ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

தொடங்கட்டும்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘‘வேளாண் சட்ட சர்ச்சைகளைத் தீர்க்க, விவசாயிகள் சொல்வதை அரசு கேட்கவேண்டும்’’ என்று பி.ஜே.பி-யின் பாரதிய கிசான் சங்கம் மற்றும் கூட்டணிக் கட்சிகள் எனப் பலவும் தொடர்ந்து குரல் கொடுத்தன. ஆனாலும், ‘நான் வைத்ததுதான் சட்டம்’ என்கிற இறுமாப்பிலேயே இருந்தது நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பி.ஜே.பி அரசு.

இறுதியில், “வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால், உ.பி உள்ளிட்ட மாநில சட்டமன்ற தேர்தல்களில் பி.ஜே.பி தோல்வியடையும்’’ என்று அந்தக் கட்சியைச் சேர்ந்தவரும், மேகாலயா மாநில ஆளுநருமான சத்யபால் மாலிக், கடந்த சில வாரங்களுக்கு முன்பு உண்மையைப் போட்டு உடைக்க, ‘வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும்’ என்று அலறிக்கொண்டு அறிவித்துள்ளார் மோடி.

உலகமே, கொரோனா பிடியில் சிக்கித் தவித்த நேரத்தில்தான், வேளாண் துறை சார்ந்த மூன்று அவசரச் சட்டங்களை நிறைவேற்றி அதிர்ச்சியளித்தார் மோடி.

‘‘கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான சட்டங்கள்’’ என்று கொந்தளித்த விவசாயிகள், உறுதிகொண்ட நெஞ்சுடன் போர்க்களம் புகுந்தனர். குறிப்பாக, டெல்லிப் போராட்டம், உலக அரங்கில் இந்தியாவிற்குப் பெரும் தலைக்குனிவையே ஏற்படுத்தியது. இந்தப் போராட்டம் ஓராண்டை நெருங்கிய நிலையில்தான், ‘வாபஸ்’ என்று அறிவித்துள்ளார் மோடி.

ஆனாலும், விவசாயிகள் நம்பத் தயாராக இல்லை என்பதே, மோடி அரசாங்கத்துக்குப் பெரும்பின்னடைவுதான்.

‘‘வாபஸ் பெறும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவேண்டும். குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாத சட்டம் கொண்டு வரவேண்டும். அதுவரையில் போராட்டம் தொடரும்’’ என்று தீர்க்கமாக அறிவித்துவிட்டனர் விவசாயிகள்.

உண்மையிலேயே விவசாயிகள் நலனில் அக்கறை இருந்தால், இனியாவது கார்ப்பரேட்டுகளுக்குக் கவரி வீசாமல், கழனிவாழ் உழவர்களின் கண்ணீரைத் துடைக்கும் வேலையைத் தொடங்கட்டும் மோடி அரசு.

-ஆசிரியர்

தொடங்கட்டும்!