
இயற்கை
அந்தமான் நிகோபார் தீவுகள். சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி. இயற்கை அன்னையின் அழகு கொட்டிக்கிடக்கும் அற்புதமான தீவு. பல தீவுகளைக் கொண்டது நிகோபார் தீவுக்கூட்டம். அங்கு தொல்குடிகளான நிகோபார் பழங்குடியினர் வசித்து வருகிறார்கள். நிகோபார் தீவுக்கூட்டத்தில் உள்ள தீவுகளுக்குத் தேசிய அங்கக வேளாண்மை சான்று வழங்கியுள்ளது மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலவாழ்வு அமைச்சகம். அங்குள்ள கிரேட் நிகோபார் என்ற தீவு யுனெஸ்கோ மூலமாக உலகின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பகுதி. அங்கும் தொல்குடிகள் வாழ்கிறார்கள். இயற்கை மாசுபடாத பகுதி.
பாரம்பர்யமிக்கப் பெரும் நிலப்பரப்புக்கு உத்தரவாத திட்டத்தின்(Large Area Certification Program) கீழ் இந்தியாவிலேயே முதன்முதலில் மிகப்பெரிய பகுதிக்கு வழங்கப்படும் சான்றிதழ் இதுவேயாகும். இந்தச் சான்றிதழ் கூட்டாகப் பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பழங்குடியினர் வேளாண்மை மூலம் உற்பத்தி செய்யும் பொருள்கள், அங்கக பொருள்களுக்கான இந்தியச் சந்தையில் நேரடியாக நுழைய முடியும். இது அவர்களது பாரம்பர்ய வேளாண்மைக்கான அங்கீகாரம். அத்துடன் பழங்குடியினருக்குச் சந்தைவாய்ப்பையும் உருவாக்கித்தரும். இந்தச் சான்றிதழ் கிடைக்க முக்கியக் காரணமாக இருந்தது போர்ட் பிளேயரில் உள்ள மத்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையம். நிகோபார் தீவுகள் பற்றியும் அங்கு நடைபெறும் இயற்கை வேளாண்மை முறைகள் பற்றியும் ஆராய்ந்து ஆராய்ச்சி கட்டுரைகள், சர்வதேச அளவிலான பல நூல்களை வெளியிட்டனர் மத்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலைய இயற்கை வளங்கள் மேலாண்மைத் துறையின் தலைவரும் முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் வேல்முருகன் மற்றும் அவரது குழுவைச் சேர்ந்தோர். இந்தக் குழுவின் பரிந்துரை அடிப்படையில்தான் தற்போது தேசிய அங்ககச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அந்தமானில் சுனாமி தாக்குதலால் விவசாய நிலங்களில் கடல்நீர் புகுந்து விட்டது. விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு நிலங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டு இருந்தன. அந்த நிலங்களை மீட்டு மீண்டும் விவசாயம் நடக்கக் காரணமாக இருந்தவர்களில் வேல்முருகனும் ஒருவர். தற்போது நிகோபார் தீவுகளுக்கு இயற்கை விவசாயச் சான்றிதழ் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த வேல்முருகனிடம் பேசினோம்.
‘‘நிகோபார் தீவுக்கூட்டங்கள் இயற்கையின் அற்புதங்கள். அங்குள்ள பழங்குடியினரின் வாழ்க்கை முறை அதி அற்புதமானது. அந்த மக்கள், மண் மீது நம்பிக்கை கொண்டவர்கள். நிகோபார் தீவுகளில் தென்னையே பிரதான பயிராகும். இதையடுத்து கிழங்கு வகைகள், பழங்கள், பாரம்பர்ய காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. கிழங்கு வகைகள் பொதுவாகத் தென்னையில் ஊடுபயிராகப் பயிரிடப்படுகிறது. தென்னை இயற்கையாகவும் மண்ணை உழாமலும் பயிர் செய்யப்படுகிறது. நிகோபார் வேளாண்மையின் மற்றொரு முக்கிய அம்சம் வீட்டுத்தோட்டமும் ‘டுகேட்’ தோட்டமுமாகும்.

