தேசத்தின் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் முன்னெடுத்த போராட்டம் இன்னும் சில தினங்களில் 100 நாள்களைத் தொடவிருக்கிறது. ஆனால், இன்னும் இந்த மூன்று சட்டங்களில் பிரச்னைகள், விவசாயிகள் வைக்கும் கோரிக்கைகளை முறையாகப் பரிசீலிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது மத்திய அரசு. இந்தப் போராட்டங்களின் முதல் விதை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அவசர கதியில் நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்கள்தான். அந்தச் சட்டங்களை விரிவாகப் புரிந்துகொள்வதற்காகவே இந்தக் கட்டுரை.
இந்தக் கட்டுரை Khan GS Research Centre-ன் யூடியூப் சேனலில் வெளியான வீடியோவின் சுருக்கப்பட்ட எழுத்து வடிவம்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்கள் ஹரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளன. அதற்காக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. எதிர்க் கட்சிகளும் இந்த சட்டங்களுக்கு எதிப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், மத்திய அரசு, இந்தச் சட்டங்களை Gamechanger என்கிறது. அரசு ஆதரிப்பதால் இது நிச்சயம் `Gamechanger'(!) ஆகத்தானே இருக்கும். ஆளும் அரசாக இருந்தால், ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு எல்லாம் சரியான நடவடிக்கை. எதிர்க்கட்சியாக இருந்தால் எதுவும் மோசமான திட்டம். நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுதானே வழக்கமாக இருக்கிறது.
எந்த ஒரு விஷயத்திலும் நன்மை, தீமை இரண்டும் இருக்கும். இந்தச் சட்டங்கள் நல்லதா, கெட்டதா என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது. அதனால் முதலில் மூன்று சட்டங்கள் பற்றியும் விரிவாகப் பார்க்கலாம்.
அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் 2020 (Essential commodity (amendment) Ordinance 2020):
உப்பு, எண்ணெய், உருளைக்கிழங்கு, அரிசி போன்ற உணவுப் பொருள்கள் மிகவும் அத்தியாவசியமானவை. யாரேனும் இதை அதிக அளவில் சேமித்து வைத்தால் விலை ஏறிவிடும். செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, விலையை உயர்த்தி, அதன் பிறகு, விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும். இதைத் தடுப்பதற்காக உணவு பதுக்கல் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது அரசு.

இப்போது இந்தச் சட்டம் எதற்காக?
அதன்படி, அத்தியாவசிய பொருள்களைப் பதுக்கினால் சிறைத்தண்டனை வரை வழங்கப்பட்டது. ஆனால், 2020-ம் ஆண்டு, மத்திய அரசு, உப்பு, எண்ணெய், உருளைக்கிழங்கு, அரிசி போன்ற உணவுப் பொருள்களை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டது. போர் சமயத்திலும் பேரழிவு சமயத்திலும் மட்டுமே அத்தியாவசியப் பொருள்களைச் சேமித்து வைக்கக் கூடாது. இதுதான் தற்போதைய நிலை. கடந்த ஜூன் மாதம், கொரோனா தொற்றுக் காலத்தில் இந்தச் சட்டத்தை அவசர அவசரமாக மத்திய அரசு ஏன் கொண்டு வந்தது என்பதுதான் புரியவில்லை.
இது வியாபாரிகளுக்கு ஆதரவான நடவடிக்கை. ஆனால், இந்த சட்டம் வியாபாரி மற்றும் விவசாயிகள் இருவருக்கும் பலன் தரும் என்கிறது அரசு. உருளைக்கிழங்கை பயிரிடும் ஒரு விவசாயி, அறுவடை நேரத்தில் விலை இல்லை என்றால் சேமித்து வைத்து, விலை கிடைத்த பிறகு, விற்பனை செய்யலாம்'' என்று கூறுகிறது அரசு. பெரும்பாலான விவசாயிகளிடம் சேமிக்க இடவசதியோ, குடோன் வசதியோ இல்லை. இந்நிலையில் பொருள்களை எங்கு சேமித்து வைப்பார்கள்? வீட்டுக்கூரை ஓட்டையாக இருந்தாலும், மழை வர வேண்டும் என்று கடவுளிடம் வேண்டும் பரிதாப நிலையில்தான் இருக்கிறார்கள் விவசாயிகள். ஒரு விவசாயி, ஒரு வியாபாரியைக் காட்டிலும் நிச்சயமாக அதிகம் சேமித்து வைக்க முடியாது. அதனால் இந்தச் சட்டத்தில் தீமைகள் அதிகம் என்றே எனக்குத் தோன்றுகிறது.
