ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

ரைசோபியம்... மண்ணுக்கும் பயிருக்கும் பலமான கூட்டாளி!

வெளிநாட்டு விவசாயம்
பிரீமியம் ஸ்டோரி
News
வெளிநாட்டு விவசாயம்

வெளிநாட்டு விவசாயம்

ண்... இப்பூவுலகின் ஆதித்தொழிலான விவசாயத்தின் அடிப்படை ஆதாரம். அந்த மண் எப்படி உருவாகிறது? எவை எவை சேர்ந்து உருவானது. அதன் நலத்தையும் வளத்தையும் எப்படிக் காப்பது? என்பதைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மண்ணின் ஆதிமூலம் பாறைகள்தான். வெயில், மழை உள்ளிட்ட வானிலைக் காரணிகள், பாறைகள் உருளும்போது ஒன்றோடொன்று மோதிக்கொள்வது, பாறைகளில் உள்ள வேதிப்பொருள்களில் ஏற்படும் மாற்றங்கள், பாறைகளுடன் உறவாடும் செடி, கொடிகள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிர்களாலும் பாறைகள் சிதைக்கப்பட்டு மண் உருவாகிறது. ஆனால், இந்த நிகழ்வு ஒருசில மாதங்களிலோ, வருடங்களிலோ நடந்து முடிவதல்ல. ஓர் அங்குலம் மண் உருவாகச் சுமார் 1,000 ஆண்டுகள் தேவைப்படும். எனவே, இனிமேல் உங்கள் நிலத்திலிருந்து மேல் மண்ணை வெட்டி அப்புறப்படுத்துவதற்கு முன் ஒன்றுக்கு பத்துமுறை சிந்தியுங்கள். நாம் நிலத்தை ஒழுங்காகப் பராமரிக்கா விட்டால் ஏற்படும் அரிப்பினால் இழக்கும் வளமான மேல் மண்ணையும் கருத்தில் கொள்ளுங்கள்.

பாறைகள் - மண்ணின் ஆதிமூலம்
பாறைகள் - மண்ணின் ஆதிமூலம்

உலகளாவிய பேரழிவு

உலகளாவிய அளவில், மூன்றில் ஒரு பங்கு வளம் மிக்க மேல் மண்ணை நாம் ஏற்கெனவே இழந்துவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு சொல்கிறது. இப்போதாவது நாம் சுதாரிக்கா விட்டால் இன்னும் 30 ஆண்டுகளில் 90 சதவிகிதம் மேல் மண்ணை நாம் இழந்து விடும் அபாயம் இருப்பதாக அந்த அறிக்கை எச்சரிக்கிறது. அதனால்தானோ என்னவோ, மண்வளம் கெடுவதை ‘உலகளாவிய பேரழிவு’ என்று குறிப்பிடுகிறார்கள். எனவே, மண்ணைப் பொன்போல பாதுகாக்க வேண்டிய அபாயச் சூழலில் இப்போது நாம் இருக்கிறோம்.

பாறைகள் - மண்ணின் ஆதிமூலம்
பாறைகள் - மண்ணின் ஆதிமூலம்

விதவிதமான நுண்ணுயிர்கள்

நமது மண் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்களின் கலவை. மண்ணின் சரிபாதி பங்குத் தாது உப்புக்களாலும், 5 முதல் 10 சதவிகிதம் கரிமப் பொருள்களாலும், மீதி இருப்பதில் சரிபாதி தண்ணீர், காற்று கலந்த கலவைகளாலும் ஆனது. அப்படிப்பட்ட மண்ணில் கண்ணுக்குத் தெரியும் மண்புழு வில் ஆரம்பித்துக் கண்ணுக்கே தெரியாத நுண்ணுயிர்கள்வரை கோடிக்கணக்கான உயிரினங்கள் இருக்கும். நுண்ணுயிர்களில் பயிர்களுக்கு நோய்களை உருவாக்கும் கிருமிகள், அந்தக் கிருமிகளை அழிக்கும் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள், மண்ணுக்கு வரும் அத்தனை பொருள்களையும் மட்கச் செய்யும் நுண்ணுயிர்கள், மண்ணுக்கு உரமூட்டும் நுண்ணுயிர்கள் என எத்தனையோ வகைகள் இருக்கும்.

