மகாராஷ்டிராவில் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு வெங்காயத்துக்கு போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் கடுமையான இழப்பை சந்தித்துள்ள விவசாயிகள் விளை பொருள்களுக்கு போதிய விலை கிடைக்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாசிக்கிலிருந்து மும்பை நோக்கி நடைப்பயணமாக வந்துகொண்டிருந்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் நாசிக் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் மும்பை நோக்கி நடந்து வந்தனர். அவர்கள் மும்பை அருகில் உள்ள தானே மாவட்டத்துக்குள் நேற்று முன் தினம் வந்தடைந்தனர்.
அவர்கள் வரும் வழியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் ஆதிவாசி மக்கள் பேரணியில் இணைந்தனர். பேரணி மும்பை அருகில் இருக்கும் தானே மாவட்டத்துக்குள் நுழைந்தது. தானே மாவட்டம், முதல்வர் ஷிண்டேயின் சொந்த ஊராகும். எனவே, பேரணியாக வரும் விவசாயிகளை சந்தித்துப் பேச தாதா புசே, அதுல் சாவே ஆகிய இரண்டு அமைச்சர்களை முதல்வர் அனுப்பி வைத்தார். இரண்டு அமைச்சர்களும் விவசாயிகளை சந்தித்து நேற்று முன்தினம் பேசினர். இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது.

மீண்டும் அவர்கள் விவசாயிகள் கோரிக்கை குறித்து சந்தித்து பேச இருப்பதாக தெரிவித்தனர். இதில் உடன்பாடு எட்டப்படவில்லையெனில் மும்பையில் முதல்வர் மற்றும் துணை முதல்வரை விவசாயிகள் சந்தித்துப் பேசுவார்கள் என்று அமைச்சர் புசே அவர்களிடம் தெரிவித்தார். வெங்காயத்துக்கு குவிண்டால் ஒன்றுக்கு 600 ரூபாய் மானியம் கொடுக்க வேண்டும், விவசாயத்துக்கு 12 மணி நேரம் மின்சாரம் கொடுக்க வேண்டும் என்பதை பிரதான கோரிக்கையாக விவசாயிகள் வலியுறுத்தினர்.
விவசாயிகள் சஹாப்பூரைத் தாண்டி சென்றபோது, முதல்வர் தரப்பில் விவசாயிகளுடன் இரண்டு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஏற்கெனவே நேற்று முன் தினம் முதல் சுற்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், நேற்று அகில இந்திய கிஷான் சமிதி நிர்வாகிகளுடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், வருவாய்த்துறை அமைச்சர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். 3 மணி நேரத்துக்கும் மேல் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதில் அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. மாநில அரசு ஏற்கெனவே வெங்காயத்துக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.300 கொடுப்பதாகத் தெரிவித்துள்ளது. தற்போது அதை மேலும் அதிகரித்துக் கொடுப்பதாக விவசாயிகளிடம் உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. அதை விவசாயிகளும் ஏற்றுக்கொண்டனர். அதோடு ஏற்கெனவே விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படாத விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், பாலின் தரத்தை அறிவதற்கான விதிகள் தளர்த்தப்படும் என்றும் அரசு தரப்பில் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பேச்சுவார்த்தையில் விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மின்சாரம் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இப்பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து விவசாயிகள் தங்களது பேரணியை வாசிந்த் என்ற இடத்தோடு நிறுத்திக்கொண்டனர்.