நிதி நெருக்கடியில் இருக்கும் விவசாயிகள் சூரிய சக்தியில் இயங்கும் பம்ப்செட்களைப் பெறுவதற்கு 'க்ரவுட்-ஃபண்டிங்' என்கிற நல்லெண்ண கூட்ட நிதி உதவி ஒரு சாத்தியமான தீர்வாகும் என்கின்றனர் வேளாண்மை மற்றும் நிதித்துறை நிபுணர்கள். அதுகுறித்து பேசுகிறது இந்தக் கட்டுரை...
நீர் பாசனத்துக்குத் தேவையான மின் சக்தி கிடைப்பதில் உள்ள தற்போதைய சிரமங்களும் தீமைகளும்
சோலார் என்கிற சூரிய ஒளியிலிருந்து பெறக்கூடிய மின்சக்தி தற்போதுள்ள விவசாயிகளின் மின்சார செலவுகளையும், சுற்றுப்புற மாசுப்பாட்டையும், அரசாங்கத்தின் மின் மானியத்தையும் கணிசமாகக் குறைக்க உதவும்.
பொது மின்சாரத்தின் ஏற்ற இறக்கத்தால் பம்ப்செட் மோட்டார்கள் பழுதடைகிறது. அரசாங்கம் வழங்கும் இலவச மின்சாரம் பெரும்பாலும் இரவு நேரத்தில் கிடைக்கிறது. இதனால், இந்தியாவில் பெரும்பாலான விவசாயிகள் டீசல் மோட்டார்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். நாட்டில் மொத்தமுள்ள 3 கோடி விவசாய பம்ப்செட்டுகளில், 80 லட்சம் (26.5 சதவிகிதம்) டீசலில் இயங்குபவை. இவை கக்கும் மாசுக் காற்றின் அளவு வருடத்துக்கு ஒன்றரை கோடி டன். மேலும், டீசல் எரிபொருள் விலை அதிகம். அதன் விலை தினம்தோறும் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் சிறு குறு விவசாயிகள் இதைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை.

இலவச மின்சாரத்தைப் பெறுவதற்கும், அதற்கான கட்டுமானம் மற்றும் பம்ப்செட் செலவு சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமாகிறது. இந்தியாவில் 88 சதவிகிதம், தமிழகத்தில் 92 சதவிகித விவசாயிகள் 5 ஏக்கருக்கும் குறைவாக விவசாய நிலமுள்ள சுயநிதி வசதியற்ற சிறு-குறு விவசாயிகள். இந்நிலையில், சோலார் பம்ப்செட் பாசனம் மட்டுமே டீசலுக்குப் பதிலாகச் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மாற்றாக உள்ளது.
சோலார் பம்ப்செட்டின் அளவைப் பொருத்து ஒரு சூரிய சக்தி மோட்டார் அமைப்பை அமைக்க 2,000 ரூபாயிலிருந்து 4.5 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. இதில் 30 சதவிகிதம் மத்திய அரசும், குறைந்தது 30 சதவிகிதம் மாநில அரசும் மானியமாகக் கொடுக்கின்றன. தமிழக அரசு 40 சதவிகிதம் மானியம் அளிக்கிறது. ஆக, தமிழகத்தில் மொத்தம் 70 சதவிகித மானியம் கிடைக்கிறது. ஆனால், மீதமுள்ள 30 - 40 சதவிகிதத்தைக்கூட முதலீடாகப் போட முடியாத நிலையில் பல விவசாயிகள் இருக்கிறார்கள்.

2018-19-ம் ஆண்டு அரசாங்கம் எடுத்த கிராமப்புற கணக்கெடுப்பு ஒன்றின்படி ஒரு விவசாய குடும்பம் மாதத்துக்கு சராசரியாக 10, 218 ரூபாய் வருமானமும், பாதி குடும்பங்கள் சுமார் 74,000 ரூபாய் கடனும் உடையதாக இருந்தன.
மார்ச் 2019-ல் தொடங்கிய 'பிரதமர் குசும்' திட்டப்படி 20 லட்சம் சூரிய சக்தி மோட்டார்களை டிசம்பர் 2022-க்குள் மானியத்துடன் வழங்கப்பட வேண்டும். ஆனால், மார்ச் 2022 வரை வெறும் 3.6 லட்சம் வழங்க உத்தரவு கிடைக்கப்பெற்று, இதுவரை 82,408 மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதுதான் வேதனையான உண்மை.

