ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

காட்டுப் பன்றியா, நாட்டுப் பன்றியா? வனத்துறை விசாரணை!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

மாநாடு

‘‘என்ன வாத்தியாரே ராத்திரியெல்லாம் தூக்கமில்லையா... கண்ணெல்லாம் சிவந்து கிடக்கு?’’

கடைத்தெருவில் நடந்து வந்துகொண்டிருந்த ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியிடம், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம் கேட்க, ‘‘ஆமய்யா... ராத்திரி சரியா தூக்கமில்ல. அதனாலதான் கண்ணெல்லாம் சிவந்து கிடக்கு.’’

‘‘சரிங்க வாத்தியாரே... என்ன காலையிலேயே கடைத்தெருப் பக்கம்.’’

‘‘வீட்ல மளிகை ஜாமான் எல்லாம் தீர்ந்து போயிடுச்சு. அதான் வாங்கிக்கிட்டுப் போகலாம்னு வந்தேன். வா போவோம்’’ என வாத்தியார் அழைக்க... இருவரும் பேசிக் கொண்டே கடைக்கு வந்தார்கள். சற்றுப் பின்னால், கூடையுடன் நின்றுகொண்டிருந்த ‘காய்கறி’ கண்ணம்மாவும் இவர்களோடு இணைய ஆரம்பமானது மாநாடு.

‘‘வாத்தியாரே... நான் ஒரு சேதி சொல்றேன் கேளுங்க. திருவாரூர் மாவட்டம், வலங்கைமானைச் சுத்திலும் இருக்குற கிராமங்கள்ல, காட்டுப்பன்றிங்க பண்ணக்கூடிய சேட்டைகள கேட்டிங்கன்னா, அதிர்ந்துப் போயிடுவீங்க. கடந்த ஒரு மாசமாவே அந்தப் பகுதி விவசாயிங்க மனசொடைஞ்சு கிடக்குறாங்க’’ எனச் சொன்னதும்,

“சரிம்மா, சீக்கிரம் விஷயத்தைச் சொல்லு. விவசாயிங்க மனசொடைஞ்சு போகுற அளவுக்கு அந்த வாய் இல்லா ஜீவனுங்க அப்படி என்னதான் பண்ணிடுச்சு’’ என்று கேட்டார் ஏரோட்டி.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

‘‘என்ன காரணமோ தெரியலை யாம். இப்ப கொஞ்ச நாளா, ராத்திரி நேரத்துல காட்டுப் பன்றிங்க நடமாட்டம் அதிகமா இருக்காம். வயலுக்குள்ள புகுந்து பயிர்கள சேத படுத்திக்கிட்டு இருக்குங்களாம். அறுவடைக்குத் தயாரா இருந்த குறுவை நெல் பயிர்களை எல்லாம் வேரொடு தோண்டி போட்டுருக்கு. நூத்துக்கணக்கான ஏக்கர் சம்பா சாகுபடிக்கு தயார் பண்ணி வச்சிருந்த நாத்துங்களை எல்லாம் மிதிச்சிடுச்சாம். பகலெல்லாம் எங்கயாவது புதருக்குள்ளார பதுங்கிடுதாம். அர்த்த ராத்திரிலதான் வருதுங்களாம். இதனால நிறைய விவசாயிங்க பாதிக்கப்பட்டிருக்காங்க. நாத்து உற்பத்திக்காக முதலீடு செஞ்ச பணமெல்லாம் நஷ்டமடைஞ்சது ஒரு பக்கம்னா, மறுபடியும் நாத்து விடவே விவசாயிங்க பயப்படுறாங்க. இந்த வருஷம் சம்பா சாகுபடி பண்ண முடியாம போயிடுமோனு பதறிப்போயி கிடக்குறாங்களாம்’’ எனக் காய்கறி கவலையோடு சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, இடையில் குறுக்கிட்ட வாத்தியார், ‘‘அந்த ஊர் ஜனங்க வனத்துறைக்குத் தகவல் சொல்லியிருந்தால், அவங்க வந்து புடிச்சுகிட்டு போயிருப்பாங்களே...’’ என்றார்.

‘‘நீங்க வாத்தியாருல்ல. யோசனை எல்லாம் நல்லாதான் சொல்லுவீங்க. வனத்துறை, விவசாயத் துறை, வருவாய்த்துறைனு ஒரு துறை பாக்கி இல்லாம எல்லாத் துறைக்கும் தெரியப்படுத் திட்டாங்க. ராணுவத்துறைக்கு மட்டும்தான் சொல்லல. அந்தளவுக்கு எல்லா துறைக்குமே காட்டுப்பன்றிகளோட பிரச்னையை கவனத்துக்குக் கொண்டு போயிருக்காங்க. ஆனா, பிரச்னைதான் தீர்ந்தபாடு இல்லைங்கறாங்க, அந்தப் பகுதி விவசாயிங்க’’ என்றார் காய்கறி.

‘‘ஆமா, நானும் கேள்விப்பட்டேன். வனத்துறை அதிகாரிங்க சொன்ன சால்ஜாப்புதான் பெரிய கூத்து. காட்டுப் பன்றிகளா, நாட்டுப் பன்றிகளானு உறுதியா தெரிஞ்சாதான் நாங்க நடவடிக்கை எடுக்க முடியும். நல்லா தெளிவா போட்டோ எடுத்து ஆதாரத்தோடு கொடுங்கனு சொல்லியிருக்காங்க. இதைக்கேட்டு அந்தப் பகுதி விவசாயிங்க நொந்துபோய் இருக்காங்க.

