Published:Updated:

நெற்பயிரை அழித்து சாலை! - அச்சுறுத்தப்படுகிறார்களா போராட்டம் நடத்திய விவசாயிகள்?

நெற்பயிரை அழித்து சாலை ( ம.அரவிந்த் )

விவசாயிகளிடம் இன்று பேச்சுவார்த்தை நடக்கவிருக்கும் நிலையில், எதிராகச் செயல்படுபவர்கள்மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அச்சுறுத்தும்விதமாக நாளிதழில் விளம்பரம் கொடுக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Published:Updated:

நெற்பயிரை அழித்து சாலை! - அச்சுறுத்தப்படுகிறார்களா போராட்டம் நடத்திய விவசாயிகள்?

விவசாயிகளிடம் இன்று பேச்சுவார்த்தை நடக்கவிருக்கும் நிலையில், எதிராகச் செயல்படுபவர்கள்மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அச்சுறுத்தும்விதமாக நாளிதழில் விளம்பரம் கொடுக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நெற்பயிரை அழித்து சாலை ( ம.அரவிந்த் )

திருவையாறில் நெற்பயிரை அழித்து புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்ற நிலையில், விவசாயிகள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து சாலைப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. விவசாயிகளிடம் இன்று பேச்சுவார்த்தை நடக்கவிருக்கும் நிலையில், `எதிராகச் செயல்படுபவர்கள்மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என அச்சுறுத்தும்விதமாக நாளிதழில் விளம்பரம் கொடுக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

பெரம்பலூர் டு மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு நகரப் பகுதி வழியாகச் செல்கிறது. திருவையாறில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக மத்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.191 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பெரும்புலியூர், மணக்கரம்பை, கண்டியூர், கீழதிருப்பூந்துருத்தி, கல்யாணபுரம், திருவையாறு உள்ளிட்ட ஆறு கிராமங்கள் வழியாக புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

வயல், தென்னை, வாழை மற்றும் ஏராளமான மரங்களை அழித்து சுமார் 7 கிலோமீட்டர் அளவில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. குறிப்பாக, சம்பா நடவு செய்யப்பட்ட நெற்பயிரில் மண், கற்கள் போட்டு புல்டோசர் கொண்டு கட்டாந்தரையாக மாற்றி, சாலை அமைக்கப்பட்டது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. `உயிருடன் இருக்கும் பயிரை கொல்லாதீங்க..!' என விவசாயிகள் கண்ணீர் வடித்தனர்.

சாலை
சாலை

மணிமேகலை என்பவர், ``என் கணவர் இறந்த பிறகு எங்களுக்குச் சொந்தமான இந்த ஒரு ஏக்கர் நிலம்தான் எனக்கும், என் பிள்ளைகளுக்கும் வாழ்வாதாரமாக இருக்குது. ரூ 30,000 வட்டிக்கு வாங்கி சம்பா நடவு செஞ்சேன். எந்த பாதிப்பும் இல்லாமல் செழிப்பாகப் பயிர் வளர்ந்திருக்குது. 70 நாள்கள் ஆன பயிரை திடீர்னு புல்டோசர்விட்டு அழிச்சு, சாலை போடுறது எங்க ஈரக்கொலையை நடுங்கவெக்குது. புழு, பூச்சி தாக்கினாலே தாங்காத நாங்க, பயிரைக் கொல்வதை எப்படித் தாங்கிக்கொள்வோம்?

எங்களுக்கு சாலை வேண்டாம்" என ஒப்பாரி வைத்தவரைக் கண்டுகொள்ளாமல் சாலைப் பணி நடைபெற்றது. இதையடுத்து விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், தற்காலிகமாகச் சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு சட்டத்தின்படி சாலை அமைப்பதற்காக 29.6.2021 அன்று நிலம் கையகப்படுத்தபட்டிருப்பதால் யாரும் ஆக்கிரமிப்பு செய்வதோ, விவசாயப் பணிகள் மேற்கொள்வதோ சட்டத்துக்குப் புறம்பான செயல் என்றும், மீறுபவர்கள் கடும் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் எனவும் தேசிய நெடுஞ்சாலை அலுவலம் தஞ்சாவூர் சார்பில் பிரபல நாளிதழில் விளம்பரம் கொடுக்கப்பட்டிருப்பது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது. ``எங்களை அச்சுறுத்துவதற்காகவே இப்படிச் செய்திருக்கிறார்கள்" என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வயலுக்குள் சாலை
வயலுக்குள் சாலை

இது குறித்து விவசாயிகள் சிலரிடம் பேசினோம். ``விளைநிலங்களை அழித்து சாலை அமைக்க வேண்டாம் என ஆரம்பத்திலிருந்தே கூறிவருகிறோம். முறையான அறிவிப்பு இல்லை. சாலை அமைப்பதற்கான ஆவணங்கள் தரவில்லை. நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பணம் கொடுக்கவில்லை. காவிரி ஆற்றை ஒட்டி அமைந்திருக்கும் முப்போகம் விளையக்கூடிய வளம்கொண்ட விளைநிலத்தை அழித்து சாலை அமைத்தனர்.

விவசாய அமைப்பைச் சேர்ந்த பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து தற்காலிகமாகப் பணிகள் நிறுத்தப்பட்டன. மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், விவசாயிகளுடன் நாளை (இன்று) பேச்சுவார்த்தை நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், பிரபல நாளிதழ் ஒன்றில் விளம்பரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பொது அறிவிப்பு என குறிப்பிடப்பட்ட அதில், `29.6.2021 அன்றே விவசாயிகளிடமிருந்து நிலம் கையகபடுத்தப்பட்டுவிட்டது. மத்திய அரசுக்குச் சொந்தமான அந்த இடத்தில் யாரும் ஆக்கிரமிப்பு செய்வதோ, விவசாயப் பணிகளை மேற்கொள்ளவோ கூடாது.

பி.ஆர்.பாண்டியன் தலைமையில் போராட்டம் நடத்திய விவசாயிகள்
பி.ஆர்.பாண்டியன் தலைமையில் போராட்டம் நடத்திய விவசாயிகள்

மீறினால் சட்டவிதிகளின்படி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கபடும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க பிரமுகர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் விவசாயிகள் என்ற பெயரில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கின்றனர். எங்களுக்கு சாலை வேண்டாம், நிலம்தான் வேண்டும் என்பதில் நாங்க உறுதியாக இருக்கிறோம். விவசாயிகளை அச்சுறுத்தி, விவசாயத்தை அழிப்பதற்கான நடவடிக்கையை அரசு நிறுத்த வேண்டும்" என்றனர்.