தமிழ்நாட்டில் சூரிய சக்தி பம்ப்செட் அமைக்க மானியங்கள் போக ஒரு விவசாயி 70,000 முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை, பம்ப் செட்டின் செயல் அளவைப்பொறுத்து, முதலீடு செய்ய வேண்டியிருக்கிறது. இதுவே பல விவசாயிகளுக்கு ஒரு நிதி சுமையாக இருக்கிறது. ஆனால், அவர்களில் பலரும் சூரியசக்தி பம்ப்செட் வைத்து சுயசார்பு நிலையை அடைய ஆர்வமாக இருக்கிறார்கள்.
மேலும், நுணுக்கமாகப் பார்த்தால், 150 மணி நேர டீசல் பம்ப்செட் உபயோகத்துக்குப் பதிலாகச் சூரியசக்தி பம்ப் செட்டை உபயோகித்தால் விவசாயிகள் பலனடைவார்கள் என்கிறது சென்னையில் உள்ள சன்-எடிசன் என்கிற ஒரு அரசு சாரா (NGO) சூரிய சக்தி மின்சாரத்தை விரிவாக்கும் அமைப்பு. `பிரதமர் குசும்' அரசாங்கத் திட்ட அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு குறிப்பேட்டின்படி டீசல் பம்ப்களுக்கு பதிலாகச் சூரியசக்தி பம்ப்கள் உபயோகிக்கப்படுத்தினால் ஒவ்வோர் ஆண்டும் 5 குதிரைத்திறன் பம்ப் ஒன்று சுமார் 50,000 ரூபாய் வரை சேமிக்கும் என்கிறது.

நிதி கிடைப்பதில் உள்ள சிக்கல்கள்
1 குதிரைத்திறன் கொண்ட சூரிய சக்தி பம்ப் அமைக்க 1,20,000 ரூபாய் ஆகும். 2 குதிரைத்திறன் கொண்ட பம்ப்செட் அமைக்க 2 லட்ச ரூபாய் ஆகிறது. பெரும்பாலான விவசாயிகள் மானியம் இல்லாமல் இந்த விலையில் சூரிய சக்தி பம்ப்பை வாங்க தங்களுக்கு நிதிவசதி இல்லையென்கிறார்கள். மேலும், வங்கி வட்டி மற்றும் இதர கட்டணங்கள் அதிகம் என்கிறார்கள். பிரதமர் குசும் திட்டம் மார்ச் 2109-ல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து நபார்டு வங்கி இந்தச் சூரிய சக்தி பம்ப்புக்கு கடனளிப்பதில்லை என அந்த வங்கியின் அதிகாரி ஒருவர் கூறுகிறார். இதையே தமிழ்நாடு கிராம வங்கியும் (TNGB) கூறுகிறது.
சிலர் பயிர் கடன் மூலம் கிடைக்கும் தொகையை சூரியசக்தி பம்ப்செட் வாங்கப் பயன்படுத்துகிறார்கள். வேறு எந்த விதமான வங்கிக் கடனைப் பெறவும் அவர்களுக்கு பிணை-உத்திரவாதம் தேவை. `மைக்ரோஃபைனான்ஸ்' என்று அழைக்கப்படுகிற குறுநிதி அமைப்புகளைக் கேட்டால் அவர்கள் தாங்கள் பெண்கள் அமைப்பான சுயஉதவி குழுக்களுக்கு மட்டுமே சிறு கடன்களை வழங்குவோம் என்கிறார்கள். ஆன்லைனில் கடன் வழங்கும் சிலரும் தாங்கள் நகரத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் கடனுதவி செய்கிறோம் என்கிறார்கள். ஆக மொத்தம் விவசாயிகளின் கடன் பெறும் தகுதி எப்போதும் குறைவாகவே மதிப்பிடப்படுகிறது. அது நியாய வட்டியில் அவர்களுக்குக் கடன் கிடைக்கும் வழிகளை மிகவும் குறைக்கிறது.