விலை உத்தரவாதம் மற்றும் பண்ணைச் சேவை சட்டம் (Empowerment and protection agreement):
ஒப்பந்த விவசாயம் என்பதுதான் இதன் சாரம்சம். விவசாயிகளுக்கு ஏற்படும் ஒரு பெரிய பிரச்னை, விளைபொருளுக்கு நியாயமான விலை கிடைக்காததுதான். ஆனால், இந்த இரண்டாவது சட்டம், `விவசாயி ஒரு பொருளை விளைவிக்கும்போது, ஒரு பெரிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளலாம்' என்கிறது.
பிஸ்கெட், சிப்ஸ் தயாரிக்கும் பெரிய நிறுவனங்களுக்கு மூலப்பொருள்களான கோதுமை, உருளைக்கிழங்கு அதிகளவு தேவைப்படும். அதை வியாபாரிகளிடம் வாங்குகிறார்கள். ஆனால், இந்தச் சட்டத்தின்படி, நிறுவனங்கள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து பொருள்களை வாங்கலாம். விவசாயியும் நிறுவனமும் அதற்கான ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். விளைபொருள் விதைக்கும்போதே விலையை நிர்ணயித்துக்கொள்வார்கள். ஒப்பந்தம் போட்ட நிறுவனம் அறுவடை நேரத்தில் வயலுக்கே வந்து அறுவடையான மகசூலை எடுத்துக்கொள்ளும்.
உதாரணமாக, ஒரு கிலோ உருளைக்கிழங்கு 25 ரூபாய் என ஒப்பந்தம் செய்துள்ளதாக வைத்துக்கொள்வோம். அறுவடையாகும் நேரத்தில் சந்தையில் உருளைக்கிழங்கின் விலை கிலோ 10 ரூபாய்க்கு விற்றால், விவசாயிகளுக்கு லாபம்தானே? அதிக விலை கிடைக்கிறது. விளைபொருளை மார்க்கெட்டுக்கு எடுத்துப்போக வேண்டிய வேலையும், போக்குவரத்து செலவும் இல்லை.

இது நல்ல விஷயம்தான். அதனால் முதல் சட்டத்தைக் காட்டிலும் இது நன்றாக இருப்பதாகவே தெரிகிறது. ஆனால், இதிலும் சில சிக்கல்கள் உள்ளன.
> ஒப்பந்த விலையைவிட சந்தை விலை அதிகமாக இருந்தால், ஒப்பந்த நிறுவனத்துக்குத் தெரியாமல் விவசாயிகள் சந்தையில் விற்பனை செய்தால் என்ன நடக்கும்?
> மற்றொன்று, ஒப்பந்தம் செய்த நிறுவனம் மூடப்பட்டுவிட்டால் விவசாயிகளிடமிருந்து விளைபொருள்களை யார் வாங்குவார்கள்?
> இல்லை வேண்டுமென்றே அந்த நிறுவனம் விவசாயிகளின் விளைபொருள்களை வாங்க மறுத்தால் அப்போது என்னவாகும்?
> விளைந்த பிறகு, பொருளைக் குறைத்து கேட்டால் என்னவாகும்?
- அதனால் மண்டி அதிகாரி முன்னிலையில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்கிறது அரசு.
