மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

பலன் கிடைக்கலாம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘‘பஞ்சு விலை உயர்ந்துவிட்டது; பருத்தி ஏற்றுமதிக்குத் தடை விதைக்க வேண்டும்’’ என்று ஜவுளித் தொழில்துறையினர் கதறல் கோரிக்கை வைத்து வருகிறார்கள். போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, ஏற்றுமதிக்குத் தடைபோடுவதற்கான முயற்சிகளை மத்திய அரசு முன்னெடுப்பதாகப் பேச்சுகள் அடிபடுகின்றன.

எப்போதுமே தொழில்துறையினர் சொன்னால், உடனடியாகச் செவிமடுக்கும் மத்திய அரசு, பருத்தி இறக்குமதிக்கு 11 சதவிகிதம் வரியைக் குறைத்தது. ஆனாலும், பலனில்லை. பஞ்சு, நூல் விலை தினம் தினம் ஏறிக்கொண்டேதான் இருக்கிறது. இறக்குமதி வரியைக் குறைத்த காரணத்தால், பருத்தி ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,500 விலை குறைந்து போயிருக்கிறது.

ஒரு நாளும் இல்லாத திருநாளாக, இந்த ஆண்டுதான் பருத்தியின் விலையானது விவசாயிகளுக்கு தெம்புகூட்டும் வகையில் உயர்ந்திருக்கிறது. ஒரு குவிண்டாலுக்கு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை விற்பனை ஆகிறது. கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக, கடன் வாங்கிப் பருத்திச் சாகுபடி செய்த விவசாயிகள்... மழையின்மை, விலையின்மை உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாகவே இருக்கிறது. இந்தக் கொடுமைகள் எல்லாம் ஆட்சியாளர்களால் தடுக்கப்படவே இல்லை. இத்தகைய சூழலில், பல ஆண்டுகளுக்குப் பிறகு, பருத்தி விலை உயர்வு காரணமாக விவசாயிகளின் முகத்தில் இப்போதுதான் சிரிப்பைப் பார்க்க முடிகிறது. இந்தச் சூழலில், ‘விவசாயி என்றாலே கண்ணீர்தானே நிரந்தரம்; நீ எப்படி சிரிக்கலாம்?’ என்பதுபோல, அதற்கும் வேட்டு வைக்கத் தொடங்கிவிட்டது மத்திய அரசு.

பருத்தி விவசாயிகளுக்குப் பல மடங்கு வருமானம் அதிகரித்துள்ளது. இதில் அரசாங்கத்துக்கு எந்தப் பங்கும் இல்லை. ஆனாலும், ‘எங்கள் ஆட்சியில்தான் உச்சம் தொட்டுள்ளது பருத்தி விலை’ என்று மார்தட்டிக்கொள்ள நல்ல வாய்ப்புக் கிடைத்திருக்கிறது பி.ஜே.பி அரசுக்கு.

பயன்படுத்திக்கொண்டால், பலன் கிடைக்கலாம்!

- ஆசிரியர்

கார்ட்டூன்
கார்ட்டூன்