நாம் அவற்றின் சமநிலையைப் பாதிக்காத வரை, விளைநிலங்களில் இருக்கும் இந்த நுண்ணுயிர்கள் அவைகளுக்குள்ளேயே ஒரு சமநிலையை ஏற்படுத்திக்கொண்டு, பயிர் விளைச்சலுக்கு அவற்றால் ஆன பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்கும்.

மண்ணின் வளத்தை நிலைத்து நீடிக்கும் வண்ணம் பராமரிப்பது எப்படி, அதற்கு உகந்த தொழில்நுட்பங்கள் எவை? என்பதைப் பார்ப்போம்.

உயர் விளைச்சல் பாசிப்பயறு ரகங்கள்
உயர் விளைச்சல் பாசிப்பயறு ரகங்கள்

வளத்தைக்கூட்டும் கரிமப்பொருள்கள்

நமது மண்ணின் மிக முக்கியமான ஓர் அங்கம், அதிலிருக்கும் கரிமப்பொருள். ஒரு வளமான மண்ணில் கரிமப்பொருளின் அளவு 2 முதல் 10 சதவிகிதம் வரை இருக்க வேண்டும். போன தலைமுறை வரையிலும் விவசாயத்தில் கால்நடைகளின் பங்களிப்பு மிக அதிகம். பண்ணைகள்தோறும் ஆடு, மாடுகள் அபரிமிதமாக இருக்கும். அவை கிடைகளில் அடைக்கப்படும்போது, இயற்கையாகவே மண்ணுக்குத் தொடர்ந்து கரிமப்பொருள்கள் கிடைத்து வந்தன. விவசாய நிலங்களில் நிறைய மரங்கள் இருந்ததால், அவற்றின் இலைதழைகளையும் மட்க வைத்து உரமாகப் பயன்படுத்தினோம். அதனால் மண்ணில் கரிமப்பொருள்களின் அளவு குன்றாமல் நிலைத்திருந்தது.

பஞ்சாப் மாநிலத்தில் உலக காய்கறி ஆய்வு மையத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள குறுகிய கால பாசிப்பயறு ரகங்கள்
பஞ்சாப் மாநிலத்தில் உலக காய்கறி ஆய்வு மையத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள குறுகிய கால பாசிப்பயறு ரகங்கள்


நீரையும் சேமிக்கும் கரிமம்

கரிமப்பொருள்கள்தான் மண்ணில் இருக்கும் அத்தனை உயிரினங்களையும் தாங்கிப் பிடிக்கக்கூடியவை. மேலும், மண்ணுக்குத் தேவையான சத்துகள் அனைத்தையும் தன்னகத்தே தேக்கி வைத்து, தேவைப்படும் நேரங்களில் பயிர்களுக்கு வழங்கக்கூடியவை. மிக முக்கியமாக, தண்ணீரையும் தன்னுள் தேக்கி வைக்கும் வல்லமை கொண்டவை. உதாரணத்துக்கு, உங்கள் நிலத்தில் கரிமப்பொருள்களின் அளவை ஒரு சதவிகிதம் அதிகப்படுத்தினால், ஒரு ஹெக்டேரில் சுமார் இரண்டு லட்சம் லிட்டர் தண்ணீரை அதிகமாகத் தேக்கி வைத்துக்கொள்ள முடியும். அப்படியானால், மானாவாரி நிலங்களில் கரிமப் பொருள்கள் மிகுந்திருந்தால், அவற்றில் பயிரிடப்படும் பயிர்கள் வறட்சியை அதிகம் தாங்கி வளரும்தானே?

