திருப்பூர் மாவட்டம், அலகுமலையில் பொங்கல் விழாவையொட்டி, ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தங்கள் கிராமத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தக் கூடாது. ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதால் கிராம மக்கள் சிரமத்துக்குள்ளாவதாக அலகுமலை ஊராட்சி மன்றத் தலைவர் தூயமணி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, அதன் பின்னர் முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தது. இதையடுத்து, ஆட்சியர் வினீத்தின் ஆய்வுக்குப் பின் அலகுமலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம், அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கம் இணைந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. ஏப்ரல் 25 அன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதென முடிவு செய்யப்பட்டு, ஏப்ரல் 16-ம் தேதி மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடங்கியது. 2,000 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் கேலரி வசதி, மாடுகளுக்கான குடிநீர், கால்நடை மருத்துவர்கள், மாடுபிடி வீரர்களுக்கு முதலுதவி செய்ய மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடக்கி வைத்தனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 500 காளைகள், 450 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொண்டனர். விலங்குகள் கண்காணிப்பு குழு உறுப்பினர் மிட்டல், டாக்டர் அயுப்கான் ஆகியோர் ஜல்லிக்கட்டு போட்டியைக் கண்காணித்தனர்.

போட்டியில் பங்குபெற்ற 10-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. மாடுபிடி வீரர், மாட்டின் உரிமையாளர் இருவருக்கும் முதல் பரிசாக இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைத்து மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஜல்லிக்கட்டுப் போட்டியை உற்சாகமாகக் கண்டுகளித்தனர்.