ஆனால், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராமத் தலைவர்கள் முன்னிலையில் ஒப்பந்தம் போடப்பட வேண்டும் என்கின்றனர் விவசாயிகள். கிராம பஞ்சாயத்துத் தலைவர், அந்தக் கிராம மக்களின் சார்பாகத்தான் பேசுவார். அவர்கள்தான் அவருக்கு முக்கியம். நிறுவனத்தின் சார்பாக அவர் பேசமாட்டார். மண்டி அதிகாரி முன் ஏற்படும் போது இது நடக்காது. அவருக்கு அது ஒரு கடமை அவ்வளவுதான். என்ன நடந்தாலும் அவருக்கு மாத ஊதியம் கிடைத்துவிடும்.
விவசாயிகள் vs பெருநிறுவனங்கள்... அரசு யார் பக்கம்?
அதுவும் அல்லாமல், கிராம மக்களின் பேச்சைக் கேட்டால் அவருக்கு எந்த லாபமும் ஏற்படாது. ஆனால், நிறுவனத்தின் பேச்சைக் கேட்டால் அவருக்கு பணம் கிடைக்கலாம். இங்குதான் அரசு தவறிழைக்கிறது. எனவே, இந்த ஒப்பந்தம் என்பது கிராம பஞ்சாயத்துத் தலைவர் முன்னிலையில் ஏற்பட வேண்டும். இது நல்ல சட்டம்தான். இது 2012-ம் ஆண்டு மன்மோகன் சிங் காலத்திலிருந்து உள்ளது. ஆனால், தற்போது சில திருத்தங்கள் இதில் மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளன.
மூன்றாவது சட்டம் சற்று வித்தியாசமானது. இதில்தான் பல விவாதங்கள் ஏற்படுகின்றன. விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை மண்டிக்கு வெளியிலும் விற்றுக் கொள்ளலாம் என்கிறது இந்தச் சட்டம். இதில்தான் எனக்கு சிரிப்பு வருகிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளில் 6 சதவிகிதம் பேர்தான் மண்டியின் மூலம் தனது விளைப்பொருள்களை விற்பனை செய்கிறார்கள். மீதமுள்ள 94 சதவிகிதம் பேர் அவர்கள் விருப்பப்படியே விற்பனை செய்கிறார்கள். இதில் பலருக்கு மண்டி எங்குள்ளது என்பதே தெரியாது. உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலத்தில் சில இடங்களில் மண்டியே இல்லை.

பீகாரில் மண்டி உள்ளது. ஆனால், அதை `பஜார் சமிதி' என்பர். எனவே, 94 சதவிகித விவசாயிகள் ஏற்கெனவே மண்டிக்கு வெளியில்தான் விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், மண்டிக்கு வெளியில் விற்பனை செய்து கொள்ளலாம் என்று கூறும் சட்டம் எதற்காக? அரசு 100 சதவிகித மக்கள் மண்டியில் விற்பனை செய்கிறார்கள் என்று நினைக்கிறதா? இதில் அரசு என்ன சொல்ல வருகிறது என்பது புரியவில்லை! இடைத்தரகர்கள் இல்லாமல் போவார்கள் என்பதைத்தான் அரசு சொல்ல வருகிறது.
மண்டி என்பது என்ன?
இந்தச் சட்டத்தின்படி, இந்தியாவில் எங்கு வேண்டுமென்றாலும் விவசாயிகள் தங்கள் பொருள்களை விற்றுக் கொள்ளலாம். இந்தச் சட்டத்தின் ஒரு நல்ல விஷயம், மகாராஷ்டிராவில் விளைவிக்கப்படும் வெங்காயத்தை ஆன்லைனில் புக் செய்யப்பட்டு பீகாரில் விற்றுக் கொள்ளலாம்.
