Published:Updated:

விவசாய ஆர்வமுள்ளவர்களுக்கு அரசின் தரிசு நிலங்கள் குத்தகைக்கு வழங்கப்படுமா?#DoubtOfCommonMan

தரிசு நிலம்

"நிலமற்ற ஏழை விவசாயிகள், விவசாயத்தில் ஆர்வமுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசுக்குச் சொந்தமான தரிசு நிலங்களை குத்தகைக்கு அளிக்கும் திட்டம் ஏதும் உள்ளதா?" என வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

Published:Updated:

விவசாய ஆர்வமுள்ளவர்களுக்கு அரசின் தரிசு நிலங்கள் குத்தகைக்கு வழங்கப்படுமா?#DoubtOfCommonMan

"நிலமற்ற ஏழை விவசாயிகள், விவசாயத்தில் ஆர்வமுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசுக்குச் சொந்தமான தரிசு நிலங்களை குத்தகைக்கு அளிக்கும் திட்டம் ஏதும் உள்ளதா?" என வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

தரிசு நிலம்
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், "விவசாயத்தில் ஆர்வமுள்ள, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசு பொது தரிசு நிலங்களை குத்தகைக்கு அளிக்கும் வகையில் திட்டம் ஏதும் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் சுந்தரமூர்த்தி என்ற வாசகர். அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.
Doubt of a common man
Doubt of a common man

கரிசல்பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வரதராஜன் முன் இந்தக் கேள்வியை வைத்தோம்.

"2006-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளில் கூறியபடியே `நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு 2 ஏக்கர் தரிசு நிலம் இலவசமாக வழங்கப்படும்’ என சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்தார். `அத்தனை பேருக்கு எப்படி வழங்க முடியும்’ என்று அ.தி.மு.க-வினர் கிண்டலடித்தனர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர், `இது ஒரு சமூகத்திட்டம்’ எனக்கூறி வரவேற்றனர். இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் தரிசு நிலங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டன.

தரிசு நிலம்
தரிசு நிலம்

தமிழகத்தில் 1 லட்சத்து 95,000 ஏக்கர் தரிசு நிலம் இருப்பதாகவும், இதில், சிறுகுறு விவசாயிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது 67,000 ஏக்கர் எனவும் கூறப்பட்டது. "67,000 ஏக்கர் நிலத்தை பயன்படுத்தி வந்த 98,000 ஏழை விவசாயிகளுக்கு, அந்த நிலங்களைப் பண்படுத்தி மீண்டும் வழங்கப் போகிறோம்’’ என்றார்கள். அத்துடன், 4 லட்சத்து 25,000 சிறுகுறு விவசாயிகளுக்குச் சொந்தமான 7 லட்சம் ஏக்கர் தரிசு பட்டா நிலத்தை அந்தந்த விவசாயிகள் விரும்பிக் கேட்டுக்கொண்டால், அந்நிலத்தை விவசாயம் செய்யத்தக்க நிலமாக பண்படுத்தி மீண்டும் அவர்களுக்கே வழங்கப்படும் எனவும் சொன்னார்கள்.

Doubt of a common man
Doubt of a common man

அதிலும், முதல்கட்டமாக 5 லட்சம் ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு தரிசுநிலத்தை மேம்படுத்தி வழங்கப்படவுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், தரிசு நிலங்களைத் தயார்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. போதிய நிலத்தடி நீர் இல்லாத, வறட்சியான பின்தங்கிய மாவட்டங்களில் இத்திட்டத்தில் தரிசு நிலம் கொடுத்தாலும் விவசாயம் செய்ய முடியுமா என்ற சந்தேகமும் அப்போது எழுந்தது. அறிவித்தபடி விவசாயிகளுக்குப் வழங்கிட போதிய தரிசு நிலப்பரப்பும் இல்லாததால், `2 ஏக்கர் இலவச நிலம்’ என்ற திட்டம், `தரிசு நிலம் இருப்பதற்கேற்ப’ என்று மாற்றப்பட்டது. அதிலும், விவசாயம் செய்யத் தயாராக உள்ள நிலத்தை பிரித்துக் கொடுப்பது, விவசாயத் தொழிலாளர்களிடம் பட்டா இருந்தும் விவசாயம் செய்ய முடியாத நிலத்தை மேம்படுத்துவது, கரடுமுரடான புறம்போக்கு நிலங்களை வேளாண்மைப் பொறியியல் துறையால் விவசாய நிலமாக பண்படுத்திக் கொடுப்பது என மூன்று நிலைகளில் இத்திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிட்டது.