இங்கு பங்காளி சண்டை இல்லை
இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருப்பதுபோல, நிலங்களைப் பங்காளிகள் பிரித்துக்கொள்ளும் முறை இல்லை. ஒட்டுமொத்த நிகோபாருக்கும் ஒரே சர்வே எண்தான். ஒவ்வொரு நிலமும் தனித்தனி சர்வே எண்களால் பிரிக்கப்படவில்லை. ஒரு தாத்தா வழியில் வந்த நான்கைந்து தலைமுறையினர் அவர்களுக்கான நிலங்களில் ஒற்றுமையாக விவசாயம் செய்கிறார்கள். எல்லோரும் உழைக்கிறார்கள். விளைச்சலை ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரித்துக்கொள்கிறார்கள். அவர்களுக்குள் பிரிவினையோ சண்டை சச்சரவுகளோ இருக்காது. இப்படிக் கூட்டமாகச் செய்யும் விவசாயத்தைத்தான் அவர்கள் ‘டுகேட்’ என்கிறார்கள்.
மண் கொடுப்பது மண்ணுக்கே
நிலத்தில் கிடைக்கும் விளைச்சலில் உணவாகப் பயன்படும் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்கிறார்கள். மற்ற எந்தப் பகுதியையும் எடுப்பதில்லை. இலைதளைகள், தண்டு என மற்ற பகுதிகளை நிலத்திலேயே விட்டு விடுகிறார்கள். தங்களுக்கு உணவுக்கொடுத்த மண்ணுக்கு அதனை உணவாக்கி விடுகிறார்கள். அதனால் இலைதளைகள் மூடாக்காகவும், உரமாகவும் இருப்பதால், நிலம் வளமாக இருக்கிறது. விதைப்பதும், அறுவடை செய்வதும் மட்டுமே விவசாய வேலையாக வைத்துள்ளார்கள். கால்நடை எருவைக்கூட அவர்கள் பயன்படுத்துவதில்லை. பயிர் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள் மண்ணிலே கிடைக்கின்றன. அவர்களது விவசாயம் முற்றிலும் இயற்கை வழி விவசாயம். தனிப்பட்ட முறையில் அல்லாமல் ஒவ்வொரு தீவுமே ஒரு பெரிய கலப்புப் பண்ணையம் நடைபெறும் இடமாகவே இருக்கிறது. நிகோபாரின பன்றிகள், கோழிகள் அவர்களின் முக்கியக் கால்நடைகளாகும்.

கூட்டு முயற்சி
பல நூற்றாண்டுகளாக அந்த மக்கள் இயற்கை வேளாண்மையைப் பின்பற்றி உணவுத் தேவையைப் பூர்த்திச் செய்து வருகிறார்கள். இதில் நிகோபார் தீவுகள் பற்றியும் அங்கு நடைபெறும் இயற்கை வேளாண்மை முறைகள் பற்றியும் நாங்கள் ஆராய்ந்தோம். பழங்குடியினரின் வேளாண்மை பற்றிய அறிவியல்பூர்வமான, சமூகப் பொருளாதார நிலைபற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆராயப்பட்டது. பிறகு, அத்தகவல்களின் அடிப்படையில் தேசிய அங்ககச் சான்றிதழுக்குப் பரிந்துரைத்தோம். அதனடிப்படையில் அந்தமான் நிகோபார் விவசாயத்துறையினர் முயற்சி செய்து, மத்திய அரசின் தேசிய அங்ககச் சான்றிதழைப் பெற்றுத் தந்துள்ளார்கள். மேலும் இத்தீவுகளில் மரபணு மாற்று விதைகள், ரசாயன உரங்கள், வேதியியல் இடுபொருள்கள் விற்பனை செய்வதைத் தடைசெய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
பாரம்பர்யம் மிக்க பழங்குடியினர் வசிக்கும் பெரிய நிலப்பரப்புக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இயற்கை விவசாயச் சான்றுக்காக ஒவ்வொரு விவசாயியும் மூன்று வருடங்கள் காத்திருக்கத் தேவையில்லை. நிகோபார் தீவுகளில் விளையும் விளைபொருள்கள் அனைத்தும் இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த விளைபொருளாகவே இனி கருதப்படும்.