அடுத்து APMC. அதாவது இந்தியா விடுதலை பெற்ற பிறகு, விவசாயிகள் ஏழ்மை நிலையில் இருந்தனர். எனவே அவர்கள், பணக்காரர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கினார்கள். கடனைத் திரும்பத் தர முடியாத சூழ்நிலை ஏற்படும்போது, அவர்கள் விளைபொருள்களை எடுத்துக் கொள்வார்கள். அதனால் விவசாயிகள் தொடர்ந்து ஏழ்மையில் இருந்தனர். எனவேதான் அரசு வேளாண் உற்பத்தி விற்பனைக் குழு (APMC) யைக் கொண்டுவந்தது. இதைத்தான் மண்டி என்கிறார்கள். மண்டி ஒரு பெரிய இடம். அங்கு வியாபாரிகள் இருப்பார்கள்.
ஒரு விவசாயி, ஒரு டிராக்டர் தக்காளி எடுத்து வருகிறார். விரைவில் விற்பனையாகாவிட்டால் தக்காளி பாழாகிவிடும். அதனால், நாம் நடைபாதையில் கடை போட்டு விற்றால் நிறைய பணம் கிடைக்கும் என விவசாயி நினைப்பார். ஆனால், அதை எப்படி விற்பனை செய்வது? ஒரு டிராக்டர் தக்காளியை விற்பனை செய்ய 10 நாள்களாகும். அது நடைமுறையில் சாத்தியமில்லாதது.
எனவே, சந்தையில் தக்காளியின் விலை கிலோ 40 ரூபாய் என்று விற்றால், இந்த ஏஜெண்டுகளுக்கு 20 - 30 ரூபாய்க்கு விவசாயிகள் விற்பார்கள். அதாவது, சந்தை விலையைக் காட்டிலும் குறைவான விலையில் விற்பார்கள். இதில் யாருக்கு லாபம் என்பதைக் காட்டிலும் இதில் இருதரப்பிலும் உள்ள விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு விவசாயியால் ஒரு டிராக்டர் தக்காளியை விற்க 10 நாள்கள் காத்திருக்க முடியாது. வேண்டும் என்றால் அவருக்கு ஒரு வாரம் தேவைப்படும்.
எனவே, அவர் ஒருவாரம் மண்டியில் தங்க முடியாது. எனவே, வியாபாரி யாரேனும் கிடைத்தால் அவர்களிடம் ஒரு மணி நேரத்தில் விற்றுவிடுவார்கள். இதில் விவசாயிகளுக்குக் கிடைக்கும் ஒரு நல்ல விஷயம். அதிக விலைகொடுக்கும் வியாபாரியிடம் விற்றுக்கொள்ளலாம். இருந்தாலும் வியாபாரிகள், ஒன்று சேர்ந்துகொண்டு ஒரே விலையைத்தான் சொல்வார்கள்.

இப்போது அரசு, விவசாயிகளுக்கு விருப்பமிருந்தால் APMC-ல் விற்பனை செய்துகொள்ளுங்கள். அல்லது வெளியில் விற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுகிறது. விவசாயிகள் வியாபாரிகளிடம் விற்பனை செய்வார்கள். சில வியாபாரிகள், குடோன் வசதிகளை உருவாக்கி, அந்தப் பொருள்களை அங்கு சேமிப்பார்கள்.
இந்தச் சட்டம் மூலம் தரகர்கள் தேவையில்லை என்று ஆக்கினால், நாங்கள் கட்டி வைத்துள்ள குடோனை என்ன செய்வது என்று கேட்கிறார்கள். இது ஒரு கிளை விவாதம்.
விவசாயிகள், குறைந்தபட்ச ஆதார விலை பறிபோய்விடும் என்று நினைக்கிறார்கள். அதைப்பற்றித்தான் போராடும் விவசாயிகள் கவலையடைகிறார்கள்.
ஒரு விவசாயியின் உருளைக்கிழங்கு 10 ரூபாய் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை மோடி 16 ரூபாய்க்கு விற்கச் சொல்கிறார் என்றால், அதற்கு ஏன் விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராடப் போகிறார்கள்? எனவே இதில் அவர்கள் கவலை கொள்ளும் விஷயம் குறித்து நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
MSP இன்னும் வேண்டுமா?