பசுந்தாள் உரப்பயிர்களில் ரைசோபியம் பாக்டீரியாக்கள் தங்கியிருக்கும் வேர் முடிச்சுகள்
பசுந்தாள் உரப்பயிர்களில் ரைசோபியம் பாக்டீரியாக்கள் தங்கியிருக்கும் வேர் முடிச்சுகள்

மண்ணில் உள்ள தாது உப்புக்கள்

அடுத்ததாக மண்ணின் இன்னொரு முக்கியமான அங்கம் அவற்றில் இருக்கும் தாது உப்புக்கள். பெரும்பாலான மண் வகைகளில் பொதுவாக இருக்கக்கூடிய இரண்டு உப்புக்கள், மணி (பாஸ்பரஸ்) மற்றும் சாம்பல் (பொட்டாஷ்) சத்து. இவற்றுடன் ஒருசில மண் வகைகளில் சுண்ணாம்பு (கால்சியம்), வெளிமம் (மக்னீசியம்) மற்றும் கந்தகம் (சல்ஃபர்) ஆகியவையும் காணப்படும். அத்துடன், மண்ணில் இருக்கும் ஒருசில பாக்டீரியாக்கள் காற்றில் இருக்கும் நைட்ரஜனை தழைச்சத்தாக மாற்றி மண்ணில் நிலைநிறுத்தி வைக்கின்றன. ஆகவே, மண்ணில் வளரும் பயிர்களுக்குத் தேவையான பெரும்பாலான சத்துகள் இயற்கையாகவே அந்த நிலத்தில் இருக்கின்றன. அப்படியானால், நாம் எதற்காகச் செயற்கை உரங்களை மண்ணில் கொட்ட வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா?

பயறு வகைகள்
பயறு வகைகள்

‘குந்தித் தின்றால் குன்றும் குறையும்’ என்ற பழமொழி மனிதர்களுக்கு மட்டுமல்ல, நிலத்துக்கும் பொருந்தும். பொதுவாகவே, பயிர்களை நாம் நிலங்களில் வளர்க்கும் போது, அவை தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை நுண்ணுயிர்கள் மூலமாக மண்ணிலிருந்தும் விண்ணிலிருந்தும் எடுத்துக்கொள்கின்றன. அவற்றைக் கொண்டு தான் நமக்குத் தேவையான சத்துகளை உற்பத்தி செய்து தருகின்றன. உதாரணத்துக்கு, பாசிப்பயறு உணவில் அதிக இரும்புச் சத்தை நமக்கு அளிக்கும் என்று தெரியும். ஆனால், பாசிப்பயறை இரும்புச்சத்து அதிகமுள்ள நிலங்களில் விளைவித்தால் மட்டுமே நமக்கு, உணவில் அவை அதிக இரும்புச்சத்தை வழங்கும். ஒரு நிலத்தில் அடுத்தடுத்துப் பயிர்களை வளர்க்கும்போது, அவை தொடர்ந்து மண்ணில் இருக்கும் ஊட்டச் சத்துகளை உறிஞ்சிக்கொண்டே இருக்கின்றன. எனவே, அவ்வப்போது நாம் மண்ணுக்கு அந்த ஊட்டச்சத்துகளைத் திருப்பி வழங்குவது கட்டாயமாகிறது. ஆனால், அவற்றை எப்படி வழங்க வேண்டும் என்பதில்தான் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

முதலில் தழைச்சத்திலிருந்து ஆரம்பிப் போம். இன்றைக்கு நமது பயிர்களுக்குத் தழைச்சத்து இட வேண்டும் என்ற பரிந்துரை கிடைத்தால், உடனடியாக ‘யூரியா, அம்மோனியம் நைட்ரேட்’ என உரக்கடை களைத் தேடிப் போய்விடுவோம். நமக்குக் கிடைக்கும் இந்த நைட்ரஜன் உரங்கள் இயற்கை மற்றும் செயற்கை முறைகளில் தயாரிக்கப்படுபவை.