அந்தமான் நிகோபார் முழுவதும் படிப்படியாக அங்கக வேளாண்மையின் கீழ் கொண்டுவந்து அங்ககச் சான்றளித்து அந்தமானுக்கென ஒரு தனிப்பட்ட சந்தைக் குறியீடு பெற வேண்டும். அதற்காக மத்திய அரசின் பாரம்பர்ய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளைச் செய்துவரும் வேளாண் துறைக்குத் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கும் குழுவிற்கு நான் தலைவராக இருக்கிறேன். அரசின் முயற்சிகள் ஒருபுறம் இருந்தாலும், பழங்குடியினரின் பண்பாட்டை அறிந்து அவர்களின் சமூகப் பொருளாதார நிலைக்கேற்றவாறு அங்கக வேளாண்மையில் பயிற்சி அளிப்பது, விளைபொருள்களை விற்பனை செய்யத் தேவையான உதவிகள், போதிய உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தருவதும் மிகவும் அவசியம். இப்பணிகளை, மத்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம் கடந்த 8 ஆண்டுகளாகச் செயல்படுத்தி வருகிறது. இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து இப்பணிகளை இன்னும் சிறப்பாகவும் விரைவாகவும் செயல்படுத்த வேண்டும். அப்போதுதான், இந்த அங்கக வேளாண் சான்றிதழின் முழுப்பயனையும் இங்கு வாழும் பழங்குடி மக்கள் அடைய முடியும்’’ என்றவர் நிறைவாக,

‘‘இதேபோல, நாட்டில் பல பகுதிகளில் பராம்பர்யமாக இயற்கை வேளாண்மை நடைபெற்று வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் மலைப்பகுதியில் இருக்கும் ஒரு பழங்குடியினர் பருப்பு வகைகள் மற்றும் பாசுமதி அரிசியைப் பாரம்பர்ய முறையில் சாகுபடி செய்கிறார்கள். ராஜஸ்தானில் ஒரு பழங்குடியினர் மாடுகளை வளர்த்து வருகிறார்கள். அந்த மாட்டுப் பாலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இப்படி விவசாயம் செய்யும் பழங்குடியினர் வேளாண்மைக்கும் அங்கக வேளாண்மைச் சான்றிதழ் வழங்க மத்திய வேளாண் அமைச்சகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது’’ என்று சொல்லிமுடித்தார்.
‘பழங்குடியினர் வேளாண்மையைப் புரிந்துகொள்ளுதல்!’
முதன்முதலில் 2015-ம் ஆண்டுப் பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் வேல்முருகன் குழுவினர் ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டனர். பழங்குடியினர் பங்கேற்பு ஆராய்ச்சிகளின் முடிவுகளைப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளாகத் தொடர்ந்து வெளியிட்டனர். பத்தாண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு பழங்குடியினர் பற்றிய பல்வேறு தகவல்களைத் தொகுத்து ‘பழங்குடியினர் வேளாண்மையைப் புரிந்துகொள்ளுதல்’ என்ற ஒரு சர்வதேச அளவிலான புத்தகத்தை வெளியிட்டனர். அந்தப் புத்தகம்தான் நிகோபாரில் வசிக்கும் பழங்குடியினரின் வேளாண்மையை முதன்முதலாக உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. அதோடு இயற்கை வேளாண்மையின் பயன்களையும் ஆணித்தரமாக அறிவியல் சான்றுகளோடு நிறுவியது. இவையனைத்தும் தற்போது தேசிய அங்கக வேளாண்மைச் சான்றிதழ் பெற்றுத்தரும் பணிக்கு அடிப்படை ஆதாரமாக விளங்கின.