இந்தக் கொரோனா சமயத்தில் நமது நாட்டின் ஜிடிபி மைனஸ் சதவீதத்தில் சென்றபோது இந்த விவசாயிகள்தாம் நம்மைக் காப்பாற்றியவர்கள்.
நாம் அதிகமாக MSP என்ற வார்த்தையைப் பயன்படுத்துவோம் எனவே, நீங்கள் முதலில் நீங்கள் MSP என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஒப்பந்த சாகுபடியில் விளைச்சலுக்கு முன்னரே விலையை நிர்ணயம் செய்துவிடுவார்கள். விலையை யார் நிர்ணயித்து? தனியார் நிறுவனம். இதையே அரசாங்கம் செய்தால் அதைதான் குறைந்தபட்ச ஆதாரவிலை என்று சொல்கிறோம். இதில் விவசாயிகளுக்கு என்ன பிரச்னை?
விளைபொருளை விளைவிக்கும் முன்பே அரசாங்கம் ஒரு விலையைச் சொல்லிவிடும். எடுத்துக்காட்டாக 25 ரூபாயாக கோதுமையின் கொள்முதல் விலையை அரசு நிர்ணயித்துள்ளது என்று வைத்துக்கொள்ளுங்கள். வெளிச்சந்தையில் கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையானால், அதையே அரசு கொள்முதல் நிலையத்தில் விவசாயி விற்று 25 ரூபாய் பெற்றுக்கொள்ள முடியும். அதனால்தான் குறைந்தபட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக்க வேண்டும் என்கிறார்கள் விவசாயிகள். தற்போது MSP-யை அரசு அகற்ற முயல்கிறது என்கிறார்கள் விவசாயிகள். ஆனால், அகற்ற மாட்டோம் என்கிறார் மோடி.

இதில் அரசு என்ன சொல்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ``நாங்கள் விவசாயிகளிடமிருந்து 50 ரூபாய்க்கு கோதுமை வாங்கி, அதையே ரேஷன் கடையில் கிலோ 2 ரூபாய்க்கு விற்கிறோம். எனவே, அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது" என்ற அரசின் கூற்று சரியாகத்தான் படுகிறது. அதேபோல கொள்முதல் செய்யும் விளைபொருள்களைப் பாதுகாக்க போதுமான சேமிப்புக் கிடங்குகள் அரசாங்கத்திடம் இல்லை.
அதனால் பல நேரங்களில் கொள்முதல் மையங்களில் இடம் இல்லை என்று சொல்லி பொருள்களை வாங்க மறுக்கிறார்கள். இதனால் குறைந்தபட்ச ஆதாரவிலை 25 ரூபாய் உள்ள பொருள்களை வெளிச்சந்தையில் கிலோ 10 ரூபாய்க்குதான் விவசாயிகள் விற்க வேண்டியுள்ளது.
``காங்கிரஸ் எத்தனை விவசாயிகளிடம் குறைந்த பட்ச ஆதார விலையில் பயிர்களை கொள்முதல் செய்ததோ அதைவிட அதிகமாகவே பாஜக கொள்முதல் செய்துள்ளது" என்கிறார் மோடி. இது சரியான விஷயம்தான். ஆனால், இதை மோடிக்கும் கட்டாயமாக்கி சென்றது மன்மோகன் சிங். 2013-ம் ஆண்டு தாம் வெற்றி பெற மாட்டோம் என மன்மோகன் சிங்குக்குத் தெரிந்து விட்டதுபோல. எனவே, 2013-ம் ஆண்டு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவந்தார்.
அதன்மூலம் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் கிலோ இரண்டு ரூபாய்க்கு கோதுமை, மூன்று ரூபாய்க்கு அரிசி கிடைத்தது. மன்மோகனின் ஆட்சி சென்றுவிட்டது. பிறகு வந்த மோடி, இதைக் கொடுத்துதான் ஆக வேண்டும்.