பசுந்தாள் உரப் பயிர்கள்
பசுந்தாள் உரப் பயிர்கள்


19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிலி நாட்டின் அட்டகாமா பாலைவனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ‘சோடியம் நைட்ரேட்’ படிவுகளிலிருந்து இன்றளவும் நைட்ரஜன் உரங்கள் வெட்டி எடுக்கப்பட்டு, தயாரிக்கப்படுகின்றன. அது மட்டுமன்றி செயற்கை முறைகளிலும் அவை தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வந்து கொண்டிருக்கின்றன. தங்கு தடையின்றி கிடைக்கும் இந்த உரங்களை உலகெங்கும் உள்ள மண்ணில் கொட்டி, நிலங்களை மட்டுமன்றி நமது சூழலையும் கொன்று கொண்டிருக்கிறோம். அளவுக்கதிகமான நைட்ரஜன் உரங்களின் பயன்பாட்டால் பசுமைக்குடில் வாயுக்கள் அதிகரிப்பதாகவும், பருவநிலை மாற்றம் நடப்பதாகவும், ஒருசில இடங்களில் அமில மழை பொழிவதாகவும் பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

நிலங்களில் நாம் கணக்கின்றிக் கொட்டும் தழைச்சத்து உரங்கள் அனைத்தையும் பயிர்களால் எடுத்துக்கொள்ள முடியாது. பயிர் எடுத்ததுப் போக மீதமிருக்கும் உரங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் தேங்கி, அவற்றில் பாசிகளைப் பல்கிப் பெருகச் செய்கின்றன. இது அந்த நீர்நிலை களில் வாழும் உயிரினங்களைப் பாதிக்கின்றன. அது மட்டுமன்றி, மண்ணிலிருந்து பயிர்களில் தேங்கும் அதீத நைட்ரேட்டினாலும், நிலத்தடி நீரில் கலந்து நமது குடிநீரில் மிகுந்திருக்கும் நைட்ரேட்டினாலும் நமது உடல்நலமும் வெகுவாகப் பாதிக்கப்படும்.

பசுந்தாள் உரப் பயிர்கள்
பசுந்தாள் உரப் பயிர்கள்

ரைசோபியம்

இவ்வளவு பேராபத்தைக் கொடுக்கும் தழைச்சத்து உரங்களுக்கு மாற்றுத் தீர்வு இல்லையா? இல்லை என்று சொன்னால், அது கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவதைப் போலாகும். காரணம், நமது வளிமண்டலத்தில் நாம் சுவாசிக்கும் பிராணவாயு (ஆக்ஸிஜன்) வெறும் 21 சதவிகிதம் மட்டுமே; மற்றபடி 78 சதவிகிதம் நைட்ரஜன் வாயுதான். அந்த நைட்ரஜன் வாயுவை உரமாக மாற்றி மண்ணில் வைத்துவிட்டால், நமக்குத் தேவையான தழைச்சத்து கிடைத்து விடாதா, என்ன? அது சாத்தியமா? சாத்தியம்தான் என்று இயற்கை அதற்கும் ஒரு தீர்வை அதுவாகவே நமக்குக் கொடுத்திருக்கிறது.

அவைதான் மண்ணிலும், ஒருசில செடிகளிலும் இருக்கும் ரைசோபியம் (Rhizobium) என்ற பாக்டீரியாக்கள். இந்தப் பாக்டீரியாக்கள் பயறுவகைப் பயிர்களில் அடைக்கலம் தேடிக்கொள்ளும். அதாவது, இந்தப் பாக்டீரியாவுக்கும், பயறுவகைப் பயிர்களுக்கும் ஆறரை கோடி ஆண்டுகளுக்கும் மேலாக ஓர் ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கிறது.

அதன்படி, இந்த பாக்டீரியா தங்கிக் கொள்வதற்குப் பயறுவகைப் பயிர்கள் இடமளிக்க வேண்டும். அதற்குக் கைம்மாறாக இந்த பாக்டீரியா காற்றில் இருக்கும் நைட்ரஜனை தழைச்சத்தாக மாற்றி, அந்தப் பயிர்களுக்கு வழங்கிவிடும். அந்தப் பயிர்கள் தங்களது தேவைக்குப் போக மீதமிருக்கும் தழைச்சத்தை மண்ணிலேயே விட்டுச் செல்லும். எனவே, அதே நிலத்தில் அடுத்துப் பயிரிடப்படும் பயிருக்கும் மண்ணிலிருந்து தழைச்சத்து கிடைக்கும். இதுதான் உண்மையான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