தரிசு நிலம்
தரிசு நிலம்

ஆனால், பல மாவட்டங்களில் நிலங்களைத் தேர்வு செய்வதிலும், திட்டத்தைச் செயல்படுத்துவதிலும் மாவட்ட நிர்வாகம் சுணக்கம் காட்டியதால், இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. தற்போது, தமிழகத்தைப் பொறுத்தவரையில் சுமார் 50,000 ஹெக்டேர் தரிசு நிலம்தான் இருக்கும். இதில், தென் மாவட்டங்களில்தான் தரிசு நிலங்கள் அதிகமாக உள்ளது. அரசுக்குச் சொந்தமான தரிசு நிலத்தை மேய்ச்சல் புறம்போக்கு எனவும் சொல்வார்கள். தி.மு.க ஆட்சியைத் தொடர்ந்து அ.தி.மு.க ஆட்சியிலும் பட்டியலின மக்களுக்கு தரிசு நிலம் வழங்கப்பட்டது.

தற்போது தரிசு நிலத்தை விவசாயத்திற்காக வழங்குவதில் பல சிக்கல்கள் உள்ளன. இந்த நிலங்கள் பொதுப்பணித்துறை, கால்நடைத்துறை, வருவாய்த்துறை, வனத்துறை ஆகிய துறைகளுக்குச் சொந்தமானதாகத்தான் இருக்கும். இந்தத் துறைகளிடம் அனுமதி பெறாமல் எதுவும் செய்ய முடியாது. இதில், தி.மு.க ஆட்சியில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட பட்டாக்கள் மட்டும்தான் விவசாயிகளிடம் உள்ளது. இதில் 80 சதவிகித விவசாயிகளுக்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை அடையாளப்படுத்திக்கூட தரப்படவில்லை.

உதயகுமார் - வரதராஜன்
உதயகுமார் - வரதராஜன்

அதிலும், அந்த நிலங்களுக்கான அளவைகள், கிராம வருவாய்த்துறை பதிவேடுகளில் இன்னமும் பதிவேற்றம் செய்யப்பட்டவில்லை என்பதுதான் பெரிய கொடுமை. இதில், குறிப்பிட்ட சில ஆண்டுக்குள் அந்த நிலங்களை பயன்படுத்தாவிட்டால் மீண்டும் அரசுக்கே சொந்தமாகிவிடும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தற்போது உள்ள தரிசு நிலங்களை சீர்படுத்தி எப்படி நிலமற்ற விவசாயிகள், விவசாயத்தில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அரசு அளிக்க முன்வரும்? ஆனால், இந்துசமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை குத்தகைக்கு அளித்திருப்பது போல அரசு நினைத்தால் தரிசு நிலங்களையும் வழங்க முடியும்” என்றார்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் முகைதீனுடன் பேசினோம், "நிலமற்ற விவசாயிகள், விவசாயத்தில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அரசுக்குச் சொந்தமான தரிசு நிலங்களை குத்தகைக்கு அளிப்பது தொடர்பாக எந்தத் திட்டமும் அரசு வகுக்கவில்லை. தரிசு நிலம் என்றாலே போதிய பருவமழை மற்றும் பராமரிப்பின்றி விளைச்சல் இல்லாமல் போன நஞ்சை நிலமாகும். சீமைக்கருவேல மரங்கள், சுக்கான் பாறைகள் சூழ்ந்துள்ள இந்த நிலங்களைப் பண்படுத்தினாலும் விவசாயம் செய்வதற்கு ஏற்ற நிலமாக இருக்குமா என்பதும் தெரியவில்லை.

தரிசு நிலம்
தரிசு நிலம்

அப்படியே விவசாயம் செய்தாலும் மழையை மட்டுமேதான் நம்பியிருக்க வேண்டும்” என்றார். இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் உதயகுமாரிடம் பேசினோம், "இதுபோன்ற திட்டம் ஏதுமில்லை. இதனால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விவசாயம் மேற்கொண்டு தங்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்றால், இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறேன். அதிகாரிகள் தரப்பிலும் இதுகுறித்துப் பேசுகிறேன்” என்றார்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of a common man
Doubt of a common man