இருப்பினும், இந்த அரசாங்கத்தின் சாந்தா கமிட்டி, குறைந்த பட்ச ஆதார விலையில் அரசு கொள்முதல் செய்யும்போது அது பொருளாதாரத்தைப் பாதிக்கிறது. எனவே அரசு, அந்தப் பொறுப்பைத் துறக்க வேண்டும். அதைத் தனியாராக்க வேண்டும் என்று கூறுகிறது.
விவசாயிகளின் நலனில் இந்தியா அக்கறை கொண்டுள்ளதா?
``மோடி நீங்கள் MSP-யை அகற்ற மாட்டோம் என்கிறீர்கள். ஆனால், இந்தக் கமிட்டி அதை அகற்ற வேண்டும் என்று சொல்கிறது. அதுதான் எங்கள் அச்சத்துக்குக் காரணம்" என்கிறார்கள் விவசாயிகள்.
நிதின் கட்கரி பா.ஜ.க தலைவராக இருந்தபோது, ``குறைந்தபட்ச ஆதார விலை என்பது நமது பொருளாதாரத்தின் மீது விழும் கூடுதல் சுமை. நமது அரசு விவசாயிகளிடமிருந்து 25 ரூபாய்க்கு வாங்கி மக்களுக்கு இரண்டு ரூபாய்க்கு தருகிறது. இது நஷ்டமே" என்றார். இதனால் அரசுக்கு இழப்பு எவ்வளவு தெரியுமா? 1,000 கோடி ரூபாய்.
அது அதிகம் இல்லை. ஏனென்றால் 1,500 கோடி ரூபாய் கடன் வாங்கிய நிரவ் மோடியை மன்னிக்கச் சொன்ன அரசுக்கு 1,000 கோடி பெரிய தொகை இல்லை.
எனவே MSP-யால் அரசுக்கு பாரம் என்றும் சொல்லும் நீங்கள் வாராக்கடன் (NPA) மூலம் பொருளாதாரத்தில் பாரம் விழுகிறது என ஏன் சொல்லவில்லை? கடைசியில் இருக்கும் வங்கிகளில், ரிசர்வ் வங்கி மட்டுமே மிஞ்சும் போல தெரிகிறது. இதன்மூலம் அரசு இரண்டு மாதிரியாக நடந்துகொள்கிறது அல்லவா?

அரசு செய்யும் தப்பு என்னவென்றால், தற்போது நவீன முறையான குடோன்கள் வந்தாலும், பழைய முறையிலேயே அரசாங்கம் விளைபொருள்களைச் சேகரித்து வருகிறது. கன்வேயர் மூலம் பொருள்களை உள்ளே வைப்பதும் எடுத்துக் கொள்வதும் என நவீன முறையில் விளைபொருள்களைச் சேகரித்து வைக்கலாம்.
குளிர்பதனக் கிடங்குகளில் விளைபொருள்களை வைப்பதால் விவசாயிகளுக்கு நஷ்டம்தான் ஏற்படுகிறது. அதேபோல அரசுக்கு சேமித்து வைக்க இடமில்லை. உண்மை என்னவென்றால், சுதந்திரம் அடைந்த சமயத்திலிருந்து எந்த அரசாங்கமும் விவசாயிகள் நலனில் எந்த அக்கறையும் காட்டியது இல்லை, காட்டவும் விரும்பவில்லை. இதை நிச்சயமாகச் சொல்வேன்.

விளைபொருள்களை குடோனுக்கு எடுத்துச் சென்றால் அங்கும் இடம் இருக்காது. எனவே, மோடி சரியாகத்தான் சொல்கிறார். குறைந்தபட்ச ஆதார விலை அகற்றப்பட மாட்டாது. ஆனால், அது நடைமுறையில் சாத்தியமாக இருக்காது.
இது மோடியின் தவறு என்று சொன்னால், எந்த அரசில் இது சரியாக இருந்துள்ளது? நேருவின் அரசாங்கம் முதல் தற்போது வரை யாரும் இதைக் கண்டு கொள்ளவில்லை. இந்த பொதுமுடக்கத்தில் ஹரியானாவில் மக்காச்சோளம் கிலோ 100 ரூபாயாக விற்றுக் கொண்டிருந்தபோது, குறைந்தபட்ச ஆதார விலை 18.5 ஆக இருந்தது. அப்போது அரசு எங்கே சென்றது?