பயறு வகை பயிர்கள்
பயறு வகை பயிர்கள்

வேர் முடிச்சு பயிர்கள்

அவரை, துவரை, பாசிப்பயறு, உளுந்து, தட்டைப்பயறு போன்ற பயறுவகைப் பயிர்களிலும்; சணப்பை, சித்தகத்தி போன்ற பசுந்தாள் உரப்பயிர்களிலும்; இந்த ‘ரைசோபியம் பாக்டீரியா’ குடியிருக்கும். இந்தப் பயிர்களைப் பிடுங்கிப் பார்த்தால், அவற்றின் வேர்களில் நிறைய முடிச்சுகள் காணப்படும். ஒவ்வொரு வேர் முடிச்சிலும் ஆயிரக்கணக்கான பாக்டீரியாக்கள் குடியிருக்கும். அதிலும், சித்தகத்தி போன்ற செடிகளில் வேர்கள் மட்டுமன்றி தண்டு களிலும் பாக்டீரியாக்கள் குடியிருக்கும் முடிச்சுகள் காணப்படும். அதனால், பயிர் சுழற்சி முறையில் நமது முன்னோர்கள் இது போன்ற பயறுவகைப் பயிர்கள் இடம் பெறும்படி பார்த்துக்கொண்டனர். ஆனால், நாம்தான் அதிக வருவாய் தரக்கூடிய ஒன்றிரண்டு பயிர்களைத் தொடர்ந்து பயிரிட ஆரம்பித்து, மண்வளத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைக்க ஆரம்பித்து விட்டோம்.

தெற்காசியாவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட இந்தோ-கங்கை சமவெளிப் பகுதியில் நெல் மற்றும் கோதுமைப் பயிர் சுழற்சி மிகவும் பிரசித்தியான பயிர்முறை ஆகும். இந்தியாவில் மட்டுமே, பஞ்சாப், ஹரியானா, இமாசலப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில், நெல் மற்றும் கோதுமைப் பயிர் சுழற்சி இரண்டரை கோடி ஏக்கருக்கும் அதிகமான நிலங்களில் நடைபெறுகிறது.

முதல் பருவத்தில் கோதுமைச் சாகுபடியை முடித்து, அடுத்த பருவத்தில் நெல் நடவுக்கு முன்பாக 60 முதல் 65 நாள்கள் மட்டுமே இடைவெளி கிடைக்கும். இந்தக் குறுகிய இடைவெளியில் எந்தப் பயிரையும் பயிரிட முடியாது. அதே நேரத்தில் தொடர்ந்து கோதுமை மற்றும் நெல் எனத் தானிய வகைகளாகவே பயிரிட்டு வந்ததால் மண்வளம் மிக அதிகமாகச் சீர்கெட்டது. அப்போதுதான் ஒருசில விவசாயிகள் பாசிப்பயறு சாகுபடி செய்யலாம் என்று இறங்கினார்கள். ஆனால், அந்தக் கால கட்டத்திலிருந்த பாசிப்பயறு ரகங்கள் அனைத்துமே 70 முதல் 75 நாள்களுக்குப் பிறகே, அறுவடைக்குத் தயாராகும். எனவே, அவற்றைப் பயிரிட்டால், நெல் நடவு தள்ளிப் போகும். இந்த இடத்தில்தான் உலக காய்கறி ஆய்வு மையம் கைகொடுத்தது.

பயறு வகை பயிர்கள்
பயறு வகை பயிர்கள்


60 நாளில் அறுவடைக்கு வரும் பாசிப்பயறு

எங்களது விதை வங்கியிலிருந்த பாசிப்பயறு ரகங்களைப் பயன்படுத்தி, மிகக் குறுகிய காலத்தில், அதாவது 55 முதல் 60 நாள்களுக்குள் காய்கள் முதிர்ந்து, அறுவடைக்குத் தயாராகும் வகையிலான பாசிப்பயறு ரகங்களை உருவாக்கினோம். இந்த ரகங்கள் குறுகிய காலத்தில் அறுவடைக்குத் தயாராவதுடன், மஞ்சள் தேமல் வைரஸ் நோயினையும் தாங்கி வளரக்கூடியவையாக இருந்தன. மேலும், ஹெக்டேருக்கு ஒன்றரை முதல் இரண்டு டன் வரையிலும் மகசூலைக் கொடுத்தன.

