Published:Updated:

``ராசாவுக்கு தவறான தகவல் கொடுத்திருக்கின்றனர்; எங்கள் போராட்டம் தொடரும்"- கோவை விவசாயிகள் அறிவிப்பு

கோவை விவசாயிகள்

கோவையில் தொழிற் பூங்கா அமைக்கும் முடிவுக்கு எதிராகத் தங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்திருக்கின்றனர்.

Published:Updated:

``ராசாவுக்கு தவறான தகவல் கொடுத்திருக்கின்றனர்; எங்கள் போராட்டம் தொடரும்"- கோவை விவசாயிகள் அறிவிப்பு

கோவையில் தொழிற் பூங்கா அமைக்கும் முடிவுக்கு எதிராகத் தங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்திருக்கின்றனர்.

கோவை விவசாயிகள்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் தாலுகா சுற்றுவட்டார கிராமங்களில் தொழிற் பூங்கா அமைக்க தமிழக அரசு முடிவுசெய்தது. இதையடுத்து 3,731 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

கோவை விவசாயிகள் போராட்டம்
கோவை விவசாயிகள் போராட்டம்

கடந்த சில நாள்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த நீலகிரி தி.மு.க எம்.பி ஆ.ராசா, “தொழிற் பூங்காவுக்காக விவசாய நிலம் கையகப்படுத்தப்படாது. அதேநேரத்தில் அங்குள்ள தனியார் நிறுவனத்தின் நிலத்தில் திட்டமிட்டபடி தொழிற் பூங்கா அமைக்கப்படும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ‘நமது நிலம் நமதே’  விவசாயிகள் நலச்சங்க தலைவர் குமார ரவிக்குமார், “விவசாய நிலம் உறுதியாக எடுக்கப்படாது என்று ராசா கூறியதை வரவேற்கிறோம். அந்தப் பகுதியில் தொழிற்சாலை வரக் கூடாது என்பதுதான் எங்கள் போராட்டத்தின் நோக்கம். விவசாய நிலத்தை எடுக்க மாட்டோம் என்று கூறினாலும், நிறுவனத்தின் நிலத்தை எடுப்போம் என்று கூறியிருக்கின்றனர்.

விவசாயிகள் செய்தியாளர் சந்திப்பு
விவசாயிகள் செய்தியாளர் சந்திப்பு

போராட்டம் இப்போதும் தொடர்கிறது. போராட்டத்தை நிறுத்த வேண்டுமென்றால் அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும். மேட்டுப்பாளையம், அன்னூர் பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இது போராடும் ஒட்டுமொத்த விவசாயிகளின் கருத்து.

ராசா கூறிய பெங்களூரை தலையிடமாகக்கொண்ட அந்த நிறுவனம், விவசாயத்துக்கு என்று கூறித்தான் நிலம் வாங்கியது. ராசாவுக்கு யாரோ தவறான தகவலைக் கொடுத்திருக்கின்றனர். அவர் 2,000 ஏக்கர் நிலம் என்கிறார். ஆனால், அந்த நிறுவனம் 1996 - 2008 காலகட்டம் வரை 1,200 ஏக்கர் நிலத்தைத்தான் வாங்கியிருக்கிறது. அதிலும் அந்த நிறுவனம் 200 ஏக்கர் நிலத்தை விற்றுவிட்டது.

ராசா
ராசா

450 ஏக்கர் வில்லங்க பிரச்னையில் சிக்கியிருக்கிறது. நிறுவனம் வாங்கிய இடத்தை செய்தியாளர்களுக்கு நேரில் காட்டுவதற்குத் தயாராக இருக்கிறோம். இரண்டு இடங்கள் மட்டுமே சுமார் 100 ஏக்கர் சேர்ந்ததுபோல இருக்கிறது. மீதம் இருப்பவை அரை ஏக்கரில் தொடங்கி 20 ஏக்கர் வரை இருப்பவையே.

அந்த நிலம் எல்லாமே எங்கள் நிலத்தைச் சுற்றித்தான் இருக்கின்றன. எனவே, அங்கு தொழிற்சாலை அமைப்பது சாத்தியமில்லை. எந்தத் தொழிற்சாலை வந்தாலும், சட்டப்படி அந்தப் பகுதியிலுள்ள மக்களின் அனுமதியை வாங்க வேண்டும். அங்கு தொழிற்சாலை வரக் கூடாது என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர். நாங்கள் மாஃபியாக்களின் அணி இல்லை. எங்களைப் பற்றித் தவறான தகவல்களைச் சொல்பவர்கள் இழிவான மனிதர்கள்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இந்தத் திட்டம் செயல்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்களது நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றார். தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, ஏராளமான விவசாயிகள் கைகளில் மனுக்களை ஏந்தி பத்திரிகையாளர் மன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.