஞ்ச் டூவாப்’ என்ற குட்டை ரக நாற்றுகளையும் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறோம்.

தென்னை
தென்னை


நெட்டை*குட்டை வீரிய ஒட்டு ரக நாற்றுகளை 25 அடிக்கு 25 அடி இடைவெளியில்... ஏக்கருக்கு 80 நாற்றுகள் வீதம் நடவு செய்யலாம். நடவு செய்த 4-ம் ஆண்டு முதல் காய்ப்புக்கு வரும். 40 அடி முதல் 60 அடி உயரம் வரை வளரும். இதன் ஆயுள் காலம் 40 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள். ஒவ்வொரு மரத்திலிருந்தும், ஆண்டுக்குச் சராசரியாக 120 காய்கள் முதல் 200 காய்கள் வரை கிடைக்கும். மண்வளம் மற்றும் முறையான பராமரிப்பு இருந்தால்... ஆண்டுக்கு சுமார் 300 காய்கள் வரையிலும்கூட கிடைக்கும். இந்த ரகக் காய்களை இளநீருக்கு, சமையலுக்கு, கொப்பரைக்கு... என அனைத்துத் தேவைகளுக்கும் பயன் படுத்தலாம். அதனால்தான் இதை ‘ஆல்-ரவுண்டர்’ தென்னை என்று அழைக்கிறார்கள். இளநீராகப் பயன்படுத்தும்போது ஒரு காயில், 350 மி.லி முதல் 450 மி.லி வரை இளநீர் இருக்கும்.

வெஸ்ட் கோஸ்ட் டால் என்ற நெட்டை ரகத் தென்னை நாற்றுகளை நடவு செய்தால்... 5-ம் ஆண்டு முதல் காய்ப்புக்கு வரும். இதன் ஆயுள்காலம் 70 ஆண்டுகள். 50 அடி முதல் 70 அடி உயரம் வரை வளரக்கூடியது. தேங்காய்க்கும் கொப்பரைக்கும் ஏற்ற ரகம். ஒரு மரத்திலிருந்து, ஆண்டுக்குச் சராசரியாக 80 காய்கள் முதல் 100 காய்கள் வரை கிடைக்கும்.

தென்னந்தோட்டம்
தென்னந்தோட்டம்‘சௌகாட் ஆரஞ்ச் டூவாப்’ எனப்படும் குட்டை ரகத் தென்னை 3-ம் ஆண்டு முதல் மகசூல் கொடுக்கும். இளநீருக்கு ஏற்ற ரகமான இதன் ஆயுள்காலம் 25 ஆண்டுகள். சராசரியாக, ஆண்டுக்கு 60 காய்கள் முதல் 80 காய்கள் வரை கிடைக்கும். அதிகபட்சம் 40 அடி முதல் 50 அடி உயரம் வரை வளரக் கூடியது. பொள்ளாச்சி, கோயம்புத்தூர், தேனி, மதுரை... எனத் தமிழ்நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் இந்தப் பண்ணையில் தென்னை நாற்றுகளை வாங்கிச் செல்கிறார்கள்.’’

தொடர்புக்கு, தொலைபேசி: 04172 222881.

புறாபாண்டி
புறாபாண்டி“எங்கள் தோட்டத்தில் சில அத்தி மரங்கள் உள்ளன. இதில் நன்றாகப் பிஞ்சுகள் பிடிக்கின்றன. ஆனால், சில நாள்களில் கொட்டிவிடுகின்றன. எதனால், இப்படிக் கொட்டுகின்றன, இதன் சாகுபடி நுட்பங்களைச் சொல்லுங்கள்?’’

@எஸ்.ஜெயலட்சுமி, கோயம்புத்தூர்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி அத்தி விவசாயி ஜெகதீஷ்,

‘‘அத்தி மரங்களுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப்படும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒவ்வொரு செடிக்கும் 120 லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும். பாசனத்தில் குறையிருந்தால், பிஞ்சு, காய் இலைகளும்கூடக் கொட்டும். எனவே, தண்ணீர் விஷயத்தில் உஷாராக இருக்கவும். நடவுக்குத் தயார் செய்த நிலத்தில் மூன்றடி ஆழ, அகலத்தில் குழிகள் எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழியிலும் 10 கிலோ தொழுவுரம், ஒரு கிலோ வேப்பம் பிண்ணாக்கு கலந்து நிரப்ப வேண்டும்.

அத்தி
அத்திவேப்பம் பிண்ணாக்கு வேர் தொடர்பான நோய்களைத் தடுக்கும். தொழுவுரம் இட்ட குழிகளில், இரண்டடி உயரம்கொண்ட அத்தி மரக்கன்றுகளை நடவுசெய்து, மேல் மண்ணைக் கொண்டு குழியை மூட வேண்டும். தொடர்ந்து ஒவ்வொரு குழியைச் சுற்றிலும் வேளாண் கழிவுகளைக்கொண்டு மூடாக்கு அமைக்க வேண்டும். களைச்செடிகளைக் கட்டுப்படுத்தவும், மண்ணின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கவும் மூடாக்கு அவசியம்.

அத்தி
அத்திஅத்திச் செடிகளுக்குப் பெரும்பாலும் நோய்த்தாக்குதல் இருக்காது. அப்படியே வந்தாலும், மூலிகைப் பூச்சிவிரட்டி பயன்படுத்தித் தடுக்கலாம். வாரம் ஒரு முறை பஞ்சகவ்யாவும் அமுதக்கரைசலும் மாற்றி மாற்றிக் கொடுத்து வந்தால், செழிப்பான இலைகளுடன், வளமான காய்களுடன் சிறப்பாக வளரும் அத்தி. நான்காவது ஆண்டு முதல் அறுவடை செய்யலாம். ஒரு நாள்விட்டு ஒருநாள் பறிக்கலாம். மாதம் ஒன்றுக்கு 10 முதல் 15 கிலோ வரை மகசூல் கிடைக்கும். ஒரு மரத்திலிருந்து சராசரியாக மாதம் 10 கிலோ மகசூல் கிடைக்கும். எல்லாப் பகுதிகளிலும் இதே மகசூல் கிடைக்காது. ஏற்காடு, பொள்ளாச்சி, கம்பம், தென்காசி, ஒட்டன்சத்திரம் போன்ற ஈரக்காற்று வீசும் மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டிய பகுதிகளில் சிறப்பாக வளரும். மற்ற பகுதி விவசாயிகள் ஓரிரு கன்றுகளை நடவு செய்து பார்த்துவிட்டு நல்ல பலன் இருந்தால் சாகுபடி செய்யலாம்.’’

தொடர்புக்கு, ஜெகதீஷ்,

செல்போன்: 99422 50143.

ஜெகதீஷ்
ஜெகதீஷ்‘‘மீன்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய விரும்புகிறோம். இதற்கான பயிற்சி எங்கு கிடைக்கும்?’’

க.மணிவண்ணன், வள்ளியூர்.

‘‘தூத்துக்குடியில் உள்ள மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கடல்சார் உணவுப்பொருள் வணிக மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மீன்களை மதிப்புக்கூட்டப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், மீன்களை மதிப்புக்கூட்டிட விரும்பும் தொழில் முனைவோர்கள் இங்குள்ள இயந்திரங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பெரும்பாலான இயந்திரங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீனமானவை என்பது குறிப்பிடத்தக்கது.’’


தொடர்புக்கு:

திட்ட ஒருங்கிணைப்பாளர்,

கடல்சார் உணவுப்பொருள் வணிக மையம்,

மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

தூத்துக்குடி.

தொலைபேசி: 0461 2340554/ 2340154