இந்தப் பாசிப்பயறு ரகங்கள் காற்றிலிருந்து நைட்ரஜனைத் தழைச்சத்தாக மாற்றி, அதிகபட்சம் ஒரு ஹெக்டேருக்கு 140 கிலோ வரையிலும் மகசூல் கொடுத்தது. அந்தத் தழைச்சத்தைப் பாசிப்பயறு தனது விளைச் சலுக்குப் பயன்படுத்திக் கொண்டாலும், அது முற்றிலும் தீர்ந்து விடாது. பாசிப்பயறுக்கு அடுத்ததாகப் பயிரிடப்பட்ட நெற்பயிருக்கு சுமார் 25 கிலோ தழைச்சத்து முந்தைய பாசிப்பயறில் இருந்தே கிடைத்துவிட்டது. எனவே, விவசாயிகள் நெற்பயிருக்குப் பயன்படுத்த வேண்டிய தழைச்சத்தின் அளவு குறைந்தது. இப்படி, தொடர்ந்து தானியங் களைப் பயிரிட்டு மண்வளத்தைச் சிதைக்காமல் இருக்கவும், கூடுதல் வருமானத் தைக் கொடுக்கவும், அடுத்துவரும் நெற்பயிரின் தழைச்சத்து தேவையில் ஒரு பகுதியைப் பூர்த்தி செய்யவும் இந்தப் பாசிப்பயறு ரகங்களால் முடிந்தது.

இதனால் பல்வேறு பலன்களைக் கண்ட வட இந்திய விவசாயிகள் மட்டுமன்றி, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் பர்மா விவசாயிகளும் உலக காய்கறி மையத்திலிருந்து வெளியிடப்பட்ட பல பாசிப்பயறு ரகங்களைப் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் தற்போது பயிரிட்டு வருகிறார்கள். தமிழகத் திலும் இருபோக நெல் சாகுபடி செய்யும் பகுதிகளில் இந்தக் குறுகிய கால பாசிப்பயறு ரகங்களைப் பயிரிட்டுக் கூடுதல் வருமானம் பெறுவதுடன், மண்வளத்தையும் காக்க முடியும்.

பெரும்பாலான ஆசிய நாடுகள் பாசிப் பயறை நாடியிருக்கும் சூழலில், தைவான் ஒரு மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்துப் பயணித்து வருகிறது. அதைப் பற்றியும், மணி மற்றும் சாம்பல் சத்துகளின் இயற்கை மூலாதாரங்களைப் பற்றியும் அடுத்த இதழில் சொல்கிறேன்.

- வளரும்

முனைவர் சீனிவாசன் ராமசாமி
முனைவர் சீனிவாசன் ராமசாமி

புதிய ரக பாசிப்பயறு

உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் உள்ளிட்ட மத்திய ஆசிய நாடுகளில் தொடர் கோதுமைச் சாகுபடியால் மண்வளம் மிகவும் பாதிக்கப்பட்டது. எனவே, உலக காய்கறி ஆய்வு மையம் புதிய பாசிப்பயறு ரகங்களை இந்த நாடுகளில் அறிமுகப்படுத்தியது. பொது வாகவே இந்த நாடுகளில் கோதுமை அறுவடைக்குப் பின் வரும் மாதங்களில் வெப்பநிலை 40 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். எனவே, உள்ளூர் பாசிப்பயறு ரகங்கள் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கும்; பூக்கவோ, காய்க்கவோ செய்யாது. ஆனால், இந்தப் புதிய பாசிப்பயறு ரகங்கள் அதிக வெயிலைத் தாங்கி வளர்வதுடன், நல்ல மகசூலையும் கொடுக்கிறது; மண்வளத்தையும் அதிகரிக்கிறது.