திண்டுக்கல் மாவட்டத்தில் வாழை, கத்திரி, வெங்காயம், வெண்டை மற்றும் மிளகாய் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் எனத் தோட்டக்கலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பெருமாள்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா திட்டம் மாநில அரசின் மானியத்துடன் ராபி 2022-பருவத்தில் (அக்டோபர் முதல் பிப்ரவரி வரை) தோட்டக்கலைப் பயிர்களான வெங்காயம், கத்திரி மற்றும் சிகப்பு மிளகாய் பயிர்களுக்கு ஆத்தூர், நிலக்கோட்டை, குஜிலியம்பாறை, வேடசந்தூர், வடமதுரை, பழனி, தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் மற்றும் ரெட்டியார்சத்திரம் வட்டாரங்களில் செயல்படுத்தப்படவுள்ளது.
பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டத்தில் 2022-23-ம் ஆண்டு தோட்டக்கலைப் பயிர்களான வாழை, வெங்காயம், கத்திரி, வெண்டை மற்றும் மிளகாய் ஆகிய பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு செய்யலாம். வாழை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3008.46 பிரீமியம் தொகையை 2023 பிப்ரவரி 28-ம் தேதி வரை செலுத்தலாம். கத்திரி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.876.86 பிரீமியம் தொகையை 2023 ஜனவரி 18-ம் தேதிவரை செலுத்தலாம்.

வெங்காயப் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1,820.40 பிரீமியம் தொகையை 2023 ஜனவரி 31-ம் தேதி வரையிலும், வெண்டை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.669.38 பிரீமியம் தொகையை 2023 பிப்ரவரி 15-ம் தேதிவரையிலும், மிளகாய் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1249.82 பிரீமியம் தொகையை 2023 ஜனவரி 31-ம் தேதிவரையிலும் செலுத்தி விவசாயிகள் பயன்பெறலாம்.
இந்தப் பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் விண்ணப்பத்துடன் பதிவுக் கட்டணம், சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் தங்கள் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம், பொதுசேவை மையங்கள் மற்றும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் அகியவற்றின் மூலம் பயிர்க்காப்பீடு செய்யலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அந்தந்தப் பகுதியிலுள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார். மற்ற மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் அந்தப் பகுதில் உள்ள தோட்டக்கலை அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பயன் பெறலாம்.