'க்ரவுட்-ஃப்ண்ட்' என்கிற நல்லெண்ண கூட்ட உதவி நிதி கிடைக்க ஒரு தீர்வு மற்றும் அரசாங்களுக்கு உள்ள மானிய பளுவை குறைக்கும் வழி
தற்போதைய மானியங்கள் குறுகிய கால, விரைவான அறிமுக பலனுக்காகவே இருக்க வேண்டும். நீண்ட காலத்துக்கு இவை பொருளாதாரத்துக்கும், விவசாயிகளுக்குமே பொருந்தாது என்கிறது மத்திய அறிவு சார்ந்தோர் குழு ஒன்று. இந்தத் தருணத்தில் விவசாயத்திலும் விவசாயிகளின் மீதும் அக்கறையுள்ளவர்கள் நன்கொடையாகவோ, கடனாகவோ ஒவ்வொருவரும் ஒரு சிறு தொகையை அளிப்பது இந்த 'க்ரவுட்-ஃப்ண்ட்' என்கிற நல்லெண்ண கூட்ட நிதி (உதவி) என்பது.
இது இந்தியாவில் மெதுவாகப் பெருகி வருகிறது. ஊர்ஜா என்ற ஒரு நிறுவனம் அஸ்ஸாமில் ஒரு திட்டத்துக்கு இதுமூலம் நிதி திரட்டி செயலாக்கியது; டெல்லியில் கூரைமேல் வேயும் சூரியசக்தி அமைப்புக்காக ஜெர்மன் நாட்டு நல்லெண்ண கூட்ட நிதி திரட்டி அளித்தது ஓக்ரிட்ஜ் எனெர்ஜி என்ற நிறுவனம்.

ஆனால், இதன் மூலம் நேரடியாகத் தனி விவசாயிகளுக்கு நிதி உதவி செய்து, அளித்த கடனைத் திரும்பப் பெறுவதில் சிக்கல்கள் பல இருக்கும். இப்போது ஐஎஸ்எஃப் (ISF), ரங்க் தே போன்ற நிறுவனங்கள் நிதி உதவி தேவைப்படுவர்களின் தகுதியைத் தீர ஆராய்ந்து நிதி அளிப்பவர்களுக்கு தெரிவிக்கிறது.
`எதையும் இலவசமாக அளிக்கும்போது அதன் மதிப்பு உணரப்படுவதில்லை; ஆகவே குறைவான வட்டிக்குக் கடனாக நிதி அளிக்கலாம்' என்கிறார் மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை விவசாயப் பொருள்கள் விற்கும் வியாபாரி குமார்.

சூரிய சக்தி அமைப்பை ஒரு அசையா சொத்தாகக் கருதாமல் அதை ஒரு விவசாய மூலப் பொருளாகக் கருதப்பட்டால் நிதி கிடைப்பதில் உள்ள சில தொழில்நுட்பக் கோளாறுகள் சரியாகலாம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஒரு சட்ட அமைப்பின் மூத்த ஆராய்ச்சியாளர் விஷ்ணு மோகன் ராவ். அவர் மேலும், `சூரியசக்தி பம்புகள் மின்சார கம்பத்தைச் சாராமல் தனியாகச் செயல்பட்டு பலனளிப்பது, இது சுற்றுப்புற மாசைக் குறைப்பதுடன் விவசாயத்தில் ஒரு நிரந்தரத் தன்மையை ஊருவாக்கும். மேலும், பெரிய அளவில் அரசாங்கங்களை மானியச் செலவுகளிலிருந்து விடுவிக்கும். ஆகவே, விவசாயத்தில் உள்ள தவிர்க்க முடியாத ஆபத்துகளைக் கருத்தில் கொண்டு 'க்ரவுட் ஃபண்ட் என்கிற நல்லெண்ண கூட்ட நிதி அமைப்பின் தடங்கல்களை நீக்கி சீராக்க இந்திய ரிசர்வ் வங்கி உதவ வேண்டும்' என்கிறார்.
Source: Jency Samuel/ Indiaspend.org
தமிழில் சங்கரன் கே.ஆர்