‘‘ரெண்டு மணியில இருந்து நாலரை மணி வரைக்கும்தான் காட்டுப் பன்றிங்க வயலுக்குள்ளார வருதாம். அந்தக் கும்மிருட்டுல எப்படித் தெளிவா போட்டோ எடுக்க முடியும்னு அங்கவுள்ள விவசாயிங்க கேக்குறாங்க?’’

அரியலூர், பெரம்பலூர், முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள்ல இருக்கும் காடுகள்ல இருந்து ஆறு, வாய்க்கால்கள் வழியா இந்த காட்டுப் பன்றிகள் வருதுனு சொல்றாங்க விவசாயிகள். நடுசாமத்துல ரெண்டு மணியில இருந்து நாலரை மணி வரைக்கும்தான் காட்டுப் பன்றிங்க வயலுக்குள்ளார வருதாம். அந்தக் கும்மிருட்டுல எப்படித் தெளிவா போட்டோ எடுக்க முடியும்னு அங்கவுள்ள விவசாயிங்க கேக்குறாங்க?’’ என்றார் ஏரோட்டி.

‘‘அதானே... அது என்ன கல்யாண விசேஷமா. லைட்டெல்லாம் போட்டு, பளிச்சினு போட்டோ எடுக்க’’ எனக் கடுப்பானார் காய்கறி.

காட்டுப்பன்றி
காட்டுப்பன்றி

‘‘சந்தோஷமான ஒரு விஷயம் சொல்றேன் கேளுங்க. எந்த வருஷமும் இல்லாத அளவுக்கு இந்த வருஷம், பருத்திக்கு அதிக விலை கிடைச்சிருக்கு. ஒரு குவிண்டால் பருத்தி, வழக்கமா 4,000 ரூபாய்ல இருந்து அதிகபட்சம் 7,000 ரூபாய் வரைக்கும்தான் விலை போகுமாம். போன வருஷம் 8,000 ரூபாய்க்கு மேல விலை கிடைச்சது. அதுக்கே விவசாயிங்க சந்தோஷப்பட்டாங்க. இந்த வருஷம் 12,000 ரூபாயைத் தாண்டிடுச்சு’’ என்றார் வாத்தியார்.

‘‘அது சரி வாத்தியாரே... விலையேத்தத்துக்கு என்னதான் காரணம்’’ என்று கேட்டார் ஏரோட்டி.

‘‘கொரோனா பிரச்னையால முடங்கிக் கிடந்த ஆடை உற்பத்தி மறுபடியும் சூடுபிடிக்க ஆரம்பிச்சிடுச்சு. உற்பத்தி அதிகமானதால நூலுக்கான தேவை அதிகமாகி, பஞ்சுக்கு நல்ல விலை கிடைச்சுக்கிட்டு இருக்கு. இது மட்டுமல்லாம பெரம்பலூர், அரியலூர் பகுதிகள்ல மானாவாரியா, ஆடி பட்டத்துல பருத்தி விதைக்குறது வழக்கம். போன வருஷம் சரியா மழை இல்லாததால, விவசாயிகள்ல பலர், பருத்திக்கு பதிலா மக்காச்சோளம் பயிர் பண்ணினாங்க. பருத்திச் சாகுபடி செஞ்ச கொஞ்ச நஞ்ச விவசாயிகளுக்கும், பருவம் தவறிய பெரு மழையால, மகசூல் குறைஞ்சிடுச்சு. இதனால பருத்திக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலையும் உயர்ந்திடுச்சுனு பேசிக்கிறாங்க’’ என்றார் வாத்தியார்.

‘‘எப்படிப் பார்த்தாலும் விவசாயிகளுக்கு நஷ்டம்தான் வருது’’ என ஏரோட்டி சொன்னார்.

‘‘நல்லது நடக்கும், நம்பிக்கையா இருங்க. நான் மளிகை ஜாமான் வாங்கிக்கிட்டு, வீட்டுக்குக் கிளம்புறேன்’’ என்று வாத்தியார் சொல்ல, அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.

‘நசியனூர்’ மோகனசுந்தரம்
‘நசியனூர்’ மோகனசுந்தரம்

இயற்கையுடன் கலந்தார்!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி ‘நசியனூர்’ மோகனசுந்தரம், ஜூன் 9-ம் தேதி இயற்கையுடன் கலந்தார். ஈரோடு பகுதியில் நம்மாழ்வர் இயற்கை வேளாண்மை பரப்புப் பணியில் இருந்த போது அவருடன் இணைந்து களப்பணி செய்தவர். மலேசியா நாட்டில் உள்ள பினாங்கு மாநில விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மைக் கற்றுக் கொடுக்க நம்மாழ்வார் சென்ற போது, அவருடன் சென்று பயிற்சி அளித்தார். களப்பயிற்சிகள், கருத்தரங்களில் இயற்கை வேளாண்மை குறித்துத் தன் அனுபவங்களைப் பகிரும்போது சிங்கம் போலக் கர்ஜிப்பார். இதனால், இவருக்குச் சிங்கம் என்ற செல்லப் பெயரும் உண்டு. பசுமை விகடன் இவருக்கு அஞ்சலி செலுத்துகிறது.