விவசாயத்தில் ரசாயன உரங்களின் தேவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அத்துடன் உரம் தயாரிக்கும் மூலப்பொருள்களின் விலை உயரும்போது, ரசாயன உரங்களின் விலையும் அதிகரிக்கிறது. இதனால் அடியுரமான டி.ஏ.பி, மேல் உரமான யூரியா ஆகியவற்றை விவசாயிகளுக்கு மானியத்தில் அரசு வழங்கி வருகிறது. அத்துடன், டி.ஏ.பி-யும், யூரியாவும் விவசாய பயன்பாடுபோக, பல்வேறு பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுகின்றன. இதனால், விவசாயப் பயன்பாடு என்ற போர்வையில் வணிக ரீதியான பொருள்கள் தயாரிப்புக்கும் அவை மானியத்தில் பெறப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இவற்றின் விற்பனையைத் தீவிரமாகக் கண்காணிக்க அரசு முடிவெடுத்தது. விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகலை சம்பந்தப்பட்ட உரக்கடைகளில் கொடுத்து, பி.ஓ.எஸ் எனப்படும் இயந்திரத்தில் கைரேகை பதித்து உரங்களை வாங்கி வருகிறார்கள்.

இதன் மூலம் உண்மையான விவசாயிகளுக்கு மானியத்தில் உரங்கள் வழங்கப்படுவதால், அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு தடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 21.2.2023-ல் விவசாயிகளுக்கு உரம் வழங்குவதற்குப் புதிய விதிமுறையைப் பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. உரம் தேவைப்படும் விவசாயிகள் ஆதார் நகலுடன், தங்களது ஜாதி பற்றிய விவரத்தையும் தெரிவிக்க வேண்டும். பொதுப்பிரிவு, ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி போன்ற பிரிவுகளில் தங்களது வகைப்பாட்டை விவசாயிகள் குறிப்பிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இது, உரம் வாங்குவதற்காக கடைகளுக்குச் சென்ற விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்டம் அயன்வடமலாபுரத்தைச் சேர்ந்த கரிசல்பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வரதராஜனிடம் பேசியபோது, ``தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டு ராபி பருவத்தில் `1.7 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் புரட்டாசி பட்டத்தில் வடகிழக்கு பருவமழையை நம்பி டெல்டா மாவட்டங்கள், சென்னை மாவட்டம் நீங்கலாக பெரும்பாலான மாவட்டங்களில் மானாவாரி சாகுபடி விவசாயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் விவசாயிகள், தங்கள் நிலங்களில் பயிரிடப்படும் பயிர்களுக்குத் தேவையான சத்துக்களான கரம்பை மண் எனப்படும் வண்டல்மண், நீர் நிலைகளில் அள்ளி கோடைக்காலங்களில் நிலங்களுக்கு பயன்படுத்தினர்.

இதுதவிர வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளின் சாணங்களையும் உரமாகப் பயன்படுத்தினர். பின்நாளில் கால்நடைகள் வளர்ப்பு மிகவும் குறைந்துவிட்டதால் கடந்த 25 ஆண்டுகளாக ரசாயன உரத்தை மட்டுமே நம்பி விவசாயம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், ரசாயன உரத்துக்கு அதிக தேவை இருக்கிறது. இதன் காரணமாக ஆண்டுக்காண்டு உரம் தயாரிக்கும் மூலப்பொருள்கள் விலை உயர்வு ஏற்படும்போது உரம் விலையும் அவ்வப்போது விலை உயர்கிறது. இதுதவிர அடி உரமான டி.ஏ.பி, அரசு மானியம் போக 50 கிலோ மூட்டை ரூ.1,350-க்கும், யூரியா விலை அரசு மானியம் போக 45 கிலோ மூட்டை ரூ.275-க்கும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்தநிலையில், டி.ஏ.பி, யூரியா உரம் விவசாய பயன்பாடு போக பல்வேறு பொருள்கள் தயாரிக்கவும் பயன்படும் என்பதால் சந்தையில் விவசாய பயன்பாடு என்ற போர்வையில் மானியத்தில் வழங்கப்படும் டி.ஏ.பி, யூரியா உரத்தை வேறு வணிகரீதியான தயாரிப்புக்கு பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கிலும், பல ஆயிரம் கோடி ரூபாய் மானியம் விரையம் ஏற்படுவதைக் கட்டுப்பட்டுத்தும் விதத்திலும், அடி உரமான டி.ஏ. பி , மேலுரமான யூரியா, பொட்டாஷ் விவசாய பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டையை சம்பந்தப்பட்ட உரக்கடைகளில் கொடுத்து பி.ஓ.எஸ் எனப்படும் பாயின்ட் ஆஃப் சேல்ஸ் மெஷினில் கைரேகையைப் பதிவு செய்து பெற வேண்டும் என அரசு கடந்த நான்கு வருடங்களுக்கு முன் தெரிவித்தது.