விவசாயிகள் மீது அரசு அக்கறை கொண்டுள்ளது என்றால் MRP நிர்ணயிக்க வேண்டும். மண்டி வைத்து கொள்ளுங்கள்; இல்லை விட்டுவிடுங்கள். ஆனால், எங்கு விற்றாலும் ஒரு குறைந்தபட்ச விலைக்கு கீழே விற்க முடியாது என்று இருந்துவிட்டால் விவசாயிகளுக்கு எந்தக் கவலையும் இல்லை.
விவசாயிகளுக்கு அரசு செய்ய வேண்டியது என்ன?
இந்த நாட்டில் எவ்வளவோ இடங்கள் உள்ளன. ஆனால், விவசாயிகள் விளைபொருள்களை வைக்க மட்டும் இடம் இல்லை.
மத்திய அரசை விடுங்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் இதுதான் நிலைமை. மாநில அரசுகளாவது விவசாயிகளுக்கான MSP-யை தீர்மானமாக வைக்கவேண்டும். MSP கொண்டு வாருங்கள். அந்த விலைக்கு கீழே யாரும் விவசாயிகளிடம் பொருள்களை வாங்க முடியாது என்று வையுங்கள். மீறி செயல்பட்டால் செய்தால் சிறைத்தண்டனை என்று சொல்லுங்கள்.
எங்கு எந்தப் பயிர் சிறந்ததாக இருக்கும் என்று கண்டுபிடிக்க விவசாயிகளுக்கான ஒரு செயலி வேண்டும். அதில் விலை, எந்தப் பகுதியில் கோதுமை அல்லது அரிசி போன்ற பொருள்கள் என்ன விலையில் விற்கப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் வசதியும் இருக்க வேண்டும். குரல் பதிவு மூலம் அதைத் தெரிந்து கொள்ளும் வசதி இருக்க வேண்டும்.

மகாராஷ்டிராவில் ஒரு விவசாயி வெங்காயம் விளைவித்திருக்கிறார், ராஜஸ்தானில் ஒரு விவசாயி என்ன விளைவித்திருக்கிறார் என்றும் காட்ட வேண்டும். அதன் மூலம் ஏற்கனவே அதிகம் விளைவிக்கப்பட்ட பயிரை அந்த விவசாயி பயிர் செய்ய மாட்டார். எனவே அரசாங்கம், `அந்தந்தப் பகுதிகளில் விவசாயிகள் எதை விளைவித்தால் சிறப்பாக இருக்கும் என்று தெரிவிக்க வேண்டும். அதேபோல வானிலை குறித்த தகவல்களும் அந்த செயலிகள் மூலம் விவசாயிகளுக்கு தெரிய வேண்டும். அதிகமாக எந்த இடத்தில் மழை பெய்யும், எந்த இடத்தில் முன்னரே மழை பெய்யும் போன்ற தகவல்களை அரசு வழங்க வேண்டும். தொழில்நுட்பம் மூலம் இந்த மூன்று விஷயங்களும் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் MSP-ஐ கட்டாயமாக நிர்ணயிக்க வேண்டும். FCI அதிகாரியோ, பஜார் சமிதியோ, முகவரோ ஏன் பிரதம மந்திரியோகூட அந்த விலைக்கு குறைவாக விவசாயிகளிமிருந்து பொருளை வாங்கக் கூடாது. விவசாயிகளுக்கு எந்த அநியாமும் ஏற்படக் கூடாது. இன்றே விவசாயிகளின் நலன் குறித்து நாம் யோசித்தால்தான் அவர்கள் நமது ஜிடிபியைக் காப்பாற்றுவார்கள்!
இப்போது சொல்லுங்கள்... இந்த விவசாய சட்டங்கள் குறித்து உங்கள் கருத்து என்ன? கீழே கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்!
நன்றி: Khan GS Research Centre