அன் அடிப்படையில் தற்போது உரம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.இந்தநிலையில், கடந்த மாதம் 21-ம் தேதி அன்று விவசாயிகளுக்கு உரம் வழங்குவதற்கு புதிய விதிமுறையைப் பின்பற்ற உத்தரவிட்டுள்ளது.
அதாவது, உரம் தேவைப்படும் விவசாயிகள் ஆதார் அட்டையுடன் தங்களது சாதி பற்றிய விபரத்தையும் தெரிவிக்க வேண்டும். அதில் பொதுப் பிரிவு, ஓபி.சி, எஸ்.சி, எஸ்.டி இதில் எந்த பிரிவைச் சார்ந்தவர் என்ற விவரம் பதிவிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அனைத்து சாதியினரும் விவசாயம் செய்கின்றனர் சாதி பற்றிய விபரம் குறிப்பிட்டால் மட்டுமே மானியம் விடுவிக்கப்படும் என்பது விவசாயிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு சாதிக்கு தகுந்தவாறு உரம் மானியம் விடுவிக்கப்படும் பட்சத்தில் திட்டமிட்டு சாகுபடி பரப்பை விவசாயிகளிடம் பறிக்கும் செயலாகவே கருதப்படுகிறது.

Also Read
இதுதவிர, தனியாரை ஊக்குவிக்க இதுபோன்ற நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் சந்தேகம் எழுகிறது. இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் எனக் கூறும் அரசு அதை நசுக்குகிறது. இதனால் விவசாயிகள் மத்தியில் குழப்பம் ஏற்படும். வரும் காலத்தில் ஏழை எளிய நடுத்தர விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே, விவசாயிகள் நலன்கருதி மானியத்தில் உரம் வழங்கும் பி.ஓ.எஸ் மெஷினில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சாதி என்கிற தளத்தை நீக்கிட வேண்டும்” என்று அழுத்தமாகத் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நாச்சியாரிடம் பேசியபோது, ``வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறையின் மூலம் விவசாயிகள் மானியம் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட விவசாயிகளின் சாதிப் பிரிவுகள் கோரப்படுவது நடைமுறையில் உள்ளது. அதே போல உரம் மானியத்தில் பெறுவதற்கும் விவசாயிகளின் சாதிப்பிரிவு கோரப்படுகிறது. மற்ற மானியத்தைப் போலவே, உரத்துக்கான மானியமும் அனைத்து விவசாயிகளுக்கும் சமமானதுதான். மத்திய அரசே உரம் பெறுவதற்கும் சாதிப்பிரிவை குறிப்பிட்டாக வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாகத்தான் அறிகிறோம். இது குறித்து விவசாயிகளும் புகார் அளித்துள்ளார்கள். விசாரணை செய்து விவசாயிகளுக்கான விளக்கம் அளிக்கப்படும்” என்றார்.
மத்திய அரசின் உத்தரவு என்பதால் சாதி விவரத்தை மாற்றுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன என்றே ஆளும் தரப்பில் சொல்கிறார்கள். ஆனால், இதுசம்பந்தமான பெரிய போராட்டத்துக்கு விவசாயிகள் தயாராகிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.